கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!



-நா.கதிர்வேலன்

‘‘சிம்பு வரச்சொல்லி அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். கூர்க்கா, ‘சார் ஜிம்மில் இருக்கார். போங்க’னு அனுப்பினார். சிம்பு வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தார். பேசிட்டு இருக்கும்போதே உள்ளேயிருந்து 10 வீட்டுக்கு கேட்கிறமாதிரி சத்தம். எட்டிப் பார்த்தால் ஜிம்ல ஆளுயர கண்ணாடி முன்னாடி ‘இவன் வருவாண்டா, யார் தெரியுமா... திரும்பி வருவாண்டா’னு பேசிட்டு இருக்கார் டி.ஆர். அவரே ஒரு ஜாம்பவான்தான்.

அவருக்குக் கிடைத்த இடம் வேறே. ரஜினி படமும், அவர் படமும் ஒரே நாளில் வந்திருக்கு. சாதித்த மனுஷன். அவருக்கே தனக்குக் கிடைச்ச இடம் பத்தாதுன்னு தோணுது.  டி.ஆர் கடிகாரத்தை கழட்டி வைச்சுக்கிட்டு, வாயாலேயே அத்தனை வாத்தியங்களையும் கொண்டு வந்து மேசையில் தட்டி மியூசிக் போடறதெல்லாம் யாராலும் முடியாது.

அந்த இடத்தில் எனக்கு கனெக்ட் ஆச்சு. எங்க அப்பாவும் சினிமா கதையெல்லாம் பைண்ட் பண்ணி டிரங்கு பெட்டியில் வைச்சிருக்கார். அவர்கிட்டே இருக்கிற திறமைக்கு இன்னும் பெரிசா அங்கீகரிக்கப்படாமல் இருந்திருக்கிறார். அப்படி ஒருத்தரை கதைக் களத்துக்குள் கொண்டு வந்தேன். அதுதான் ‘கடுகு’ படம்...’’ தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் விஜய் மில்டன். ‘கோலி சோடா’வை தமிழகமே வசீகரித்துக் கொண்டாடியது.

எப்படியிருக்கும் ‘கடுகு’?
ராஜகுமாரன் புலிக்கலைஞனாக வருகிறார். புலிவேஷம் போடும்போது எடுத்துக்கிற அக்கறை, நுணுக்கம் எல்லாம் ரொம்ப பெரிசா இருக்கணும். மீசை உடையக்கூடாது. புருவம் நேர்த்தியா பிசிறு தட்டாம இருக்கணும். புலி போலவே தன்னை அலங்கரித்துக் கொள்கிறார்கள். பிறகு தன்னையே புலியாகப் பார்க்கிறார்கள். நாமளே ‘அட, புலி மாதிரியே இருக்கான்’னு பேசிக்கிறோம். அவங்க புலியாக வாழ்ந்து, ஆடி முடிச்சிட்டு லைன்ல காசுக்காக நிற்கும்போதுதான் புலி வேஷம் போட்ட பிச்சைக்காரன்னு அவனுக்கே புரியும்.

விளையாட்டாக களம் இறங்கிய ராஜகுமாரன் ஒரு கட்டத்தில் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டார். அதே மாதிரிதான் பரத். பாக்ஸர். தெற்குப் பக்கத்தில அடிக்கடி பாக்ஸிங் போட்டிகள் நடக்கும், அதிகபட்சம் முதல் பரிசு ஒரு எவர்சில்வர் குடம்தான். ஆனால், பாக்ஸிங் நடக்கிற நேரமெல்லாம் உலகப் போட்டி மாதிரிதான் இருக்கும். இவரும் நல்லவர்தான்.

இதே ஊரிலிருக்கிற பரத்திற்கும், புதுசா வந்து சேர்கிற ராஜகுமாரனுக்கும் சின்ன உரசல். அந்த ஊரில் நடக்கிற ஒரு பிரச்னையை பரத் கண்டுக்காம போகிறார். ராஜகுமாரன் அதை எதிர்கொள்கிறார். சொல்லப்போனால் எல்லோரும் நல்லவர்கள்தான். அவங்க எந்த நேரத்தில் எப்படி வெளிப்படுகிறார்கள் என்பதில்தான் எல்லாமே தீர்மானமாகுது. என் தம்பி பாரத் சீனியும் நடிக்கிறார். படத்தில் ஒரு நல்ல இடம் அவருக்கு இருக்கு.

ஆனாலும் சூர்யா ‘கடுகு’ வாங்கிய பிறகு எல்லாமே மாறிவிட்டது...
உண்மை. படம் ஆரம்பிக்கும்போது யாருக்கும் எந்த நம்பிக்கையும் இல்லை. சொந்தமாக தயாரிக்கிற படம், ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திற்குப் பின்னாடி பண்றேன். எந்த குருட்டு நம்பிக்கைன்னு தெரியலை, கஷ்டப்பட்டு முடிச்சிட்டேன். வெளியே படத்தை கொடுத்தால் கணக்கு வழக்கு சுத்தமாக இல்லை. ஓடின படத்திற்கு கையில் வந்து சேர்கிற காசு கம்மியாக இருக்கு.

சரக்கு விக்கிற மல்லையாவும் கடன் வாங்குறான், குடிக்கிற நாமளும் கடன் வாங்குறோம்.. அதை விக்கிற அரசாங்கமும் கடன் வாங்குது. அப்ப இந்த லாபம் எல்லாம் எங்கேதான் போகுதுன்னு தெரியலனு சொல்வாங்க. அதுமாதிரி கொடுத்தாலும் காசு வராது. இந்த சமயத்தில்தான் நான் சூர்யாவுக்கு ‘இப்படி ஒரு படம் ரெடியாகி இருக்கு. பாக்கிறீங்களா’னு எஸ்எம்எஸ் போட்டேன்.

உடனே ரெஸ்பாண்ட் பண்ணி ஆபீஸில் கொடுக்கச் சொல்லிட்டார். அப்புறம் பார்த்ததும் பிடிச்சிப்போய் ‘இந்தப் படத்தை நானே வாங்கி வெளியிடுகிறேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்’னு சொல்லிட்டார். 2டியில் வெளியிடுவதால் இந்த ‘கடுகு’க்கு மிகப் பெரிய மரியாதை கிடைச்சிருக்கு.

மற்ற அம்சங்கள் என்ன?
ராஜகுமாரன்கிட்டே கால்ஷீட் கேட்கப் போகும்போது அவரே ேவண்டாம்னு சொன்னார். ‘நான் நடிச்சா யாரு படம் வாங்குவாங்க. இது தெரிஞ்சா நானே படம் எடுக்க மாட்டேனா’ன்னு சொன்னார். நான்தான் விடாப்பிடியாக அவரை வழிக்குக் கொண்டு வந்தேன். யார் மைனஸ் என்று எல்லோரும் நினைத்தார்களோ, இன்னிக்கு அவரே ப்ளஸ். என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாங்கிறது ஒரு கலை. கலைகள்தான் மனித உணர்வுகளை பக்குவப்படுத்தும். என்னுடைய ஏக்கம் என்னன்னா.. எப்பவும் இங்க மனுசத்தன்மை போயிடக்கூடாது. ரசனை கெடக்கூடாது. நெஞ்சில் ஈரம் குறைஞ்சிடக் கூடாது. என் பர்சனலான படங்களில் அப்படிப்பட்ட இடங்கள் நிச்சயமா இருக்கும்!