போதைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...



ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் உபயோகத்துக்கு எதிரான நாள்

- இளங்கோ கிருஷ்ணன்

டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. மொத்த சமூகத்தின் பெரும்பகுதி குடிநோயாளிகளாகவும் மனநோயாளிகளாகவும் மாறிக்கொண்டிருக்கும் கொடூரமான காலத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பத்து பேர் போதைப் பழக்கத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் புள்ளிவிவரம்.

போதை என்பது ஆல்கஹால் மட்டும் இல்லை. புகையிலை முதல் கஞ்சா, ஹெராயின் வரை உள்ள அனைத்துமே போதைப் பொருட்கள்தாம். தவிர சில இருமல் மருந்துகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தின்னர் போன்றவற்றையும் போதைப் பொருளாக சிலர் பயன்படுத்துகின்றனர்.

கிராமங்களைவிட நகரங்களிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, இளைஞர்களிடையே இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது என்பதுதான் வேதனை. இந்தியாவில் உள்ள 75 சதவிகிதக் குடும்பங்களில் யாராவது ஒருவரேனும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கிறார் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

போதைகள் பலவிதம்
போதைப் பழக்கம் என்று பொதுவாக நாம் சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. சிலவகை போதைப் பொருட்களை விற்பனை செய்ய அரசே அனுமதி அளித்துள்ளது. உதாரணமாக சிகரெட், மதுபானங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். இதைத் தவிர மருத்துவக் காரணங்களுக்காக மெத்தடோன் (Methadone), ஆக்ஸிகோடோன் (Oxycodone), சோல்பிடெம் (Zolpidem) போன்ற மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன.

இவற்றை சிலர் போதைப் பொருளாக சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துகின்றனர். கஞ்சா, ஹெராயின், எல்.எஸ்.டி உட்பட பலவகையான போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த சட்டவிரோத போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு சட்டப் படியான போதைப் பொருட்களின் சந்தை மதிப்பைவிடவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்.

போதைப் பொருட்களை அவற்றின் பண்பின் அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள். டிப்ரசன்ட் (Depressant): ஆல்கஹால் நிறைந்த பானங்களும் சால்வென்ட்ஸ் எனப்படும் சில திரவங்களுமே டிப்ரசன்ட். மூளை செல்களைக் கட்டுப்படுத்தி அதன் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால் இதற்கு இந்தப் பெயர்.

ஹல்லூசினேஷன்கள்: இல்லாததை இருப்பது போல் காட்டுவது ஹல்லூசினேஷன். நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஒலிகள் ஆகியவற்றில் குழப்பங்களை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ள போதைப் பொருட்கள் இவை. கானபிஸ் (Cannabis), எல்எஸ்டி (LSD) போன்றவை இந்த வகையில் அடங்கும்.

வலி நிவாரணிகள்: நரம்பு மண்டலத்தை மட்டுப்படுத்தி வலி உணர்வுகளை உணரச் செய்வதைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இவை. மருத்துவக் காரணங்களுக்காக இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்பிரின் போன்ற மருந்துகளும் ஹெராயின் போன்ற லாகிரி வஸ்துகளும் இந்தப் பிரிவில்தான் வருகின்றன.

செயலூக்கிகள் (Performance enhancer): தசைகளின் ஊக்கத்து க்கு உதவும் மருந்துகள் இந்தவகையைச் சேர்ந்தவை. குறிப்பாக, அனபாலிக் ஸ்டீராய்டு மருந்துகள். இவையும் மருத்துவக் காரணங்களுக்காகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சிலர் சட்டத்துக்குப் புறம்பாக மருத்துவக் காரணங்களுக்கு வெளியே போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

தூண்டிகள் (Stimulants): மூளையில் உள்ள செல்களை தற்காலிகமாகத் தூண்டி செயல்பட வைக்கும் திறனுடையவை. புகையிலை, காபீன் மற்றும் எக்ஸ்டசி போன்ற போதைப் பொருட்கள் இந்தவகையைச் சேர்ந்தவை. இருக்கும் விவரங்களைப் பார்த்துவிட்டோம். மனநல மருத்துவரான அசோகன் இது குறித்து என்ன சொல்கிறார்?

‘‘பழக்கத்துக்கு அடிமையாவது தான் போதை. அதாவது நமது உடலில் உள்ள செல்களுக்கு குறிப்பிட்ட பொருளில் உள்ள ஒரு வேதித்தன்மை மிகவும் பிடித்துப்போய்விட்டது  என்றால் அதற்கு நம் உடல் மிக விரைவாக அடிமையாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குச் செல்கிறது.

இப்படி அடிமையாகும் போதைப் பொருள், லாகிரி வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது மருந்தாகக் கூட இருக்கலாம். ஆனால், மருத்துவரின் பரிந்துரையோடு நோயாளியின் உடலின் தேவை அறிந்து மருந்துகளாகத் தரப்படுபவை என்பதால் அவற்றால் ஆபத்து இல்லை.

போதைதரும் பொருட்களின் இந்த வகை மருத்துவப் பயன்பாட்டை ‘use’ என்கிறோம். உதாரணமாக இடுப்பு வலி இருக்கிறது என்றால் அதற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணியைப் பரிந்துரைக்கும் அளவில் பயன்படுத்தினால் அது ‘யூஸ்’. அதே மருந்தை மருத்துவர் பரிந்துரையின்றி ஒருவர் வலி நிவாரணத்துக்காகப் பயன்படுத்தினால் அது Misuse.

