விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 32

எதிரொலி அடங்கிய பிறகும் அந்த வாசகம் ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘எந்த அர்ஜுனனோட வில்லை நாம எடுக்கப் போறோம்?’ கேட்ட கிருஷ்ணனுக்கு பதில் சொல்லாமல் ஆதியைத்தான் ஏறிட்டாள் ஐஸ்வர்யா. அணு அணுவாக அவனை ஆராயவும் செய்தாள்.

பற்களால் உதட்டைக் கடித்து கிருஷ்ணனை வெறித்தவன் மவுனமாக அகன்றான். அக்கம்பக்கத்தில் இருந்த சுவடிகளை எடுத்தான். புரட்டினான். புருவத்தை உயர்த்தினான்.எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு இன்னொன்றை அலசினான். கண் பார்வையை விட்டு அவன் அகலும் வரை இருவரும் அமைதியாக நின்றார்கள்.

‘‘சட்டுனு நீ அப்படி சொல்லியிருக்க வேண்டாம்...’’ குரல் கேட்காத தொலைவுக்கு ஆதி அகன்றதும் ஐஸ்வர்யா முணுமுணுத்தாள். ‘‘வேணும்னு சொல்லலை. மனசுல இருக்கறது வெளிப்பட்டுடுச்சு...’’ ‘‘அடக்கக் கூடாதா?’’ ‘‘ஏன் விழுங்கணும்? நாம எதுக்காக அலையறோம்னு ஆதிக்கு தெரியாதா என்ன..?’’ ‘‘எதுக்கு இப்ப கத்தற?’’ க்ருஷ்ஷின் கையைக் கிள்ளினாள்.

‘‘இங்க பார் ஐஸ்... ஆதிக்கும் நமக்குமான ஃப்ரெண்ட்ஷிப் தற்காலிகமானது. இங்கேந்து வெளியேறின பிறகு நிச்சயம் நம்மை அழிக்கத்தான் அவன் பார்ப்பான்...’’ ‘‘இங்கயே அதை செய்ய மாட்டானா?’’ ‘‘சான்ஸ் கம்மி...’’ ‘‘எதை வைச்சு சொல்ற?’’ ‘‘கோடிங்...’’ ‘‘வாட்?’’ ‘‘கோட் பிரேக்கிங் ஐஸ்... நாமதான் அதுல கில்லாடிங்கனு ஆதிக்கு தெரியும்.

எப்படி நம்மை அவன் நம்பலையோ அப்படி கார்க்கோடகரையும் அவன் நம்பத் தயாரா இல்லை. வாசுகி பாம்பு இங்கேந்து வெளியேற என்ன சொல்லிச்சு..?’’‘‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’’ ‘‘இதுக்கான விடை கார்க்கோடகருக்குத் தெரியும். ஆனா, அவர் உண்மையைத்தான் சொல்வாரானு நிச்சயமில்லை.

ஏன்னா, விஜயனின் வில்லை எடுக்கறதுதான் அவரோட குறிக்கோளும்...’’ ‘‘ம்...’’ ‘‘அவரைத் தவிர அந்த codeஐ நம்மாலதான் பிரேக் செய்ய முடியும்...’’ ‘‘ம்...’’ ‘‘ஸோ, கடைசி கட்டம் வரைக்கும் ஆதி நம்மை அழிக்க மாட்டான்...’’ ‘‘ஆனா...’’ ‘‘போதும் ஐஸ்... சுத்தி இருக்கிற சுவடிங்களை எடுத்துப் பாரு... நமக்குத் தேவையான இன்ஃபர்மேஷன் ஏதாவது கிடைக்கலாம்...’’ கிருஷ்ணன் இப்படிச் சொன்ன வேளை முகூர்த்தவேளையாக இருக்கலாம். ஏனெனில் ஏழு நிமிடங்களுக்குப் பின் ஐஸ்வர்யா துள்ளிக் குதித்தாள்.

‘‘க்ருஷ்... இங்க பாரு...’’ ‘‘என்ன..?’’ ‘‘சவுத் இந்தியாவுக்கும் பாரதப் போருக்கும் இடைல இருக்கிற தொடர்புகள் பத்தி இந்த சுவடில இருக்கு...’’ ‘‘என்னனு...’’ அருகில் வந்தான். ‘‘அப்படியே படிக்கறேன் கேளு. செந்தமிழா இருக்கும். சரியா..?’’ மெல்ல தலையை உயர்த்தி ஆதி எங்கிருக்கிறான் என்று பார்த்தாள். நூறடி தொலைவில் தரையில் அமர்ந்தபடி ஏதோவொரு சுவடியை படித்துக் கொண்டிருந்தான்.

‘‘இப்போதைக்கு அவன் வர மாட்டான். நீ படி...’’ நின்றபடியே குரலைத் தாழ்த்தி படிக்க ஆரம்பித்தாள்... ‘‘நிறைய பிராக்கெட்ஸ் இருக்கு. அதையும் சேர்த்தே வாசிக்கறேன்...’’ ‘‘சரி...’’ ‘‘மகாபாரதத்தின் உயிர்நிலையாகிய போர்க்காதையில், தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் இடையில் அரசியல் உறவுகள் இருந்தன என்பதற்கான அகச்சான்று உள்ளது...

