ஜீரோ டூ சிக்ஸர்!



கிரிக்கெட்டில் பெண்கள் சாதித்த கதை

- ச.அன்பரசு

கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள் மொத்த தேசமும் மோடியை மறந்தது; அமைச்சர்களின் காமெடிகள்; ஆளுங்கட்சிகளின் அட்ரா சிட்டிகள் அனைத்தையும் மறந்தது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் பெண்கள் கிரிக்கெட்டின் ஃபைனல் மேட்ச்சைக் காண, டிவி முன் நகம் கடித்து நாடே தவம் கிடந்தது.

கிட்டத்தட்ட ஜெயித்துவிடும் மேட்ச்தான். எல்லோரும் ஒரு கோலாகலத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்க, எதிர்பாராமல் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. சேசிங்கில் நம் பெண்கள் அணி கில்லிதான் என்றாலும் அன்று பிரஷரைத் தாங்க முடியாமல் தள்ளாடித் தோற்றார்கள். ஆனாலும் பிரதமர் முதல் சச்சின், சேவாக் போன்ற சாம்பியன்கள் வரை இந்திய கிரிக்கெட்டின் மகளிர் அணியை வாழ்த்த ஆரம்பித்தனர்.

ஆண்கள் கிரிக்கெட் போல அல்ல பெண்கள் கிரிக்கெட். ஆண்கள் கிரிக்கெட்டில் உள்ள லைம்லைட் வெளிச்சமும் கோடிகளில் புழங்கும் விளம்பர வருமானமும் ஸ்பான்சர்ஷிப்பும் இதில் கிடையவே கிடையாது. அதனால், இதில் ஒரு சிறு வெற்றி பெற்றால்கூட அது மிகப்பெரிய விஷயம்தான். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்த நிலையை அடைய கடந்து வந்த பாதைகள் கரடுமுரடானவை.

சந்தித்த வலியும் வேதனையும் வார்த்தையில் சொல்லவியலாதவை. கடந்த மார்ச் 8 அன்று பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் சாதனையாளர்களுக்கான விருதுகளை வழங்கியது. அதில் இந்திய பெண்கள் அணி, டெஸ்ட்டில் முதல் வெற்றி பெறக் காரணமாக இருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சாந்தா ரங்கசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் ரூ.25 லட்சம் தொகையும் அளித்து கவுரவிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட்வாரியத்துடன் பெண்கள் கிரிக்கெட் அசோசியேஷன் (WCAI) இணைந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இப்படியான அங்கீகாரம்கூட பெண் வீராங்கனை களுக்குக் கிடைக்கிறது. இதில் சாந்தா பேசிய பேச்சுதான் ஹைலைட். ‘‘ரயிலில் செகண்ட் கிளாஸ் பெட்டியில் பயணித்து, சுத்தமற்ற அறைகளில் தங்கி, கிரிக்கெட்டை ஆர்வமுடன் விளையாடியதற்கு இன்று வரையிலும் சம்பளம்கூட முறையாகக் கிடைக்கவில்லை...’’ ஆற்றாமையோடு சாந்தா பேச, அரங்கமே கப்சிப்பென இருந்தது.

இன்று பெண்கள் கிரிக்கெட்டுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச அங்கீகாரம், வசதிகள் ஆகியவற்றுக்குக்கூட சாந்தா, டயானா, போன்ற முன்னாள் வீராங்கனைகளின் அர்ப்பணிப்பான உழைப்புதான் காரணம்.

கிரிக்கெட்டின் முதல்படி!

1954ம் ஆண்டு பெங்களூருவில் 7 சகோதரிகளுடன் பிறந்தவர் சாந்தா. அவரின் 12 வயதிலேயே தந்தை ரங்கசாமி இறந்துவிட்டார். தாயின் பரா
மரிப்பில் வளர்ந்தவர். தன் வீட்டின் பின்புறம் டென்னிஸ் பந்தில் ஜாலியாக விளையாடத் தொடங்கிய கிரிக்கெட் ஆர்வம் மனதில் தீயாய் பற்ற, 1973ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற தேசிய போட்டிக்குத் தேர்வாகும் நிலைக்கு உயர்த்தியது.

