காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 11

ரேஃபல் ப்யூண்டே நம் காட்ஃபாதரின் காட்ஃபாதரே இவர்தான். ரேஃபல், அப்போது கடத்தல் சாம்ராஜ்யத்தின் முடிசூடா சக்கரவர்த்தியாக மெதிலின் நகரில் திகழ்ந்தார். சிகரெட்டில் தொடங்கி தங்கம் வரை எந்த சரக்காக இருந்தாலும் ரேஃபல் கைகளுக்கு வந்துவிட்டுதான் மார்க்கெட்டுக்கு வரும்.

இரண்டாம் உலகப் போரின் விளைவால் மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருந்த ஜப்பான், வீறுகொண்டு எழ எலெக்ட்ரானிக்ஸ் துறையையே பெரிதும் சார்ந்திருந்தது. ஏற்றுமதி வாயிலாக மற்ற நாடுகளுக்கு தங்கள் தயாரிப்பைக் கொண்டு சென்று நேர்வழியில் சந்தைப் படுத்திக் கொண்டிருந்தது ஒருபுறம்.

மறுபுறம் வரி உள்ளிட்ட சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படாமல் மாஃபியாக்கள் வாயிலாக கடத்தல் சரக்காகக் கொண்டு சென்று கொண்டிருந்தது. குறிப்பாக ஜப்பானியத் தயாரிப்புகளான வாட்ச், ரேடியோ, டிவி உள்ளிட்டவற்றுக்கு வட மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் நல்ல மவுசு இருந்தது. பணம் படைத்தவர்களால் கூடுதல் பணம் கொடுத்து இந்த சொகுசுகளை அனுபவிக்க முடிந்தது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள்? வரி கட்டாமல் கடத்திவரப்படும் சரக்குகளே கதி.

இதனால்தான் அந்நாளைய கடத்தல் மாஃபியாக்கள் தங்கள் தொழில் குறித்து எவ்வித குற்றஉணர்வும் கொண்டிருக்கவில்லை. கணிசமாக லாபம் பார்த்தாலும், தாங்கள் மக்களுக்கு பெரும் சேவை செய்வதாகவே உறுதியாக நம்பினார்கள். தங்களை நவீன ராபின் ஹுட்டுகளாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். முறைகேடான வழியில் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை சமூகத்துக்காக செலவிட அவர்களுக்கு தயக்கமே இல்லை.

ரேஃபலும் அப்படிப்பட்டவர்தான். அவரை மிஞ்சிய கடத்தல் கலைஞன், தென்னமெரிக்காவிலேயே இருக்க முடியாது என்று அவர் வாழும் காலத்தில் பெயர் பெற்றார். பனாமா கால்வாய் பகுதியில் சர்வதேச எல்லையிலேயே நடுக்கடலில் சரக்குகளைக் கைமாற்றிக் கொள்வார். எண்ணற்ற சிறு படகுகளைப் பயன்படுத்தி சரக்கு தென்னமெரிக்க கடற்கரையோரம் பல்வேறு நகரங்களுக்கு போகும்.

அங்கிருந்து கார், லாரி மூலம் சாலை மார்க்கமாகவே தேவைப்படும் இடங்களுக்கு சப்ளை செய்யப்படும். தங்கம், எலெக்ட்ரானிக்ஸ், துணிமணி போன்றவற்றையெல்லாம் சும்மா சேவை மாதிரிதான் கடத்திக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து வருகிற லாபம் பெரிய அளவில் கார்டெல் நடத்திக் கொண்டிருந்த ரேஃபல் போன்றவர்களுக்கு பாக்கெட் மணிதான்.

லாபத்துக்கு? வேறென்ன... போதைதான். கார்டெல்களுக்கு மெயின் பிசினஸே போதை கடத்தல்தான். அமெரிக்கா, தென்னமெரிக்கா மீது காண்டு ஆனதே இந்த மேட்டரில்தான் என்பதை ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம். ரைட்,ரேஃபலுக்கு வருவோம். அப்படியாப்பட்ட கடத்தல் முதலையான ரேஃபல், சின்ன அளவில் கார் திருட்டு, ஆள் கடத்தல் மாதிரி பிசினஸ்கள் செய்து கொண்டிருந்த பாப்லோவை சந்திக்க விரும்பினார் என்றால், அதற்குக் காரணம் பாப்லோவிடம் வெளிப்பட்ட துல்லியமான தொழில் நேர்த்திதான்.

