விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 37

‘‘வாட்? சரஸ்வதி நதி Codeஐ பிரேக் செய்யுமா..?’’ ‘‘ஏன் செய்யக் கூடாதா க்ருஷ்... Codeஐ பிரேக் செய்யற உரிமை உனக்கு மட்டும்தானா..?’’ சூழலை இதப்படுத்தும் விதமாக ஆதி இப்படி சொன்னதற்கு நல்ல பலன் கிடைத்தது. கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் மெல்ல இயல்புக்குத் திரும்பினார்கள்.

‘‘சரஸ்வதி நதியைப் பத்தி அதிகம் தெரியாது. கேப்ஸ்யூலா கொஞ்சம் சொல்லு ஆதி...’’‘‘சரியா போச்சுப் போ. க்ருஷ்... இதுவரைக்கும் நாம விஜயனோட வில்லைத் தேடி பயணம் செஞ்சதை விட தகவல்களா அறிஞ்சதுதான் அதிகம். அட்வென்ச் சரை விட டேட்டாஸ்தான் எக்கச்சக்கமா கலெக்ட் செய்திருக்கோம். எந்த ஆக்‌ஷனுக்கும் ரியாக்‌ஷன் காட்டவே இல்ல...’’ ‘‘அலுத்துக்காத ஐஸ்... புராணப் பொருளை நாம தேடறோம். வேற வழியே இல்ல.

தகவல்களை சேகரிச்சாதான் வரைபடம் வரைய முடியும். அதுக்குப் பிறகு ஆக்‌ஷன்ல இறங்கறதுதான் புத்திசாலித்தனம். இருக்கிற இடமே தெரியாம எங்கனு இறங்க...’’ ‘‘யாரோ தமிழ்நாட்லதான் அர்ஜுனனோட வில் இருக்கு... தாராவை கண்டுபிடிச்சுட்டா அந்த இடத்தை அடையலாம்னு சொன்னாங்களே...’’ கிருஷ்ணனைப் பார்த்து பழிப்புக் காட்டினாள். ‘‘இப்பவும் அதுல உறுதியாதான் இருக்கேன். சரஸ்வதி நதியைப் பத்தி தெரிஞ்சுக்கறது அதுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கலாம்.

கமான் ஷூட் ஆதி...’’ ‘‘ம்க்கும். நம்ம ரெண்டு பேரைத்தான் ஆதி ஷூட் செய்யப் போறான்... அவனுக்கு எதிரா இல்ல நாம இருக்கோம்? சரிதானே..?’’ இதற்கு ஆதி எதுவும் பதில் சொல்லவில்லை. அவன் மனதில் என்ன ஓடுகிறது என்பதையும் கிருஷ்ணனாலும் ஐஸ்வர்யாவாலும் அறிய முடியவில்லை. இமைகளை மூடித் திறந்துவிட்டு சொல்லத் தொடங்கினான். ‘‘குறுக்க பேசாம பொறுமையா கேளுங்க.

எங்க ‘Intelligent Design’ அமைப்பு சொல்றதுலேந்தே ஆரம்பிக்கறேன். இந்தியர்கள் யாருமே தங்களை ஒரே நாட்டு மக்களா நினைக்கலைனு ஓர் எண்ணம் இப்ப பரவலா இருக்கு. ஏன், உங்களுக்கும் அப்படியொரு நினைப்பு இருக்கலாம். காலனி நாடா நாம இருந்தப்ப விதைக்கப்பட்ட விதை அது. இப்ப வரைக்கும் அதுவேதான் தொடருது...’’

‘‘...’’ ‘‘‘இந்தியா பத்தி முதன் முதலா நாம தெரிஞ்சுக்க வேண்டியது ‘இந்தியா’னு ஒண்ணு இல்லைங்கறதுதான்!’ இப்படி 19ம் நூற்றாண்டு இறுதில சர் ஜான் ஸ்ட்ராச்சி சொன்னார். 50 வருஷங்களுக்கு அப்புறம் வின்ஸ்டன் சர்ச்சில் இதையே எதிரொலிச்சார்... ‘இந்தியாங்கறது நில அமைப்பை உணர்த்தற ஒரு சொல். ஆனா, நிலநடுக்கோடு மாதிரி இந்தியா ஓர் ஒருங்கிணைந்த நாடல்ல’னு.

சுதந்திரம் வாங்கின பிறகும் இந்தக் கருத்து மறையலை. ஆனா, உண்மை வேற...’’ ‘‘...’’ ‘‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளா ஒரு தொடர்ச்சி நம்ம நாட்டுல இருந்துகிட்டே இருக்கு. சிலது மறைஞ்சுடுச்சு. பலது இன்னமும் தொடருது. அதுக்கு உதாரணமா இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒண்ணு, 5:4 விகிதம். அதாவது அகலத்தை விட கால் பங்கு நீளம் அதிகமா இருக்கணும் என்கிற விதி.