மருத்துவர்கள் பயன்படுத்தும் போதை தரும் மருந்தையோ அல்லது அதில் உள்ள போதை தரும் அம்சத்தை மட்டும் பிரித்தெடுத்து அதை போதைக்காக மட்டுமே பயன்படுத்துவதையோ  ‘அப்யூஸ்’ என்கிறோம். ‘ட்ரக் அப்யூஸ்’ என்பது எல்லாவகை போதைப்பொருளையும் பயன்படுத்துவதுதான்.

இந்த போதைப் பொருளைத் தொடர்ந்து ஒருவர் பயன்படுத்தும்போது அவர் போதையைச் சார்ந்திருந்தல் (Drug Dependant) என்ற நிலைக்குச் செல்கிறார். இதன் தொடர்ச்சியான அடுத்த நிலைதான் போதைக்கு அடிமையாதல் (Drug addiction). தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான கூட்டத்தைப் போலவே பல்வேறு வகையான போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புகையிலையையும் ஆல்கஹாலையும் போதைப் பழக்கத்தின் நுழைவாயில் என்பார்கள்.

ஒருவர் இந்தப் பழக்கங்களுக்குள் நுழைந்துவிட்டால் மெல்ல மெல்ல ஹெராயின், கஞ்சா, எல்எஸ்டி என ஒவ்வொரு போதைப் பொருளாகப் பயன்படுத்தும் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் பெற ஆரம்பிப்பார். ஆனால், ஹெராயின் உள்ளிட்ட டிசைனர் ட்ரக்ஸுகளுக்கு இன்றைய இளைய தலைமுறை நேரடியாகவே அடிமையாகி இருக்கிறது என்பதுதான் கொடுமை.

இவற்றின் விலை தங்கத்தைவிட அதிகம் என்பதால் வசதியான வீட்டுப்பிள்ளைகளே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் வார இறுதி பார்ட்டிகளில் இந்த டிஸைனர் ட்ரக்ஸ்களை ஆண் பெண் பேதமின்றி பயன்படுத்துகின்றனர். இதனால் செக்ஸுவல் அப்யூஸ் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

போதைக்கு அடிமையானவர்கள் போதைப் பழக்கத்துக்காக எதையும் செய்யும் நிலைக்குச் செல்வார்கள். பொய் சொல்வது, திருடுவது, வன்முறையில் ஈடுபடுவது என குற்றச்செயல்களில்கூட தயங்காமல் இறங்குவார்கள். முதன் முறை பயன்படுத்தும் போது பெரும்பாலானவர்களுக்கு பெரிய இன்பம் கிடைக்காது. வித்தியாசமான அனுபவமாக மட்டுமே இருக்கும். ஆனால், தொடர்ந்து இதைப் பயன்படுத்தும்போது மனமும் உடலும் மெல்ல இதற்கு அடிமையாகும்.

பிறகு இது இல்லாவிட்டால் இன்பமே இல்லை என்ற நிலைக்கு உடல் செல்லும். ஒருவர் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு சிகரெட் பிடித்தால் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாவார். தொடர்ந்து 20 நாட்கள் குடிப்பவர் குடிக்கு அடிமையாவார். ஆனால், ஹெராயின், கஞ்சா போன்ற போதை மற்றும் லாகிரி வஸ்துகளை பத்து நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலே அடிமையாகிவிடுவார்.

போதைப் பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகளை வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் (Withdrawal symptoms) என்பார்கள். அந்தப் பொருளை உடனே நுகர வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும். உடலெங்கும் நடுக்கம் ஏற்படும். பதற்றமும், கோபமும், எரிச்சலும் ஏற்படும். எதிலும் ஆர்வ மின்மை, கவனச்சிதறல் போன்றவை ஏற்படும்.

கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற டிசைனர் ட்ரக்ஸ்களுக்கு அடிமையானவர்களுக்கு இந்த வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ்  தீவிரமாக  இருக்கும். கடுமையான உடல் வலி, குடலே வெளிவந்து விடுவதைப் போன்ற வாந்தி, தலைவலி போன்றவை உக்கிரத்துடன் வெளிப்படும். இன்று மறுவாழ்வு மையங்கள் நாள்தோறும் பெருகிவருகின்றன.

போதை அடிமைகள் அதிகரித்து வருவதன் சாட்சி இது. அரசின் அனுமதி பெற்ற போதை அடிமைகள் மறுவாழ்வு மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் முறையான சிகிச்சை பெற்றால் மறுவாழ்வுக்குத் திரும்பலாம். போதை அடிமைகளின் மறுவாழ்வுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அவசியம்.

அவர்கள் தினசரி போதைப் பொருளைப் பயன்படுத்தும் நேரம் வந்ததும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் இதைப் புரிந்துகொண்டு ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல் அவர்களைக் கவனிக்க வேண்டும். ஓரளவு உடலும் மனமும் தேறி வரும்வரை அவர்களைக் கிண்டல் செய்வது, திட்டுவது, மனம் வெறுக்கும்படி நடந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்...’’ என்கிறார் டாக்டர் அசோகன்.