லக்னோவைச் சேர்ந்த மஹிந்திரகுமார் என்ற விளையாட்டு ஆர்வலரின் முயற்சியால் பெண்கள் கிரிக்கெட் அசோசியேஷன் (WCIA) உருவானது. உலகப் பெண்கள் கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற மூன்று ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் நடந்த டெஸ்ட்டில் இந்தியா, மாஸ் வெற்றிபெற்றது. அதில் சாந்தா 381 ரன்கள் விளாசியதற்குப் பரிசாக, இந்திய அரசு அர்ஜுனா விருதை அவருக்கு வழங்கியது.

1978ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் நடந்த பெண்கள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது. ‘‘அந்தப் போட்டியில் நாங்கள் பின்பற்ற எங்களுக்கு எந்த ரோல்மாடலும் இல்லை. மக்களுக்கு எங்கள் மீதிருந்த ஒரே எதிர்பார்ப்பு, நாங்கள் ஸ்கர்ட் அல்லது டிரவுசர் என இரண்டில் எதை அணிந்து விளையாடுவோம் என்பது மட்டுமே!’’ ஆற்றாமையோடு பேசும் சுபாங்கி குல்கர்னி, 1976ம் ஆண்டு தன் 17 வயதில் தேசிய அணிக்குத் தேர்வாகி மேற்கிந்தியத் தீவுகள் அணியோடு விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்த லெக் ஸ்பின்னர்.

பணமும் இல்லை பர்மிஷனும் இல்லை! 

அன்றைய மும்பையின் முதல் கிரிக்கெட் கிளப்பான அல்பீஸில் விளையாடிக்கொண்டிருந்த பந்து வீச்சாளரான டயானா எடுல்ஜி, 1978ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். ‘‘1974ம் ஆண்டு விளையாடத் தொடங்கியபோது எங்களுக்கு கிரிக்கெட் தவிர்த்து வேறு வேலை இல்லை. மேட்ச்சுகள் விளையாட மும்பை டூ பாட்டியாலா வரை பஸ்சில் சென்று வரும் கஷ்டத்தோடு, அதற்கான காசையும் நாங்களேதான் கொடுத்து விளையாடி வந்தோம்...’’ என்கிறார் டயானா.

1982ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்குச் செல்ல இந்திய அணிக்கு ரூ.10 ஆயிரம் தேவை என்ற நிலையில் இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளிவந்ததும் அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் ஏ.ஆர்.அந்துலே உதவியிருக்கிறார். 1988ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பைக்கும் இதே நிலைதான். நிதியும், அனுமதியும் முறையாகக் கிடைத்தபோது போட்டியிடுவதற்கான காலம் முடிந்துபோயிருந்தது. பெண்கள் கிரிக்கெட் மீது அரசுக்கு இருந்த அக்கறைக்கு இது ஒரு சாட்சி.

2003ம் ஆண்டு முன்னாள் கேப்டனான சுபாங்கி பெண்கள் கிரிக்கெட் அசோசியேஷனில் செயலாளரான பின்புதான் பெண்கள் அணிக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கத் தொடங்கின. உலகக் கோப்பையில் ஃபைனலை கனவாக நினைத்திருந்த இந்திய அணி, 2005ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய தன்னம்பிக்கைக்கு காரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பும், அவர்கள் அளித்த கூடுதல் உடற்பயிற்சி, உளவியல் பயிற்சிகளுமே. 

2006ம் ஆண்டு ICCயின் பரிந்துரையால் இந்திய கிரிக்கெட் வாரியம் பெண்கள் கிரிக்கெட் அசோசியேஷனை தன்னோடு இணைத்துக்கொண்டது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. ‘‘முன்னாள் கிரிக்கெட் வீரரான டிராவிட் புதிய வீரர்களை அடையாளம் கண்டு அடுத்த தலைமுறை வீரர்களை ரெடி செய்வதுபோல பெண் வீராங்கனைகளையும் உருவாக்குவதுதான் எங்கள் பிளான்...’’ உற்சாகமாகச் சொல்கிறார் டயானா.

