படித்தது 8வது... ஆனால் நேஷனல் சாம்பியன்!



- மை.பாரதிராஜா

அப்பாவிச் சிரிப்பும் அழகான தமிழும்தான் ரஜினி கிருஷ்ணனின் முதல் அடையாளம். மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் பச்சைத் தமிழன். தொடர்ந்து ஒன்பது முறை பைக் ரேஸில் நேஷனல் சாம்பியன், கத்தார் ஆசிய ரேஸின் 600 சிசி பிரிவில் சாம்பியன், கடந்த ஆண்டின் மலேசிய சூப்பர் பைக் பந்தயத்தில் சாம்பியன் என அடுத்தடுத்து புகழ் மாலைகள் இவரது தோளில் விழுந்தபடி இருக்கின்றன.

இருங்காட்டுக்கோட்டை ரேஸ் மைதானத்தில் சீறும் பைக்குகளின் ‘விர்ர்ர்ரூம்...’ சத்தங்களிடையே இவரை சந்தித்தோம். ‘‘பூர்வீகமே சென்னைதான். இங்கதான் பொறந்து வளர்ந்தேன். சின்ன வயசுலயே அப்பாவை இழந்துட்டேன். அதனால எல்லாமும் அம்மாவும் அண்ணனும்தான். எட்டாவதுக்கு மேல படிக்க சூழல் இடம் கொடுக்கலை.

அண்ணன் ஆட்டோ மொபைல் கடை வைச்சிருந்தார். அவருக்கு உதவியா இருந்தேன். நெகிழ்ந்து போனவர் ஒரு பைக் வாங்கிக் கொடுத்தார். கொஞ்ச நாள் போனதும் பொறுப்பு வந்துடுச்சுனு நினைச்சாரோ என்னவோ எனக்குனு சொந்தமா ஒரு கடையை வைச்சுக் கொடுத்தார்...’’ உணர்ச்சிகளை மறைக்க பளீரென புன்னகைக்கிறார் ரஜினி கிருஷ்ணன்.

‘‘முதல் சம்பாத்தியத்துல ஒரு ஆர்.எக்ஸ்.135 சிசி பைக் வாங்கினேன். நம்ம கல்ச்சர் ரோட்டுல ரேஸ் ஓட்டறதுதானே! அதனால மெயின்ரோட்டுல வேகமா போனாலே ரேஸ்னு நினைச்சிட்டிருந்தேன். அந்த எண்ணத்தை மாத்தினவர் சரவணன். அவர் மெக்கானிக் மட்டுமில்ல பைக் ரேஸரும் கூட! ரேஸிங் டிராக்கை எனக்கு அறிமுகப்படுத்தினது சரவணன்தான்.

வருஷம் நல்லா ஞாபகம் இருக்கு. 2001, மே மாசம். இருங்காட்டுக்கோட்டைக்கு கூட்டிட்டுப் போய் ரேஸ் டிராக்கை காட்டினார். அங்க போனதும்தான் தெரிஞ்சது இது காஸ்ட்லியான விளையாட்டுனு. என் பொருளாதார வசதிக்கு, ரேஸர் ஆகறது சாத்தியமில்லாத விஷயம்னு மனசுல பட்டுச்சு.

கிரிக்கெட், ஃபுட்பால், கபடி விளையாட நாம நிறைய செலவழிக்க வேண்டியதில்ல. ஒரு பேட்டோ ஒரு பந்தோ வாங்கினா போதும். டீமும் ஈஸியா ரெடியாகிடும். ஆனா, ரேஸ் அப்படியில்ல. ரேஸ் பைக்கே லட்சத்தை தொடும். என்ஜின், டயர், மெக்கானிக் செலவுகள், டிராக் போயிட்டு வர்றதுக்கான செலவுகள்னு... அடுக்கடுக்கா வந்து நிற்கும்.

