பேய் இல்லை... ஆனால், பயம் இருக்கும்... உணர்வும் கொப்பளிக்கும்...



-நா.கதிர்வேலன்

‘‘எவ்வளவு படம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ‘உரு’ டைட்டில் மாதிரியே தனி வித்தியாசம் காட்டும். எங்கேயாவது ஹோட்டலில் போய் சாப்பிட்டுட்டு வந்தாலும் வீட்டில் சாப்பிட்டால்தான் நல்லா பசியாறும். வீட்டு சாப்பாடு மாதிரி நம்ம படம். உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது. திவ்யமா ருசிக்க ருசிக்க இருக்கும்...’’ அழகாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த்.

‘உரு’ எந்த விதத்தில் இருக்கும்..?
‘உரு’ன்னா உருவம்னு ஓர் அர்த்தம் இருக்கு. அச்சம், பயம் என்ற இருவேறு அர்த்தங்களும் இருக்குன்னு அகராதி சொல்லித் தருது. பயமும் இருக்கணும். அதைப் பேய் இல்லாமல் கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம். ரொம்ப சவாலான விஷயம். ஆனால், எளிதாக வந்தது. ‘சதுரங்க வேட்டை’ படத்தில ‘அப்பா அம்மா சென்டிமென்ட் சொல்றதைக்கூட கிளிஷேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க’ன்னு ஒரு வரி வரும்.

அப்படி ஓர் எழுத்தாளன் இதுல வருகிறான். ரொம்பவும் வாழ்க்கையை சென்டிமென்ட்டாக எழுதிக் கொண்டு இருப்பவனுக்கு ஒரு சோதனை வருது. இங்கே அந்த மாதிரி உணர்வுகளுக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. அதுவே கேலிப் பொருளாக ஆக வேண்டிய நிலைமை இருக்கு. அப்படிப்பட்ட நிலையில் வேற மாதிரி ஒரு கதை எழுதி, தன்னை நிறுவிக்கொள்ள நினைக்கிறான்.

அதற்கான தனிமை தேடி மனைவி தன்ஷிகாகிட்டே சொல்லிட்டு மேகமலை போகிறான். அங்கே அவன் எழுதிய கதையில் வாழ்க்கை மட்டுமல்ல, பக்கத்தில் இருக்கிறவர்களின் வாழ்க்கையும் பிரதிபலிக்குது. அப்ப நடக்கிற விஷயங்களும், நிகழ்ச்சிகளுமே கதை. ஒவ்வொரு காட்சியையும் இழைச்சு இழைச்சு மெருகேத்தியிருக்கோம். சந்தேகமில்லாமல், தயக்கமில்லாமல் குடும்பத்தோட வரலாம்.

ரொம்ப தீர்மானமாக எழுதி பக்கா ஸ்கிரிப்டாக என்கிட்ட இருந்த கதை. வேகமும் விவேகமும் இருக்கும். ஹீரோ கலையரசன் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்கள் எங்கோ அவரைக் கொண்டு போய்ச் சேர்க்கும். நமக்கெல்லாம் சேர்த்து சொல்லக்கூடிய, தெரிந்துகொள்ள வேண்டிய இடங்களும் இதில் இருக்கு.

‘மெட்ராஸ்’க்குப் பின்னாடி கலையரசனுக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்கு...
அஸிஸ்டென்ட் டைரக்டரா இருந்த காலத்திலேயே அவர் எனக்குப் பழக்கம். ‘உங்ககிட்டே ப்ரசன்டேஷன் இருக்கு. நல்ல கதை இருந்தால், தயக்கமில்லாமல், எப்ப வேண்டுமானாலும் போன் பண்ணுங்க. பேசலாம். படமும் பண்ணலாம்’னு சொல்வார். சுலபமான மனிதர். எப்பவும் மனதை திறந்து வைச்சுக்கிட்டு இருக்கிறவர்.

இந்தக் கதையைச் சொன்னதும், அவர் சந்தோஷமாக ஓ.கே. சொன்னார். இந்த கதைக்கு தண்ணீர் ஊத்தியது அவர்தான். அதை அழகா போஷித்து கொண்டு வந்தது தயாரிப்பாளர் வி.பி.விஜி. கதை நல்லா அமைஞ்சிருக்கு, படமும் அழகா வரணும்னு அழகாப் புரிஞ்சுக்கிட்டார். எனக்கு இதுதான் சந்தோஷம். ஒரு ஹீரோவும், நல்ல புரிதல் உள்ள தயாரிப்பாளரும் அமைவதுதான் பெரும் பாக்கியம்.

