மகாத்மா மீது அவதூறு! குமுறும் காந்தியவாதிகள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

‘நாடு போற்றும் நல்லவர்களின் வரலாற்றை எழுதுகிறேன்’ என்று கிளம்பி ஏதாவது சர்ச்சையை கிளப்பிவிட்டு விளம்பரம் தேடிக்கொள்வது லேட்டஸ்ட் ஃபேஷன்! நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஜோசப் லிலிவேல்ட் எழுதியுள்ள 'Great soul: Mahatma Gandhi and his Struggle' நூலும் இந்த ரகம்தான்!

புலிட்சர் விருது பெற்ற லிலிவேல்ட், இந்நூலில் மகாத்மா காந்தி பற்றிய பல சர்ச்சைக்குரிய செய்திகளைப் பதிவுசெய்திருப்பதாக தகவல். உச்சமாக, ‘காந்தி ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ளவர்’ என்ற தொனியில், காந்திக்கும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த அமெச்சூர் பாடிபில்டரும் கட்டிடக்கலை நிபுணருமான ஹெர்மன் காலின்பாக்குக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும், அதன் காரணமாகவே மனைவி கஸ்தூரிபாவை பிரிந்தார் என்றும் எழுதியிருக்கிறார்.

இதற்கு ஆதாரமாக, ‘நீ என் உடலை மொத்தமாக உடைமையாக்கிக் கொண்டாய்’ என்றும், மற்றொரு கடிதத்தில், ‘வேறு எந்தப் பெண்ணின் மேலும் இச்சை கொள்ளாதே. உலகம் கொள்ளாத காதலை நாம் பகிர்ந்து கொள்வோம்’ என்றும் ஹெர்மனுக்கு காந்தி கடிதங்களில் எழுதியிருப்பதாகச் சொல்கிறார் லிலிவேல்ட்.

லிலிவேல்டின் நூல் இந்தியா முழுவதும் புயலைக் கிளப்பியிருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் நூலை தடைசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளன. தமிழக காந்தியவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

மதுரையைச் சேர்ந்த ‘சர்வோதயம் மலர்கிறது’ இதழின் ஆசிரியர் கே.எம்.நடராஜன், ‘‘ஹெர்மன் காலின்பாக் வெஜிடேரியன் கிளப்பின் நிர்வாகி. காந்தியும் அந்த கிளப்பில் உறுப்பினர். அப்படி அறிமுகமான காலின்பாக், காந்தியின் கொள்கையாலும் சமூகப்பணியாலும் ஈர்க்கப்பட்டு தீவிரத் தொண்டரானார். அவர் அன்பளிப்பாக வழங்கிய 1000 ஏக்கர் நிலத்தில், ‘டால்ஸ்டாய்’ பெயரில் ஒரு பண்ணை அமைத்தார் காந்தி. யுத்தத்தாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்ட மக்களை அங்கே அரவணைத்து உதவிகள் செய்தார். தன் உடலின் சக்தி முழுவதும் நிவாரணப் பணிகளுக்கே செலவாக வேண்டும் என்பதற்காக 36 வயதிலேயே மனைவியின் சம்மதத்தோடு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தவர் காந்தி. அவருடைய வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் ஏதுமில்லை’’ என்கிறார்.

‘‘காந்தி உலகமறிந்த தலைவர். இந்தியர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், ‘காந்தியின் தேசத்திலிருந்து வருகிறீர்களா’ என்றுதான் கேட்கிறார்கள். அவர் பெயரைப் பயன்படுத்தினால் மார்க்கெட்டில் நல்ல மதிப்பிருக்கிறது. அந்த விளம்பர யுக்தியைத்தான் இந்த நூலாசிரியரும் பயன்படுத்தியிருக்கிறார்’’ என்கிறார் மதுரை சர்வோதய அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் மாரியப்பன்.

