பொம்மைக்காலம்



-ஆர்.சி.மதிராஜ்

ஒருபோதும் தன்மீது
அதிகாரம் செலுத்தாத பொம்மைகளை
அவ்வளவு பிடிக்கிறது
அச்சுவுக்கும் அவளொத்த குழந்தைகளுக்கும்
தங்கள்மீது திணிக்கப்படும்
எல்லாவற்றையும்

பொம்மைகளிடம் திருப்பிவிட்டு
ஆசுவாசமாகிவிடுகிறார்கள் வெகுவிரைவாக
என்றேனும் ஒருநாள்
பொம்மைகள் உடைந்துதான் போகுமென்று
தயவுசெய்து அச்சுவிடம் சொல்லிவிடாதீர்கள்
உங்கள் உண்மையைவிட
அழகானது
பொம்மைகள் மீது
அவள் வைத்திருக்கும் நம்பிக்கை