விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 15

ஆதி மதுரைக்கு வந்து சேர்ந்தபோது நள்ளிரவாகி இருந்தது. தூங்கா நகரத்தில் ஆவி பறந்துகொண்டிருந்த எந்த உணவு விடுதியையும் அவன் தேடவில்லை. அந்த நேரத்திலும் டியூப் லைட் வெளிச்சத்தில் ‘வா வா’ என்று வரவேற்ற எந்த ஹோட்டல் ரிசப்ஷனுக்குள்ளும் நுழையவில்லை. அறையை புக் செய்யவில்லை. பைக்கை ஓரம் கட்டி ஹெல்மெட்டை லாக் செய்துவிட்டு நிதானமாக நடந்தான். ஜெர்கின் ஜிப்பை முழுவதுமாக விலக்கி தன் மார்புக்குள் காற்று ஊடுருவ அனுமதித்தான். மனம் லேசானது. மாசி வீதியைத் தாண்டி, ஆவணி வீதியைத் தொட்டு, சித்திரை வீதிக்கு வந்தான். கண் முன்னால் மீனாட்சியம்மன் ஆலயம் பிரமாண்டமாக நின்றது.

அன்னாந்து பார்த்தவன் அப்படியே கோபுரத்தைத் தாண்டி தன் கண்கள் செல்ல அனுமதித்தான். எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் தன் மனக் கண்ணால் பார்த்தான். முப்பத்தி இரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவகணங்களும், எட்டு வெள்ளை யானைகளும் தாங்கி நிற்கும் கருவறை விமானத்தை அங்கிருந்தபடியே அலச முற்பட்டான்.

கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் கொண்ட அந்த முழு கோயிலில், தான் தேடி வந்தது அந்த விமானத்தில்தான் இருக்கிறது. மாஸ்டர் அதைத்தான் ஆராயச் சொல்லியிருக்கிறார். எவ்வளவு  துழாவியும் ஓர் எல்லைக்கு மேல் மனக் கண்ணால் செல்ல முடியவில்லை. துல்லியம் அகன்று மெல்ல மெல்ல மேகமூட்டமானது. ஐந்து வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறான். அது கூட கார்க்கோடகர் அழைத்ததால்தான்.

அப்போது அவர் ஓரிடத்தில் அமர்ந்து ஆடாமல் அசையாமல் மணிக்கணக்கில் கருவறை விமானத்தை ஆராய்ந்தார். ஏன் என்று அப்போதும் தெரியாது. இப்போதும். மவுனமாக ‘அப்படி என்ன பார்க்கிறார்...’ என தானும் அலசினான். அன்று பதிந்த காட்சிகள்தான் இன்று உயிர்பெற்று நர்த்தனமாடுகின்றன. ஆனாலும் எதுவும் புரிபடவில்லை. ‘‘நல்லா பாரு... பார்த்துக்கிட்டே இரு... உள்ளுணர்வு உனக்கொரு க்ளூ கொடுக்கும்.

அதை கெட்டியா பிடிச்சுக்க. மேற்கொண்டு என்ன செய்யணும்னு அதுவே வழிகாட்டும்...’’ மொபைலில் அன்புடன் மாஸ்டர் உச்சரித்த சொற்கள் இப்போதும் அவன் செவியில் எதிரொலித்தன.

‘‘தாராகிட்டேந்து ரங்கம் வரைபடத்தை எப்படி வாங்கணும்... வேற்றுகிரக வாசிகள் எந்த நோக்கத்துக்காக வந்திருக்காங்க... இது எல்லாத்துக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கருவறை விமானம் பதில் சொல்லும். ஆனா, ஒண்ணு. நடக்கப் போறது எதுவும் நல்லதுக்கில்ல. அதுல மட்டும் தெளிவா இரு. நம்ம மூதாதையர்கள் உருவாக்கின ஏதோ ஒரு பொருளை எடுக்கப் போறாங்க. அதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்.

அதுதான் நம்ம ‘Intelligent Design’ அமைப்போட வேலை. எப்படி எப்படியோ பேசி மூளைச் சலவை செய்ய முயற்சிப்பாங்க. எதுக்கும் அசைந்து கொடுக்காத...’’ உதட்டைக் கடித்தபடி பெருமூச்சுவிட்ட ஆதி, அருகிலிருந்த விடுதியை நோக்கி நகர்ந்தான். பழக்கப்பட்ட இடம். கார்க்கோடகருடன் மதுரைக்கு வந்தபோது அங்குதான் தங்கினான். டிரைவிங் லைசன்ஸைப் பார்த்துவிட்டு வரவேற்பறையில் இருந்தவர் ரூம் கொடுத்தார். 205. முன்பு தங்கிய அதே அறை. சகுனம் நன்றாக இருக்கிறது.

