மெரினா



அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

நடக்கலாம், ஓடலாம், காற்று வாங்கலாம், சிரிக்கலாம், நண்பர்களுடன் அரட்டையடிக்கலாம், காதலிக்கலாம், விளையாடலாம், புரட்சி பண்ணலாம், தியானிக்கலாம். ஏன், ஒன்றரை டன் வெயிட்டில் ஓங்கி அடித்து மூன்று முறை சத்தியம் கூட செய்யலாம்..! எங்கே? மெரினாவில்!

உலகில் நகர்ப்புறம் சார்ந்த நீளமான கடற்கரைகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் மின்னுகிறது சென்னை மெரினா. அதனால்தானோ என்னவோ, எப்போதும் இங்கே கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. லைட்ஹவுஸில் இருந்து அண்ணா சமாதி வரை வெறும் மூன்று கிமீ மணற்பரப்புதான். ஆனால், அதற்குள் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அதிகாலை 5 மணி. கலங்கரை விளக்கத்தின் அருகிலிருக்கும் காந்தி சிலையின்முன் நீண்டு செல்லும் நடைபாதை. அதை ஒட்டினாற்போல் பச்சைப் புல்வெளிகளும், படிக்கட்டுகளும், பெஞ்சுகளும். அதற்கடுத்து சர்வீஸ் ரோடான உலாவும் சாலை. இன்னும் வெளிச்சம் வராத அந்தக் குறைந்த ஒளியில் ஆண்களும், பெண்களும் வியர்க்க விறுவிறுக்க இவற்றில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் சத்தம் வராதபடி ெமதுவாக ஓடுகிறார்கள். சிலரோ உட்காருவதற்கென இருக்கும் படிக்கட்டுகளில் குதித்து குதித்து ஏறி இறங்குகிறார்கள். இன்னும் சிலர், தூணைப் பிடித்தபடி உட்கார்ந்து உட்கார்ந்து எழுகிறார்கள். வசதியானவர்கள் கையோடு சேர்களைக் கொண்டு வந்து காற்று வாங்குகிறார்கள். பாதுகாப்புக்காக குதிரைகளில் வலம் வந்து கொண்டே இருக்கிறது காவலர்கள் டீம்.

கடற்கரையில் ஆவணப்படம் எடுப்பதற்காக நிற்கிறது கல்லூரி மாணவ - மாணவிகளின் கூட்டம். அவர்களுக்கு இடப்பக்கமும், வலப்பக்கமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைய கேமராக்கள் அதிகாலை கதிரவனுக்காக காத்திருக்கின்றன. முழு வெளிச்சமும் வந்து சேர்ந்திருக்க காந்தி சிலைக்கு நகர்ந்தோம். யோகாவில் வில்லாக வளைந்து கொண்டிருக்கிறார்கள் முதியவர்களும் இளைஞர்களும்.

அங்கிருக்கும் பெஞ்சுகளில் நடையை முடித்துவிட்டு ஆங்கில நாளேடுகளைத் திருப்பிக் கொண்டிருக்கின்றன சிலரின் கண்கள். ‘அரசியலே மோசமாகிடுச்சு...’ என்கிறார் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு நடக்கும் ஒருவர். அதை தலையாட்டி ஆமோதிக்கிறது அவரின் நண்பர்கள் வட்டம். சுற்றி நின்று சிரிக்கிறது ஒரு கூட்டம்.

என்னவெல்லாம் சேஷ்டைகள் செய்ய முடியுமோ அத்தனையும் ஒருவர் மாறி ஒருவர் செய்து கலாய்க்கிறார்கள். ‘லாஃபிங் தெரபி’. சிரிப்பின் வழியே மன அழுத்தத்தைக் குறைக்கும் அந்தக் கூட்டத்தைத் தாண்டி உலாவும் சாலையில் நடக்கத் தொடங்கினோம். வரிசையாக சின்னச்சின்ன கடைகள். பப்பாளி, தர்பூஸ் பழங்களை கப்களில் வெட்டி நிறைத்து வைத்திருக்கிறார்கள். அங்கேயே, சுடச்சுட கீரை சூப்பும், காளான் சூப்பும் ரெடியாக இருக்கிறது.

