ஹீரோ!



அலோமின் சக்சஸ் ஸ்டோரி

-த.சக்திவேல்

இருள் பரவிக்கிடக்கும் நள்ளிரவு. பங்களாதேஷின் போக்ரா நகரம். பகல் முழுவதும் நடை பாதைகளில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை விற்றுவிட்டு இரவில் பாலத்துக்கு அடியில் படுத்துறங்கும் விளிம்புநிலை மக்களின் கூட்டம். அப்போதுதான் நெஞ்சை அறுக்கிற அந்தக்காட்சி அரங்கேறியது. பிறந்து சில மணிநேரங்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தையைக் கையில் ஏந்தியபடி என்ன செய்வதென்று தெரியாமல் இருலியா கிராமத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் அழுதுகொண்டிருந்தனர்.

வாங்கிய கடனை அடைக்கச் சொல்லி கடன் கொடுத்தவர்கள் நாலாப்பக்கமும் வலைவீசி அவர்களைத் தேடி வருகின்றனர். ‘நமக்கெல்லாம் குழந்தை ஒரு கேடா?’ நொந்தபடி அருகிலிருக்கும் குப்பைத்தொட்டியில் வீச முயன்றனர். மனம் அனுமதிக்கவில்லை. முத்தமிட்டபடி குழந்தையுடன் வீட்டுக்கே திரும்பினர்.

முப்பது வருடங்கள் கழித்து அந்தக் குழந்தை இணைய உலகை கலக்கப் போகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆம்; ஐம்பது லட்சம் பார்வையாளர்களுடன் யூ டியூப் சேனல், பத்தாயிரம் சப்ஸ்கிரைபர்ஸ், ஃபேஸ்புக்கில் இரண்டு லட்சம் ஃபாளோயர்ஸ்... என இணைய உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் அலோம்தான் அந்தக் குழந்தை.

கடந்த டிசம்பரில் சல்மான்கான் பெயரை விட அதிகளவில் நெட்டிசன்களால் தேடப்பட்ட பெயர் அலோம்தான். இந்த நிலையை அவ்வளவு சுலபத்தில் அலோம் அடையவில்லை. குப்பைத் தொட்டியில் வீசாமல் வீட்டுக்கு குழந்தையை எடுத்துச் சென்ற பெற்றோர், சில நாட்களிலேயே ரசாக் என்பவரிடம் அலோமை ஒப்படைத்துவிட்டனர். ரசாக்கும் வறுமையால் வாடுபவர்தான். இருந்தாலும் குழந்தையை வளர்க்க ஆரம்பித்தார்.

ஐந்து வயது வரை உடுக்கத் துணியின்றி நிர்வாணமாக வளர்ந்த அலோமின் கனவு, நடிகராக வேண்டும் என்பது. 7ம் வகுப்புக்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை. வளர்ப்புத் தந்தையைக் காப்பாற்றுவதற்காக திரைப்பட சிடி-களை விற்பனை செய்யும் கடையைத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தி, பெங்காலி திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தார்.

வறுமை ஒருபக்கம், குடும்பப் பொறுப்பு மறுபக்கம். இரண்டுக்கும் இடையில் தன் நடிகனாகும் கனவை அவர் பொத்திப் பொத்தி பாதுகாத்தார். சிடி பிசினஸ் வழியே சேர்ந்த பணத்தை வைத்து, தான் பிறந்த இருலியா கிராமத்தில் கேபிள் டிவி கனெக்‌ஷன் பிசினஸை தொடங்கினார். மகத்தான திருப்புமுனை இதன் பிறகே நிகழத் தொடங்கியது.

வாடகைக்கு கேமரா எடுத்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் நடிப்பை பதிவு செய்தார். போட்டுப் பார்த்தபோது அவருக்கே சிரிப்பு வந்தது. இதே மகிழ்ச்சி பார்க்கும் மக்களுக்கும் ஏற்படும் என உள்ளுணர்வு சொன்னது. தயக்கத்தை உதறி ஒரு நாள் அந்த வீடியோவில் ஒன்றை கேபிள் டிவியில் ஒளிபரப்பினார். எதிர்பார்த்தது போலவே பார்த்தவர்கள் வயிறு குலுங்கச் சிரித்தார்கள்.

பார்வையாளரில் ஒருவன் அந்த வீடியோவை மொபைலில் பதிவு செய்து யூ டியூப்பில் ஏற்றினான். அவ்வளவுதான். ஓவர்நைட்டில் அலோம் உலகப் பிரபலமானார். தனது வீடியோவுக்கு இணைய தளங்களில் கிடைத்த வரவேற்பு அவரைத் திக்கு முக்காட வைத்தது. புகழ்பெற்ற இந்தி, பெங்காலி பாடல்களில், தானே நடித்து, நடனமாடி மியூசிக் ஆல்பமாக அதை உருவாக்கி யூ டியூப்பில் பதிவேற்றினார்.

இப்போது மியூசிக் வீடியோ, காமெடி, குறும்படம் என ஐந்நூறுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் அலோம் நடிப்பில் யூ டியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. ‘‘அழகான பெண்களுடன் திரையில் தோன்றும் என்னைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்களே... அதுதான் எனக்குக் கிடைத்த வெற்றி...’’ என்று சொல்லும் அலோமை பெங்காலி படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. கண்ட கனவும் அதை நன வாக்க கிடைத்த வாய்ப்பை அவர் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டதுமே இந்த வெற்றிக்குக் காரணம்!