ரூ.100 கோடி வசூல் என்பது பொய்!



தமிழ் சினிமா சிக்கல்கள்

-நா. கதிர்வேலன்

வெளியான மூன்றாவது நாளே 100 கோடி ரூபாய் வசூல் சாதனை என்று ஹீரோக்கள் பிரஸ் மீட் கூட்டி குதூகலிக்கிறார்கள். அதிலிருக்கும் உண்மைகள் பற்றி பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான திருப்பூர் சுப்ரமணியனிடம் பேசினோம். ‘‘படம் வெளியாகி நாலைந்து நாட்களிலேயே ரூ.100 கோடி, ரூ.200 கோடி என பட்டியலிடுகிறார்கள். உண்மையில் அவை எல்லாமே பொய். இப்போது தயாரிப்புச் செலவுகள் எங்கேயோ போய்விட்டது.

ஒரு கார் தயாரிக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஸ்பேர் பார்ட்ஸ் செலவு, ஆட்களுக்கான செலவு, கம்பெனிச் ெசலவு, இதோடு கொஞ்சம் லாபம் என கணக்குப் போட்டுத்தான் கார் விற்பனையாகிறது. ஒரு படத்திற்கு ரூ.4 கோடி செலவு என்றால் அதில் ஒரு கோடி நடிகருக்கு இருக்கணும். ஒரு கோடி தயாரிப்புச் செலவு. மற்றொரு கோடி ‘செட்’ மாதிரியானவைகளுக்கு செலவு. இந்த வகையில்தான் போக வேண்டும்.

இங்கே தயாரிப்புச் செலவிலேயே ஹீரோ சம்பளம் ரூ.30 கோடியாகிறது. எப்படி தொழில் உருப்படும்? தயாரிப்புச் செலவு குறைவாகவும், ஹீரோ சம்பளம் அதிகமாகவும் ஆகும்போது சினிமா அழியத் தொடங்கிவிட்டது. கடந்த 20 வருட நஷ்டத்திற்கு காரணம் இதுதான். முதலில் 50% சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம். மீதியை தயாரிப்பில் செலவழிக்கலாம். நல்லபடியாக படம் போனால் நல்ல சம்பளம்.

சரியாகப் போகலை என்றால் சின்ன சம்பளம். ஆக , நஷ்டம் இல்லை. இப்படித்தான் ஹாலிவுட்டில் நடக்கிறது. இங்கே மொத்தப் பணத்தையும் கையில் வைத்தால்தான் முதல்நாள் ஷூட்டிங்கிற்கே ஹீரோக்கள் வருகிறார்கள். சம்பளத்தோடு இன்கம்டாக்ஸையும் புரடியூசரே சேர்த்துக் கட்டிவிடுகிறார்கள். இதனால்தான் பாழ்பட்டு நிற்கிறது படத்துறை. சினிமா ரிலீஸாகி நாலைந்து நாட்களுக்குள்ளே வெற்றிவிழா கொண்டாடிவிடுகிறார்கள்.

ஆனால், எங்கள் பாக்கெட்டுக்கு பணம் வருவதுதான் கிடையாது. வெற்றிவிழாவை படம் வாங்கியவர்கள்தான் கொண்டாட வேண்டும். அல்லது படம் திரையிடும் தியேட்டர்காரர்கள் கொண்டாட வேண்டும். இங்கே என்ன காமெடி என்றால் படத்தில் நடித்தவர்களே கொண்டாடுகிறார்கள்! இப்ப இருக்கிறவர்கள் புது ெஜனரேஷன் இல்லையா, அவர்களுக்குக் கெட் டுகெதர் வேண்டும். இதற்கு புரடியூசர்தான் கிடைத்தார்களா?

மற்றவர்கள் காசைப் புடுங்கி கொண்டாடுவதெல்லாம் வெற்றி விழா ஆகாது. புரடியூசர்கள் இதைச் சொல்ல ரெடியாகவே இருக்கிறார்கள். அப்படிச் சொல்லிவிட்டால் அடுத்த படத்திற்கு கால்ஷீட் தரமாட்டார்கள். அதுதான் விஷயம். இந்த பத்து வருஷத்தில் சம்பாதித்த இரண்டு புரடியூசர்களை காட்டுங்கள் பார்க்கலாம். இங்கே பத்து நடிகர்கள், பத்து டெக்னீஷியன்கள்தான் நல்லா சம்பாதிக்கிறார்கள்.

