என்னால் ஒரு கமர்ஷியல் படத்தை டைரக்ட் செய்ய முடியும்னு அப்பா நம்பினார்!



நிதானமாகப் பேசுகிறார் ‘விஐபி 2’ செளந்தர்யா ரஜினிகாந்த்

நா.கதிர்வேலன்


‘‘சினிமா என் பெருங்கனவு. அப்பாவிடம் இருந்து வந்திருக்கலாம். தனுஷ் சார் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஸ்க்ரிப்ட்டில் இருந்தார். அவரே எனக்கு டைரக்ட் செய்யும் வாய்ப்பை அளித்தார். கொடுத்த பொறுப்பை எப்படி தட்டிக்கழிக்க! ஆக, ரொம்ப சந்தோஷமாக இந்தப் படத்தை செய்தேன்.

என்னுடைய உயிரையும் உணர்வையும் போட்டிருக்கேன். ரசிகர்கள் இப்போது விதவிதமான ரசனையில் இருக்காங்க. அவங்களை ஒருங்கிணைக்க இன்னும் கவனமும், அக்கறையும் வேணும். முதல்பாகம் ஹிட் அடிச்சதை அப்படியே தொடரணும். இவ்வளவு பொறுப்போட நான் செய்ததுதான் இந்தப் படம். ஃபர்ஸ்ட் காப்பியைப் பார்க்கும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கு. தமிழ் மக்கள் என் எண்ணத்தை வழிமொழியணும். அவ்வளவுதான்...’’ இதமாகப் பேசுகிறார் செளந்தர்யா ரஜினிகாந்த். அப்பாவின் நிதானமும், சூட்சுமமும் கூடி நிற்பதை உணர முடிகிறது.

முதல் பாகம் கொடுத்த வேகம், கலகலப்பு இதிலும் தொடருமா..?

எனக்கு தனுஷ் சார் எழுத்து மேல் ரொம்ப நம்பிக்கை. சாதாரண மக்களின் மனநிலைகளை அவ்வளவு அழகா பிரதிபலிப்பார். 34 படங்கள் நடிச்சவர். இந்தி சினிமாவிற்கும் போயிட்டார். இப்போ ஹாலிவுட் படம் வேறே. அவர் எந்தப் படத்திலும் சும்மா வந்திட்டுப்போற நடிகர் இல்லை. இதில் வருகிற மாதிரி மிடில் கிளாஸ் பையனாகவும் வாழ்ந்து காட்டுவார். அடுத்து ‘புதுப்பேட்டை’ மாதிரியும் செய்வார்.

சாத்தியமே இல்லாத ஃபைன் ட்யூன் பண்ணின நடிப்பு. எங்க யூனிட்டிற்கே பார்க்க  பார்க்க ஆசையா இருந்த நடிப்பு. படு லோக்கல் வாழ்க்கையையும், ஒரு ஹைகிளாஸ் லைஃபையும் அவர் கடந்து போற விதம், சொல்லிக் கொடுத்தால் மட்டும் வராது. நீங்கள் கதையின் நுட்பங்களை மனதில் கொண்டு வந்தால் தவிர இதெல்லாம் சாத்தியமே இல்லை.



அவரே எழுதின கதை வேறயா, இதன் நீள அகலங்கள், எந்த அளவுக்கு எமோஷன் கன்ட்ரோல் பண்ணணும் என்பது வரைக்கும் அவருக்கு அத்துப்படி. போகிற போக்கில் கிண்டலாக சொல்லிவிட்டுப் போகிற வரியும், நடிப்பின் பாவனையும் அசரடிக்கும். அவருக்கே இது முக்கியமான படம்தான்.

முதல் பாகத்தில தனுஷ் அவ்வளவு இயல்பில் இருப்பார். இதில் அவரோட தொடர்ச்சி என்ன?
ஒரு மிடில் க்ளாஸ் பையனோட சாமர்த்தியம், அவனோட ஆசைகள், குடும்ப சூழ்நிலை, வேலைன்னு வந்திட்டால் எதிர்கொள்கிற சூழ்நிலைன்னு முதல் பகுதி இருந்தது. இதில் ரகுவரன் கேரக்டரின் அடுத்த கட்டம். காதலி மனைவி ஆகி, அவருடைய அடுத்தடுத்த இடம்னு போயிருக்கு. இந்தப் படம் சரியாக அமைய நல்ல கதை அம்சங்கள் கிடைத்தது. சில இடங்கள் மாறுதலாகும். ஆனால், எந்தக் கட்டமும் சுவாரஸ்யத்திற்கு குறை வைக்காது.

படம் நல்லா வரணும்னு நினைச்சதில் எனக்கிருந்த ஆசைக்கு, அவருடைய நினைப்பு குறைஞ்சதில்லை. அவரும், கஜோலும் எதிர்கொள்கிற இடங்கள் அனலும், சூடும் பறக்கும். அப்படிப் பார்க்கும்போது பெண்களை குறைவாக மதிப்பிடும் காட்சிகளோ, கேலி செய்யும் இடமோ இருக்காது. அதில் ஆரம்பம் முதற்கொண்டு தெளிவாக இருந்திருக்கேன்.

