தனியார் மருத்துவமனைகளுக்கு கொள்ளை லாபம்! ஊக்குவிக்கிறதா அரசு மருத்துவக்கொள்கை?



-ச.அன்பரசு

இந்த சந்தேகம் எழுவதற்கு காரணமே 2017ம் ஆண்டின் தேசிய மருத்துவக் கொள்கை(NHP)தான். இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகின்றன. இதுவரை இரண்டு முறை (1983, 2002) தேசிய மருத்துவக் கொள்கை வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டு கடந்த மார்ச் 16 அன்று, தேசிய மருத்துவக் கொள்கை அறிக்கையை சுகாதாரத்துறை இணையத்தளத்தில் இந்திய அரசு வெளியிட்டு மக்களின் கருத்தை கேட்டுள்ளது.

2020க்குள் செவிலியரின் கண்காணிப்பில் குழந்தைப் பிறப்பு நிகழவேண்டும் என 1983ம் ஆண்டு கொள்கைப்படி அரசு திட்டமிட்டது. ஆனால், 2015ம் ஆண்டு நிலவரப்படி நான்கில் ஒரு குழந்தைக்கு இந்த வசதி இன்னும் கிடைக்கவில்லை. மருத்துவ திட்டத் தொகையை அதிகரித்து பொது மருத்துவ வசதிகளைப் புனரமைத்து அனைவருக்கும் மருத்துவம் என 2002ம் ஆண்டு கொள்கை லட்சியவாதம் பேசியது.

ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் பொது மருத்துவத்திற்காக நம் அரசு செலவிடும் தொகை ஜிடிபியில் வெறும் 1.1%தான். உண்மை இப்படியிருக்க - ‘வறுமைதான் அதிகரிக்கும் மருத்துவச் செலவு பற்றாக்குறைக்கான நிஜக் காரணம்’ என 2017ம் ஆண்டின் மருத்துவக் கொள்கை அறிவித்துள்ளது. இது ஒரு சோறு பதம்தான். இப்படி எண்ணற்ற முரண்பாடுகள் புதிய சட்டத்தில் காணப்படுகின்றன.

உதாரணமாக மருத்துவ எமர்ஜென்சி லிஸ்ட்டிலுள்ள 33 தொற்று நோய்களால் (டெங்கு, சிக்கன்குன்யா உள்ளிட்டவை) பாதிக்கப்பட்டவர்களின் அனுமதியின்றி அவர்களுக்கு கட்டாய சிகிச்சையளிப்பதை இம்மசோதா வலியுறுத்துகிறது. அதாவது 1897ம் ஆண்டின் பிரிட்டிஷ் தொற்றுநோய் சட்டத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளது.

ரூபெல்லா குறித்த அச்சத்தால் பலரும் தம் குழந்தைகளுக்கு தடுப்பூசியைப் போட தவிர்க்கத் தொடங்கியவுடன், ‘தமிழ்நாட்டில் ரூபெல்லா தடுப்பூசி போட பெற்றோரின் அனுமதி தேவையில்லை!’ என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தது கூட இத்தகைய கட்டாயச் சட்டமொன்றின் அடிப்படையில்தான்.

மெட்ராஸ் பொது சுகாதாரச்சட்டம் (1939) கடுமையான பிரிட்டிஷ் சட்டம்தான். இதில் மருத்துவம், கழிவுநீர் வசதி, சுகாதாரமான குடிநீர் போன்றவற்றை அமைத்துத் தருவது அரசின் கடமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘இதையெல்லாம் அரசு செய்கிறதா என்ன? யாரை ஏமாற்ற அறிக்கையில் இப்படி அரசு குறிப்பிடுகிறது...?’’ என சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

அதற்கு ஏற்பவே இச்சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பட்டியலிடுகிறார் டாக்டர் விஜயபிரசாத் கோபிச்சந்திரன். ‘‘மலேரியா, மஞ்சள் காமாலை, விஷக் காய்ச்சல் உள்ளிட்டவை பரவும் அவசர காலத்தில் அரசின் கடமைகள் என்னென்ன என்பது குறித்து இம்மசோதா எதுவும் சொல்லவில்லை. நோய் குறித்த ஆய்வுகள், கால வரம்பு, ஒருவரின் இசைவின்றி அவரை கட்டாயப்படுத்தி சிகிச்சை தருவது ஆகியவை குழப்பமான அம்சங்கள்.

நோய் எச்சரிக்கை, தடுப்பு அமைப்பு, நோய் தாக்கமுள்ள இடங்கள் குறித்த ஆய்வுகள் ஆகியவற்றுக்கு இதில் இடமேயில்லை...’’ என்கிறார் அவர். போலவே 1.15%ல் இருந்து 2.5%மாக மருத்துவத் துறைக்கான நிதியை உயர்த்துவதாக 2017 மருத்துவக் கொள்கையில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2015ம் ஆண்டு வெளியான இதன் அறிக்கையில் 2.5% நிதி ஒதுக்கீட்டை 2020ம் ஆண்டுக்குள் சாதிப்பது என்று குறிப்பிட்டு, பின் 18 மாதங்களில் இது நிறைவேற்றப்படும் என்று சொல்லி, இப்போது ஐந்து ஆண்டுகளில் என விரிவுப்படுத்தி உள்ளது.

