27 வருடங்களுக்குப் பின் திருச்சியின் மானத்தைக் காப்பாற்றிய ராணி!



திலீபன் புகழ்

எஸ்எம்எஸ், இ-மெயில், வாட்ஸப்- இதற்கெல்லாம் முன்னோடி புறா. அன்று காதலுக்குத் தூது போன புறாக்கள், இன்று அழகுக்காக, வருமானத்துக்காக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. அப்போது போர் அறிவிப்பைச் சொல்ல தேசம் கடந்து பயணமான புறாக்கள் இப்போது பந்தயத்துக்காக ஆயிரம் மைல்கள் பயணமாகின்றன. இந்த வகையில் திருச்சியில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையில் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை புறா பந்தயங்கள் களைகட்டுகின்றன.

“பொதுவா ஒவ்வொரு பந்தயத்தை நடத்தவும் ஒரு சங்கம் இருக்கும். பரம்பரை பரம்பரையா பந்தயங்களை நடத்தும் குடும்பங்கள் அதன் சட்ட திட்டங்களை வகுத்து, பட்டங்கள் வழங்குவது நடைமுறை. அப்படி புறா பந்தயத்துக்காக ‘திருச்சி ரேஸிங் பீஜியன்ஸ் கிளப்’ அமைச்சு 30 வருடங்களா போட்டிகளை நடத்திட்டு வர்றோம்...’’ என்கிறார் அந்த கிளப்பின் தலைவரான ஜெகதீசன். இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் புறாவை வளர்ப்பவரின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஏதோவொரு ஒரு ஊரில் இருந்து பறக்கவிடுவார்கள்.

ஏழு நாட்களுக்குள் வளர்ப்பவரின் வீட்டுக்கு அவை திரும்ப வேண்டும். எந்தப் புறா முதலில் வருகிறதோ அதையே வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். பந்தய தூரம் மிகத் தொலைவு என்பதால், கடந்த 27 வருடங்களாக திருச்சியைச் சேர்ந்த எந்தப் புறாவும் ஜெயிக்கவில்லை. ஏன், திரும்பிக் கூட வந்தது இல்லை. அப்படியே வந்தாலும் பல மாதங்கள் கழித்துதான் வந்திருக்கின்றன.



இந்நிலையில் ஏழு நாட்களில் கடக்க வேண்டிய ஆயிரம் கி.மீ தூரத்தை, ஐந்தே நாட்களில் கடந்து ‘திருச்சியின் ராணி’ என்னும் பட்டத்தை சமீபத்தில் வென்றுள்ளது ரங்கத்தைச் சேர்ந்த அருள் குமரனின் புறா. இந்த சாதனையை, திருச்சி ரேஸிங் பீஜியன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மட்டுமல்ல, திருச்சி மக்களே ஆச்சரியத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ‘‘அஞ்சு வருஷங்களா புறா ரேஸ்ல கலந்துட்டு வர்றேன். அன்னைக்கும் அப்படித்தான்.

பந்தயத்துல கலந்துகிட்ட ஐம்பது புறாக்களை வழக்கம்போல வண்டில ஏத்திக்கிட்டு திருச்சியிலிருந்து கிளம்பினாங்க. சரியா மார்ச் 12ம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள பல்ஹர்ஷாங்கிற இடத்துல இருந்து பறக்கவிட்டாங்க...’’ திருச்சி ராணியைக் கையில் அன்போடு பிடித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் அருள்குமரன். ‘‘நானோ கத்துக்குட்டி பந்தயக்காரன். பரம்பரை பரம்பரையா பந்தயத்துல கலந்துக்கிறவங்களோட புறாவோட என் புறாவும் மோதுதுன்னு நினைக்கவே பெருமையாவும் பயமாவும் இருந்துச்சு. ஆனாலும், நம்பிக்கையை கைவிடலை. பந்தயத்துல கலந்துகிட்ட எல்லோரும் தூங்காம விரல்விட்டு நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தோம்.

நம்ம புறா எப்ப வரும்னு ஒவ்வொரு நாளும் வீட்டு மாடியில தவம் கிடப்பேன். ஜெயிக்கலைனாலும் பரவாயில்ல, பத்திரமா வீட்டுக்கு வந்து சேர்ந்தா போதும்னு கடவுளை வேண்டி னேன். அஞ்சாவது நாள் தூங்கி எழுந்திரிச்சுப் பார்த்தா... என் கண்ணை என்னாலயே நம்ப முடியல. கூண்டுப் பெட்டிக்குப் பக்கத்துல உடல் இளைச்சு, ரெண்டு கால்லயும் காயமாகி... எதையோ இழந்தா மாதிரி சோர்வா நின்னுட்டு இருந்துச்சு என் செல்லக்குட்டி.