கலையரசன் - தன்ஷிகா கெமிஸ்ட்ரி எப்படியிருந்தது..?
கலையரசனிடம் இருக்கிற பேராற்றலை நான் அறிவேன். அதை தமிழ் சினிமா அறியக் கிடைத்திருக்கிற இடம் கொஞ்சம்தான். அடுத்து வரும் நாட்களில் அவருக்கான அமரிக்கையான நேரம் இருக்கு. இதை அவர் என் ஹீரோ என்பதற்காகச் சொல்லலை. அவரது நடிப்பை உணர்ந்துதான் சொல்றேன்.

தன்ஷிகாவும் அப்படித்தான். இன்னும் அவங்களுக்கான இடம் வரணும். இதில் அவங்க ரோல் ரொம்ப நல்லாயிருக்கு. இரண்டு பேருக்கும் சரிக்கு சமமான ரோல். அவங்க அளவுக்கு வேறு யாரும் செய்திருக்க முடியாதுன்னு நம்புகிறேன். இப்ப அவ்வளவு அழகா ஃைபன் ட்யூன் ஆகி வந்திருக்காங்க. ‘கபாலி’ வரைக்கும் போயிட்டு வந்து எக்கச்சக்கமான அனுபவம் கூடி வந்திருக்கு.

மற்ற அம்சங்கள் எப்படி வந்திருக்கு..?
சொல்லில் வருவது பாதின்னு சொல்வாங்க. அதுமாதிரி டைரக்டர் சொல்றதை ஒரு மாதிரி புரிஞ்சுக்கிட்டு, ஒளிப்பதிவாளர்கள் ஒரு மாதிரி எடுப்பாங்க. அப்படி எதுவும் இல்லாமல் அப்படியே நான் நினைக்கிறதை எடுத்தார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார். எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ஒரு ஒளிப்பதிவாளர் அப்படியே அலைவரிசையில் இழைந்துபோவது ெராம்ப அபூர்வம். ஏன்னா நிறைய இடங்களில் டைரக்டர்கள் ‘சேஃப் ஷாட்டா இன்னொண்ணு எடுத்துக்குவோம்’னு சொல்லி அவங்க நினைச்சதை எடுப்பாங்க.

அப்படியான இடங்களை பிரசன்னா எனக்கு தரவேயில்லை. இந்தப்படத்தோட ம்யூசிக் டைரக்டர் ஜோகன். பாடல்களை மதன் கார்க்கி கொடுத்தார். உயிரையும், உணர்வையும் உருக்குகிற விதத்தில் பாடல்கள். நறுக்குன்னு எடிட் பண்ணிக் கொடுத்தது ஷான் லோகேஷ். படத்தில் குத்து டான்ஸ், ரத்தம் உங்க மேலே தெறிக்கிற ஃபைட் எதுவும் இல்லை. எதையும் அவசியமில்லாமல் திணிக்கிறது என் வேலை கிடையாது. அதை அழகா புரிஞ்சுக்கிட்ட தயாரிப்பாளருக்கு நன்றி போய்ச் சேரணும்.

‘சினிமாவைப் படிக்க முடியாது. ஆனால் உணர முடியும்’னு குயிண்டின் டரண்டினோ சொல்வார். அதுதான் 100% சரி. அதை நான் உணர்ந்திருக்கேன். அதனால்தான் பெண்ணின் பெயரைக் குத்தி வைக்க வேண்டிய கையில் அவர் படத்தை டாட்டூ குத்தி வைச்சிருக்கேன். பார்த்துப் பார்த்து பழகிய ஜானரில் பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன்.

இது ஃப்ரஷ்ஷாதான் இருக்குன்னு என்கூட பார்த்தவங்க ரியாக்‌ஷன்ல தெரியுது. நடிகர்களை மெக்கானிக்கலா ஆக்கிடக் கூடாதுன்னு அவங்க போக்குல நடிக்கவிட்டேன். இரண்டு பேருமே படத்தை ஹோல்ட் பண்றாங்க. அதில் இரண்டு பேருக்குமே நல்ல பெயர் கிடைக்கும். பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கு பிரதர்.