தமிழில் கவனம் ஈர்க்கும் டப்பிங் ரைட்டர்ஸ்



-தொகுப்பு: மை.பாரதிராஜா

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று உலகமே உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. அப்படியிருக்க உலகப் படங்கள் மட்டும் நம் வீட்டு வரவேற்பு அறைக்குள் நுழையாமல் இருக்குமா என்ன..? பிரபஞ்ச நடிகர்கள் எல்லாம் இப்போது நம் தாய் மொழியில் நம்மைப் போலவே ‘மாமா மச்சான்...’ என பேசுகிறார்கள். உசிலம்பட்டியிலும் டாம் க்ரூஸுக்கு ரசிகர் மன்றம் இருக்கிறது. பழங்குடியின மக்களும் ஜாக்கி சானின் படங்கள் குறித்து அலசுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் - டப்பிங் ரைட்டர்ஸ். எந்த மொழியில் எந்த நடிகர் வசனம் பேசி நடித்தாலும் அந்த உதட்டசைவுக்கு ஏற்ப அதுவும் கதையோட்டத்தை விட்டு விலகாமல் தமிழில் டயலாக்ஸ் எழுதுவதில் நம் ஆட்கள் கில்லாடிகள். அப்படிப்பட்ட சில வஸ்தாதுகள் குறித்த அறிமுகம் இனி வரும் பக்கங்களில்...

கவுதம புத்ர சதகர்னி - மருதபரணி

‘‘இந்தியாவுல இருக்கிற பெரும்பாலான மொழிகள்ல டப் பண்ணிருக்கேன். நான் டப் செய்த முதல் ஹாலிவுட் படம் ‘ஜுராசிக் பார்க்’. 38 வருஷங்களா இந்த ஃபீல்டுல இருக்கேன். ஆயிரம் படங்களுக்கு மேல வசனம், பாடல்கள் எழுதியிருக்கேன்...’’ என்று சிரிக்கிறார் மருதபரணி. ‘‘அப்பா மருதகாசி, கவிஞர், பாடலாசிரியர். என் பேரு பரணி. அப்பா நினைவா அவர் பேரையும் சேர்த்துகிட்டேன்.

அப்பாவுக்கு அசிஸ்டென்ட்டா இருந்தப்ப தெலுங்கு பட உலகம் அறிமுகமாச்சு. டைரக்டர் கோதண்டராம ரெட்டிகிட்ட இணை இயக்குநரா வேலை பார்த்தேன். அப்புறம் டப்பிங் ஃபீல்டுக்கு வந்தேன். டாக்டர் ராஜசேகர், அர்ஜுன் நடிச்ச தெலுங்குப் படங்களை ஆரம்பத்துல தமிழ்ல டப் செய்தேன்.

சிரஞ்சீவியோட 90% படங்களுக்கு தமிழ் வசனம் நான்தான். சல்மான் கான் நடிச்ச முதல் படமான ‘மைனே பியார் கியா’, அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த ‘ஹம் ஆப் கே ஹைன் கவுன்’ உட்பட பல இந்திப் படங்களை டப் செய்திருக்கேன். இப்ப பாலகிருஷ்ணாவோட 100வதுபடத்தை ‘கவுதம புத்ர சதகர்னி’யா தமிழ்ல கொண்டு வரேன்...’’ என்கிறார் மருதபரணி.

நரசிம்மன் ஐ.பி.எஸ் - சாந்தகுமார்

‘‘நடிக்கணும்னு சென்னைக்கு வந்தவன் இப்ப டப்பிங் துறைல இருக்கேன்...’’ புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் 28 வருட அனுபவம் உள்ள சாந்தகுமார். ‘‘ஒரிஜினல் பேரு ராஜசேகரன். சொந்த ஊர் திருச்சி துறையூர் பக்கம் வாலிஸ்புரம். படிச்சது மெக்கானிகல் என்ஜினியரிங். சினிமால இப்படி டப்பிங் துறை இருக்குனு எனக்கு வழிகாட்டியவர் சாம்பசிவம் சார். டப்பிங் யூனியன்ல மெம்பர் ஆனதும் சந்தானபாரதி இயக்கத்துல சிவாஜி நடிச்ச ‘என் தமிழ் என் மக்கள்’ படத்துல டப்பிங் பேசினேன்.