கூடவே, கேரட், நெல்லிக்காய் ஜூஸ்களும். எல்லாம் இருபது ரூபாய். ஒன்பது மணியோடு இவர்கள் வியாபாரம் ஓவர். ஓடி முடித்து களைப்பாக வருபவர்கள் இதனைச் சுவைத்துவிட்டே நடையைக் கட்டுகிறார்கள். இன்னொருபுறம், கற்றாழை ஜூஸ் விற்கும் ஐந்தாறு கடைகள். அடையாறு பகுதியிலிருந்து கற்றாழையை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். ‘‘ஜூஸ் 20 ரூபாய் சார்... மோரும், தயிரும் கலந்து தர்றோம். உடம்புக்கு ரொம்ப நல்லது’’ என்கிறவரிடம் எங்கிருந்து வர்றீங்க? என்றோம்.

‘‘நாங்க எல்லோருமே திருவல்லிக்கேணி. எனக்கு நடுக்குப்பம். அஞ்சு வருஷமா இங்க கடை வச்சிருக்கேன். 144க்குப் பிறகு வியாபாரம் ரொம்ப டல்!’’ என்கிறார் வேதனையாக. அருகிலேயே சைக்கிளில் தேங்காய்ப்பூ வைத்தபடி இருவர். ஒரு தேங்காய்ப்பூவின் விலை ஐம்பது ரூபாய். ‘‘ஓ... ஓ... ஓ...’’ என்றொரு கூக்குரல். அங்கே, எண்ண முடியாத எண்ணிக்கையில் புறாக்கள்.

அதனைப் புகைப்படமெடுக்க ஒரு கூட்டம். புறாக்களைக் கலைத்துவிடாதபடி கட்டுப்படுத்தும் முதியவரின் குரல் அது. அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘நோ டமில்... ஒன்லி ஹிந்தி, பெங்காலி, ராஜஸ்தானி’’ என்கிறார். ஆங்கிலத்தை விட்டு விட்டு பேசுபவர், கையிலிருந்த பேப்பரை நீட்டினார். அதில், ‘Marina Beach Pigeon Feeding Centre’ என்றிருந்தது.

சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராஜஸ்தானிகள் புறாவின் உணவுக்காகப் பணம் கொடுத்து பராமரித்து வருவதாக தகவல்களைச் சொன்னவர், ‘‘டெய்லி, 25 தௌஸண்ட் பேர்ட்ஸ் கம்மிங். வீ கிவ்விங் 500 டூ 700kg ஃபுட்’’ என்றார். மாலை மெரினா பல முகங்களுடன் காட்சியளிக்கிறது. கண்ணகி சிலையின் மணற்பரப்பில் கடற்கரையை நோக்கி வரிசையாக கடைகள். சனி, ஞாயிறுகளில் மட்டும் இவை இயங்குகின்றன என்கிறார் அங்கிருந்தவர்.

இந்தக் கடைகளின் பின்னால் ஒருவர் மடியில் ஒருவரும், தோளில் சாய்ந்தபடியும் காதலர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். ராட்டினம், மிளகாய் பஜ்ஜி, சுண்டல், மல்லிப்பூ, கை ஜோசியம், துப்பாக்கியால் பலூன் சுடுதல், குதிரைசவாரி என சுற்றுலாத் தல அடையாளங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. சதுக்கத்தை நோக்கி நடந்தோம். இடையில், குடும்பம் குடும்பமாக நரிக்குறவர்கள் டேரா போட்டிருக்கிறார்கள்.

சதுக்கத்தின் நுழைவில் விதவிதமான பாசிகளை விற்று இவர்கள் பிழைப்பை நடத்துகிறார்கள். உழைப்பாளர் சிலையின் பின்புறமும் கடற்கரை நோக்கி இருபுறங்களிலும் வரிசையாக சிறுகடைகள். இவர்கள் சங்கமாக செயல்பட்டு வருகிறார்கள். வாரத்தின் ஏழு நாட்களும் இங்கு வியாபாரம் நடக்கும். மெரினாவிற்கு சுற்றுலா வருபவர்கள் இங்கிருந்துதான் அதிகமாக பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.

