கும்ப லக்னம் - சனி - செவ்வாய் சேர்க்கை தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் - 105
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
எரிமலையிலிருந்து உருகி வழியும் லாவாக்கள் சில இடங்களில் கடலுக்குள் புகுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்போது அந்த நீருக்குள்ளும் நெருப்பு கனன்று பந்துபோல சுருளுவதை கவனித்திருக்கிறீர்களா? அந்த அமைப்புதான் செவ்வாயும், சனியும். சாத்வீகமான ஒரு முரட்டுத்தனம் இவர்களுடன் பிறந்தது என்றால் அது மிகையில்லை.
 இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் எப்படி வேண்டுமானாலும், எந்த முடிவை வேண்டுமானாலும் எடுப்பார்கள். உள்மனம் எப்போதும் இவர்களுக்குள் உறங்காது. எனவே, எப்போதுமே விழிப்பில் இருப்பார்கள். கால் வயிறு கஞ்சி குடித்தாலும் கௌரவமாக இருக்க நினைப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் ரகசிய ஆலோசனை, கூட்டங்கள் கூட்டுவதில் கில்லாடிகள். எத்தனை கோபப்பட்டாலும் ஐந்து நிமிடங்களில் ஒரு பரிவுணர்வு உங்களைச் சூழ்ந்து கொள்ளும்.
கிடைக்கும் பணத்தை பகிர்ந்தளிக்கும் பாதச் சனியைப் போன்றவர்கள் இவர்கள். காரணம், அறியாத வயதிலேயே அனுபவ ஞானத்தால் புடம்போடப் பட்டிருப்பார்கள். மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதி பதியான சனியும் செவ்வாயும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? கும்ப லக்னத்திலேயே - அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும் செவ்வாயும் இருந்தால் கோபமாகப் பேசுதல், மனதில் பட்டதை மறைக்காமல் பேசுதல் போன்றவை இவர்களின் இயல்பான குணங்கள்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளாமல், காற்றடிக்கும் காலத்தில் மாவு விற்கச் செல்பவர்கள் இவர்கள்தான். சிடுசிடுப்பும், சோம்பலும் மிக்கவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒன்றை பறிகொடுத்தாற்போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். சைபர் க்ரைம் போன்ற காவல் துறையைச் சார்ந்த சில துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் பெரிதளவிலான விஷயங்களை வெளிக் கொணர்வார்கள். கொஞ்சம் இரட்டை வேடம் போடுபவர்களாகவும் இருப்பார்கள்.
இரண்டாம் இடமான மீனத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் மிகப் பழமையான தொன்மைக்கால பொருட்களை கண்டுபிடித்து பத்திரப்படுத்துவார்கள். மற்றவர்களின் குற்றங்களையும், வேறொரு முகத்தையும் இவர்கள் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பார்கள். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் மறந்துபோயும் புகை பிடிக்கக்கூடாது. புற்றுநோய்க்கான வாய்ப்புண்டு.
கட்டுப்பாடற்ற, கட்டற்ற கவிதைகளை எழுதித் தள்ளுவார்கள். எங்கிருந்தாலும் மற்றவர்களின் அனைத்து செலவு களையும் இவர்களே மனமுவந்து செய்வார்கள். கண்களில் ஏதாவது பிரச்சனை வந்துகொண்டேயிருக்கும். மருத்துவரை அணுகாது கண்ணாடி அணிதல் கூடாது. மூன்றாம் இடமான மேஷத்தில் சனியும் செவ்வாயும் இருந்தால் தாழ்வு மனப்பான்மை, சகோதரனிடம் குற்றங்குறைகளை அடிக்கடி காணல். எதிலும் திருப்தியற்ற மனோநிலை என்றெல்லாம் இருப்பார்கள்.
அண்ணன்-தம்பி இணைந்து கூட்டுத் தொழில் செய்வதை தவிர்க்கலாம். கடின உழைப்பால் இலக்கை அடைவார்கள். ஆரம்பத்தில் முயற்சியை வேகமாகச் செய்துவிட்டு கடைசியில் கோட்டை விடுவார்கள். நிறைய நண்பர்கள் இருந்தாலும் யாரேனும் ஓரிருவரே நெருக்கமாக இருக்க முடியும். நான்காம் இடமான ரிஷபத்தில் சனியும் செவ்வாயும் இணைந்திருந்தால் தாயே தெய்வம் என்றிருப்பார்கள்.