அதுக்கு அப்புறம் நிறைய படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு பேசினேன். அப்படியே டப்பிங் ஒருங்கிணைப்பாளரா வளர்ந்தேன். பிறகு டப்பிங் டயலாக்ஸ் எழுத ஆரம்பிச்சேன். இதுவரை ‘நரசிம்மன் ஐ.பி.எஸ்.’ உட்பட நாற்பது படங்களுக்கு மேல எழுதியிருக்கேன். தமிழ்ல பாண்டிராஜன் நடிச்ச ‘ஆறுமுகச்சாமி’, ‘காட்சிப்பிழை’ படங்களைத் தயாரிச்சதும் நான்தான்...’’ என்கிறார் ராஜசேகரன் என்கிற சாந்தகுமார்.

செல்வந்தன் - ஏ.ஆர்.கே.ராஜராஜா

‘‘‘The sweetest thing’னு ஒரு இங்கிலீஷ் படத்தை டப்பிங் செய்து ரிலீஸ் பண்ணலாம்னு இந்தத் துறைக்கு வந்தேன். அந்த படத்துக்கான டப்பிங் ரைட்டர் வரலை. அதனால நானே எழுத ஆரம்பிச்சேன். இப்படித்தான் என்னோட கேரியர் தொடங்குச்சு...’’ சுவாரஸ்யமாகத் தொடங்குகிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா. ‘‘சொந்த ஊர் மதுரை அழகர்கோவில் பக்கம் உள்ள கிடாரிபட்டி. ‘த ஸ்வீட் டஸ்ட் திங்’ கலெக்‌ஷன் பார்க்கவே, தொடர்ந்து என்னையே டப்பிங் எழுதச் சொன்னாங்க.

60 படங்களுக்கு மேல டப்பிங் பண்ணின டைம்ல சின்ன பட்ஜெட்ல ஒரு படம் இயக்குற வாய்ப்பு வந்தது. அந்த படம் தெலுங்கிலும், தமிழ்ல ‘இளவட்டம்’னும் வந்தது. அப்புறம் நாகார்ஜுனா, மகேஷ்பாபு, ராம்சரண் படங்கள்னு தொடர்ந்து மொழி மாற்று படங்கள்ல பிஸியானேன். ‘மகதீரா’ தவிர்த்து ராம் சரணோட பெரும்பாலான படங்கள் நான் டப் பண்ணினதுதான். இதுபோக டப்பிங் விநியோகஸ்தராவும் இருக்கேன்...’’ என்கிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா.

அபகலிப்டோ - இ.எம்.எஸ். ராஜா

‘‘அப்பா இந்தத் துறைல இருந்ததால நானும் டப்பிங்ல வந்துட்டேன். 20 வயசுல ஒரு வாய்ஸ் ஆர்ட்டிஸ்டா கேரியரை ஆரம்பிச்சேன். பிறகு டப்பிங் கோ-ஆர்டினேட்டர். அப்புறமாதான் வசனகர்த்தாவா...’’ என தன்னைப் பற்றிய அறிமுகத்தை சுருக்கமாகச் சொல்கிறார் இ.எம்.எஸ்.ராஜா. ‘‘800 ஆங்கிலப் படங்களுக்கு மேல ரைட்டரா ஒர்க் பண்ணிட்டேன். இதுல ஜாக்கிசான், டோனி ஜா படங்கள் அதிகம். சன் டிவிக்காக நிறைய ஆங்கிலப் படங்களை டப் பண்ணி கொடுத்திருக்கேன்.

‘அபகலிப்டோ’ நேரடியா முதல்ல தமிழ்ல வரலை. சன் டிவிக்காக நான் பண்ணினதையே தியேட்டர்லயும் ரிலீஸ் பண்ணினாங்க. சுட்டி டிவி ஆரம்பிச்சதுலேந்து இப்ப வரைக்கும் ‘ஜாக்கிசான்’ கார்ட்டூனுக்கு எழுதிட்டிருக்கேன். ‘நாகினி’ சீரியலுக்கு நான் வசனம் எழுதினேன். ஒரிஜினல் மாதிரியே இருக்குனு எக்கச்சக்க பாராட்டு. இப்ப ‘ஜெய் அனுமான்’ சீரியலுக்கு எழுதிட்டிருக்கேன். சீரியலுக்கு பண்ற ஒர்க்தான் எப்பவும் கவனிக்கப்படும். ஜாக்கிசான், டோனிஜா படங்களை அந்த ஹீரோக்களோட சினிமாவாதான் பார்ப்பாங்க. இப்ப ‘ஸ்டூடியோ வேல்’னு சொந்தமா ஆரம்பிச்சிருக்கேன். தெலுங்கு, ஆங்கிலப் படங்களோட ஒர்க் போய்க்கிட்டிருக்கு...’’ என்கிறார் இ.எம்.எஸ்.ராஜா  