‘‘அரசு, புதிய வீராங்கனை களுக்கு வேலைவாய்ப்பு முதலியவற்றை அதிகம் வழங்கி ஈர்க்க வேண்டும். இன்று அரசு அமைப்புகளான ஏர் இந்தியா, ரயில்வே ஆகிய நிறுவனங்கள் மட்டுமே பெண் கிரிக்கெட் வீரர்களுக்குப் பணிவாய்ப்பு தருகின்றன. வெற்றுப் பாராட்டுகள், நிகழ்ச்சிகள், கிரிக்கெட்டில் பெண்களின் பங்கை உயர்த்தப் போதாது!’’ என கள எதார்த்தம் பேசுகிறார் கிரிக்கெட் வீராங்கனையான பிரணாய் சன்கிலேச்சா.

‘‘2005ம் ஆண்டு ஃபைனலில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு, 2017ம் ஆண்டில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடமும் வீழ்ந்துள்ளது என்பதற்கான ஒரே காரணம், பெண் வீரர்கள், பிரஷரான சூழலை சமாளிக்கத் தடுமாறுவதுதான். பெண் வீரர்களுக்குத் தேவையான வசதிகளை உடனே செய்துதரும் அர்ப்பணிப்பான மனிதர்களை நிர்வாகக்குழுவில் அமர்த்துவதே இன்றைய தேவை!’’ நறுக்கென பேசுகிறார் முன்னாள் ஆடிட்டர் ஜெனரலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினருமான வினோத்ராய்.    

மிராக்கிள் மித்தாலி ராஜ்!

ஆந்திராவின் செகந்திராபாத்திலுள்ள கனாச்சிகுடாவில் வசிக்கும் இந்திய அணியின் கேப்டன் மித்தாலி, ஒருநாள் போட்டியில் நம்பர் ஒன் ரன் மெஷின். மித்தாலிக்கு சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சியளித்த அவரது தந்தை துரைராஜ், ஏர்ஃபோர்ஸில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சகோதரர் மிதுனுக்கு அளித்த கிரிக்கெட் பயிற்சி, மித்தாலியையும் ஈர்க்க, பரதநாட்டியத்தை கைவிட்டு கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்தார்.

10வது படிக்கும்போதே தேசிய அணிக்கு செலக்ட் ஆன பெருமையுடையவர் மித்தாலி. ரயில்வேயில் 18 வயதில் வேலைக்குச் சேர்ந்தவருக்கு இன்று 34 வயது. 2021ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட மாட்டேன் என அறிவித்து விட்ட மித்தாலி, பெண்களுக்கு அட்டகாச இன்ஸ்பிரேஷன்!

டாப் 5 வீராங்கனைகள்


மித்தாலி ராஜ் - ரன்கள் - 409 (100 - 1, 50 - 3) அதிகபட்சம் 109.
பூனம் ராவுத் - ரன்கள் - 381 (100 - 1, 50 - 2) அதிகபட்சம் 106.
ஹர்மன்ப்ரீத் கவுர் - ரன்கள் - 359 (100 - 1, 50 - 2) அதிகபட்சம் - 171.
தீப்தி சர்மா - விக்கெட்டுகள் - 12 (எகனாமி 4.70 பெஸ்ட் 3/47).
ஜூலன் கோஸ்வாமி - விக்கெட்டுகள் - 10 (எகானமி - 4.14 பெஸ்ட் 3/23).
(ICC உலக கோப்பை 2017)

சம்பளம் எவ்வளவு?


1 - 9 டெஸ்ட்டுகள் - ரூ.15 லட்சம் (3 ஒருநாள் போட்டிகள், 1 டெஸ்ட்டுக்கு சமம்).
10 - 24 டெஸ்ட்டுகள் - ரூ.25 லட்சம்.
25 - 49 டெஸ்ட்டுகள் - ரூ.30 லட்சம்

பென்ஷன்

1 - 9 போட்டிகள் (2003 - 2004க்கு முன்) - ரூ.15 ஆயிரம் (மாதாமாதம்).
10 டெஸ்ட்டுகளுக்கு மேல் - ரூ.22 ஆயிரம்.
(indianexpress.com)