 ஆனால், சூழலால் சிலர் விடுதியில் சேர்ந்து படிப்பவர்களாக இருப்பார்கள். தான் சார்ந்திருக்கக் கூடிய சம்பிரதாயங்களை ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் பெயரில் வீடு வாங்குவது நல்லது. இவர்களின் இன்னொரு பக்கத்தை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. இவர்கள் ஒரு தேசாந்திரி. யாரை இவர்கள் பெரியாளாக மாற்ற வேண்டுமென்று நினைக்கிறார்களோ அவர்களை வளர்த்து விடுவார்கள்.
ஐந்தாமிடமான மிதுனத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். அதனால், பூர்வீகத்திற்கு பக்கத்து நகரத்தில் ஏதாவது தொழிலைத் தொடங்குவது நல்லது. கூர்மையான பார்வையும் கொஞ்சம் இறுக்கம் தோய்ந்த முகத்தோடும் இருப்பார்கள். பழமையான மொழிகளை வளர்த்துக் கொள்வதில் தீவிரம் காட்டுவார்கள். நறுக்குத் தெறித்தாற்போல் பேசும் திறமையுண்டு. தன்னுடைய சொந்த சொத்துகளின் விபரங்களை அநாவசியமாக யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
ஆறாம் இடமான கடகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் புது எதிரிகள் எங்கிருந்தாலும் அவர்களை தங்களின் புத்திக் கூர்மையால் வீழ்த்தி முன்னுக்கு வருவார்கள். திடீரென்று பெரும்பதவிகள் கிடைத்து அதில் அமருவார்கள். சேர்த்து வைத்து சொத்துகளை வாங்கலாம் என்று எண்ணி எண்ணி சேர்த்து வைப்பார்கள். பிறகு, ஏதோவொன்றிற்காக எல்லாவற்றையும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ஏதேனும் ஒரு நோய் உடம்பிலே இருப்பது போன்ற பிரமை இருந்து கொண்டேயிருக்கும். ரத்த உறைதல் குறைபாடு இருக்கும். அதேபோல ஹீமோக்ளோபின் குறைவாக இருக்கும். ஏழாம் இடமான சிம்மத்தில் சனியும் செவ்வாயும் இருந்தால் இரண்டாவது திருமணம் செய்யக்கூடிய நெருக்கடி உருவாகலாம். அல்லது ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து அல்லது வாழ்க்கைத் துணைவரை இழந்தவர்களாகப் பார்த்து திருமணத்தைச் செய்து கொள்ளலாம்.
இந்த அமைப்பில் இருப்போர்கள் பிரபலங்களுக்கு பினாமியாக இருப்பார்கள். ஆணாக இருப்பின் துடுக்கான மனைவி அமைவார். அன்னியத்தில் வாழ்க்கைத்துணை அமையும். சிலருக்கு வெளிநாடு, வெளிமாநிலத்திலேயே இருக்கும்படியான வாழ்க்கைச் சூழ்நிலையும் அமையும். கூட்டுத் தொழிலில் பார்ட்னர்ஷிப்களிடம் சற்றே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். எட்டாமிடமான கன்னியில் சனியும் செவ்வாயும் இணைந்திருந்தால் சேமித்தல் என்கிற குணமே இவர்களிடம் இருக்காது. செலவுகள் துரத்தியபடி இருக்கும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை நோக்கி ஓடும் குணம் இருக்கும்.
கடுமையாக உழைப்பார்கள். சம்பந்தமேயில்லாமல் ஏதேனும் செலவு செய்து கொண்டேயிருப்பார்கள். அன்னிய மொழிகளில் நல்ல தேர்ச்சியோடு விளங்குவார்கள். ஒன்பதாம் இடமான துலா ராசியில் சனியும் செவ்வாயும் சேர்க்கை பெற்றிருந்தால் மத்திம வயதுக்கு மேல் தர்ம ஸ்தாபனங்களில் ஈடுபட்டோ அல்லது தானே ஒன்றைத் தொடங்கியோ மற்றவர்களுக்கு உதவுவார்கள். மத்திம வயதில் பல்வேறு அலைச்சல்களுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் அமருவார்கள்.