அறைக்குள் நுழைந்து கால், கைகளைக் கழுவிவிட்டு படுக்கையில் விழுந்தான். சட்டென்று மனதுக்குள் அலாரம் அடித்தது. துள்ளி எழுந்தான். மீனாட்சி அம்மன் கருவறை விமானத்தின் இன்னொரு பெயர் இந்திர விமானம் அல்லவா..? ஒருவேளை இந்திரனுக்கும் இப்போது நடைபெற்று வரும் சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா..?

‘‘இருக்கு...’’ ரங்கம் ராஜகோபுரத்தின் மேல் ஏறியபடியே கார்க்கோடகர் பதிலளித்தார். மற்ற மூவரும் தலையசைத்தபடி அவரைப் பின்தொடர்ந்தார்கள். ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் இந்த ரங்கத்துக்கும் சம்பந்தமிருக்கு. அது என்னனு கண்டுபிடிச்சுட்டா பாதி கிணறை நாம தாண்டினா மாதிரிதான்...’’ ஐந்தாம் தளத்துக்கு வந்ததும் தரையில் கால் நீட்டியபடி அமர்ந்தார். மற்ற மூவரும் அவர் முன்னால் கைகட்டியபடி நின்றார்கள்.

‘‘பகல்ல கூட மனுஷங்களால இங்க வர முடியாது... அதிகாரிங்க சிபாரிசு இருந்தாதான் படில ஏறவே விடுவாங்க...’’ தூணில் சாய்ந்தார். ‘‘உலகத்தைப் பொறுத்தவரை நான் செத்தவன்... நீங்க இந்த கிரகத்தை சேர்ந்தவங்களே இல்ல... ஆக, நாம நாலு பேருமே யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம்...’’ கண்களைச் சிமிட்டியபடி சிரித்தார். ‘‘அப்படீன்னா உடனே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் இந்திர விமானத்தை ஆராயலாமே?’’ கேட்டவனை உற்றுப் பார்த்தார்.

‘‘இது கூட தெரியாமத்தான் இத்தனை வருஷங்களா நான் பூமில இருக்கேன்னு நினைக்கிறியா..?’’ மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘நீங்க ஏன் ராமானுஜர் சந்நிதிக்குள்ள போகலை..?’’ ‘‘அனுமதியில்லனு நம்ம அதிபர் சொன்னாரு...’’ ‘‘இதே பதில்தான் எல்லாத்துக்கும்...’’ அரங்கநாதரின் சந்நிதியை ஏறிட்டார். தங்க கலசத்துடன் கருவறை விமானம் அந்த இரவிலும் பளபளத்தது.

‘‘யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம்... ஆனாலும் நம்மால இந்த பூமில எல்லாப் பகுதியிலயும் நுழைய முடியாது. ஏன் தெரியுமா..?’’ சட்டென திரும்பி மூவரையும் கார்க்கோடகர் பார்த்தார். ‘‘நம்மை தடுக்கிற சக்தி ஒண்ணு இங்க இருக்கு. அது என்ன? தெரியாது. இதுவரை யாரும் பார்த்ததில்ல. பார்க்க முற்பட்டவங்களும் துணிஞ்சு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கு போனவங்களும் அப்படியே காத்துல கரைஞ்சுட்டாங்க... என்ன ஆனாங்கனு இதுவரை தகவல் இல்ல.

அதனாலதான் சில பகுதிகளுக்குள்ள போக வேண்டாம்னு சொல்லியே நம்மை ஸ்பேஸ் ஷிப்புல ஏத்தி அதிபர் அனுப்பறார்...’’ ‘‘நீங்களும் எங்களை மாதிரி வந்தவர்தனா..?’’ நடுவில் நின்றவன் கேட்டான். ‘‘இல்லைனா உங்களை என்னால கண்டுபிடிச்சிருக்க முடியாதே..?’’ ‘‘நாம எதை தேடறோம்?’’ வலப்பக்கத்தில் இருந்து குரல் வந்தது. ‘‘எதை எடுக்க முயற்சி செய்யறோம்னு கேளு...’’ கார்க்கோடகர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘சரி எதை..?’’ ‘‘அர்ஜுனனோட வில்லை..!’’ ‘‘வில்லா? அதைவிட பவர்ஃபுல்லான ஆயுதங்கள் நம்மகிட்ட இருக்கே?’’ ‘‘நவீன துப்பாக்கிகளையும் பாம்களையும் சொல்றியா?’’ ‘‘ம்...’’ ‘‘முட்டாள்.