யாராவது ரூ.200 கோடி வசூல் என்று சொன்னால் அதற்கான ‘ப்ரேக்கப்’பை கேளுங்கள். அப்படியே நைஸாகக் கிளம்பிவிடுவார்கள். ஒரு பெரிய நடிகருக்கு முதல் ஷோ பெரிசாக நிரம்பும். நல்லாயிருந்தால் அடுத்தடுத்து வரும். இப்ப இருக்கிறவர்கள் படம் பார்த்ததும் பிடிக்கவில்லை என்றால் ‘மொக்கை, தியேட்டர் பக்கம் வந்திடாதீங்க’னு எஸ்எம்எஸ் அனுப்பிவிடுகிறார்கள்.

பழைய காலத்தை நினைச்சிட்டு இருக்காதீங்கன்னு நடிகர்களுக்கு யாராவது சொல்லியாகணும்.படம் எடுக்க சூப்பர்குட், கவிதாலயா, ஏவிஎம்.முக்கு எல்லாம் பணமா இல்லை? இருக்கு. 100% கட்டாயம் தோல்வி என்றால் எப்படி படம் எடுப்பார்கள்? நஷ்டம் எனத் தெரிந்து கொண்டே ஒரு தொழிலைச் செய்ய முடியுமா?

ஆச்சர்யம் என்ன வென்றால் இன்றைய தேதிக்கு நம்பகமான ஹீரோ ஒருத்தர் கூட இல்லை. ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா இவர்களுக்கு எவ்வளவு ஹிட்டு, எவ்வளவு ஃபெயிலியர் என கணக்குப் போட்டுப் பார்த்தால் 80% ஃபெயிலியர்தான். கொஞ்சம் முன்னாடி வரைக்கும் விஜய் ஆண்டனி நார்மலான சம்பளம் வாங்கிட்டு இருந்தார்.

ரூ.55 லட்சத்துக்கு கோவை ஏரியாவுக்கு ‘பிச்சைக்காரனை’க் கொடுத்தார். விநியோகதஸ்தருக்கு ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் வசூல் ஆனது. கணிசமான லாபம்தான். அடுத்த படம் 1 கோடியே 65 லட்சத்திற்கு விற்றார். 35 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஆனது. லாப ஹீரோ என்று பெயர் வாங்கிட்டு, உடனே நஷ்டமான ஹீரோன்னும் பெயர் வாங்கிட்டார். கொஞ்சம் லாபத்தை குறைச்சு வித்திருந்தால் ஒருத்தருக்கு பணம் கிடைத்திருக்கும். இன்னொருத்தருக்கு பெயர் கிடைத்திருக்கும். கடைசியில் இரண்டு பேருக்கும் இரண்டும் கிடைக்கவில்லை.

ஒரு படம் ஓடினால், மூன்று மடங்கு லாபம், நாலு மடங்கு சம்பளம் என நடிகர்கள் ஏற்றிவிடுகிறார்கள். பிரச்னை அங்கேதான் ஆரம்பம். இதையெல்லாம் சரிபண்ண ஒருசில வழிகள் இருக்கிறது. ஹீரோக்கள் சதவீத அடிப்படையில் மட்டுமே சம்பளம் வாங்க வேண்டும். அது பிடிக்கவில்லை என்றால் அவர்களே சொந்தப் படம் எடுத்துக் கொள்ளட்டும்.

இன்னும் சில ஹீரோக்கள் செலவை இழுத்துவிட்டு தயாரிப்பாளர்களைத் திணற வைத்துவிடுவார்கள். கடைசியில் இரண்டு கோடியை விட்டுக் கொடுப்பதாக அறிவிப்பார்கள். ஹீரோ வாழ்வார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மட்டும் கம்பெனியை மூடிவிட்டு போய்விடுவார். இதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது...’’ என்கிறார் திருப்பூர் சுப்ரமணியன்.