அதில் முக்கியமானது, ஒரே அரிசியில் இரண்டு பெயர்கள் எழுதித் தரப்படும் கடைகள். கல்லூரி, பள்ளி மாணவ - மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது, கீ செயினில் தங்களுக்குப் பிடித்த பெயர்களை எழுத! மீன்கடைகளில் ‘வஞ்சிரம்’, ‘வவ்வால்’, ‘சங்கரா’ என அனைத்து வெரைட்டிகளையும் மசாலா தடவி வைத்திருக்கிறார்கள். ரூ.10 முதல் ரூ.250 வரை கூட சைஸ் வாரியாக இருக்கின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் மீனை சுடச்சுட அங்கேயே பொரித்துத் தருகிறார்கள்.

‘‘காசிமேட்டுலேந்து மொத்தமா வாங்கிட்டு வந்து விக்கிறோம்...’’ என்று சொல்லும் இவர்கள் நடுக்குப்பம், அயோத்தியாகுப்பத்தைச் சேர்ந்தவர்கள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நடிகர், நடிகைகளை வரிசையாக மணலில் ‘நிற்க’ வைத்து புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோக்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. ‘‘அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னாடி நல்லா போச்சு. சனி, ஞாயிறுகள்ல குறைஞ்சது ரூ.5 ஆயிரம் சம்பாதிப்போம்.

செல்போன் வந்தபிறகு தொழில் படுத்துடுச்சு. நாளைக்கே கடையை எடுத்துடலாம்னு இருக்கேன்...’’ என்கிறார் முப்பது ஆண்டுகளாக கடை வைத்திருக்கும் தாஸ். எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதையடுத்து, அண்ணா சதுக்கம். அங்கே எந்த ஆரவாரமும் இல்லை. அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது எதையும் தாங்கும் இதயம்!       

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மெரினா டேட்டா

* கடற்கரையின் மொத்த நீளம் 13 கி.மீ.
* நாளென்றுக்கு 20 ஆயிரம் மக்கள் வந்து செல்கிறார்கள். வார இறுதியில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தொடுகிறது.
* ஐந்நூறுக்கும் மேற்பட்ட கடைகள் இங்கிருக்கின்றன. இதில், உணவு சம்பந்தப்பட்ட கடைகளே அதிகம்.
* உழைப்பாளர் சிலை அருகே நீண்டு செல்லும் மணற்பரப்பில் சுமார் இருநூறு கடைகள் இருக்கின்றன. இவர்கள் ‘அண்ணா, எம்ஜிஆர் சதுக்க சிறுகடை வியாபாரிகள் சங்க’த்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
* அண்ணா, மெரினா என இரண்டு நீச்சல் குளங்கள் உள்ளன. இதில், ‘மெரினா’ 1947ல் கட்டப்பட்டது. இதை, உலகின் இரண்டாவது பெரிய பொது நீச்சல் குளம் என்கிறார்கள். ஒலிம்பிக் குளத்தைவிட பெரியது. நூறு மீட்டர் நீளமும் முப்பது மீட்டர் அகலமும் கொண்டது. அண்ணா நீச்சல் குளம் 1976ல் உருவாக்கப்பட்டது.
* போதிய விளக்குகள் இங்கில்லை. சில பழுதாகி உள்ளன. எல்லாவற்றையும் சரிசெய்தால் பகல் போல் இரவிலும் மெரினா ஜொலிக்கும்.

பீச் உருவான கதை

* ஆரம்பத்தில் கடற்கரை எதுவும் இங்கில்லை. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டும் போது கடல், வெகு அருகில் இருந்திருக்கிறது. அலைகள் கோட்டைச் சுவரை மோதும். 1875ல் முதல் முதலாக துறைமுகம் கட்ட ஆரம்பித்தபோது கடலைத் தடுத்து தென்பக்கமாக சுவர் எழுப்பி உள்ளனர்.