அவதார் - சபரிநாதன்

‘‘முதன் முதல்ல தனியா ஒர்க் பண்ணின படம் ‘அவதார்’. ஆங்கிலப் படங்களுக்கு ஒர்க் பண்றது சவாலான வேலை. அசைன்மென்ட் கொடுக்கிற மும்பைகாரங்க வாயசைவு சரியா இருக்குதான்னு மட்டும்தான் பார்ப்பாங்க. ஆனா, நம்ம ஆடியன்ஸ் எல்லாத்தையும் கவனிப்பாங்க...’’ சின்ஸியராக பேசுகிறார் சபரிநாதன். ‘‘அப்பா ஏ.எம்.குமார் சில படங்கள் இயக்கியிருக்கார். அம்மா மாலா, டப்பிங் ஆர்டிஸ்ட். ‘மகாநதி’ல கமல் சார் பையனுக்கு பேட்ச் ஒர்க் பேசியிருக்கேன். சின்ன வயசுலயே டப்பிங் பேச ஆரம்பிச்சுட்டேன். ‘மம்மி’, ‘ஹாரிபாட்டர்’னு நிறைய ஹாலிவுட் படங்களுக்கு வாய்ஸ் குடுத்திருக்கேன்.

இந்தத் துறையில் உள்ள சசிகுமார் சார் மூலமா ‘அவதார்’ வாய்ப்பு வந்தது. ‘லைஃப் ஆஃப்பை’, ‘அவென்ஜர்ஸ்’னு நூறு படங்களுக்கு மேல டப்பிங் பண்ணிட்டேன். இந்தில ‘தூம்3’, ஷாரூக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ படங்களுக்கு கிடைச்ச வரவேற்பை மறக்கவே முடியாது. ஆங்கிலப் படங்களை மொழி மாற்றம் செய்யறப்ப முழுப் படத்தையும் நம்மகிட்ட கொடுத்திட மாட்டாங்க. சில நிமிட வீடியோக்களா கொடுத்து டெஸ்ட் பண்ணுவாங்க. அதே மாதிரி ஒவ்வொரு கேரக்டருக்கான வாய்ஸுக்கும் மூணு ஆப்ஷன் கொடுக்கணும். இதெல்லாம் ஓகே ஆனாதான் அசைன்மென்ட் கிடைக்கும்...’’ என்கிறார் சபரிநாதன்.

தங்கல் - ஷங்கர்

‘‘டப்பிங் பிதாமகர் ஆரூர்தாஸ் சார், ‘தங்கல்’ பார்த்துட்டு ‘ரொம்ப வருஷத்துக்குப் பிறகு ஒரு பர்ஃபெக்ட்டான ஒர்க் உள்ள படம் இது’னு நெகிழ்ந்து பாராட்டினார்...’’ மும்பையில் தேவியின் இந்திப் படமான ‘மாம்’ சினிமாவின் தமிழாக்க பரபரப்புக்கிடையே பேசுகிறார் ஷங்கர். ‘‘அப்பா ஜெகதீசன் நாடக நடிகர். சின்ன வயசுல இருந்தே சித்தப்பா கூட டப்பிங் ஸ்டூடியோஸ் போய் போய் இந்தத் துறை மேல ஆர்வம் வந்துடுச்சு.

கன்னடம் டூ தமிழ்ல 200 படங்களுக்கு மேல ஒர்க் பண்ணியிருக்கேன். தூர்தர்ஷன் சீரியல்கள் நிறைய செய்திருக்கேன். ஸ்ரீலங்கா டிவி சேனலுக்காக ‘லகான்’ படத்தை மொழி மாற்றம் பண்ணினேன். அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆனார் அங்குள்ள சேனல் ஓனரான ராஜ் மகேந்திரா. தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி மூலமா தொடர்ந்து அங்கயே படங்களை டப் பண்றதுக்கான பேச்சு வார்த்தை நடந்தது. அதுக்குள்ள இங்க பிசியாகிட்டேன்.

