வாங்கா



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           விலங்குகளின் கொம்பே ஆதிமனிதன் கண்டறிந்த முதல் ஊதுகருவி. எக்காளம், தாரை, முகவீணை, நாதஸ்வரம் உட்பட பிற்கால ஊதுகருவிகள் யாவும் கொம்பின் தொடர்ச்சியாக உருவானவையே. ‘வாங்கா’வும் அப்படியான ஒரு ஆதி ஊதுகருவிதான். வளைந்து நெளிந்த உருவத்தால் இதை ‘கோணக்கொம்பு’ என்றும் அழைப்பார்கள். பங்கா, வங்கா, பாங்கா என பல பெயர்களில் இக்கருவி குறிப்பிடப்படுகிறது. இலக்கியங்களில், ‘கோடு’ என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது வாங்கா.

முறையற்ற சத்தத்தை இசையாக்கும் நுட்பமறிந்த பிறகு, கொம்பின் நீள அகலத்தை கூட்டியும் குறைத்தும் பல்வேறு ஒலிகளை உருவாக்க முனைந்தான் ஆதித்தமிழன். அம்முயற்சியில் உருவான கொக்கறை உள்பட பல இசைக்கருவிகள் இன்றும் பழங்குடி மக்களிடையே புழக்கத்தில் இருக்கின்றன. ‘வாங்கா’வும் அப்படி உருவானதுதான். 

தொடக்கத்தில், தகவல் பரிமாற்றத்துக்கான அறிவிப்புக் கருவியாகவே பயன்பட்டுள்ளது வாங்கா. பிற்காலத்தில் கோயில்களில் சுவாமி வீதியுலா மற்றும் வழிபாடுகளை மக்களுக்குத் தெரிவிக்க இக்கருவி இசைக்கப்பட்டது. குறிப்பாக முருகன் வெறியாட்டு சடங்கு, பெருமாள் வீதியுலா, தியாகராஜர் ஆராதனை ஆகியவற்றில் தனித்தும், பிற இசைக்கருவிகளோடு இணைத்தும் இக்கருவியை இசைப்பதுண்டு. இறைவனுக்கு நிகராக மன்னர்களும் போற்றப்பட்ட தருணத்தில் ‘வாங்கா’ போன்ற இசைக்கருவிகள், கோயில்களிலிருந்து அரண்மனைகளுக்கு இடம்பெயர்ந்தன. 

கிளாரினெட்டை ஒத்த வடிவம் கொண்டது இது. ஆனால், முற்றிலும் இயற்கையாக இயங்கவல்லது. எக்காளத்தைப் போல, புனல் வடிவிலான அனசு, நீண்ட உலவு, நடுவில் வளைவெடுத்து, பின்னர் மீண்டும் நீண்டு நிற்கிறது. வாங்கா என்ற பறவையின் ஒலிக்கு இணையான இசையை வெளிப்படுத்துவதால் இப்பெயர்.

‘‘இக்கருவியை இசைப்பது எளிதல்ல. முனையில் இருக்கும் சுண்டு விரலளவு ஓட்டையில் வாய் வைத்து ஊதவேண்டும். நாதஸ்வரத்தைப் போல பத்து மடங்கு காற்றை உட்செலுத்த வேண்டும்’’ என்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வாங்கா வாசிக்கும் கேசவன். ‘‘காற்றின் விசைக்கும் அளவுக்கும் ஏற்ப சத்தம் வெளிப்படும். எவ்வளவு காற்றை உள்வாங்கினாலும், அதை வாங்காத கருவிபோல மெலிந்த ஓசையை வெளியிடுவதால்கூட ‘வாங்கா’ என்ற பெயர் வந்திருக்கலாம்’’ என்கிறார் அவர்.

தொடக்கத்தில் கொம்பில் உதித்த இக்கருவி, பிற்காலத்தில் பித்தளை அல்லது செம்பில் செய்யப்பட்டது. இப்போது புழக்கத்தில் இருக்கும் ஓரிரண்டு வாங்காக்கள் பித்தளையால் ஆனவையே.