எல்லா லெவலையும் கடந்து ரேஸரா நம்மை நிரூபிக்கும் வரை கைகாசை செலவழிச்சுத்தான் ஆகணும். டிராக்ல நிரூபிச்ச பிறகுதான் ஸ்பான்சர்ஸ் கிடைப்பாங்க. என் கடை மூலமா கிடைச்சது சின்ன சம்பாத்தியம்தான். அந்த காசையும் ரேஸுக்கே செலவழிச்சேன். ஒரு வருஷ போராட்டத்துக்கு அப்புறம் 2002ல புரொஃபஷனல் ரேஸரா கேரியரை தொடங்கினேன். 2004ல டிவிஎஸ் நிறுவனத்தின் ரேஸிங் டீமோட ஸ்பான்சர் கிடைச்சது. அஞ்சு வருஷம் அவங்க டீமுக்காக ரேஸ் ஓட்டினேன். அப்ப அதெல்லாம் பெரிய விஷயம். அப்புறம் நேஷனல் ரேஸ்ல கலந்துகிட்டு ஜெயிச்சேன்.

ஒரு கட்டத்துல இப்படி இங்கேயே ஓட்டினா சரிப்படாது... வெளிநாட்டு பந்தயங்கள் எப்படி நடக்குது... அங்கயும் பங்கேற்கணும்னு விரும்பினேன். அந்த டைம்ல நம்ம ஊர்ல இருந்து ஃபாரீன் போய் ரேஸ்ல கலந்துக்கிட்டவங்க ஒருத்தரோ ரெண்டு பேரோதான்.டிவிஎஸ் டீம்ல நான் இருந்தப்ப அஸ்வின் சுந்தரும் ரேஸ் ஓட்டிட்டு இருந்தார். அவர் வெளிநாட்டு பந்தயத்தில் பங்கேற்கப் போறார்னு தெரிஞ்சதும் அவரோட அப்பாகிட்ட என் ஆர்வத்தை சொன்னேன்.

‘எவ்வளவு செலவு ஆகும்... எப்படி போகணும்’னு ஐடியா கொடுத்தார். நண்பர்கள்கிட்ட கடன், அக்கம்பக்கத்துல உதவினு பணம் கலெக்ட் பண்ணி 2006ல முதல்முறையா மலேசிய பந்தயத்துல பங்கெடுத்தேன். மொத்தம் அஞ்சு ரவுண்ட். அதுல அதிக பாயின்ட்ஸ் எடுத்து ‘150 சிசி கவாஸகி கப்’ பிரிவுல சாம்பியனானேன். இந்த உற்சாகத்தோட ஏசியன் பந்தயத்துல கலந்துக்கிட்டேன். ஆறு நாடுகள்ல ஆறு ரவுண்டா அந்தப் போட்டி நடக்கும். பெரிய அளவில் ஸ்பான்சர் கிடைச்சா மட்டும்தான் ஆறு ரவுண்டுலயும் ஓட்ட முடியும். என்னால ரெண்டு ரவுண்ட் மட்டுமே கலந்துக்க முடிஞ்சது.

2008ல ரெட்ரூஸ்டர் டீமின் இந்திய ரைடரா சேர்ந்தேன். அவங்க என்னை மலேசிய ரேஸுக்கு மறுபடியும் கூட்டிட்டு போனாங்க. சூப்பர் ஸ்போர்ட் 600 சிசில கலந்துக்கிட்டேன். அதிவேகப் பந்தயம். மொத்தம் அஞ்சு ரவுண்ட். ஓவர்ஆல் சாம்பியன்ஷிப் போட்டி அது. அதுல ரெண்டாவது சாம்பியன்ஷிப் ரன்னரானேன். அதுக்கடுத்த வருஷம் மறுபடியும் ரெட்ரூஸ்டர் டீமில் ஏசியன் ஜி.பி. 600 சிசி ஆறு ரவுண்ட் கேட்டகிரியில் த்ரூஅவுட் ஏசியாவில் பங்கேற்றேன்.