திரவுபதியின் சுயம்வரத்துக்கு வந்திருந்தவர்களில் பாண்டிய அரசனும் ஒருவன் (மகாபாரதம்: 189; 7020), யுதிஷ்டிரர் விளக்கிக் கூறிய கிருஷ்ணனின் தெய்வத் தன்மை வாய்ந்த வெற்றிச் செயல்களில் (திவ்யானி கர்மானி) பாண்டியர் வாயில்கள் உடைக்கப்பட்டு (மகாபாரதம்; 7:11; 398:8:23:1016; இரண்டாவது குறிப்பில், ‘பின்ன கபாடே பாண்டியனாம்’ என்ற தொடர் வந்துள்ளது.

இங்கு ‘கபாடே’ என்பது உறுதியாக ‘வாயில்’ என்றுதான் பொருள்படும். ஆகவே பக்கம் 53ல் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும் ராமாயணக் ‘கபாடம்’ என்பதும் ‘வாயிலை’த்தான் குறிக்கும். தென்னிந்திய உரையாசிரியர்கள் விளக்கம் அளிப்பதுபோல் கபாடபுரத்தைக் குறிக்காது)...’’ படிப்பதை நிறுத்திவிட்டு கிருஷ்ணனை ஏறிட்டாள்.

‘‘சந்தேகம் கேட்க இது நேரமில்ல... ஆதி வந்துட்டா பிராப்ளம். முதல்ல படி...’’ தலையசைத்துவிட்டு தொடர்ந்தாள். ‘‘பின்னர் பாரதப் போரில் பாண்டியர் பக்கம் இருந்து போரிட்ட சாரங்கத்வஜன் (இது மான்கொடியன் என்பதன் மொழிபெயர்ப்பு) தந்தை கொல்லப்பட்ட நிகழ்ச்சியில், கிருஷ்ணன், பாண்டிராஜாவைத் தோற்கடித்த நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது.

கிருஷ்ணன் சோழர்களோடும் போரிட்டுள்ளான் (மகாபாரதம் 7:11.321)...’’ ‘‘இரு ஐஸ்... ஒரு நிமிஷம். ஆதிக்கும் கார்க்கோடகருக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளை யோசிச்சுப் பாரு. ரங்கம், சோழப் பேரரசுக்கு உட்பட்ட இடம். மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், பாண்டிய பேரரசுக்கு சொந்தம். ஸோ, இந்த இரண்டும் மகாபாரதத்தோட தொடர்பு உள்ளதாலதான் மாறி மாறி கார்க்கோடகர் சுத்திகிட்டு இருக்கார்.

பாயிண்ட் நோட்டட். மேல படி...’’ ‘‘யுதிஷ்டிரர் ராஜசூய வேள்வி கொண்டாடியபோது, முதல் நடவடிக்கையாக போர் அல்லது சமாதானம் மூலம் இந்தியா முழுவதும் தம் மேலாட்சி நிலையை உறுதி செய்து கொள்வது தேவைப்பட்டது. சகாதேவன் திக்விஜயமாக தென்னாடு புகுந்து சோழர்களையும், பாண்டியர்களையும், சேரர்களையும் வெற்றி கொண்டான்.

ஆந்திரர்களைப் போலவே சோழர்களும் ராஜசூயத்துக்கு வந்திருந்தனர் (மகாபாரதம்: 2:34); சோழர்களும் பாண்டியர்களும் யுதிஷ்டிரருக்கு பரிசுகள் கொண்டு வந்தனர் (மகாபாரதம்: 2:52). பாரதப் பெரும்போர் தொடங்கியபோது கிருஷ்ணனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டியராஜாவின் மகன் சாரங்கத்வஜன், படையோடு யுதிஷ்டிரனுக்கு துணை வந்தான் (மகாபாரதம்: 19:1576, 4:50:2084. பாடபேதம், இப்பெயரை சாகர்த்வஜன் எனக் குறிப்பிடுகிறது).

சேரர்களும் சோழர்களும் கூட பாண்டவர் பக்கம் நின்று போரிட்டனர் (மகாபாரதம்: 22:455:1893). பாண்டிய அரசன் துரோணர்க்கு எதிராகப் போரிட்டு அசுவத்தாமனால் கொல்லப்பட்டான் (மகாபாரதம்: 4:23:1019:8:21:82)...’’ ‘‘ஏன் நிறுத்திட்ட ஐஸ்... மேல படி...’’ ‘‘பயமா இருக்குடா...’’ ‘‘என்ன பயம்..?’’

‘‘அடுத்து வர்றது என்ன தெரியுமா..?’’ ‘‘சொன்னாதானே தெரியும்...’’ கிருஷ்ணனின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து அவன் காதுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னாள்... ‘‘அகத்தியர்...’’ ‘‘அப்புறம் அர்ஜுனன் மணந்த பாண்டிய நாட்டுப் பெண்...’’ ‘‘என்னது..?’’ ‘‘இதுக்கே ஷாக்கானா எப்படி..?’’ ‘‘வேற என்ன அணுகுண்டு இருக்கு ஐஸ்..?’’ ‘‘உலூபியோட சரித்திரம்!’’ கிருஷ்ணன் பேச்சிழந்து நின்றான். ‘‘என்னடா படிக்கவா?’’ ‘‘படி... படி...’’ வாசிக்கத் தொடங்கினாள்...

(தொடரும்) 

ஓவியம் : ஸ்யாம்