நக்சல்பாரி 1967 - 2017 வரமா சாபமா?



-நிரஞ்சனா

சரி. கேள்வியில் இருந்தே ஆரம்பிக்கலாம். நக்சல்பாரிகள்  யார்? அப்பாவி மக்களையும் எல்லைப் பாதுகாப்புப் படையினரையும் குண்டு வைத்து படுகொலை செய்யும் பயங்கரவாதிகளா அல்லது சமூக மாற்றத்தை ஏற்படுத்த போராடும் போராளிகளா? இதற்கான பதிலில்தான் அடங்கியிருக்கிறது இந்தியாவின் ஒட்டுமொத்த எதிர்காலமும்.

ஏனெனில் நக்சல்பாரிகள் ‘பிறந்த’ 1967 முதல் இன்று வரை கடந்த ஐம்பது ஆண்டுகளாக தேசத்தின் அனைத்து பிரச்னைகளும் சிக்கல்களும் இந்த வினாவைத்தான் சுற்றிச் சுற்றி வருகின்றன. இதற்கான விடையை அறிவதே இன்றைய தேவை. ரைட். அதென்ன ‘நக்சல்பாரி’? ஏன் இந்தப் பெயர் வந்தது? எதனால் இந்த எழுச்சி இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது?

1967ம் ஆண்டு வாக்கில் மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் இந்திய வரைபடத்தில் கூட காணாத சின்னஞ்சிறு கிராமமாக இருந்த பகுதியே நக்சல்பாரி. கரிபாரி, பன்சிதேவா ஆகியவை அக்கம்பக்க கிராமங்கள். வடக்கே நேபாளம்; கிழக்கே சிக்கிம், பூடான்; தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்)... இவற்றுக்கு இடையே வடகிழக்கு இந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்திருந்த  நிலப்பரப்பே நக்சல்பாரி.

இங்கிருந்த விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்தவர்கள் ஜோத்திதார் எனப்படும் நிலப்பிரபுக்கள். இந்த ஜோத்திதார்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஆரம்பம் முதலே நக்சல்பாரி விவசாயிகள் போராடி வந்திருக்கிறார்கள்.

1951 - 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கமாகவும் கம்யூனிச இயக்கத்தின் கீழும் நக்சல்பாரி மக்கள் அமைப்பாக அணி திரண்டுள்ளனர். 1955 - 57 ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் தங்களையும் இவர்கள் இணைத்துக் கொண்டனர்.

தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரளவும், தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணி உருவாகவும் புறச்சூழலும் நிலப்பரப்புமே காரணமாக அமைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளர்களையே தங்களது விவசாய விளைநிலங்களில் குத்தகைதாரர்களாகப் பயன்படுத்தினர். நில உச்சவரம்புச்  சட்டம் வந்தபோது விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி ஏமாற்றினர்.

இது தவிர நினைத்த போதெல்லாம் தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகள் வேலை நீக்கம் செய்தனர். மறுபுறம் ஜோத்திதார்கள் பெருமளவு விவசாயிகளைத் தமது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றினர். இவற்றை எல்லாம் எதிர்த்து போராடி வந்த நக்சல்பாரி விவசாயிகளின் போர்க்குணம் 1967ல் உச்சத்தைத் தொட்டது.

இந்திய வரலாற்றில் 1967ம் ஆண்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த ஆண்டுக்கும் இல்லை. ஏனெனில் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஏகபோகமாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி, எட்டு மாநிலங்களில் வீழ்த்தப்பட்டது அப்போதுதான். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் 14  கட்சிகள் அடங்கிய ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காள காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதிபாசு, போலீஸ் அமைச்சராகவும் பதவி ஏற்றார்கள்.

‘நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாக கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்’ என தேர்தலுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. நிலம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்ற அரே கிருஷ்ண கோனார், அதையே உறுதிசெய்ததோடு, ‘நில விநியோகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழிருந்து ‘முன் முயற்சி’ எடுக்க வேண்டும்’ என முழங்கினார். 

ஒரு பேச்சுக்காக அவர் இப்படிச் சொன்னதே வினையாக மாறியது. கட்சி தங்களைக் காப்பாற்றும் என நம்பி அப்பகுதி விவசாயிகள் நிலங்களைக் கைப்பற்றத் தொடங்கினார்கள். மாநில அரசு இதை எதிர்த்தது. அதைக் குறித்து கவலைப்படாமல் ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டன.

பட்டாக்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றுடன் நிலப்பிரபுக்களின்  பத்திரங்களும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும்,  துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். மே 23, 1967 அன்று நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது.

தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின்வாங்கிய போலீஸ் 25ம் தேதி  பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள்  உள்ளிட்ட 9 பேரைக் கொன்றது.

விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்சியும் இந்தியா முழுக்க பிளவுபட்டது. மாநிலத் தலைமையில் இருந்தவர்கள் கட்சியின் நிலையை ஆதரித்தனர். ஆனால், அடிமட்டத் தொண்டர்கள் நக்சல்பாரி உழவர் எழுச்சியை ஆதரித்தார்கள். அணி திரண்டார்கள்.

இதன் விளைவுதான் அடுத்த இரு ஆண்டுகளில் சாரு மஜும்தார், கனு சன்யால் தலைமையில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்). இன்றுவரை நக்சலைட்டுகள் என்று அழைக்கப்படுபவர்களின் கட்சி இதுவே. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். இந்திய வரலாற்றில் ஏராளமான விவசாய எழுச்சிகள் நடந்துள்ளன.