இது எல்லோருக்குமான படம். எனக்கு என்னன்னா தனுஷ், கஜோல், சமுத்திரக்கனி அண்ணா, விவேக் சார்னு எல்லோருமே சீனியர்ஸ். அவர்கள் அனுபவத்தில் சிறந்து விளங்குபவர்கள். அவங்களுக்கு சீன் சொல்லிட்டா என்ன செய்யணும்னு தெரியும். ஆனாலும் அவர்கள் டைரக்டர் சொல்லுக்காக காத்திருந்தார்கள். அதெல்லாம் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். என்னை அவர்களின் அனுபவத்தோடு ஒப்பிடும்போது குறைந்திருந்தாலும் என்னை படத்தின் டைரக்டர் என்று மதித்தார்கள். எனக்கு படத்தில் இருந்த அக்கறையை அவர்களும் பகிர்ந்தார்கள்.

படத்திற்குள் கஜோலைக் கொண்டு வந்தது எப்படி?

இந்த வசுந்தரா கேரக்டர் கஷ்டமான ரோல். ஒரு பெரிய அனுபவசாலி தவிர யாரும் செய்ய முடியாது. தனுஷ் சார் எழுதும்போேத நினைவுக்கு வந்தது கஜோல்தான். சாத்தியமான்னு தெரிவதற்கு முன்னாடியே கண்ணில் வந்து நின்னதும் அவரேதான். அவர் எங்கமேலே வச்சிருந்த அன்பிற்கும் மேலே, அவங்களுக்கு கதை பிடிச்சிருந்தது. அவர்கள் படத்தின் எமோஷன், ஃபீலிங்கிற்காக பாடுபட்டது அதிகம்.

ஒவ்வொரு தடவையும் வசனங்களுக்கான அர்த்தம் கேட்டு, புரிந்து செய்ததை அவ்வளவு ரசிச்சோம். ‘கட்’ சொல்ல மறந்து நின்ன இடங்கள் அனேகம். அவங்க ஸ்பாட்டுக்கு வந்திட்டால் அவங்க தினுசே வேற மாதிரி. முழுக் கவனமும் நடிப்பில்தான். அவர் மக்கள் மனதிலும் நிற்பார். தனுஷ், கஜோல் இரண்டு பேருக்கும் கருத்து மோதல் வருகிற இடங்கள் படத்திற்கான ைஹலைட்ஸ்.

அமலாபால்..?

இதில் தனுஷ் சாருக்கு மனைவியாக வர்றாங்க. அழகுப் பார்வை, அளவான புன்னகையுமா இரண்டு பேருமே ஆன் ஸ்கிரீனில் அருமையான ஜோடி. முதல் பாகத்தின் பொருத்தத்தை இதிலும் பார்க்கலாம். படத்தில் ஒரு அருமையான வாழ்க்கையை ஈஸியாக வாழ்ந்திட்டு போயிருக்காங்க.



படப்பிடிப்புக்கு ரஜினி வந்திருந்தாரே...

ஆமாம். அதுவே அபூர்வம்தான். எனக்கு அவர் வருவார்னு தெரியாது. முன்னாடி ‘சும்மா ஒரு தடவை வந்திட்டுப் போங்களே அப்பா’னு சொல்லிட்டு இருப்பேன். சிரிச்சுக்கிட்டு போயிடுவார். நானும் அவர் போக்கில் விட்டுட்டேன். ஆனால், வந்தார். நான் அவர் வந்ததை முதலில் கவனிக்கலை. வேலையில் பிஸியா இருந்தேன். அதைப் பார்த்திட்டு அப்பா ரொம்ப ஹேப்பி. என்னால் ஒரு கமர்ஷியல் படத்தையும் டைரக்ட் செய்ய முடியும்னு அவருக்கு நம்பிக்கை இருந்தது. தயாரிப்பாளரின் சிரமத்தை புரிஞ்சுக்கணும்னு அவர் எப்பவும் சொல்றதை நானும் புரிந்துகொண்டேன்.

முதலில் இருந்த அனிருத் இல்லை...

அனிருத் மிகச் சிறந்த மியூசிக் டைரக்டர். சந்தேகமே இல்லை. இதில் கொஞ்சம் வித்தியாசமாக ஷான் ரோல்டனை கையாள விரும்பினோம். எங்க நம்பிக்கைக்கு உயிர் கொடுத்திருக்கார். நிச்சயமாக வேற திசையில், தினுசில் பாடல்களுக்கு மெனக்கெடுகிறார். எங்கோ இதுமாதிரி கேட்டு இருக்கோம்னு ஒரு பாடலும் நினைக்க வைக்காது. ரொம்ப நம்பகமான மியூசிக் டைரக்டரா அவர் இருப்பது அதனாலதான்.

‘இறைவனாய் தந்த இறைவியே’ன்னு வருகிற பாட்டு, மறக்கவே முடியாத பாடலாக இருக்கும். ‘உச்சத்துல’ன்னு ஆரம்பிக்கிற பாட்டு பொண்டாட்டியை ஸ்வீட்டா திட்டுற பாட்டு. ரொம்ப ரசனையான பாட்டு. இன்னும் பின்னணி இசைக்கு செமத்தியா அவருக்கு வேலை
கொடுத்ததை அருமையா செய்திருக்காரு.

அடுத்த திட்டம்...

அஜித்தை வைத்து இயக்கணும் ஆசை ஓடிக்கிட்டே இருக்கு. பார்க்கலாம். தொடர்ந்து படங்கள் செய்யணும்னு கனவு இருக்கு. எல்லாம் கூடி வரும்போது சொல்றேன். இப்ப கனவுகள் கனவுகளாகவே இருக்கட்டுமே!