கோட்டை மியூசியம்அறிந்த இடம் அறியாத விஷயம்

- பேராச்சி கண்ணன்

‘‘ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆண்ட ஆங்கிலேயர்கள் முதன்முதலில் தங்களுக்கென உருவாக்கிய கோட்டைதான் இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1639ல் ஆரம்பிக்கப்பட்டு 1644ல் கட்டி முடிக்கப்பட்டது. பிறகு, இதனைச் சுற்றி சென்னை நகர் உருவாகி வளர்ந்தது. அந்த வரலாறு, ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பொருட்கள், அப்போதைய நாணயங்கள், ஆரம்பத்தில் கோட்டை எப்படி இருந்தது... போன்ற தகவல்கள் எல்லாம் இங்கே ஆவணப்படுத்தி இருக்கோம்!’’

அந்த அதிகாரி சொல்லும் விஷயங்களை வியப்பாக கேட்டபடியே தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற கோட்டை மியூசியத்தினுள் நுழைந்தோம். சுமார் 70 ஆண்டுகள் பழமையான மியூசியம். சென்னையில் வசிப்பவர்களுக்கே கூட இப்படியொரு மியூசியம் இருப்பது தெரியாது. தெரிந்திருப்பவர்கள் கூட போலீசாரின் சோதனை கெடுபிடிகளைத் தாண்டிச் செல்ல வேண்டுமா... என அலுத்து ஒதுங்கி விடுகின்றனர் பீரங்கிகள் சூழ்ந்த கட்டிடம். ஆரம்பத்தில் வணிகப்பொருட்கள் பரிமாற்றத்திற்காக இதனை உருவாக்கியிருக்கிறார்கள். அதனாலேயே இந்தக் கட்டிடம் எக்ஸ்சேஞ்ஜ் பில்டிங் என அழைக்கப்பட்டிருக்கிறது.

இங்கே வணிகர்கள், தரகர்கள், கப்பல்களின் கேப்டன்கள் என யார் வேண்டுமானாலும் வணிகம் மேற்கொள்ளலாம். தவிர, ெபாது மக்களுக்கான லாட்டரி வியாபாரமும் நடந்திருக்கிறது. பிறகு, கவர்னரின் பொழுதுபோக்கு இடம், அதிகாரிகளின் மெஸ் எனப் பல ரூபங்களை எடுத்துவிட்டு இன்று மியூசியமாக நிற்கிறது. வரவேற்பு அறையைக் கடந்து இடதுபக்கமாகத் திரும்பினோம். படைக்கலன்கள் பகுதி வரவேற்றது. கண்ணாடிச் சட்டகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சங்கிலி குண்டு, தெறி குண்டு என வெரைட்டியான குண்டுகள் பயமுறுத்துகின்றன.

இதற்கான பீரங்கிகளும் கம்பீரமாக அருகில் நிற்கின்றன. இவற்றில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியதும், போர்களின்போது அவர்கள் எடுத்து வந்தததையும் காட்சிப் படுத்தியுள்ளனர். சிறுசிறு குண்டுகள் கொத்தாக திராட்சைப் பழம் போல் காணப்படுவது வித்தியாசம் கூட்டுகிறது. இதற்கு பெயர் கிரேப் ஷாட். இதிலிருந்து எறியப்படும் குண்டுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதறி வெடித்து நாசகரமாக்கும் என்கிறது அங்கிருந்த குறிப்பு. அதிகபட்சம் 2.5 கிமீ தூரமும், குறைந்தபட்சம் ஒரு கிமீ தூரமும் செல்லக் கூடியது இந்தக் குண்டுகள். அடுத்து, பைனாகுலர் போல இருக்கும் சிறுசிறு பீரங்கிகள் ஆச்சரியம். மெட்ராஸ் மீது உலகப் போர்களில் வீசப்பட்ட குண்டுகளின் பாகங்கள்கூட இங்கே இருக்கின்றன.

ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்க்கும் ஒரு வெளிநாட்டுக் குடும்பத்தைப் பார்த்தோம். தமிழகம் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்த மியூசியத்தைத் தவற விடுவதில்லை. குறிப்பாக, இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் நிச்சயம் இந்த மியூசியத்தையும், செயின்ட் மேரிஸ் சர்ச்சையும் பார்த்துவிட்டே செல்கிறார்கள் அந்த அறையைக் கடந்து பக்கவாட்டிலுள்ள இன்ெனாரு அறைக்குள் சென்றோம். பதக்கங்கள் வரிசை கட்டுகின்றன. முகப்பில் விக்டோரியா மகாராணியின் தங்கப் பதக்கம். முன்பக்கம் விக்டோரியா அரசியின் மார்பளவு உருவமும் பின்பக்கம் ஆங்கிலம், பாரசீகம் மற்றும் தேவநாகரி எழுத்துகளில், ‘இந்தியப் பேரரசி’ எனவும் பொறிக்கப்பட்டுள்ளது.

தங்கத்திலும் வெள்ளியிலும் காணப்படும் இந்தப் பதக்கங்கள் இந்திய மாகாண மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக வடமேற்கு இந்தியாவில் நடைபெற்ற போர்களின் நினைவாக வழங்கப்பட்ட பதக்கங்களைப் பார்வையிட்டோம். அதன்பிறகு முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் நினைவாக வழங்கப்பட்ட பதக்கங்கள் வருகின்றன. பிறகு, மதராஸ் மாகாண ஆளுநரின் மெய்க்காவல்படையிலுள்ள குதிரைக்கு அணிவிக்கப்படும் சேணத் துணியும், பதவி அமர்வு விழாவில் ஊழியர் அணியும் சீருடையும் அழகு சேர்க்கின்றன.

இவர்களின் குல்லா, மேல் அங்கி, தலைப்பாகை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக கண்ணாடிப் பெட்டகத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். பிறகு வருகின்ற கவசங்கள், வாள்கள், குறுவாள்கள் பகுதி எல்லோரையும் வெகுவாக வசீகரிக்கிறது. இரண்டாம் உலகப் போரில் மதராஸ் ராணுவத்தினரால் எடுத்து வரப்பட்ட ஜெர்மானிய கவசமும், சீனர்களின் கவசமும் கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘‘அண்ணாச்சி... கைப்பிடி எப்படி இருக்கு பாருங்க...’’ ஒரு குறுவாைளக் காட்டி சொல்கிறார் கரைவேட்டி கட்டிய ஒருவர். அவருடன் வந்திருந்த இன்னொருவர், ‘‘ஓய்... அதவிட, அந்தக் கோடாரிகளை பாரும். மூங்கில் கைப்பிடி என்னமா பண்ணியிருக்கான்!’’ என்கிறார்

பதிலுக்கு. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களைப் பார்க்க வரும் கட்சிக்காரர்கள் நேரம் போகாமல் சுற்றும்போது மியூசியத்தை எட்டிப் பார்த்து விடுகின்றனர். ஆறடி உயர துப்பாக்கி இருக்கும் கண்ணாடிப் பெட்டியைத் தடவி அவர்கள் ஆச்சரியப்படுவதைப் பார்த்தோம். இதனருகிலுள்ள கைத் துப்பாக்கிகள் தஞ்சாவூர் மூத்த இளவரசரின் தொகுப்பு எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கடுத்து கண்ணாடியினுள் ஒரு கூண்டு இருப்பதைக் கவனித்தோம். மரத்தாலான அந்தக் கூண்டின் மேலே, ‘The Anstruther’s cage’ என எழுதியிருந்தது.

சென்னை பீரங்கிப்படையின் கேப்டன் பிலிப் அன்ஸ்ட்ரூதர், 1840ல் திங்ஹாய் என்ற இடத்தில் சீனப் படையால் பிடிபட்டிருக்கிறார். அவரை இந்தக் கூண்டில் சிறை வைத்துள்ளனர். பின்னர் அவர் விடுதலையாகி சென்னை திரும்பியபோது கையோடு இந்தக் கூண்டையும் எடுத்து வந்துள்ளார். கால்களை நீட்டவோ, தலையை நிமிர்த்தவோ முடியாத இந்தக் கூண்டினுள் எத்தனை பேர் தண்டனை அனுபவித்தார்களோ?அங்கிருந்து வெளியேறி எதிர்ப்புறமாக உள்ள இன்னொரு அறைக்குள் நுழைந்தோம். இங்கே, ஆற்காடு நவாப்களின் பீங்கான் பொருட்கள் அழகைக் கூட்டுகின்றன. அப்போதைய அரசு விழாக்களில் பயன்படுத்திய பீங்கான் கோப்பைகளையும் பார்க்க முடிகிறது.