ஹரப்பா நாகரீக நகரங்கள் எல்லாமே இந்த வழிமுறைலதான் கட்டப்பட்டது. குஜராத் மாநிலத்துல இருக்கிற ‘தோலவிரா’, ஹரப்பா நாகரீக காலத்துல துறைமுக நகரம். இந்த இடம், 771 மீட்டர் நீளமும் 617 மீட்டர் அகலமும் கொண்டது...’’ ‘‘...’’ ‘‘இதுக்கு ஆயிரம் வருஷங்களுக்கு பின்னாடி தோன்றின ‘ஷதபத பிராமணா’; ‘ஷல்ப்ப சூத்திரம்’ நூல்கள்ல வேத சடங்கப்ப பயன்படுத்தற ஹோம குண்டம் இந்த சைஸ்லதான் - விகிதத்துல - இருக்கணும்னு சொல்லுது.



இன்னொரு ஆயிரம் வருஷங்கள் கழிச்சு எழுதப்பட்ட வாஸ்து சாஸ்த்ர நூல்கள்லயும் இதே விகிதம் குறிப்பிடப்பட்டிருக்கு. அகலத்தை விட 1:25 பங்கு நீளம் அதிகமா மன்னரோட அரண்மனை கட்டப்படணும்னு கி.பி.6ம் நூற்றாண்டுல வராகமிஹிரர் எழுதறார். இன்னிக்கு கட்டப்படற எல்லா கட்டிடங்கள்லயும் இதே விகிதத்தைப் பார்க்கலாம்..!’’  

‘‘...’’ ‘‘இரண்டாவது பாயிண்ட்தான் ரொம்ப ரொம்ப முக்கியம். அதுதான் மாட்டுவண்டி!’’ ‘‘...’’ ‘‘என்ன பார்க்கறீங்க... ஹரப்பா நாகரீக மக்கள் மாட்டு வண்டில பயணம் செய்திருக்காங்க. அவங்க வடிவமைச்ச அதே அளவுள்ள வண்டிகளைத்தான் - ஐ மீன் நீளம் + அகலம் - இப்ப வரைக்கும் நாம தயாரிச்சுட்டு இருக்கோம்..!’’ ‘‘...’’ ‘‘இப்ப தொடர்ச்சினு நான் எதைச் சொல்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். ரைட்... சரஸ்வதி நதியைப் பத்தி கேட்டீங்க இல்லையா..? ஹரப்பா நாகரீகம், சரஸ்வதி நதிக்கரைல உருவானதுதான்!

இந்த நாகரீகம் மறைஞ்ச பிறகுதான் கங்கை சமவெளி நாகரீகம் தோன்றுது...’’ ‘‘...’’ ‘‘நிச்சயம் இது கட்டுக்கதை இல்ல. நம்பிக்கை சார்ந்ததும் இல்ல. துல்லியமான ஆதாரங்களோடதான் பேசறேன். ஆரம்பகால இந்தியாவைப் பத்தி ரெண்டு வகைல தெரிஞ்சுக்கலாம். ஒண்ணு, அகழ்வாராய்ச்சி. இன்னொண்ணு, வேதகால பழக்கவழக்கம் தொடர்பான இலக்கியம். இந்த இரண்டும் பொருந்தாம தனித்தனியாதான் இருக்கு. ஆனா...’’

‘‘...’’ ‘‘இரண்டும் குறிப்பிடற நிலவியல் செய்திகளும், காலங்களும் கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கு. அதுல முக்கியமானது சரஸ்வதி நதி. சிந்து சமவெளி நாகரீகம்னு சொல்றோம் இல்லையா... ஆக்சுவலா அது சிந்து சரஸ்வதி சமவெளி நாகரீகம்...’’ ‘‘...’’ ‘‘நான்கு வேதங்கள்ல பழமையானது ரிக் வேதம். இதுல இரும்போட பயன்பாடு பத்தி எதுவுமே சொல்லப்படலை. ஸோ, ரிக் வேதம் வெண்கல காலத்துக்குரியதுனு சொல்றாங்க. கடைசி வேதமான அதர்வணத்துலதான் இரும்பு பத்தின குறிப்புகள் வருது.

தட் மீன்ஸ்... இதுக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தையது ரிக் வேத காலம்...’’ ‘‘...’’ ‘‘அப்படிப்பட்ட பழமையான ரிக் வேதத்துல 45 சுலோகங்கள் சரஸ்வதி நதியைப் போற்றிப்பாடுது. இந்தியாவுல வேற எந்த நதிக்குமே கிடைக்காத பெருமை இது. கங்கை பத்தி இரண்டே இடங்கள்லதான் குறிப்பு இருக்கு...’’ ‘‘...’’ ‘‘நீங்க தேடிட்டு இருக்கிற... நான் தடுத்து நிறுத்தப் போற அர்ஜுனன் வில் சரஸ்வதி நதிக்கு சொந்தம்!’’

(தொடரும்)    

ஓவியம் : ஸ்யாம்