பொதுவாக, வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளிலிருந்து வரும் மணல், சுழற்சியால் ெதன்பக்கமாகச் செல்லும். அப்படி வரும் மணல் மட்டும் 8 ஆயிரம் கியூபிக் மீட்டர்! துறைமுகத்துக்காக இந்த மணல் தடுக்கப்பட, ஒரே வருஷத்தில் 40 சதுர கிலோமீட்டர் அளவுக்கு குவிந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கடல் பின்னுக்குச் சென்று மணல் மட்டும் சேர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு வருடமும் 40 சதுர கிலோமீட்டர் மணல் அதிகரிக்க, பீச் நீளமாகியிருக்கிறது.

* 1881ல் மதராஸ் மாகாண கவர்னராக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டன் கிராண்ட் டஃப், துறைமுகம் தாண்டி மண் சேர்வதை பார்த்துள்ளார். ‘ஏழரை மைல் நீளத்துக்கு ஒரு கடற்கரை. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. ஏன் இதில் உலாவும் சாலை அமைக்கக் கூடாது?’ என்ற கேள்வி அவர் மனதில் உதிக்க உடனே உருவாகியிருக்கிறது பாதை.

ஒரு காலத்தில் பெசன்ட் நகரின் எலியட்ஸ் பீச் வரை இந்த பாதை இருந்துள்ளது. இத்தாலியில பால்மரோ கடற்கரை ஃபேமஸ். அதற்கு மெரினா என்று பெயர். அந்த ஞாபகத்தில் கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட்தான் 1884ல் ‘மெட்ராஸ் மெரினா’ எனப் பெயர் வைத்தார். இத்தாலி மொழியில் மெரினோ என்றால் கடல் சார்ந்தது என்று பொருள். இதிலிருந்து வந்த வார்த்தைதான் மெரினா.

*  ‘ஷிசோம்’ என்ற ஆங்கிலேய ஆர்க்கிடெக்ட், இங்கு எப்படி கட்டடங்களை எழுப்பினால் நன்றாக இருக்கும் என்று ஆராய்ந்து இப்போதிருக்கும் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கட்டடங்களை அன்று வடிவமைத்தார். இதற்கு ‘இந்தோ-சாரசெனிக் கட்டடக்கலை’ என்று பெயர். அதாவது, இந்திய-முஸ்லிம் கட்டடக்கலை.

*  20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலவகையான அமைப்புகளை மெரினாவில் உருவாக்க ஆங்கிலேய அரசு நினைத்தது. அப்போது, சமூக ஆர்வலர்கள் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘மெரினா இஸ் தி லங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என முழங்கினார்கள். இதனையடுத்து அந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டன.

* உழைப்பாளர் சிலையும், தண்டி யாத்திரை செல்கிற காந்தி சிலையும் இங்கு புகழ்பெற்றவை. சுதந்திரத்திற்குப் பிறகு உருவான இந்தச் சிலைகளை வடிவமைத்தவர் முதன் முதலாக மெட்ராஸ் கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த தேவிபிரசாத் ராய் சவுத்ரி. இதைப் பார்த்து இந்திய நாடாளுமன்றமே வியந்து, தில்லியிலும் இதேபோன்று சிலைகளை அமைத்தது!

- என்கிறார் ஆய்வாளர் நரசய்யா.

ஏன் மெரினாவில் குளிக்கக் கூடாது?

‘‘மெரினாவின் கடல் ஆழம் கிடையாது. ஆனால், இது ஒரே நேர்கோட்டில் அமைந்த கடற்கரை. வளைவு இருந்தால்தான் அலைகளின் வேகம் குறைந்து குளிப்பதற்கு ஏதுவாக அமையும். இது நேர்கோடு என்பதால் அலை வேகமாக மோதி அதே வேகத்தில் திரும்பும். எதிரொலி மாதிரி. அதனால்தான் குளிப்பவர்கள் நிலை தடுமாறி உள்ளிழுக்கப்படும் அபாயம் அதிகம்’’ என்கிறார் நரசய்யா.