இதில் நவாப்களின் பீங்கான்களில் பராசீக மொழியும், கிழக்கிந்தியக் கம்பெனியின் பீங்கான்களில் அவர்களின் சிங்க முத்திரையும் பளிச்சிடுகின்றன. இவை இங்கிலாந்தின் வர்செஸ்டர் நகரில் உருவாக்கப்பட்டவை. தவிர, இப்போதைய ஹாட் பாக்ஸ் ஐட்டத்தை அப்போதே பீங்கானில் வடிவமைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. வெந்நீர் உள்ளே செலுத்துவதற்காக ஒரு சிறு ஓட்டையை இந்தப் பீங்கான் பிளேட்டின் கீழே அமைத்திருக்கிறார்கள். பால் குக்கர் போல! இதன்மேல் பகுதியில் உணவு வைக்கும் போது சூடு குறையாமல் அப்படியே இருக்குமாம்.

தொடர்ந்து நடந்தால் ஆல மரத்திலான செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மாதிரி வடிவம் வருகிறது. ஓர் அறை அளவில் இருக்கும் இந்த மாதிரி, 1870ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அப்போதைய கோட்டைக்குள் நதி ஒன்று ஓடுவதைப் பார்க்க முடிந்தது. தவிர, அருகிலிருக்கும் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் பெரிய இரும்புப் பூட்டுகளும், சாவிகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இதனுடன் புனித ஜார்ஜ் கோட்டையின் அரிய ஒளிப்படத் தகடுகளைப் பார்வையிட்டோம். வரைபடம் போல இருக்கிறது இந்தத் தகடுகள். 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில் ஒளிப்படம் எடுப்பது அதிகப் பொருட்செலவும் நேரமும் கொண்ட கலையாக இருந்துள்ளது.

அப்போது, பெயர் தெரியாத ஒரு புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட இந்த அரிய புகைப்படத் தகடுகள் வசீகரிக்கிறது. இவை பல காலம் குன்னூரில் யாரும் அறியாமல் இருந்தன. இவற்றை ஹாரி மில்லர் என்ற பத்திரிகையாளர் கண்டெடுத்து வின்டேஜ் விக்னேட் எனப் பெயரிட்டு பாதுகாக்க வித்திட்டார். இதிலிருந்து புனித ஜார்ஜ் கோட்டையின் பல அரிய தோற்றங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து செயின்ட் மேரிஸ் சர்ச்சில் 1680லிருந்து நடந்த நடவடிக்கைக் குறிப்புகளைப் பார்வைக்கு வைத்துள்ளனர். இதில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள் எல்லாம் இருக்கின்றன. குறிப்பாக, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமைத் தளபதி ராபர்ட் கிளைவ் திருமணப்பதிவும் இருக்கிறது. ஆனால், அது காட்சிக்கு வைக்கப்படவில்லை.

முதல்தளம் நோக்கிச் சென்றோம். படிக்கட்டின் அருகில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு காரன்வாலிஸின் மார்பிள் சிலை. இதனை தாமஸ் பேங்க்ஸ் என்கிற சிற்பி வடிவமைத்துள்ளார். சிலையின் கீழ் மைசூர் போரில் திப்பு சுல்தானின் மகன்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வந்த நிகழ்வு தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. ‘‘ஆரம்பத்தில் இந்தச் சிலையை ஒரு விதானம் அமைத்து நகரின் எல்லையாக இருந்த தேனாம்பேட்டையில் வைத்துள்ளனர். அதுதான் செனடாப் சாலை. செனடாப் என்றால் நினைவுச் சின்னம் என்று அர்த்தம். பிறகு, இந்தச் சிலையை கோட்டை எதிரிலுள்ள பரேடு மைதானத்திற்கு 1905ல் கொண்டு வந்தார்கள். பின்னர், வடக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பென்டிங்க் கட்டிடத்தின் முன்பு வைத்தனர்.

