வடமாநில தொழிலாளர்கள்!



மறுபக்கம்

த.சக்திவேல்

‘‘பீகார் வெள்ளத்துல எங்க வீடெல்லாம் போயிடுச்சு. அப்பாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார். அம்மா கிடைச்ச வேலையை செஞ்சிட்டு இருக்காங்க. கூட பொறந்தவங்க மூணு பேரு. என்னவிட சின்னவங்க. ஊர்ல ஒரு கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தேன். அதை மூடிட்டாங்க. வேற எந்த வேலையும் கிடைக்கல. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம்.

அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல. அப்பதான் ஆர்மன் அண்ணா, மெட்ராஸ்ல வேலையிருக்குன்னு சொன்னார். இங்க வந்து நாலு மாசம் ஆச்சு. இப்ப மூணு வேளை சாப்பாடு கிடைக்குது. வீட்டுக்கும் கொஞ்சம் பணம் அனுப்ப முடியுது...’’ கஷ்டங்களை மறந்து ராஜ் இந்தியில் பேச, அதை தமிழில் அழகாக மொழிபெயர்த்துச் சொன்னார் அருகிலிருந்த ஆர்மன். இருவரும் பீகாரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் வானளவு உயர்ந்து நிற்கும் மால்கள், ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், சுருள் சுருளாக அடுக்கிக் கொண்டே போகும் மேம்பாலங்கள், வாகனங்கள் பறந்து செல்லும் தார்ச் சாலைகள், மெட்ரோ ரயில்... போன்ற மாநகரின் நவீன அடையாளங்களின் உருவாக்கத்துக்குப் பின்னால் இருப்பது ராஜ், ஆர்மன் போன்றவர்களின் கடினமான உழைப்புதான்.



‘‘இருபது லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்குள் கூலித் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா, மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். குறைந்த ஊதியத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வரப்படும் இவர்கள் ஹோட்டல், சாலை, பில்டிங் போன்ற கான்டிராக்ட் தொழில்கள் மற்றும் கல், கிரானைட் குவாரிகளில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்...’’ என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.

ஓர் இரவு வேளையில் தீப்பெட்டியைப் போல வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ராஜின் இருப்பிடத்துக்குச் சென்றிருந்தோம். ‘‘பாப்பா கெஹ்தே ஹெய்ன் படா நாம் கரேஹா... பேட்டா ஹமாரா அய்சா காம் கரேஹா...’’ பாடல் ஸ்மார்ட் போனில் இருந்து காற்றில் பரவிக் கொண்டிருந்தது. பாடலை அணைத்துவிட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் பாசத்துடன் வீட்டுக்குள் அழைத்தனர்.

மூன்று பேர் இரவு உணவுக்காக கோதுமை மாவை பிசைந்து கொண்டும், சப்பாத்திக்காக மாவை தேய்த்துக் கொண்டும், உருளைக்கிழங்கை நறுக்கிக் கொண்டும் இருந்தனர். நான்குபேர் ஹாயாக படுத்துக்கொண்டு மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். பத்துக்குப் பத்து அடியில் நான்கு பக்கமும் தகரத்தால் மறைக்கப்பட்ட அறை. அதில் ராஜுடன் சேர்த்து பத்துபேர் தங்கியிருக்கின்றனர். சிமென்ட் ஷீட்டில் மேற்கூரை, மணல் தரை, அதற்குள்ளேயே வேலை செய்வதற்கான உபகரணங்கள்.

காற்று உள்ளே வந்து போக முடியாத அளவுக்கு அடைக்கப்பட்டிருந்த அந்த அறையின் நடுவில் நைலான் கயிற்றைக் கட்டி தங்களின் துணிமணிகளை மாட்டியிருக்கின்றனர். மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சூடாக சப்பாத்தி தயாராக ஆரம்பித்தது. ‘‘நாங்க எல்லோருமே கட்டிடத் தொழிலாளிகள். இந்த வீட்டை எங்க நிறுவனமே கொடுத்திருக்கு. ஐநூறு பேருக்கு மேல இங்க இருக்கோம்.

காலையில் ஏழு மணிக்கே கிளம்பணும். பாத்ரூம் கொஞ்சமாத்தான் இருக்கு. அதனால வெட்டவெளில குளிச்சுப்போம். நாங்க ரெடியாகுறதுக்குள்ள எங்கள கூட்டிட்டுப் போக வண்டிங்க வந்திடும். காலையிலும், மத்தியானத்திலும் வேலை செய்ற இடத்துலயே சாப்பிட்டுப்போம். நைட்ல மட்டும்தான் சமைப்போம். ஞாயிற்றுக்கிழமையும் வேலையிருக்கும்.