மூணாவது இடம் வந்தேன். ஓவர் ஆல்ல மூணாவது என்பதால் அது இந்தியாவுல யாரும் பண்ணாத சாதனையா ஆகிடுச்சு. இன்னிக்கு வரை அதை யாரும் முறியடிக்கல. மறுபடியும் 2010ல ரெட்ரூஸ்டருக்காக ஓட்டினேன். ஆனா, திடீர்னு டீமை மூடிட்டாங்க. ஸ்பான்சர் கட் ஆகிடுச்சு. மேற்கொண்டு என்னால செலவை சமாளிக்க முடியல. ரெண்டு ரவுண்டுக்கு மேல பந்தயத்துல கலந்துக்க முடியாம திரும்பிட்டேன். 2011ல வேற ஒரு புது டீமுக்காக விளையாடினேன்.

அவங்களும் சரியா ஸ்பான்சர் பண்ணாததால பங்கேற்க முடியல...’’ என்று அசை போட்ட ரஜினி கிருஷ்ணனுக்கு 2013 - 14 மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கிறது. ‘‘கத்தார் ஏசியன் சாம்பியன்ஷிப் பட்டம் அந்த ஆண்டுலதான் கிடைச்சது. கத்தார்ல நடந்த 600 சிசி கேட்டகிரில வென்ற முதல் இந்தியன் நான்தான். அப்புறம் 2015 மலேசிய சூப்பர் சாம்பியன் போட்டில மிக அதி வேக (1000 சிசி) போட்டில ஜெயிச்சேன். மலேசியன் சூப்பர் சாம்பியன் பட்டம் கிடைச்சது.

2016ல மலேசிய சூப்பர் சாம்பியன்ஷிப் போட்டில கலந்துகிட்டப்ப ரெண்டு மூணு க்ராஸஸ் பண்ணினதால - பைக்ல இருந்து கீழே விழுந்ததுல - ஜெயிக்க முடியல. ரேஸ்ல போகும்போது பைக்ல இருந்து ஸ்லிப் ஆகி விழுந்தால், மறுபடியும் முன்னாடி போறவங்கள முந்தி போயிட முடியாது. மைக்ரோ செகண்ட்ஸ் இடைவெளிலதான் பாயின்ட்ஸ் சேரும். போன வருஷம் விட்டதை இந்த வருஷம் பிடிக்கணும்னு மலேசிய சூப்பர் சாம்பியன் பந்தயத்துக்காக தீவிரமா ஒர்க் அவுட் பண்ணிட்டிருக்கேன்.

இந்தியாவுல தொடர்ந்து 9 முறை நேஷனல் சாம்பியன்ஷிப் ஜெயிச்சிட்டேன். இங்க 600 சிசி வகை பந்தயங்கள் இல்ல. அதற்கும் குறைவான சிசி கேட்டகிரிலதான் போட்டிகள் நடக்கும். எனக்கு இங்க காம்படிஷன் இல்லாததால வெளிநாடுகள்ல மட்டும்தான் இப்ப கலந்துக்கறேன். பைக் ரேஸோட முதல் வகை போட்டி, மோட்டோ ஜி.பி. பந்தயம்தான். அதுல சாம்பியன் ஆகணும். அதான் என் கனவு.

லட்சியம். ஆனா, அதுல கலந்துக்கறது சாதாரண விஷயமில்ல. மோட்டோ ஜி.பி.ல 1000 சிசி ரேஸ் ஓட்டணும்னா, அஞ்சாறு கோடி தேவைப்படும். 600 சிசி கேட்டகிரிக்கே ஒரு கோடி ரூபாய்க்கு மேல செலவாகும். நல்ல ஸ்பான்சர்ஷிப் எதிர்பார்க்கறேன். போன வருஷமே மோட்டோ ஜி.பி. பந்தயத்துல ஓட்ட முயற்சி பண்ணினேன். மத்திய அரசோட ரூபாய் நோட்டு பிரச்னை வந்ததால, ஸ்பான்சர் கிடைக்காம போச்சு. இந்த வருஷம் முயற்சி பண்ணினேன்.