சரியான அவசரக் குடுக்கையாக இருப்பார்கள். இவர்கள் இடம், பொருள், ஏவலறிந்து பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு வகையில் பார்த்தால் தந்தையின் கனவை இவர்களே நிறைவேற்றுவார்கள். பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனியும் செவ்வாயும் இணைந்திருந்தால் மெரைன் இன்ஜினியர், பைலட், பியூட்டி பார்லர், கோழிப் பண்ணை வைத்தல், வி.ஏ.ஓ., ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்றெல்லாம் சென்று அமர்வார்கள்.
ஷேர் துறையில் தனி முத்திரை பதிப்பார்கள். இவர்களுக்கு மேடைப் பேச்சில் மிகவும் ஆர்வம் இருக்கும். வக்கீலாக இருந்தால் வெளுத்து வாங்குவார்கள். கிரானைட், மார்பிள்ஸ், சிமென்ட், ஜல்லி போன்ற தொழிலில் நிறைய சம்பாதிப்பார்கள். வானிலை ஆய்வு மையம், பட்டுப்பூச்சி, மண்புழு, ஆர்கானிக் பயிர்கள் வளர்த்து தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்து வியாபாரத்தை நன்கு விரிவாக்கம் செய்வார்கள்.
பதினோராம் இடமான தனுசு ராசியில் சனியும் செவ்வாயும் சேர்க்கை பெற்றிருந்தால் ஒரே தொழிலை நம்பி இறங்காது, பல்வேறு துறையில் தடம் பதித்து சம்பாதிப்பார்கள். அடிமையாக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் உதவி என்று யாரேனும் வந்து விட்டால் உடனே செய்வார்கள். இவர்களின் உள்ளுணர்வு என்பது அபாரமாக இருக்கும். பலவிதங்களில் வருமானம் செய்யும் தந்திரத்தை தெரிந்து வைத்திருப்பார்கள். எப்போதுமே நண்பர்கள் விஷயத்தில் கவனத்தோடு இருக்க வேண்டும்.
பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். ஆனால், சம்பாதிக்கத் தெரியாது. சதா எங்கேயாவது கோயில், ஜீவசமாதி என்று சென்ற வண்ணம் இருப்பார்கள். இவர்களால் சமுதாயத்தோடு ஒத்துப்போக முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். எப்போதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.
 சிறிய நோய் இருந்தாலும் அதை அலட்சியமாக விடுவார்கள். எனவே, உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது. சிற்றின்ப விஷயங்களில் அத்துமீறக் கூடாது. எச்சரிக்கை தேவை. ஏனெனில், மர்ம ஸ்தானத்தில் நோய்க்கு வாய்ப்புள்ளது. சனி - செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் தன்னுடைய இமேஜ் பாதிக்காதபடி ஜாக்கிரதையாக இருப்பார்கள். அதேபோல நான்கு கார் வைத்திருந்தும் திடீரென்று நடந்து போகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ஏனெனில், இவ்விரு கிரகங்களும் தங்களுக்குள் எப்போதும் எதிரியாக சண்டையிட்டுக் கொண்டேயிருப்பார்கள். எனவே, இந்த அமைப்புள்ளவர்கள் நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணரையும், கோமதி அம்மனையும் தரிசித்து வாருங்கள். திருமாலும், ஈசனும் தாங்கள் இருவரும் ஒருவரே என சங்கரநாராயணராக அம்பிகைக்கு உணர்த்திய தலம் இது.
இங்குள்ள நாகசுனையில் நீராடி சங்கரநாராயணரையும், கோமதியம்மனையும் வழிபட நோய்கள் நீங்குவதாக ஐதீகம். இந்த ஆலயம் சங்கரலிங்கசுவாமி கோயில், சங்கரநாராயணர் கோயில், கோமதியம்மன் கோயில் என மூன்று பிரிவாக உள்ளது. கோமதி யம்மன் சந்நதியின் முன் உள்ள சக்கரம் உள்ள பள்ளத்தில் அமர்ந்து அன்னையை வணங்க, எண்ணிய காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சங்கரநாராயணரைக் காண அம்பிகை புரிந்த தவம் ஆடித்தபசு விழாவாகவும், ஈசனின் சுயரூப தரிசனம் காண அன்னை புரிந்த தவம் குறித்த விழா திருக்கல்யாண விழாவாகவும் கொண்டாடப்படுகின்றன.
(கிரகங்கள் சுழலும்)
ஓவியம்: மணியம் செல்வன்
|