இவன் முடிசூடா மன்னன்!



-நா. கதிர்வேலன்

முடிசூடா மன்னன்’னுதான் பெயர் வைக்க விரும்பினோம். அந்தப் பெயர் உரிமை இன்னொருத்தர்கிட்டே இருந்தது. அதற்கு இணையான அர்த்தம் ‘சத்ரியன்’ டைட்டிலில் வந்தது. அவ்வளவு ெபாருத்தமாக இருந்ததால் இந்தப் படத்திற்கு ‘சத்ரியன்’ என்ற பெயரே முடிவாச்சு...’’ மனம் விட்டுப் பேசுகிறார் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன். சசிகுமாரின் பிரதான சீடர்.

‘சுந்தர பாண்டியனி’ல் பளிச்சென தெரிய வந்தவர். ‘சத்ரியன்’ எப்படியிருக்கும்?
இது ஒரு ரவுடியோட வாழ்க்கை. சினிமாவில் ஒரு ரவுடியைப் பார்த்திருப்போம். பத்து சுமோ அடுக்கடுக்காக வரும். ரவுடிக்குப் பின்னாடி 20 பேராவது நீள நீளமா வளர்த்த முடியோட நிற்பாங்க. இதில் அதுமாதிரி எதுவும் பதிவு செய்யப்படலை. நம்ம ஊரில் ஒரு ரவுடி எப்படியிருப்பான்னு சொல்லியிருக்கேன். ரவுடி ஆனதற்கான நியாயங்கள் அவன் பக்கம் போய்ப் பார்த்தாதான் தெரியும். ரவுடி, தாதான்னு நாம கற்பனை பண்ணி வெச்சிருக்கிற மாதிரி அவங்க நிஜத்தில் இல்லை. அவங்க தனி மனுஷங்கதான்.

ஆனால், அரசாங்கம் மாதிரி திட்டத்ேதாட இருக்காங்க. அது ஒரு தனி உலகம். இன்னொருத்தரோட பயம் தன்னோட பலம் என்பதில் சந்தோஷமாகிடறாங்க. 11 மர்டர் பண்ணின ஒருத்தரை சந்திக்க நேர்ந்தது. நம்ம சினிமாவில் அப்படிப்பட்ட ஆளுக கழுத்துல நிறைய சங்கிலியோட வாட்டசாட்டமா இருப்பாங்க. இல்லாட்டி பீடியைக் கடிச்சிகிட்டு படு லோக்கலா வந்து நிற்பாங்க. இரண்டுமே இல்லாமல் அவர் ஹீரோ மாதிரி வந்து நின்னார். ‘தளபதி’ படத்தில் பார்த்த அரவிந்தசாமி மாதிரி இருந்தார். நடை, உடை, பாவனைகளில் ஐஏஎஸ். ஆபீஸர் மிடுக்கு இருந்தது.

அடடா, இது மாதிரி ஒரு ரவுடியை காட்டலையேன்னு நினைச்சேன். ரவுடிதான்... ஆனால், மாஃபியா, இன்டர்நேஷனல் கனெக்‌ஷனெல்லாம் கிடையாது. நாம் அறிய முடிகிற ஒரு  ரவுடியைப் பத்தின நெருக்கமான கதை. அவங்க துக்கம், வலி, சந்தோஷத்தையும் சொல்லப்போற கதைதான். படத்துல ஜல்லிக்கட்டு காளை மாதிரி பூமி கீறி மண்ணை வாரியிறைத்து முன்னே நகர்கிற மூர்க்கமும் இருக்கு. ஒரு விஷயம்... கொஞ்சம் இன்ஜின் சூடேறணும், பிறகுதான் வேகமெடுக்கும் என்ற நிர்ப்பந்தமெல்லாம் என் படத்துல இல்லை. வேகம்தான்.

விக்ரம்பிரபுவின் தோற்றம் மாறியிருக்கு...
எனக்குத் தெரிஞ்சு அவருக்கு இன்னும் சரியான படங்கள் வரலைன்னு சொல்வேன். எல்லா உணர்வுகளையும் அவர் எளிமையாகக் கடந்து போகிறார். ரெளத்திரம், லவ், ஃபேமிலி அட்டாச்மென்ட் எல்லாமே அமைஞ்சு வருது. விக்ரம் பிரபுவின் ஸ்பெஷல் என்னன்னா ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரை வெச்சு ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். நான் என்ன ஃபீல் பண்றேன்னு புரிந்து அவர் சிறப்பாக நடிப்பை வெளிக்கொண்டு வந்தார்.

