யார் யாருக்கு ஆப்பு வைக்கறாங்க..?



-நா. கதிர்வேலன்

‘‘மனசுக்குள் கதை ஓட ஆரம்பிச்சதும், கூடவே அதுக்கான ஒரு கற்பனை முகமும் ஓட ஆரம்பிக்கும். அதில் கச்சிதமாக பொருந்திய முகம் விஜய்சேதுபதி. ‘கவண்’ கிட்டத்தட்ட ரெடி. பறந்துகிட்டு இருக்கேன். படத்தில் எது வேணும், எது வேண்டாம்னு முடிவு எடுக்கிற நேரம் இல்லையா... அதுதான் இந்த பரபரப்பு...’’ சின்னதாகச் சிரிக்கிறார் கே.வி.ஆனந்த். ஹீரோக்கள் தேடிப் போய் பணிபுரிய ஆசைப்படுகிற இயக்குநர்.

இந்த காம்பினேஷன் யாரும் எதிர்பார்க்கவேயில்லை... என்கிட்டே ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்ட் இருந்தது. வித்தியாசப்படுத்தணும்னு ஒரு ஆர்டிஸ்ட்டை நான் உள்ளே நுழைக்கிறது இல்லை. ஸ்கிரிப்ட் என்ன சொல்லுதுன்னா, ‘ஒருத்தன் அடிச்சால் திருப்பி அடிக்கக்கூடாது. ஒரு பகையை, எதிரியை அடிச்சு தாக்கி பிரச்னை பண்ணக் கூடாது’ன்னு அந்த லைன் போகும். சிரிச்சுக்கிட்டே தான் பதிலடி அமையணும்.

படத்துல விஜய் சேதுபதியைத் தாக்குவாங்க. அவரும் அடிவாங்குவார். இந்த இடத்தில் ஹீரோ கைதட்டல் வாங்கணும். இப்படி அடிவாங்கிக்கிட்டே கைதட்டல் வாங்கக்கூடிய ஆள் யாராக இருக்க முடியும்! இந்த இடத்துல யாரை போட்டால் படம் நிக்கும்? கண்டிப்பா ‘டாப்’ல இருக்குற நாலு ஹீரோகிட்டே போக முடியாது. தப்பாயிடும். அடுத்து இருக்கிறவங்களும் கஷ்டம். புத்திசாலித்தனத்தை வேற மாதிரி காட்டணும். எனக்கு விஜய்சேதுபதிதான் முதலும் கடைசியாக ஞாபகம் வந்தார்.

அவருக்கு போன் செய்தேன். ‘உங்களைப் பார்க்கணும் பிரதர்’னு சொன்னதும், ‘அப்படியே ஆபீஸ்ல இருங்க. புறப்பட்டு வர்றேன்’னு சொன்னார். நான்தான் போய்ப் பார்த்தேன். லைன் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு  கேட்டால் தொடர்ச்சியாக மூணு படங்களைச் சொன்னார். ‘பிரதர், இதை முடிச்சிட்டு நீங்க என்கிட்டே வர ஒரு வருஷம் ஆகுமே’னு சொன்னேன். ‘அதை என்கிட்டே விடுங்க, பண்ணுவோம் சார்’னு அவர் சொன்ன 25வது நாளில் ஷூட்டிங்கில் இருந்தோம். எல்லோரையும் ‘கூல்’ பண்ணிட்டு வந்திட்டார்.

நிறைய ஹீரோக்களோட வேலை பார்த்திட்டு... விஜய் சேதுபதி எப்படியிருக்கார்?
நாம மனசுல ஒண்ணு வைச்சிருப்போம். பல அம்சங்களைச் சுருக்கி தேர்ந்தெடுத்து நாலு வரி டயலாக் போட்டிருப்போம். அந்த டயலாக்கே சுண்டக் காய்ச்சின மாதிரி இருக்கும். அதைச் சொல்லிட்டு சேதுபதி வில்லனை இளக்காரமாக, கேவலமாகப் பார்க்கணும். அதேமாதிரியே சொல்லிட்டார். எடிட்டிங்கில் போட்டுப் பார்த்தேன்; அந்த நாலு வரி டயலாக்கை தூக்கிட்டேன். ஏன்னா சேதுபதியோட எக்ஸ்பிரஷனே அவ்வளவு அருமையா இருக்கு.

அந்த நாலு வரியே தேவையில்லைன்னு ஆகிப்போச்சு. அவர் நடிப்புல அவ்வளவு தனித்தன்மை இருக்கு. பல ஹீரோக்கள்கிட்டே நாம் எதிர்பார்ப்போம். அது இரு மடங்காகும், சில சமயம் பலமடங்காகும். ஆனால், இவர்கிட்டே எதிர்பார்க்காத ஒண்ணு வருது. தனக்குள் இருக்கிற திறமையைக் கொண்டாடாம இருக்கிற மனுஷனை நினைச்சா ஆச்சர்யமாக இருக்கு. அபூர்வமான நடிகன்.

