இனி ரேஷன் கடைகள் இருக்குமா?



- டி.ரஞ்சித்

இந்தியாவில் தினமும் இருபது கோடிக்கும் அதிகமான பேர் இரவு வேளையில் உணவு கிடைக்காமல் பட்டினியோடு தூங்குகிறார்கள். இந்த மக்களின் மற்ற இரண்டு வேளை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது ரேஷன் கடையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள்தான். இந்நிலையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தமிழக பொது விநியோகத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் முக்கிய நடவடிக்கையாக ‘‘ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு இனிமேல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது...’’ என்ற அறிவிப்பு வெளியாகி தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் அ.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ‘‘2013ம் வருட மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ்தான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. பி.ஜே.பி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், அடுத்த ஆண்டே ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி., இந்த சட்டத்தை அமல்படுத்த தீவிரமாக முயற்சித்தது.

முதல் கட்டமாக 11 மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள். இந்த சட்டத்தின் கீழ்வரும் ரேஷன் கடைகளை மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் உணவுப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைத்தது. இதன் காரணமாகத்தான் தமிழகத்திலும் இரண்டு சிலிண்டர் இருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய் இல்லை, வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு அரிசி இல்லை. ஆனால், சர்க்கரை கூடுதலாக வழங்கப்பட்டது.

கடந்த வருடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில், அதாவது நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. அமல்படுத்தவும் தொடங்கியிருக்கிறது...’’ என்ற கிருஷ்ணமூர்த்தி ‘‘அமல்படுத்தத் தொடங்கியபின் தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையானது தமிழக மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்...’’ என்றும் எச்சரிக்கிறார்.

‘‘உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்காக பி.ஜே.பி. அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் ரேஷன் கடைகளைக் கட்டுப்படுத்துவற்கான பல நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன. இதன்படி ரேஷனுக்காக உணவுப் பொருட்களை வாங்கி சேமிக்க வேண்டியதில்லை. விவசாயிகளிடம் வாங்கும் உணவுப் பொருட்களின் விலைக்கு கூடுதல் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டியதில்லை.

இதனால்தான் அரிசி, பருப்பு, உளுந்து தட்டுப்பாடும், சர்க்கரைக்கு மானியம் இல்லை என்ற நிலையும் ஏற்பட்டது. ஏற்கனவே அரசுக்கு வெளிச் சந்தைகளைவிட குறைவான விலைக்கு உணவுப் பொருட்களை வழங்கி வந்த விவசாயிகள் இந்த விலை குறைப்பால் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். இதனால் விவசாய உற்பத்தி குறைந்து பொருட்கள் கிடைப்பது அரிதானது.

ரேஷனிலும் பொருட்கள் தட்டுப்பாடு நிலவியது. அரசு இதை பெரிதாக கண்டுகொள்ளாமல், ரேஷன் கடைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு செயலாகவே இதைப் பார்த்தது...’’ என்ற கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தில் இது என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் விளக்கினார். ‘‘ஏற்கனவே வறுமைக்கோட்டுக்குக் கீழே, வறுமைக்கோட்டுக்கு மேலே என பச்சை கார்டு, வெள்ளை கார்டு என இரண்டு வகையான பிரிவுகள் மட்டுமே இருந்த நிலையில், இந்தப் பயனாளிகளை மீண்டும் எப்படி பிரித்து, இதிலிருந்து விலக்குவது என அரசு யோசித்தது.

இதன் விளைவாகத்தான் ஸ்மார்ட் கார்டு என்ற ஒரு விஷயத்தைக் கொண்டுவர தமிழக அரசு முயற்சித்தது. இதன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்திடமும் ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு வீட்டில் டிவி இருக்கிறதா? டூ வீலர் இருக்கிறதா? வருமானம் எவ்வளவு? போன்ற தகவல்கள் பெறப்பட்டன.

தமிழகத்தில் இருந்த 1,96,66,816 கார்டுகளில் 99,34,328 கார்டுகள் முன்னுரிமை கார்டுகள் எனவும், 94,07,967 கார்டுகள் முன்னுரிமையற்ற கார்டுகள் எனவும் கணக்கிடப்பட்டது. இதில் முன்னுரிமையற்ற கார்டுகளை ரேஷனில் இருந்து நீக்குவதற்காகத்தான் ஸ்மார்ட் கார்டு என்பது அண்மையில் அரசு வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிகிறது.

மட்டுமல்ல, வருமான வரி, தொழில் வரி செலுத்துபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள், கார், லாரி, ஃபிரிட்ஜ் வைத்திருப்பவர்கள், மூன்று அறைகள் கொண்ட வீடு உள்ளோர், பதிவு செய்த வணிக நிறுவனத்தை நடத்துவோர், ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளோர் போன்றவர்களுக்கு இனி ரேஷன் கிடையாது என அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது முன்னுரிமை இல்லாதவர்கள் மட்டுமல்ல... முன்னுரிமையுள்ளவர்களும் இந்தப் பட்டியலுக்குள் வந்துவிடுவார்கள் போல இருக்கிறது...’’ என்றவர் இந்த திட்டத்துக்குள் இருக்கும் அரசின் நோக்கங்களையும் சொன்னார். ‘‘மக்களை சந்தையில் பொருட்களை வாங்க நிர்ப்பந்திப்பது தான் அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதற்காகத்தான் உலக வர்த்தக அமைப்பின் சட்டங்களில் இந்தியா கையெழுத்து போட்டிருக்கிறது.

இந்த உலக வர்த்தக அமைப்பு சட்ட விதிகள்தான் உணவுப் பாதுகாப்பு சட்டம் மூலம் ரேஷன் கடைகளைக் கட்டுப்படுத்தும் சட்டமாக உருவெடுத்திருக்கிறது. ரேஷன் கடைகள் இருக்கும் வரையில் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் இந்திய சந்தைக்குள் முழுமையாக ஊடுருவ முடியாது. ரேஷன் கடை ஒழிந்தால் மட்டுமே பன்னாட்டுப் பொருட்களின் சந்தை களைகட்டும்.

ரேஷனில் பொருட்கள் இல்லை என்றால் சந்தையில் பொருட்கள் விலை உயரும் என்பதுதான் பொருளாதார விதி. ரேஷன் கடைகளை மானிய விலையில் நடத்த தமிழக அரசிடம் நிதி இல்லை என ஒரு சார்பாக சொன்னாலும் மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு தமிழக அரசு பணிந்திருப்பது விரைவில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

பி.ஜே.பி.யையும் தமிழக அரசையும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர்கள் ரேஷன் கடையை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள்தான். அப்படியிருக்க, அவர்களது வாழ்க்கையையே நிலைகுலைக்க ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள். நிச்சயம் இந்தப் போக்கு ஆட்சியாளர்களுக்கே பாதகமாக அமையும்...’’ என எச்சரிக்கையோடு முடித்தார்.

அ.கிருஷ்ணமூர்த்தி.