அர்ஜுனனோட வில் வெறும் ஆயுதம் மட்டுமில்ல...’’ ‘‘அப்புறம்?’’ கார்க்கோடகர் பதில் சொல்லவில்லை. கண்களை மூடினார். மூவரும் அவரையே பார்த்தபடி நின்றார்கள். மூன்று ஆந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக பறந்து  சென்றதும் எழுந்தார். ‘‘கீழ இறங்கலாம். பிரம்ம முகூர்த்தம் பிறக்கப் போகுது. சரியான காலம். இந்த பூமில இருக்கிற வரைக்கும் உன் பேரு அனந்தன். நீ, குளிகன். இவன், பத்மன். மண்ணுல கால் வைச்சதுமே மனித உடம்பு உங்களுக்கு கிடைச்சுடும்.

ஆபத்து வர்றப்ப சூட்சுமமா உங்களை மாத்தறேன்...’’ ‘‘மனுஷனா மாறினாலும் உங்களைப் பார்க்க முடியுமா?’’ பத்மன் வாய் திறந்தான். ‘‘உங்க மூணு பேரால மட்டும் முடியும். இதுவரை நம்ம கிரகத்துலேந்து பலபேர் பல காலங்கள்ல பூமிக்கு வந்திருக்காங்க. யாருக்குமே கிடைக்காத துப்பு எனக்கு கிடைச்சிருக்கு.

அதனாலதான் துணைக்கு மூணு பேர் வேணும்னு அதிபருக்கு செய்தி அனுப்பி உங்களை வரவழைச்சேன்...’’ ‘‘அப்ப அந்த துப்பை வைச்சு அர்ஜுனனோட வில்லு எங்க இருக்குனு கண்டுபிடிச்சுடலாம் இல்லையா..?’’ அனந்தன் பரபரத்தான். ‘‘அதுதான் திட்டம். ஆனா, நம்மால நேரடியா களத்துல இறங்க முடியாது...’’ ‘‘ஏன்?’’ குளிகன் இடைமறித்தான். ‘‘அனுமதியில்ல... மீறினா காத்துல கரைஞ்சுடுவோம்...’’ ‘‘அப்ப கிடைச்ச க்ளூவை வைச்சு என்ன செய்யறது?’’ பத்மன் புருவத்தை உயர்த்தினான்.

‘‘அதுக்குத்தான் ஒரு மனிதனை தயார் படுத்தி இருக்கேன்... உங்களை மாதிரியே நான் பூமிக்கு வந்தப்ப இந்த ஸ்ரீரங்கம் கோயிலோட வரைபடத்தை வரைஞ்சேன். அந்த நபர் கைக்கு அது கிடைக்கிறா மாதிரி செய்திருக்கேன். கூடவே நம்ம அடையாளச் சொல்லையும் அவிச்ச முட்டைல எழுதி கொடுத்திருக்கேன். இப்ப நாம போக வேண்டிய இடத்துக்கெல்லாம் அந்த மனித உடம்பு போய்க்கிட்டு இருக்கு.

நாம தேட வேண்டியதை அது தேடிட்டு இருக்கு...’’ ‘‘அப்ப அந்த உடம்பை நாம ஃபாலோ செஞ்சா போதுமா?’’ ‘‘ஆமா...’’ ‘‘அந்த மனித உடம்போட பேரு?’’ ‘‘தாரா!’’ ஐஸ்வர்யாவின் உறக்கத்தைக் கெடுக்க கிருஷ்ணன் விரும்பவில்லை. கதவை இறுக மூடிவிட்டு பால்கனிக்கு வந்தான். சேர் இல்லை. அப்படியே தரையில் அமர்ந்தவன், tabஐ திறந்தான். நூற்றுக்கணக்கான ஈ புக்குகள் அதில் சேமிக்கப்பட்டிருந்தன. அதில் ‘நாகர்களின் வரலாற்றை’ க்ளிக் செய்தான். ‘காசிபர் - கத்ரு தம்பதியருக்கு பிறந்தவர்கள் தட்சகன், வாசுகி, ஆதிசேஷன், சங்கபாலன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், பத்மன் முதலானவர்கள். இவர்கள் அனைவருமே நாகர் குல தலைவர்கள்...’ தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்