படத்துக்குள்ள டி.ஆர் எப்படி வந்தார்?
இதுல முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கு. மனசில் இருக்கிறதை மீதி வைச்சுக்காம பளிச் பளிச்னு பேசணும். எதையும் டமால்னு உடைச்ச மாதிரி பேசுற ஆள் வேணும். விஜய் சேதுபதிக்கு சீனியராக இருக்கணும். எனக்கு டி.ஆர்தான் ஞாபகத்திற்கு வந்தார். ‘நீங்க என்கூட படம் பண்ணணும் சார்’னு திருப்பித் திருப்பிச் சொன்னேன். ‘தம்பி, இப்ப உங்ககிட்டே பேசுற மாதிரிதான் படத்திலும் பேசுவேன். ரோலுக்கு ஏத்த மாதிரி மாத்தியெல்லாம் எனக்குப் பேசத் தெரியாது. அதனால்தான் மத்த டைரக்டர்கள் படத்தில் எதுவும் நடிச்சதில்லை’னு சொன்னார்.

‘சார், இதுதான் வேணும், இதற்குத்தான் வந்திருக்கேன்’னு சொன்னதும் வந்திட்டார். இவ்வளவு அனுபவத்தை சேர்த்து வைச்சதற்கு எப்படியோ இருக்கலாம். ஆனால், அவர் அவ்வளவு சிம்பிள். முதல் படம் மாதிரி எவ்வளவு டேக் என்றாலும் ‘பண்றேன் பிரதர்’னு நிற்கிறார். எங்க டீம் சுறுசுறுப்பை பார்த்திட்டு, எங்களை மிஞ்சி ஆக்டிவ்வாக இருந்தார். ‘ஏதாவது ஒரு வசனம் கூடுதலாக சொல்லவா, இஷ்டம் இல்லேன்னா எடிட்டிங்கில் தூக்கிடுங்க பிரதர்’னு ஆசை ஆசையாகச் சொல்வார். தூய மனசு.

பொதுவா சினிமாவில் அயிட்டம் பாட்டு எடுக்கும்போது யாரும் வெளியே போகமாட்டாங்க. ஸ்பாட்ல உள்ளேயே எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பாங்க. அதே மாதிரி டி.ஆர். சார் செட்ல இருந்தா யாரும் வெளியே போகமாட்டாங்க. அவர் டயலாக் பேசுறதை வேடிக்கை பார்க்க கூடி நிற்பாங்க. அந்தக் கூட்டத்தைப் பார்த்தே அன்னிக்கு ஷூட்டிங்கில் எத்தனை பேர் வந்திருக்காங்கன்னு சொல்லிடலாம்.

விஜய்சேதுபதி - டி.ஆர். எப்படி நடிப்பு மோதலில் இறங்கினாங்க...
அந்த இடத்ைத இரண்டு பேரும் ஆளாளுக்கு பிரிச்சுக்கிட்டாங்க. ‘இந்த இடத்தில் நான் கைதட்டல் வாங்குறேன், அந்த இடத்தில் நீங்க கைதட்டல் வாங்கிக்குங்க’ன்னு இரண்டு பேரும் பேசி வைச்சுக்கிட்ட மாதிரி இருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்துக்கிட்டாங்க. டி.ஆர் அவர் பாணியில பேசுறது அதிகமாகவும் தெரியாது, குறைவாகவும் தெரியாது. பைபிளில் கோலியாத் - டேவிட்னு ஒரு கதை வரும்.

இதில் கோலியாத் பெரிய ராட்சஷன். ஒரு கிராமத்தையே ஆட்டிப் படைக்கிறான். அவனை ஆடு மேய்க்கிற சிறுவன் டேவிட் உண்டிவில்லால் வீழ்த்துகிற கதை இருக்கு. ஒரு பெரிய ஆளை சாதாரண ஆளு உத்திகளால் வீழ்த்துகிற கதைதான் இது. படத்தில் ‘யார் யாருக்கு ஆப்பு வைக்கிறாங்க... யார் யாருக்கு சோப்பு போடுறாங்க’னு ஒரு பாட்டு. இதிலேயே கதை இருக்கு.

மடோனா செபாஸ்டியன்...
புதுசாவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் பழகிப்போன முகமாகவும் இருக்கக்கூடாது. எனக்கு நலனின் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இரண்டு பேரின் இணை பிடிச்சது. இயல்பான பொண்ணு. சுலபமாக சொல்றதை உள்வாங்கிக்கிறாங்க. ஹிப்ஹாப் தமிழா இசை. என்னோடு சுபாதான் எப்பவும் திரைக்கதையில் இருப்பார். இந்தத் தடவை கபிலன் வைரமுத்துவின் உற்சாகத்தைப் பார்த்து அவரையும் சேர்த்துக்கிட்டேன். பயனுள்ள இணைப்பு. ‘கவண்’ பார்க்க சந்தோஷமாக இருக்கும். இதே வார்த்தையை உங்களிடமும் படம் பார்த்தபிறகு
எதிர்பார்க்கிறேன்.    

Behind the scenes

* ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் கே.வி. ஆனந்த் தொடர்ந்து செய்யும் மூன்றாவது படம்.
* 68 நாட்களில் படத்தை முடித்து விட்டார்கள்.
* ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் 14 படம் செய்திருக்கிறார். இயக்குநராக இது 6 வது படம்.
* ஆந்திரா பார்டரில் கொஞ்சம் நிலம் வாங்கி கே.வி.ஆனந்த் விவசாயம் செய்கிறார்.
* பத்திரிகையாளராக 1987 - 1990 வரை பணிபுரிந்திருக்கிறார் கே.வி.ஆனந்த்