தியேட்டர்களே இல்லை!



தமிழ் சினிமா சிக்கல்கள்

-ச. அன்பரசு

‘பாக்ஸ் ஆபீஸ்’ இதழின் தகவல்படி 2016ம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை 1,902. இதில் லாபம் அடைந்த படங்கள் வெகு சொற்பம். இந்தியா முழுக்கவே இதுதான் நிலை. நஷ்டமடையும் படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 97% ஆக இருக்கிறது. ஹாலிவுட் பாட்ஷாவான டிஸ்னி இந்தியாவை விட்டு தன் ஊருக்கே நடையைக் கட்டியது இதனால்தான்.

இந்தியாவில் ஒன்றரை லட்சம் மக்களுக்கு ஒரு தியேட்டர் என்ற விகிதத்திலேயே திரையரங்குகள் இருக்கின்றன. சீனாவில் அப்படியில்லை. 35 ஆயிரம் பேருக்கு ஒரு தியேட்டர் என்றிருந்தவர்கள் இப்போது தங்கள் திரையரங்கங்களின் எண்ணிக்கையை 39 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களது பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஆண்டுக்கு ரூ.680 கோடியாக இப்போது உயர்ந்திருக்கிறது.

இதன் காரணமாகவே உலகின் இரண்டாவது பெரிய சினிமா சந்தையாக அந்நாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. நம்நாட்டில் அப்படியில்லை. அகமதாபாத், ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் பரவலாக தியேட்டர்கள் இருக்கின்றன. ஆனால், சென்னை, டெல்லி, கொல்கத்தா மாதிரியான மாநகரங்களில் இப்போதும் தியேட்டர் பற்றாக்குறை நிலவுகிறது. 2005ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான UFO என்ன மாற்றங்களை செய்திருக்கிறது என அந்நிறுவன இயக்குனரான சஞ்சய் கெய்க்வாட்டிடம் கேட்டோம்.

‘‘முதலில் 600 தியேட்டர்களில் மட்டுமே படங்கள் ரிலீசாகின. UFO டிஜிட்டல் முறை வந்தபிறகு இந்த எண்ணிக்கை ஆறாயிரமாக உயர்ந்திருக்கிறது. இதனால் கிடைக்கும் லாபம் ரூ.1,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. படத்தை திரையிட தோராய கட்டணம் ரூ.15 ஆயிரம்தான். முன்னர் இது ரூ.80 ஆயிரமாக இருந்தது. அடுத்த மூன்று வருடங்களில் 500 ஸ்கிரீன்களை புதிதாக உருவாக்கப் போகிறோம்.

இதன் வழியாக ரூ.200 கோடியாக இருக்கும் வருமானத்தை ரூ.300 கோடியாக உயர்த்தப் போகிறோம். மினிமம் தியேட்டர்ஸ் உள்ள சிறுநகரங்களில் மட்டும் ரூ.170 கோடி கிடைக்கிறது என்பது பெரிய விஷயம்...’’ என்கிறார். திரையரங்கின் விளம்பர வருவாயில் 28% பங்கை UFO பெறுவது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

சரி. இந்தியாவிலுள்ள 48 நகரங்களில் 569 தியேட்டர்களைக் கொண்டு மெகா பொழுதுபோக்கு நிறுவனமாக காலூன்றியுள்ள PVR சினிமாஸின் இயக்குனரான அஜய் பிஜ்லி என்ன சொல்கிறார்? ‘‘ஒற்றை ஸ்கிரீன் தியேட்டரில்தான் எங்கள் பயணத்தை தொடங்கினோம். மல்டிப்ளக்ஸ் வேகமாக இப்போதுதான் உருவாகி வருகின்றன. இதற்கு முன்பே அரசு அனுமதியுடன் ஒரு திரையரங்கில் 4 ஸ்கிரீன்ஸ் என மாறினோம்.

பிவிஆரின் பெரிய தியேட்டரில் 400 சீட்டுகள்தான் இருக்கும். துல்லியமான ஆடியோ, வீடியோ, குளிர்சாதன வசதி ஆகியவையே எங்கள் வெற்றிக்கான அடிப்படை. இப்போது ஹாலிவுட் படங்கள் பிராந்திய மொழிகளில் டப் ஆகி வசூல் ஈட்டுகின்றன. மக்களின் ரச்னை மாறிவருகிறது. பாலிவுட்டில் அமீர்கான், ஷாரூக்கானின் படங்கள் நான்காயிரம் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகின்றன.

ஆனால், உலகிலேயே இந்தியாவில்தான் வரிச்சுமை அதிகம். இதனால் திரையரங்க உரிமையாளர்களின் முதுகுகள்தான் பழுக்கின்றன. இந்நிலையில் இப்போது ஜிஎஸ்டி வரி வருகிறது. சரியான முறையில் இவ்வரி அமையவில்லையெனில் சினிமாவுக்கு கடும் இழப்பு ஏற்படும். இன்றைக்கும் மக்கள் தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்க விரும்புகிறார்கள். எந்த படமாக இருந்தாலும் நிச்சயம் 65% லாபம் பார்க்கலாம்...’’ என்கிறார் அஜய் பிஜ்லி.