‘Dungeons & Dragons’ல கேரியர் தொடங்குச்சு. ‘பைரேட்ஸ் ஆஃப் கரிபியன்’, ‘கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி’னு நிறைய ஆங்கிலப் படங்கள் பண்ணினேன். மனைவி ஜெயகீதா பக்கபலமா இருக்காங்க. ‘தங்கல்’ வாய்ப்பு, அதோட தெலுங்கு ரைட்டர் எம்.வி.சத்யநாராயணா சார் மூலமா கிடைச்சது...’’ என்கிறார் ஷங்கர்.

புலி முருகன் - ஆர்.பி.பாலா

‘‘கடந்த 22 வருஷங்களா இந்தத் துறைல இருக்கேன். ஆரம்பத்துல டப்பிங் தியேட்டர்ல ஒரு சவுண்ட் அசிஸ்டென்ட்டாதான் இருந்தேன்...’’ உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் ஆர்.பி.பாலா. ‘‘என் வாய்ஸ் நல்லா இருக்கறதால சீரியல் ஹீரோக்களுக்கு டப்பிங் பேசச் சொன்னாங்க. ஆயிரம் படங்களுக்கு மேல டப்பிங் ரைட்டரா ஓர்க் பண்ணியிருக்கிற வசந்தகுமார் சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் அவர் படங்களுக்கு டப்பிங் பேச வருவாங்க. ஒரு மொழி மாற்று படத்துக்கு எவ்வளவு சிரத்தை எடுத்துக்கணும்னு அவர்கிட்டதான் கத்துகிட்டேன். அப்புறம் ‘போக்கிரி’ டயலாக்  ரைட்டர் வி.பிரபாகர் சார்கிட்ட அசோசியேட்டா சேர்ந்தேன். என் லைஃப்ல திருப்புமுனை அமைஞ்சது அங்கதான்.

ஒரு காலத்துல வசூலைக் குவிச்ச ‘ஜக்கம்மா’, ‘புதுவை மாநகரம்’ மாதிரி நிறைய படங்களை மொழிமாற்றம் பண்ணினேன். இப்ப மோகன்லால் நடிச்சு மலையாளத்துல ப்ளாக்பஸ்டர் கொண்டாடின ‘புலிமுருகன்’ படத்தை, அதே பெயர்ல 3Dல தமிழ்ல டப் செய்திருக்கேன்...’’ என்கிறார் ஆர்.பி.பாலா.

டைட்டானிக் - மோகன் தேவநாராயணன்

‘‘தாத்தா காலத்துல இருந்து இந்த ஃபீல்டுல இருக்கோம்...’’ என பெருமிதமாகப் பேச ஆரம்பிக்கிறார் மோகன் தேவ நாராயணன். ‘‘இந்தியாவுலயே முதன் முதல்ல முழு நீள டப்பிங் படத்துக்கு வசனம் எழுதினது எங்க தாத்தா குளத்து ஐயர்தான். ஏவி.மெய்யப்ப செட்டியாருக்காக இந்திப் படமான ‘ராமராஜ்ஜிய’த்தை தமிழில டப் செய்தார். மகாத்மா காந்தி பார்த்த ஒரே படம் அதுதான்!

அப்பா தேவநாராயணன் ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’ இப்படி நிறைய படங்களை தமிழ்ல டப் செய்திருக்கார். அஞ்சு வயசுல டப்பிங் ஆர்டிஸ்ட்டா என் கேரியரை ஆரம்பிச்சேன். ராமானந்த சாகர் தயாரிச்ச இந்தி சீரியல்களுக்கு எல்லாம் தமிழ்ல வசனம் எழுதியிருக்கேன். ஆங்கிலப்படங்கள்ல ‘டைட்டானிக்’, ‘மம்மி’, ‘அனகோண்டா’னு லிஸ்ட் அதிகம்.

ஒரு டிவி சேனலுக்காக 80 படங்களை டப் செய்து கொடுத்திருக்கேன். ‘மிஸ்டர் வேதாந்தம்’ சீரியல்ல ஹீரோவாவும் நடிச்சிருக்கேன். இன்னொரு சீரியல்ல செகண்ட் யூனிட் டைரக்டராகவும் ஒர்க் பண்ணியிருக்கேன். மனைவி கீர்த்தியும் இதே  துறைலதான் இருக்காங்க. தம்பி தேவநாராயணன் ரவியும் ரைட்டரா இருக்கார்...’’ என்கிறார் மோகன் தேவநாராயணன்.