நுட்பமான இக்கருவி தமிழகத்தில் உள்ள பல பெருமாள் கோயில்களில் புழக்கத்தில் இருந்தது. பெருமாளுக்கு உகந்த 18 வாத்தியங்களில் வாங்காவும் ஒன்றாக இசைக்கப்பட்டுள்ளது. நடராஜருக்கு உரிய வாத்தியங்கள் பட்டியலிலும் இதற்கு இடம் உண்டு.

காலப்போக்கில் இப்படியொரு கருவி இருந்ததற்கான அடையாளங்களே கோயில்களிலிருந்து அழிந்து போயின. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நான்கு கால் மண்டபத்தில் மங்கள ஆரத்தி நடைபெறும் நேரத்திலும், மதிய, நள்ளிரவு பூஜையின்போது, அக்னி பகவானுக்கு ஹோமம் செய்யும்போதும் இக்கருவி இசைக்கும் மரபு இருந்தது. இங்கிருந்த மன்னர் காலத்து வாங்கா பராமரிப்பு இல்லாமல் துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்தது. அண்மைக்காலத்தில் இக்கோயிலில் பணிபுரியும் ஆர்வமுள்ள அலுவலர் சிலர், வாங்கா இசைக்கும் ஆகமத்தை அறிந்துகொண்டு, மீண்டும் கோயில் வளாகத்தில் இதன் இசை முழக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆந்திராவில் இருந்து ஒரு வாங்கா புதிதாகத் தருவிக்கப்பட்டு இப்போது இசைக்கப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளியால் ஆன ஒரு வாங்கா இருந்ததாக தகவல் உண்டு. இப்போது அது புழக்கத்தில் இல்லை. கோயில் அதிகாரிகளுக்கு அதுபற்றிய தகவலும் தெரியவில்லை. காஞ்சி சங்கர மடத்தின் வீதியுலா நிகழ்ச்சிகளில் வாங்கா இசைக்கும் மரபு இன்றுவரை தொடர்கிறது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வாங்கா உள்ளிட்ட 18 வாத்தியங்களுக்கும் தனித்தனி கலைஞர்கள் இருந்தார்கள். இப்போது அந்தப் பணியிடங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு விட்டன. பாரிநாதஸ்வரமும், பஞ்சமுகவாத்தியமும் மட்டுமே முறைப்படி இசைக்கப்படுகின்றன. சில சிவனடியார்கள் தங்கள் முயற்சியில் வாங்கா, திருச்சின்னம் ஆகிய கருவிகளை வாங்கி அவ்வப்போது இசைக்கிறார்கள்.

‘‘ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா நடக்கும்போது, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் இருந்தெல்லாம் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பெருமாளுக்கு கோதானம் செய்வார்கள். அவ்விதம் வரும்போது, மாட்டின் மேல் பெருமுரசு, சிறுமுரசு வாத்தியங்களை கட்டித் தொங்கவிட்டு இசைத்துக்கொண்டும், வாங்காவை ஊதிக்கொண்டும் வருவார்கள்...’’ என்று பழமையை நினைவுகூர்கிறார் கேசவன்.   

கோவில்பட்டி வட்டாரத்தில் சிறுதெய்வ வழிபாட்டில் வாங்கா முக்கிய இடம்பெற்றிருந்தது. குதிரை எடுப்பு, கொடை விழா ஊர்வலங்களில் இக்கருவி இசைக்கப்பட்டது. இப்போது பேண்டு வாத்தியம் போன்ற இடைக்கால வரவுகளால் அந்த வாய்ப்பும் பறிபோனது. வாங்கா கலைஞர்கள் பலர் முற்றாக வேறுதொழில் நாடி விட்டார்கள். ஒருசிலர் கிளாரினெட் போன்ற நவீன இசைக்கருவிகளை இசைக்கப் பழகி பிழைக்கிறார்கள். நவீன ஊதுகருவிகள் அனைத்துக்கும் மூதாதையாக இருந்த வாங்காவின் வரலாறு, முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது.
வெ.நீலகண்டன்
படங்கள்: கே.எம். சந்திரசேகரன், காளிதாஸ்