தன் உதவியாளரிடம் கேட்டார். “பாப்லோவுக்கு என்ன பிடிக்கும்?” “கார். லேட்டஸ்ட் சொகுசு கார்னா உசுரு. அதுலே மின்னல் வேகத்தில் பறக்குறதை விரும்புவான்...” “ஓகே. என்னை மீட் பண்ண வர்றதுக்கு அவனை பிக்கப் பண்ண மெர்சிடிஸை அனுப்பு. அடுத்து?” “கஞ்சா...” “நம்ம கிட்டே இருக்குற சரக்குலேயே காஸ்ட்லியான சரக்கு ஒரு கிலோ பாக்கிங் பண்ணி, கிஃப்ட் ராப்பர் சுத்தி வை.

வேற?” “ஃபுட்பால் பார்க்குறதுன்னா பயலுக்கு உசுரு. அதுவும் பீலே ஆடுறாருன்னா தூக்கமில்லாமே பார்த்துக்கிட்டு கிடப்பான்...” “சூப்பர். அடுத்த வாரம் ஒரு மேட்ச் நடக்குது. அவனை ஸ்டேடியத்துக்கே கூட்டிக்கிட்டு வந்துடு!” இவ்வாறாக ஒரு சோட்டா பையனை சந்திக்க அவனுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்தார் ரேஃபல்.

அவருடன் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். இதுவரை ரேஃபல் யாருக்குமே இவ்வளவு மரியாதை கொடுத்ததில்லை. ரேஃபலின் ரைட் ஹேண்டாக இருந்தவன் வாய்விட்டே கேட்டான். “ஏண்ணா, ஒரு பச்சா பயலுக்கு எதுக்கு இவ்வளவு? வாடான்னா வந்து உங்க காலில் விழுந்து ஷூவை முத்தமிட்டுட்டு போவப்போறான்...” “டேய், இவன் மத்தவங்களை மாதிரி இல்லேடா.

அவனைப் பத்தி கேள்விப்படுறப்போ எல்லாம் என்னோட 20 வயசு நினைவுக்கு வருது. அப்ப நான் எப்படியிருந்தேனோ அப்படி அவன் இப்ப இருக்கான்!’’ ரேஃபலும், பாப்லோவும் சந்தித்த அந்த தினம் உணர்வுபூர்வமானது. பல்லாயிரக்கணக்கானோர் ஸ்டேடியத்தில் பார்வையாளர்களாக குழுமிக் கிடக்க ஃபுட்பால் மேட்ச் நடந்து கொண்டிருந்தது.

குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த ஸ்பெஷல் ரூமில் அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார் ரேஃபல். அவருடைய வாயில் உயர்தரமான கியூபா சுருட்டு புகைந்து கொண்டிருந்தது. எதிரே இருந்த டேபிளில் பிரெஞ்ச் ரம்மும், ஸ்பானிஷ் ஸ்காட்ச் விஸ்கியும். பாப்லோவுக்கு தருவதற்காக ஏகத்துக்கும் பரிசுப் பொருட்களை அவரே கடை கடையாக ஏறி இறங்கி வாங்கியிருந்தார்.

தூரத்தில் சூரியன் மாதிரி பிரகாசமாக நடந்து வந்து கொண்டிருந்தான் பாப்லோ. அவனது நடையில் மெக்ஸிகோ மாடுபிடி வீரனுக்குரிய கம்பீரம் இருந்தது. மிகப்பெரிய டானை சந்திக்க வருகிறோம் என்கிற அச்சம் அவனது கண்களில் கொஞ்சம்கூட தென்படவில்லை. ஸ்டைலான உடல்மொழியில் காண்பவர்களை வசீகரித்துக் கொண்டிருந்தான்.

அருகில் வந்து நின்றான் பாப்லோ. காதலியைப் பார்ப்பது மாதிரி அன்பொழுக அவனைப் பார்த்தார் ரேஃபல். “இவன்தான் பாப்லோ...” உதவியாளர் சம்பிரதாயமாக அறிமுகப்படுத்த, அவனை அருகில் அமர்த்தினார். “எப்படி இருக்கே?” “எனக்கென்ன? நல்லாருக்கேன். சொல்லுங்க. உங்களுக்கு என்ன செய்யணும்?”

“எதுக்கு கூப்பிட்டீங்கன்னு கேட்காம, என்ன செய்யணும்னு கேட்குற பாரு. இதுக்குதாண்டா உன்னைக் கூப்பிட்டேன்!” ஸ்டேடியத்தில் ஆரவாரம் திடீரென எழுந்தது. ஒரு வீரர் அசகாய தீரம் காட்டி தலையில் முட்டி கோல் போட்டிருந்தார். சட்டென்று மேட்ச்சில் ஆர்வமாகி மைதானத்தையே பார்க்க ஆரம்பித்தார் ரேஃபல்.

