தேர்தல் மைக்கு குட்பை!



-கே.சாந்தகுமார்

ஒன்றல்ல இரண்டல்ல, 55 ஆண்டுகளாக இந்திய தேர்தல் வரலாற்றில் முக்கிய அம்சமாக விளங்கிய ‘அழியா மை’யின் சகாப்தம் முடிவுற்றது. இனி வாக்காளர்களின் விரல்களில் அடையாளமாக வைக்க வருகிறது மார்க்கர் பென்! ம்ஹும். மார்க்கர் பென் குறித்து இங்கு நாம் பார்க்கப் போவதில்லை. மாறாக ‘அழியா மை’யின் டேட்டாஸைத்தான் சேகரிக்கப் போகிறோம். ஏனெனில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் தேர்தலில் வாக்களித்தவர்களின் விரல்களில் ‘அழியா மை’யே அடையாளமாக வைக்கப்பட்டு வருகிறது.

இந்த மை தயாராவது எங்கு தெரியுமா? மைசூரில்! இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு - கர்நாடக மாநிலம் பிரிக்கப்படாதபோது - மைசூர் மாகாணத்தை ஆட்சி செய்து வந்த நால்வடி கிருஷ்ணராஜ உடையார், தனது ஆட்சியின் திறமையால் மக்களுக்கு பல்வேறு வகையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார்.

அந்த வகையில் அவர் ரூ.1.03 கோடி செலவில் தொடங்கிய நிறுவனவே ‘மைசூர் பெயிண்ட் அண்ட் வார்னிஷ்’. 1936ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் பெயிண்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. இந்தியா சுதந்திரமடைந்து முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, வாக்காளர்களின் விரல்களில் ‘அழியா மை’ வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த மத்திய அரசு, மை தயாரிக்கும் பொறுப்பை இந்த நிறுவனத்துக்கு வழங்கியது.

அதனடிப்படையில் 1956ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் ‘அழியா மை’ தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய ரசாயன ஆய்வுக் கூடம் இந்த மையின் தரத்தை பரிசோதித்தது. அப்போது 20 நாட்கள் வரை இந்த மை அழியாது என்பது தெரிய வந்தது. அத்துடன் இந்த மையை வைப்பதால் வாக்காளர்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டது.

1962ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் விரலில் ‘அழியா மை’ வைக்கப்பட்டது. அன்று முதல் இந்த நிமிடம் வரை இந்நிறுவனத்தின் மைதான் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களின் விரல் நுனியில் திலகமிடப்படுகிறது. ஆனால், எத்தனை நாட்கள் அல்லது ஆண்டுகளுக்கு என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

ஏனெனில் ‘அழியா மை’ பயன்பாட்டை நிறுத்திவிட்டு, வாக்களித்ததற்கான அடையாளமாக வாக்காளர்களின் விரல்களில் மார்க்கர் பென்களை பயன்படுத்தி குறியீடு வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து ‘மைசூர் பெயிண்ட் அண்ட் வார்னிஷ்’ நிறுவனம் மார்க்கர் பென்களைத் தயாரிக்கும் பணியைத் தொடங்க உள்ளது.

இந்தியாவில் ‘அழியாமை’யின் சகாப்தம் முடிவுற்றாலும் வெளிநாடுகளுக்கு இந்த மையை ஏற்றுமதி செய்யும் பணி தொடரும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. என்றாலும் இது தனியார் நிறுவனம் அல்ல! பொதுத்துறை நிறுவனம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய இந்த நிறுவனத்தை 22 வருடங்களுக்கு முன்  மத்திய அரசு எடுத்துக் கொண்டு பொதுத்துறை நிறுவனமாக மாற்றியது.

இங்கு நிர்வாக இயக்குனர் உட்பட மொத்தம் 100 பேர்தான் வேலை பார்க்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பெயிண்டுகள்தான் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களுக்கும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தவிர ஈரான், ஆப்கானிஸ்தான், துருக்கி, தென் ஆப்பிரிக்கா, நேபாளம், நைஜீரியா, கானா, கனடா, பர்கினோ பாசோ, சிங்கப்பூர், டோக்கியோ, மலேசியா, சிரியா, சியாரா லியோன், பிஜி ஜலண்ட், கம்போடியா, பாகிஸ்தான் உட்பட 35 நாடுகளுக்கு 1978ம் ஆண்டு முதல் இங்கிருந்து தான் பெயிண்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ‘அழியா மை’க்குப் பின்னால் இவ்வளவு அழிக்க முடியாத உண்மைகள் இருக்கின்றன!