இஷ்டம் இருந்தா போகலாம்....’’ உற்சாகமாகப் பேசுகிற ஆர்மன் ஆறு வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் இருக்கிறார். நன்றாக தமிழ் பேசுகிறார். முப்பத்தைந்து வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. வேலை... வேலை... என்று ஓடிக்கொண்டேயிருப்பதால் இவர்களின் ஒரே பொழுதுபோக்கு மொபைலில் பாடல் கேட்பதும், படம் பார்ப்பதும் மட்டும்தான். யார் அறையிலும் டிவி இல்லை.



உண்மையில் டிவியோ, வீட்டுக்குத் தேவையான மற்ற பொருட்களையோ வைப்பதற்கு அங்கே இடமில்லை. இங்கு வேலையில் மட்டுமே சுழல்கிறது வாழ்க்கை. பத்து, பதினைந்து பேர் ஒன்றாக ஒரே அறையில் சாப்பிடுவதும், அரட்டை அடிப்பதும்தான் இவர்களுக்கான ஒரே மகிழ்ச்சி. மிதமாக மழை வந்தாலும் வீட்டுக்குள் புகுந்துவிடும். வீட்டுக்கு வெளியே எல்லா இடங்களிலும் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கொசுவும், ஈக்களும் மொய்க்கிறது. இருந்தாலும் பெரிதாக எந்த நோயும் அவர்களைத் தாக்குவதில்லை என்பது ஆச்சர்யம்.

‘‘லீவ் நாள்ல வேலைக்குப் போனா டபுள் சம்பளம் கிடைக்கும். அதனால எல்லா நாளும் வேலைக்குப் போயிடுவோம். வருஷத்துக்கு பத்து நாளு லீவு கிடைக்கும். பொண்டாட்டி, புள்ளைகள பார்க்கணும்னு நினைக்கறவங்க ஊருக்குப் போயிட்டு வருவாங்க. மத்தவங்க இங்கேயேதான் இருப்பாங்க. இந்த ஊர்ல எந்த வேலையும் நிரந்தரமில்ல. கிடைச்ச வேலையைச் செய்வோம். போன மாசம் வரைக்கும் ஹோட்டல்ல வேலை செஞ்சிட்டு இருந்தேன். இப்ப பில்டிங் வேலைக்குப் போறேன்.

நாளைக்கு எந்த வேலைக்குப் போவேன்னு தெரியாது. ஆனா, அதைப் பற்றியெல்லாம் கவலை இல்ல. எங்க ஊரைவிட இந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...’’ என்கிற அப்பாஸின் முகத்தில் எப்படியாவது இங்கே காலை ஊன்றிவிட வேண்டும் என்ற உறுதி தெரிகிறது. சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்ற இந்த மக்களின் வாழ்க்கை ஒரே அச்சில் தான் சுழல்கிறது.



‘‘மாசம் எட்டாயிரம் ரூபா சம்பளம். கம்பெனியே சாப்பாடும் போடறாங்க. தங்க இடமும் கொடுத்திருக்காங்க, அதனால என்னோட செலவு போக ஆறாயிரத்தை வீட்டுக்கு அனுப்பிடுவேன்...’’ என்கிற அபூர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். ஹோட்டலின் மேலே இருக்கும் அறையிலே தங்கிக்கொள்கிறார்.

‘‘ஒரு எதிரியைப் போலத்தான் எல்லாரும் எங்களைப் பார்க்கறாங்க. பஸ்ல இருந்து எல்லா இடங்கள்லயும் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறோம். வேலை செய்ற இடத்துலயும் பெரிய மரியாதை இல்ல. ஊர்ல வேற வழி இல்லைன்னுதான் இங்க வந்திருக்கோம். கெரசின்ல இருந்து ரேஷன் அரிசி வரைக்கும் எல்லாத்தையும் அதிக விலைலதான் எங்களுக்கு விற்கிறாங்க.

நைட்ல வெளியில போனா போலீஸ் புடிச்சிட்டு போயிடுது. எங்கள நம்பி கேன் வாட்டர் கூட கொடுக்கறதில்ல. போன வருஷமெல்லாம் தீவாளிக்குக் கூட லீவ் கிடைக்கல. ஊருக்குப் போயி மூணு வருசம் ஆச்சு. கடைசியா அப்பா செத்ததுக்குப் போனது...” சிரமங்களைப் பட்டியலிட்டார் பெயரைச் சொல்ல விரும்பாத அந்த நபர்.

தட்டில் சப்பாத்தியைப் போட்டு, குருமாவை ஊற்றி ‘‘சாப்பிடுங்கள்...’’ என்று அன்புக் கட்டளையிட்டார்கள். கனத்த மனதுடன் மறுத்துவிட்டு ராஜின் அறையைவிட்டு வெளியே வந்தோம். மீண்டும் காற்றில் பரவத் தொடங்கியது - ‘பாப்பா கெஹ்தே ஹெய்ன் படா நாம் கரேஹா... பேட்டா ஹமாரா அய்சா காம் கரேஹா...’
            

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்