உதாரணமாக 1946 - 51 காலத்தில் தெலுங்கானா, 1946ல் புன்னபுரா - வயலார்... இவற்றுக்கெல்லாம் இல்லாத முக்கியத்துவம் ஏன் நக்சல்பாரி கிராமத்தைச் சேர்ந்த உழவர்களின் எழுச்சிக்கு மட்டும் ஏற்பட்டது? புறச்சூழல்கள்தான் காரணம் என்கிறார்கள். இந்தியா சுதந்திரமடைந்து 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. தேனாறும் பாலாறும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவு கலைந்திருந்தது.

1964ல் நடந்த சீனாவுடனான யுத்தம் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக உடைத்திருந்தது. புதிதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாகி இருந்தது. விலைவாசிகள் மக்களை பயமுறுத்தின. வியட்நாம் போரில் அமெரிக்கா அடிவாங்கிக் கொண்டிருந்தது. கறுப்பர்கள் தங்கள் உரிமைக்காக அமெரிக்காவில் தீவிரமாகப் போராட ஆரம்பித்திருந்தார்கள்.

மார்ட்டின் லூதர் கிங் பரவலாக அறியப்பட்டிருந்தார். உலகம் எங்கும் மாணவர்கள் எழுச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சேகுவேரா உயிருடன் இருந்தார். ஜோசப் ஸ்டாலின் மறைந்து குருஷ்சேவ் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்றிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான மோதல் அதிகரித்திருந்தது. அன்றைய வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

குறிப்பாக மேற்கு வங்கத்துக்கு அருகில் இருந்த கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) ஆயுதம் தாங்கிய குழுக்கள் சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டிருந்தன. அக்குழுவினர் இந்தியாவுக்கு வருவதும் இந்தியர்கள் அங்கு செல்வதும் சர்வசாதாரணமாக நடந்தது. இவை எல்லாம் இந்தியா முழுக்க இருந்த கல்லூரி இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சி அதற்கான சரியான மாற்றாக அவர்கள்முன் வைக்கப்பட்டன; பரப்பப்பட்டன.

இதனால்தான் பல மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு மார்க்சிய - லெனினிய கட்சியில் சேரத் தொடங்கினார்கள்; நக்சலைட்டுகளாக மாறினார்கள். நிலவும் சமூக அமைப்பை முழுமையாக மாற்ற வேண்டும் என்ற கனவுடன் களத்தில் இறங்கியவர்கள் அதை சாதித்தார்களா?

50 ஆண்டுகள் கழித்து இதற்கான பதிலைத் தேடவேண்டியிருக்கிறது என்பதுதான் பெரும் சோகம். மக்கள் எழுச்சியில் உருவான இவர்கள், அந்த மக்களை நம்பாமல் எப்போது ஆயுதத்தை கையில் எடுக்க ஆரம்பித்தார்களோ... அப்போது உழைக்கும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டார்கள். இந்தியாவின் தனித்துவ அடையாளமாக விளங்கும் சாதி அமைப்புகள் பலவிதங்களில் மார்க்சிய - லெனினிய குழுக்களுக்கு பாதகமாக அமைந்தன.

ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பவர்கள் பக்கத்து கிராமத்தில் ஒடுக்கும் சாதியாக இருந்தார்கள். எனவே, சாதி ரீதியாக மக்களைத் திரட்டுவதும் பிரச்னையாக இருந்தது. ஏழை / பணக்காரர் என்று சொல்லி வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும் சிக்கலாகக் காட்சி தந்தது. ஏனெனில் பணக்காரரும் ஏழையும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

போலவே, பண்ணையார்களை அழித்துவிட்டால் கிராமம் முன்னேறி விடும் என நம்பினார்கள். பல அழித்தொழிப்புகளையும் அரங்கேற்றினார்கள். ஆனால், எதிர்பார்த்த மாற்றங்கள் மட்டும் நிகழவேயில்லை. மக்கள் எந்தக் காலத்திலும் இவர்களுக்கு ஆதரவாக நிற்கவேயில்லை. அந்தளவுக்கு கோட்பாடு, சித்தாந்தம் என்ற பெயரில் தனிமைப்பட்டார்கள்.

தவிர 1970களிலும், 80களிலும் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டம் 1990களில் உலகமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டபிறகு மாறியது. சற்றே முன் பின்னாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இப்போது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளுடன் வாழ்கிறார்கள். இதனால்தான் இன்று மார்க்சிய - லெனினிய அமைப்புகள் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் - அதுவும் காடுகளும் பழங்குடியின மக்களும் வசிக்கும் பகுதிகளில் மட்டும் மையம் கொண்டிருக்கிறார்கள்.

நகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் கூட இவர்களுக்கு போதுமான ஆதரவு இல்லை. எல்லாவற்றுக்கும் ஆயுதம் ஏந்தி நிற்கும் இவர்களை; எதற் கெடுத்தாலும் குண்டு வைத்து தகர்க்கும் இவர்களைப் பார்க்கவே மக்கள் அஞ்சுகிறார்கள் என்பதுதான் எதார்த்தம். அதனால்தான் சமீப காலமாக நாடெங்கும் பல்வேறு பிரச்னைகளுக்காக மக்கள் போராடினாலும் நக்சலைட் பக்கம் செல்லாமல் இருக்கிறார்கள். ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ எனக் கருதப்பட்டவர்கள் எந்த வசந்தத்தையும் கடந்த 50 ஆண்டுகளில் இந்திய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தவேயில்லை என்பதை விட, தங்களால் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்கவேயில்லை என்பதுதான் நிஜம்.