ஜிஎஸ்டி பிரச்னை வந்துடுச்சு! இப்ப ஐம்பது சதவிகித ஸ்பான்சர் பிடிச்சுட்டேன். மீதிய தேடிட்டு இருக்கேன்...’’ என்று சொல்லும் ரஜினி கிருஷ்ணன், வேகமாக ஓட்டுவது மட்டும் ரேஸ் இல்லை என்கிறார். ‘‘ரேஸிங்னா அதுமட்டுமில்ல. எத்தனையோ விஷயங்கள் இருக்கு. மத்த ஸ்போர்ட்ஸ் மாதிரி ஸ்கூல்ல இருந்து இதை ஆரம்பிக்க முடியாது. பதினெட்டு வயசு ஆனபிறகுதான் பைக் ஓட்ட லைசென்ஸ் எடுக்க முடியும். அதுக்குப் பிறகு ரோட்ல ரேஸ் போறதைத் தவிர்த்து, ரேஸ் டிராக்ல ஓட்டிப் பழகுங்க. அதான் பாதுகாப்பு.
 
டிராக்ல ஓட்டும்போது எதிர்ல யாரும் வர மாட்டாங்க. கீழ விழுந்தாலும் உயிருக்கு ஆபத்து வராது. ரேஸர் ஆக விரும்பறவங்க ரோடுகள்ல ஓட்டி உயிரை பணயம் வைக்காதீங்க. நான் ரேஸுக்கு வந்தப்ப அதைக் கத்துக் கொடுக்க முறையான அகடமி இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டேன். இதுமாதிரி யாரும் சிரமப்படக் கூடாது; ஒரு நல்ல அகடமி தொடங்கணும்னு நினைச்சேன்.

அந்தக் கனவு இப்ப நிறைவேறியிருக்கு. RACR (ரஜினி அகடமி ஆஃப் காம்பிடீட்டிவ் ரேஸிங்) தொடங்கியிருக்கேன். அடிப்படை பயிற்சிகளை கத்துக் கொடுக்கறோம். சொந்த பைக் இல்லாதவங்களுக்கு டிவிஎஸ் ரேஸ் டீம் கிட்ட இருந்து வண்டி ரெடி பண்ணி கொடுக்கறோம். தொடர்ந்து 9 முறை நேஷனல் அவார்டு, சூப்பர் சாம்பியன் அவார்டு வாங்கியிருக்கேன். ஆனாலும் மத்த ஸ்போட்ஸ்மேன்களுக்கு இருக்கிற பாப்புலாரிட்டி எங்களுக்கு இல்ல.

வெளிநாடு களுக்கு போறப்ப இமிக்ரேஷன் அதிகாரிங்க ‘எதுக்காக வந்திருக்கீங்க?’னு ஏர் போர்ஸ்ல கேட்பாங்க. ‘மோட்டோ ஜிபில கலந்துக்க வந்திருக்கேன்’னு சொன்னா முகம் மலர்ந்து வரவேற்கறாங்க. கை குலுக்கி உற்சாகப்படுத்தறாங்க. ஆனா, நம்ம ஊர்ல தலைகீழா நடக்குது. இங்க உள்ள இமிக்ரேஷன் அதிகாரிகள், ‘நீ எதுக்கு பைக் ஓட்டுறே? வேற விளையாட வேண்டியதுதானே? பெட்ரோலை ஏன் வீணா செலவழிக்கறே?’னு கேட்டு டிஸ்கரேஜ் பண்றாங்க.

ஏதாவது பதில் பேசினா உடனே விசா, பாஸ்போர்ட், டாகுமென்ட்ஸ் எல்லாம் திருப்பித் திருப்பி செக் பண்ணி ஒரு குற்றவாளி மாதிரி ட்ரீட் பண்றாங்க. இந்த நிலமை மாறணும். ரேஸ் பைக் பத்தின ஒரு விழிப்புணர்வு நமக்கு வேணும். அப்பதான் நிறைய இளைஞர்கள் ரேஸில் ஆர்வம் காட்டுவாங்க!’’ என கைகள் உயர்த்தி தம்ஸ் அப் காட்டுகிறார் ரஜினி கிருஷ்ணன்.