அவர் ‘கும்கி’ பண்ணியிருப்பார். சிறப்பாக இருந்தது. அது டைரக்டரோட படமாகவே மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்திருச்சு. அதுக்குப் பிறகு இந்தப் படம் அவருக்கு, சிறப்பான கதைகள் தேடி வருவதற்கு முதல்படியாக இருக்கும். எப்போதும் ஒரு நல்ல கதை எல்லாத்தையும் இழுத்திட்டு வந்திடும். வற்புறுத்தி எந்த நடிகரையும் உள்ளே கொண்டு வர முடியாது. அது இரண்டு மூணு நாள்தான் தாங்கும். நடிகர்களே உணர்ந்திட்டால் நேரம் காலம்  பத்தி யோசிக்க வைக்காது. ‘டேட்ஸ் பத்தி கவலைப்படாதீங்க சார்’னு அவங்களை சொல்ல வைச்சிடும்.

மஞ்சிமா மோகன் இன்னும் அழகா இருக்காங்க...
அவங்களே மிக இயல்பான பெர்ஃபார்மர். யோசிச்சு யோசிச்சு படம் பண்ணுகிற ஆள். ஒரு பதினைந்து நிமிஷமாய் கதையை கேட்டுக்கிட்டு இருக்கும்போதே ‘நான் நடிக்கிறேன்’னு சொல்லிட்டாங்க. நினைச்சதுக்கு எந்த குறையும் வைக்கலை. பக்குவப்பட்ட நடிகை.

பாடல்கள் நல்லா கவனத்திற்கு வந்திருக்கு...
முன்னாடி வந்த டிரெய்லரும் நல்ல ட்ரெண்டிங்கில் இருக்குண்ணே. எனக்கு யுவன்னா ரொம்பப் பிடிக்கும். முதல் இரண்டு படத்தில் அமையலை. இதுல பிடிச்சிட்டேன். பின்னணியில் யுவன் பேசுவதற்கான இடங்கள் இதில் நிறைய இருக்கு. அந்த ஏரியாவில் அவரை மிஞ்ச முடியாது. எந்த கேரக்டரையும் இந்தப் படத்திற்கு தேவையில்லைன்னு சொல்ல முடியாது.

சொல்ல நினைச்சதை பாங்கா சிவகுமார் விஜயன் கேமராவில் சொல்லியிருக்கார். பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் நல்ல படம் செய்யணும்னு சத்யஜோதி நிறுவனம் நினைக்கும். வெறும் முதலீடுன்னு பார்க்காமல் அதில் மனசையும் போடறவங்க. ‘மூன்றாம் பிறை’, ‘கிழக்கு வாசல்’, ‘இதயம்’ எல்லாம் நம் மனக் கதவைத் திறந்து உட்கார்ந்த கதைகள். அது மாதிரியே இதுவும் மனதில் தங்கும். ஆரம்பத்திலிருந்து புன்னகை வைத்திருந்த தியாகராஜன் சார், அவரது மகன்கள் செந்தில், அர்ஜுன் மூவருக்கும் என் நன்றிகள்.

படங்கள் செய்யும்போது நிறைய இடைவெளி வருது...
எனக்கு சினிமாதான் சார் லைஃப்! ஆனால், அதுல பணம் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு அவசியமில்லை. பத்து படங்களே செய்தாலும் மனசை அள்ளிக்கிட்டு போகணும். ஞாபகம் வரணும். இன்னமும் ‘சுந்தர பாண்டியன்’ டிவியில்  சண்டே ஸ்பெஷலில் நிக்குது. சினிமாவையே பெரிய சந்தோஷமா நினைச்சு வாழ்றவன். பணம் சம்பாதிக்கணும்னா ஊரில எவ்வளவோ வேலையிருக்கு. பார்த்திட்டுப் போகலாம்.

இஞ்சினியராகி இருப்பேன், டாக்டராகி இருப்பேன்ங்கிற மாதிரி எதுவும் தெரியாது. சினிமாவுக்காக ஓடறதில் இருக்கிற சுகம் தனி. இத்தனை கோடி மக்களை இம்ப்ரெஸ் பண்ற மீடியாவில் இருக்கோம் என்பதுதான் சந்தோஷம். இப்பப் பாருங்க ‘சத்ரியன், சத்ரியன்’னு ஓடிட்டு இருக்கேன். நடுவுல யாரு வந்து என்ன சொன்னாலும், கேட்டாலும் மண்டையில் ஏறாது. இதுதான் உண்மை. எனக்கு சினிமா தவிர வேறு எந்த வேலையும் தெரியாது!           

Behind the scenes

* 80 நாட்களில் படத்தை முடித்திருக்கிறார்கள். அதில் 45 நாட்கள் திருச்சி.
* திருச்சியையும, ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலத்தில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை இப்பாலத்தில் பாடல்காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கின்றன.
* முதலில் ஹீரோயினாக கேத்தரின் தெரஸா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பிறகு பொருத்தமாக இருந்ததால் மஞ்சிமா ேமாகன் படத்தில் இணைந்தார்.
* படத்துக்காக ரவுடிகள் குறித்து டைரக்டர் சிறு ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவர்களின் எண்ண ஓட்டங்கள், பழக்க வழக்கங்கள் குறித்து அறியவே இந்த ஏற்பாடு.