‘‘காந்தியின் 100 வால்யூம் நூல்களைப் படித்திருக்கிறேன். அவரின் பேத்தி, பேரன்களோடு நெருங்கிப் பழகியும் இருக்கிறேன். நானறிந்த வரை, எந்தச் சூழ்நிலையிலும் கஸ்தூரிபாவை காந்தியார் தள்ளி வைத்ததே இல்லை. கஸ்தூரிபா படிக்காதவர். காந்தியார் செய்யும் எல்லா சேவைகளையும் மனைவியையும் செய்யச் சொல்லுவார். தொடக்கத்தில் கஸ்தூரிபாவுக்கு அதில் உடன்பாடு இல்லை. கருத்துவேறுபாடு ஏற்பட்டு, கஸ்தூரிபா கோபித்துக்கொண்டு செல்வதுண்டு. ஒரு கட்டத்தில் பக்குவமடைந்து காந்தியோடு ஐக்கியமாகி விட்டார். ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். இந்நூலில் சொல்லப்பட்ட விஷயத்தின் அடிப்படையே தவறு. இந்தியாவில் இருந்து காந்தியின் பெயரை அழித்தொழிக்க உள்ளேயும் வெளியேயும் பல முயற்சிகள் நடக்கின்றன. அதில் இதுவும் ஒன்று’’ என்கிறார் மாரியப்பன்.

மகாத்மா காந்தியிடம் தனி உதவியாளராகப் பணியாற்றிய வி.கல்யாணமும் லிலிவேல்ட் கருத்தை கடுமையாக மறுக்கிறார்.

‘‘காந்தியிடம் இருந்த உயர்ந்த குணமே, தான் செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதுதான். ‘இமாலயன் பிளென்டி’ என்று சொல்வார். ‘மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்’ என்று பொருள். குடித்தது, புகை பிடித்தது, மாமிசம் சாப்பிட்டது, மனைவியைத் திட்டியது, அடித்தது, தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது மனைவியிடம் உறவு கொண்டது, இன்னொரு பெண்ணிடம் காமவயப்பட்டது, பிரம்மச்சரியத்தை சோதித்து உறுதிப்படுத்திக்கொண்டது என தான் செய்த எல்லாவற்றையும் குறிப்பிட்டு, தவறுகளுக்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார். காந்தி அளவுக்கு சத்தியமான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் உலகத்தில் யாருமில்லை. கடைசிவரை கஸ்தூரிபாவின் மேல் மிகுந்த நேசம் வைத்திருந்தார். அவருடைய அறையின் கதவுக்கு தாழ்ப்பாளே இருக்காது. யாரும் எப்போதும் போகலாம்; வரலாம். ரகசியம் ஏதுமில்லை.

ஹெர்மனுக்கும் காந்திக்குமான நட்பு மிகவும் புனிதமானது. அதில் தவறான கற்பனைக்கு இடமில்லை. காந்தியைப் பற்றி சர்ச்சை கிளம்புவது புதிதல்ல. ‘கஸ்தூரிபா இருக்கும்போதே காந்திக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருந்தது’ என்று காந்தியின் பேரனே எழுதியிருக்கிறார். இதுபோன்ற அவதூறுகள் எல்லாம் காந்தியின் புகழைக் குலைக்காது’’ என்கிறார் கல்யாணம்.

நூலாசிரியர் லிலிவேல்ட் என்ன சொல்கிறார்?



‘‘எந்த இடத்திலும் காந்திஜியை ஓரினச்சேர்க்கையாளர் என்று நேரடியாகக் குறிப்பிடவில்லை. காந்தி எழுதிய கடிதத்தின் சில வரிகளை எடுத்தாண்டிருக்கிறேன். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது!’’

ஆனாலும் லிலிவேல்ட்... நீங்கள் நினைத்தது நடந்துவிட்டது. நூலை வெளியிட்ட ஹார்பர்கோலின்ஸ்  நிறுவனத்துக்கு உலகெங்கும் இருந்து ஆர்டர்கள் குவிகிறதாம்!
 வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்