என்ன பேசுவது என்று தெரியாமல் தர்மசங்கடமாக அமர்ந்திருந்தான் பாப்லோ. நகம் கடித்தான். காலால் கோலம் போட்டான். இடுப்பில் வைத்திருந்த ரிவால்வரை சட்டென்று உருவினான். ரேஃபலைச் சுற்றியிருந்த பாதுகாவலர்கள் பதற, இவனோ ஸ்டைலாக தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

இவனுடைய அத்தனை செய்கைகளையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருந்தார் ரேஃபல். ரசித்துக்கொண்டே இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். போட்டியில் ரேஃபல் ஆதரித்த அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். மைதானமே எழுந்து ஆனந்தக் கூத்தாட, குழந்தை போல ரேஃபலும் எழுந்து நின்று கைகளைத் தட்டியவாறே குதிக்கத் தொடங்கினார்.

ஃபுட்பால் பார்க்க பாப்லோவுக்கும் பிடிக்கும்தான். ஆனால், அன்று இருந்த டென்ஷனில் அவனுக்கு விளையாட்டில் மனம் செல்லவில்லை. பாப்லோவுக்கு கை கொடுத்து, “நான் ரேஃபல். ஏதோ சின்னதா பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். தெரியலைன்னாலும் உனக்கு ஒண்ணும் பெரிய நஷ்டம் கிடையாது...” குறும்பாக மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

கையை மிகவும் அழுத்தமாக பாப்லோவுக்கு வலிக்குமளவுக்கு வேண்டுமென்றே பிடித்தார். பாப்லோவோ அவரைவிடவும் அழுத்தமாக கையைப் பிடித்தான். “நான் பாப்லோ. உங்களை மாதிரி பெரிய கார்டெல் எல்லாம் வெச்சிக்கிட்டு இல்லேன்னாலும் பத்து, இருவது பசங்களை வெச்சிக்கிட்டு ஒரு ஓரமா இங்கே விளையாடிக்கிட்டிருக்கேன்.

என்னை உங்களுக்கு தெரியலேன்னா, நிஜமாவே உங்களுக்கு நஷ்டம்தான்...” துடுக்குத்தனமாக பதில் சொன்னான். நியாயமாக ரேஃபல் கோபப்பட்டிருக்க வேண்டும். மாறாக புன்னகைத்தார். “ஃபீல்டுலே நீதான் என் பேர் சொல்லப் போற வாரிசு!” முதல் சந்திப்பிலேயே பாப்லோவுக்கு வாரிசு பட்டம் அறிவித்து விட்டார் ரேஃபல். அவருடைய ஆட்கள் மட்டுமின்றி பாப்லோவுக்கே கூட இது அதிர்ச்சிதான்.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்

தங்கம், எலெக்ட்ரானிக்ஸ், துணிமணி போன்றவற்றையெல்லாம் சும்மா சேவை மாதிரிதான் கடத்திக் கொண்டிருந்தார்கள்.

பாப்லோவின் நடையில் மெக்ஸிகோ மாடுபிடி வீரனுக்குரிய கம்பீரம் இருந்தது. மிகப்பெரிய டானை சந்திக்க வருகிறோம் என்கிற அச்சம் அவனது கண்களில் கொஞ்சம்கூட தென்படவில்லை.

“நான் பாப்லோ. பெரிய கார்டெல் எல்லாம் வெச்சிக்கிட்டு இல்லேன்னாலும் பத்து, இருவது பசங்களோட ஒரு ஓரமா விளையாடிக்கிட்டிருக்கேன். என்னை உங்களுக்கு தெரியலேன்னா, நிஜமாவே உங்களுக்கு நஷ்டம்தான்...”

கால்பந்தும் போதையும்!

சராசரி கொலம்பிய குடிமகனின் அடையாளமே கால்பந்தும் போதையும்தான். கொலம்பியாவில் போதை மன்னர்கள் உச்சத்தை எட்டிய எண்பதுகளில் நாடு முழுக்க கால்பந்து விளையாட்டை வளர்க்க தண்ணீராய் பணத்தை இறைத்தார்கள். குறிப்பாக பாப்லோ எஸ்கோபார் தன்னுடைய வருவாயில் கணிசமான தொகையை கால்பந்து போட்டிகளை நடத்தவும், வீரர்களுக்கு பயிற்சியளிக்கவும் செலவழித்தார்.

இதன் விளைவாக தொண்ணூறுகளில் கொலம்பிய கால்பந்து அணி பெரும் எழுச்சியை எட்டியது. போதை பிசினஸும், கால்பந்து விளையாட்டும் ஒன்றோடு ஒன்றாக பின்னியிருந்தது அந்நாட்டு அரசாங்கத்துக்கு பெரும் தர்மசங்கடமாக இருந்தது. போதை மன்னர்களின் பிடியிலிருந்து இந்த விளையாட்டை காப்பாற்றுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அதென்னவோ தெரியவில்லை. உலகம் முழுக்கவே, போதை மன்னர்களின் மனம் கவர்ந்த விளையாட்டாக கால்பந்துதான் இருக்கிறது, அன்றும்,இன்றும்.