நோய் குணமாக்கும் வலிநிவாரண சிகிச்சைகளை விரிவுபடுத்துவது, மருத்துவச் சேவைகளை விலையின்றி அனைவருக்கும் வழங்குவது, குறைந்த அடக்க விலையில் மருத்துவ சேவைகள்... என்றெல்லாம் எழுதப்பட்டிருந்த 2015ம் ஆண்டு வரைவு குறிக்கோள்கள் இன்று - ‘நாட்டின் நிதிநிலையைப் பொறுத்ததாக’ மாறியுள்ளது! உலக சுகாதார மையம் (WHO) பரிந்துரைக்கும் பொது சுகாதார திட்டத் தொகையில் இது பாதிதான் என்பது முகத்தில் அறையும் நிஜம்.

2015 - 16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுகாதார நிதியில் 5.7% வெட்டு விழுந்தது. பின் 2016 - 17ல் 5% உயர்த்தப்பட்ட தொகையும் பணவீக்கத்தில் பெருங்காயமாக கரைந்தது. நடப்பாண்டில் சுகாதார நிதி ஒதுக்கீடு, 2011 - 12ம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டைவிட குறைவு. மக்களின் ஆயுளை 2025க்குள் 70 ஆண்டுகளாக உயர்த்துவது என்பதை வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் முன்பே சாதித்துவிட்டன என்பதை இங்கு நினைவுகூர்வது நல்லது.

இந்த மசோதாவிலுள்ள ‘சுகாதார உறுதி’, ‘வசதிகளைப் பெற்றுத் தருபவர்’ என்ற வார்த்தைகள் அரசின் எதிர்காலத் திட்டங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘ராஷ்ட்ரிய ஸ்வஷ்திய பீமா யோஜனா’ போன்ற காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு மக்களை நகர்த்தி மெல்ல பொது மருத்துவமனைகளை மூடுவதுதான் அரசின் மக்கள் நலன் காக்கும் திட்டம் என்கிறார்கள்.

இவை எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் அல்ல. அரசு மருத்துவமனையின் குறைகளைச் சுட்டிக்காட்டி நோயறிதல், மனநலம், ஆம்புலன்ஸ், ரத்த வங்கி, வலிநிவாரணம் உள்ளிட்ட சேவைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் தயாராக இருப்பதாக ஒரு பிம்பம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. அரசு / தனியார் கூட்டுமுயற்சி மெல்ல மெல்ல செயல்பாட்டுக்கு வரவும் தொடங்கி விட்டது.

இதை எதிர்த்து ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். நடத்தியும் வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளோடு இணையும் அரசின் முடிவால் லாபமடையப் போவது நிச்சயம் பிரைவேட் ஆஸ்பிடல்ஸ்தான். பல்வேறு வசதிகளின்றி பொது மருத்துவமனைகள் தடுமாறி வருகின்றன.

இதை சரி செய்யவும், வசதிகளைப் பெருக்கவும் அரசு முன்வரவில்லை என்பதையே 2017ம் ஆண்டின் தேசிய மருத்துவக் கொள்கை சொல்லாமல் சொல்கிறது. இதனால் அதிகளவில் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய நடுத்தர மக்கள்தான். இதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல் தனியாரோடு அரசு கைகோர்த்து காப்பீடு திட்டங்களை முன்வைத்து வருகிறது.

இதன் முடிவு, பணமிருந்தால் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்ற நிலையையே உருவாக்கும் என எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்தக் குறைகளை எல்லாம் உடனே அரசு சரிசெய்ய வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் வேண்டுகோள். நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.               

1897ம் ஆண்டின் பிரிட்டிஷ் தொற்றுநோய் சட்டத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளது...

இதுதான் இந்தியா!

கிராம மக்கள்  - 73%
தினக்கூலி தொழிலாளர்கள் - 51% (நிலமற்றவர்கள் 56%)
74% மக்களின் மாத ஊதியம் - ரூ.5 ஆயிரம்
(சமூக பொருளாதார கணக்கெடுப்பு, 2011ன் அடிப்படையில்)

உறுதிமொழி!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 23, நோய்களால் நிகழும் குழந்தைகளின் இறப்பு 16. வாழ்நாள் அதிகரிப்பு 70 ஆண்டுகள். குழந்தை பிறப்பு விகிதம் 2.1% (2015 - 16ல் இது 2.2%), செலவிடப்படும் தொகை 2.5% - ஆகியவற்றை சாதிப்பதே 2017ம் ஆண்டு மருத்துவக் கொள்கையின் லட்சியம். காப்பீடு, மருத்துவ ஆய்வுக்கு திட்ட நிதி ஆகியவை அள்ளி அள்ளி தரப்பட்டாலும், தேசிய கிராம சுகாதாரத் திட்டம் (NRHM), குழந்தைகள் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டம் (ICDS), உணவு மானியங்கள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவு.