கவிதை வனம்



இசையுதிர் காலம்

சிலோன் ரேடியோவில் யாழ்ப்பாணத்துக் குழந்தைக்கு
மட்டக்களப்பு மாமன்மார் மாமிமார்
வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தார்கள்
சுசீலா பாடலொன்று ஒலிக்க
அடுப்பங்கரையிலிருந்து அம்மா ஒலியைக் கூட்ட வேண்டுவாள்.
சிவாஜியின் பாடலுக்கு வானொலியை எண்திசையும் திருப்பி
துல்லியத்தைத் தேடுவார் அப்பா.
புதுப் பாடல்களின் வரிகளை
பாடகரோடு சேர்ந்தே உச்சரித்த எனக்கு
அலைபேசியில் கணினியில்
அகன்றதிரையில் கையடக்கக் கருவிகளில்
இன்று வீடெங்கும் இறைந்து கிடக்கின்றது இசை.
மிதிவண்டியிலிருந்து இறங்கி
வீதியில் உருட்டிக்கொண்டே போன
செவிகளைத்தான் தொலைத்தாயிற்று.

- ராம் வசந்த்

சுயதரிசனம்

என் முதுகின் பின்னே
வலி தோன்றி வளர்ந்துகொண்டிருக்கிறது
நடக்கும்போதும் புழங்கும்போதும்
எல்லாவற்றிலும் ஏதோவொன்று
இடித்துக்கொள்வதை உணர முடிகிறது
கண்ணாடி முகப்புகள் மறுக்கப்படுகின்றன
நடக்கக்கூட முடியாத பெரும் பாரமொன்று
பின்னாலிருந்து பிடித்து இழுத்துக்கொண்டிருக்கிறது
இப்போதாவது சொல்லிவிடுங்கள்
அவை சிறகுகள் என்றும்
நான் பறத்தலுக்கானவள் என்றும்

- விநோதினி