சந்தோஷத்துல வார்த்தையே வர்ல. உடனே டாக்டருக்குத் தகவல் கொடுத்தேன். அடுத்து பீஜியன்ஸ் கிளப்புக்கு செய்தியைச் சொன்னேன்...’’ சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். ‘‘இது பந்தயப்புறானு முடிவு செஞ்சதும் குஞ்சு பொரிஞ்சதுல இருந்து எஜமானருங்க மட்டுமே இரை போட்டு வளர்க்கணும். நம்ம வாய்க்குள்ள இரையை வச்சுக்கிட்டு அதோட வாயில ஊட்டி விட்டுப் பழக்கிட்டீங்கன்னு வைங்க... அந்தப் புறாக்கள் ஒரு நாள் கூட நாம இல்லாம சாப்பிடாது.

சூரியனோட திசைக்கு ஏற்பவும், நட்சத்திரங்களோட திசைக்கு ஏற்பவும் இடங்களைக் கண்டுபிடிக்கும் காந்த சக்தி புறாக்களுக்கு இயற்கையாவே இருக்கு. அதனாலதான் எங்க கொண்டுபோய் விட்டாலும் சரியா திரும்பிடுதுங்க...’’ என்கிற அருள், புறாக்களுக்குக் கொடுத்த பயிற்சி, பந்தயத்தில் புறாக்களுக்கு இருந்த ஆபத்துக்களைப் பற்றி விவரித்தார்.

‘‘ஒரு வாரக் குஞ்சாக இருக்கும்போது ஒரு வளையம் போடுவோம். அது எந்த ஏரியா புறா? யார் உரிமையாளர்? என்ற தகவல் அதுல இருக்கும். திரும்பி வர்ற புறா நம்முடையது என்பதற்கு அதுதான் அடையாளம். அப்படி பந்தயங்களுக்காகவே அஞ்சு புறாக்களைத் தேர்வு செஞ்சு பயிற்சி கொடுத்தேன். முதல்ல 5 கிலோமீட்டர், 10 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பறக்க விடுவேன். அப்புறம் 2 நாட்கள் ஓய்வு. பிறகு 30 கிலோ மீட்டர், 50 கிலோ மீட்டர்.



அதைத் தொடர்ந்து 3 நாட்கள் ஓய்வு கொடுத்து 100 கிலோ மீட்டர் வரைக்கும் பயிற்சி அளித்தேன். 100 கிலோமிட்டர் பயிற்சியை புறா கடந்துடுச்சினா அப்பறம் சுலபமா ரேசுக்கு பழக்கப்படுத்தலாம். புறாவை பறக்கவிடறதுக்கு முன்னாடி அதுக்கு வேண்டிய உணவையும் தண்ணீரையும் கொடுக்கணும். பந்தயப்புறாக்களுக்கு ஆபத்துன்னு பார்த்தா... அது வைரி எனப்படும் கழுகு வகைதான். அப்படியே புறாக்களை பிடிச்சு சாப்பிடும். கழுகுகிட்ட இருந்து தப்பிச்சாலே பாதி ஜெயிச்ச மாதிரிதான்.

அப்புறம் மகாராஷ்டிராலேந்து பறந்து வர்றப்ப வழில ஸ்ரீசைலம் மலையைக் கடக்கணும். இது கொஞ்சம் கஷ்டம். ஏன்னா அந்த இடத்தோட தட்ப வெப்ப நிலை மோசமா இருக்கும். தன்னோட வாழ்விடம் எதுனு புறாக்கள் தங்களோட மேக்னடிக் பவர் வழியாதான் கண்டுபிடிக்கும். இந்தப் பவர் அங்க குழப்பமாகும். தன்னிலை அறியவே ரொம்ப நேரம் பிடிக்கும்.



அதேபோல வயலுக்கு அடிக்கிற பூச்சி மருந்து, அதிகப்படியான வெயில், மழையும் புறாவுக்கு மறதியை உண்டாக்கும். இதையெல்லாம் கடந்து என் செல்லக்குட்டி வந்து எனக்கு பெருமை சேர்த்திருக்கு. 27 வருசத்துக்கு முன்னாடிதான் இதே மாதிரி ஒரு புறா வந்திருக்கு. அதுக்குப் பிறகு இப்பதான். பொதுவா ஆண் புறா வந்தா ‘திருச்சியின் ராஜா’னு பட்டம் கொடுப்பாங்க. இது பெண்புறா. அதனால ‘திருச்சியின் ராணி!’’’ பூரிப்புடன் புறாவை முத்தமிடுகிறார் அருள்குமரன்.          

படங்கள்: எஸ்.சுந்தர்