சிவலிங்கா



-குங்குமம் விமர்சனக்குழு

சக்திவேல் வாசுவின் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழிக்குப் பழி வாங்க கிளம்பும் மனிதனே ‘சிவலிங்கா’! ஆளில்லாத ரெயில் பெட்டியில் வளர்ப்புப் புறாவோடு தன்னந்தனியாக பயணம் செய்கிறார் சக்திவேல். பயணத்தில் அவரே கொலையுற நேர்கிறது. சக்திவேலின் ஆவி (!) சிபிசிஐடி அதிகாரி லாகவா லாரன்ஸ் மனைவி ரித்திகாவின் உடலில் புகுந்துவிடுகிறது. ‘என்னைக் கொலை செய்தவனைக் கண்டுபிடி’ என லாரன்ஸைக் கட்டாயப்படுத்துகிறது.

சக்திவேல் ஏன் கொலை செய்யப்பட்டார்? அந்தக் கொலையாளியை லாரன்ஸ் கண்டுபிடித்தாரா என்பதுதான் பரபரப்பு க்ளைமேக்ஸ். பேய்க்கு பயப்படுவது லாரன்ஸுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. ரொம்ப நாளாகவே அந்த வேலையை மட்டுமே செய்வதால் அது அவருக்கு கைவந்த கலையாகிவிட்டது. மேலும் புத்தம்புது மனைவியோடு சுடுகாட்டுக்கு அடுத்த காம்பவுண்டிலேயே வீடும் எடுத்து விடுவதால், கதவைத் திறந்தாேல பேய்களின் தரிசனமும், அவற்றின் அட்டகாசமும் காணக்கிடைக்கிறது.

பேய்க்கு பயப்படுகிற நேரம் போக, அதிரடி நாயகனாகவும், வகைவகையாக டான்ஸ் செய்துகொண்டும் இருக்கிறார். இந்தத் தடவை நொடிக்கொரு தடவை சொந்த ஸ்டைலை விட்டு ரஜினி ஸ்டைலுக்கு கூடுவிட்டு கூடு பாய்கிறார். காமெடி, ஆக் ஷன், டான்ஸ் என மூன்றிலும் அடிக்கடி மாறி மாறி திறம்பட செய்திருக்கிறார். ஆனாலும் பார்த்துப் பார்த்துப் பழகியதில் கூடுதல் சலிப்பு.

வாசு + ரஜினி காம்பினேஷனில் ‘சந்திரமுகி’ மாதிரி எதிர்பார்த்து வந்தவர்களுக்கு சிறிது ஏமாற்றமே. அந்த அளவுக்கு டைரக்டர் வாசு முயன்றாலும், திரைக்கதையில் அதற்கெல்லாம் இடமில்லை. அதே மாதிரி ‘இறுதிச்சுற்’றில் பார்த்த ரித்திகா சிங்கை எதிர்பார்த்து வந்தவர்களுக்கும் அதே ஏமாற்றம். கொஞ்ச நேரம் ஆடல்களிலும், மீதி நேரம் பேயாகவும் மிரட்டுகிறார்.

கொஞ்சமே கொஞ்சமாக ஜோதிகாவை நினைவுபடுத்தினாலும், அந்த நேர்த்தியெல்லாம் மிஸ்ஸிங். சக்திவேல் வாசுவிற்கு குறிப்பிடத்தக்க கேரக்டர். இயல்பாக நடிக்க முயன்று, மனதில் நிற்கிறார். பட்டுக் குஞ்சமாக வடிவேலு மீண்டும் தரிசனம். எப்படி கொள்ளை அடித்தார் என்பதை ஊர்வசியின் கழுத்தில் கத்தியை வைத்தே நடித்துக் காட்டி, நகைகளைப் பிடுங்குகிற இடத்தில் மொத்த தியேட்டரும் அதிர்கிறது.

சரி, இனி வடிவேலு படத்தை காமெடி லைனுக்கு மாற்றி விடுவார் என்று பார்த்தால், அவரும் நினைத்து நினைத்துத்தான் திரைக்குள் வருகிறார். படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். கூட்டாக உட்கார்ந்து பேயை அழைத்து சமாதானப்படுத்துவதும், அறிவுரை சொல்வதும் டூ மச். நினைத்தால் வந்து போகிற பாடல் காட்சிகளுக்கு கத்திரி வைத்திருக்கலாம்.

பேய், திடீரென இறங்கி வந்து லாரன்ஸிடம் மன்னிப்பு கேட்பது படத்தின் உச்சகட்ட நகைச்சுவை. எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்களில் ஒன்ற முடியவில்லை. ஆனாலும் பின்னணியில் நன்றாகப் பயமுறுத்துகிறார். சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு மொத்த பய ஏரியாவையும் ரகளை செய்து காட்டுகிறது. அகதா கிறிஸ்டியின் நாவலை எடுத்து ஆவியில் முக்கி எடுத்திருக்கிறார்கள். என்ன... திரைக்கதையை இழுத்துப் பிடித்து திருத்தியிருந்தால் ஓரளவு ரசித்திருக்கலாம்.