உப்புக் காற்றால் உருமாறிவிடும் என பிரச்னை கிளம்ப, மூன்றாண்டுகள் கழித்து கன்னிமாரா நூலகத்தில் அடைக்கலமானார் காரன்வாலிஸ். சுதந்திரத்திற்குப் பிறகு இந்த மியூசியத்திற்குத் திரும்பினார். அந்த விதானத்தை இப்போதும் மியூசியத்தின் வெளியில் பார்க்கலாம்...’’ என்கிறார் அங்கிருந்த ஒருவர். முதல் தளத்தின் நீண்ட அறைக்குள் நுழைந்தோம். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களின் கேளிக்கை அறை இது. இப்போது ஓவியங்கள் நிறைந்த அறையாக மிளிர்கிறது. ஆங்கிலேய அரசர்கள், அரசிகள், ஆளுநர்கள், ஆற்காடு நவாப்களின் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளனர். சர் ஜார்ஜ் ஹைடர் வரைந்த விக்டோரியா மகாராணியின் ஓவியம் வசீகரிக்கிறது. தவிர, தாமஸ் டே வரைந்த ராபர்ட் கிளைவ் ஓவியம், ராஜா ரவிவர்மா வரைந்த ஆர்த்தர் ஹாவ்லாக்கின் ஓவியம், நவாப் வாலாஜாவின் ஓவியம் மெருகூட்டுகின்றன.

1736ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வடிவத்தைச் சித்தரிக்கும் ஓர் அரிய ஓவியமும் இருக்கிறது. அங்கிருந்து அருகிலுள்ள இன்னொரு அறைக்குள் சென்றோம். மதராஸ் மாகாணத்தின் நாணயங்கள், இந்திய - போர்த்துக்கீசிய நாணயங்கள், இந்திய - டச்சு நாணயங்கள், இந்திய - பிரெஞ்சு நாணயங்களை வரிசையாக வைத்திருக்கிறார்கள். பகோடா முதல் பைசா வரையிலான நாணயங்கள் எந்த உலோகத்தில் உருவாக்கப்பட்டன என்கிற விளக்கமும் உள்ளது. 1708ம் ஆண்டு பயன்படுத்திய ‘துட்டு’ நாணயம்,1807ல் பயன்படுத்தப்பட்ட ‘1 டப்பு, 1/2 டப்பு’ நாணயங்களைப் பார்க்கும்போது, இப்போது நாம் பேசும் துட்டு, டப்பு என்கிற வார்த்தைகள் எங்கிருந்து வந்தன என்பது புரிகிறது.

இதனுடன் இந்தியாவில் வெளியிடப்பட்ட தபால் தலைகள் மின்னுகின்றன. முதல் சுதந்திர தினத்தின் நினைவாக மகாத்மா காந்தி உருவம் கொண்ட நான்கு தபால்தலைகள், ஏர் இந்தியாவின் முதல் விமானப் போக்குவரத்தைக் குறிப்பிடும் தபால்தலை என பலவற்றை இங்கே பார்க்கலாம். நிறைவாக இரண்டாம் தளம். இங்கே விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் படங்களும், திப்பு சுல்தான் மற்றும் நேதாஜியின் படங்களும் அவர்களின் கொடிகளும் உள்ளன. தவிர, இந்திய தேசியக் கொடியின் பலகட்ட வளர்ச்சியையும் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் தாண்டி இந்த அறையில் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக ஏற்றப்பட்ட நம் தேசியக் கொடி ஒரு கண்ணாடிப் பெட்டகத்தில் அற்புதமாக பாதுகாக்கப்பட்டு வருவது சிறப்பு!                  

பொதுத் தகவல்கள்
* இந்த மியூசியம் 1948ல் உருவாக்கப்பட்டது.
* செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஓர் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை 1946ல் பழைய மெட்ராஸ் காவலர்கள் என்ற படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் ரீட் முன்வைத்தார்.
* அன்றைய சென்னை மாகாண அரசு அருங்காட்சியகம், புனித மேரி தேவாலயம், கலைக்கப்பட்ட படைப்பிரிவிலிருந்து பெறப்பட்ட ஆங்கிலேயர் காலத்து அரும்பொருட்களைக் கொண்டு இந்தக் கோட்டை மியூசியத்தை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை நிறுவியது. இன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ெபாருட்களைக் கொண்டுள்ளது.
* காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்வையிடலாம். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு 15 ரூபாய் கட்டணம்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்