லேட்டஸ்ட் கேரக்டர் ஆர்டிஸ்ட்ஸ்!



- மை.பாரதிராஜா

எப்படிப்பட்ட மாஸ் ஹீரோஸ் நடித்தாலும் ஒரு படத்தை தூக்கி நிறுத்துவது கதையும் அதில் நடிக்கும் மற்ற நடிகர்களும்தான். ஏனெனில் மாஸ் ஹீரோவின் பலத்தை ரசிகர்களுக்கு உணர்த்துவதே இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்ஸ்தான். சின்ன கேரக்டரோ அல்லது செகண்ட் ஹீரோ / ஹீரோயினோ... சைக்கிள் கேப்பில் கார் ஓட்டி தங்கள் திறமையை நிரூபிப்பவர்கள் காலம் காலமாக திரைத்துறையில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் லேட்டஸ்ட் வரவுகளில் சிலரது இன்ட்ரோ இங்கே...

மரகத நாணயம் முருகானந்தம்

‘‘சொந்த ஊர் பரமக்குடி. சின்ன வயசுல இருந்தே, சினிமா பாட்டுனா உசிரு. ஏரியாவுல ரொமான்ட்டிக்கா திரிஞ்சிருக்கேன். அங்க இருக்கிற பொம்பள புள்ளைங்க பெயருக்கு தகுந்தா மாதிரி ஆடியோ கேசட்டுல பாடல்களை பதிஞ்சு தெருவையே ரணகளமாக்கி இருக்கேன்! சினிமா பாட்டே இப்படி போதை தருதே... அப்ப சினிமால வேலை செஞ்சா எப்படி இருக்கும்..? இப்படி நினைச்சதுமே சென்னைக்கு வந்துட்டேன். விக்ரமன் சார், ‘காஷ்மோரா’ கோகுல்கிட்ட ஒர்க் பண்ணினேன்.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ல கோகுல் என்னை நடிகரா அறிமுகப்படுத்தினாரு. ‘காஷ்மோரா’லயும் நல்ல வாய்ப்பு கொடுத்தார். ‘மரகத நாணயம்’ல ஏ.ஆர்.கே.சரவணும் நல்ல கேரக்டர் தந்தார். நடிச்சுகிட்டே இயக்குநராகவும் முயற்சி செஞ்சேன். விஷ்ணு விஷால் நடிச்ச ‘கதாநாயகன்’ படத்தை எழுதி இயக்கினேன். தொடர்ந்து டைரக்‌ஷன்லயும், நடிப்பிலும் கவனம் செலுத்தப்போறேன்!’’ என்கிறார் முருகானந்தம்.   

பண்டிகை அர்ஜெய்

‘‘பூர்வீகம் பழனி. சென்னைல செட்டிலாகி வருஷங்களாச்சு. உடம்பை ஃபிட் ஆக வச்சுக்கணும்னு செமையா ஜிம் ஒர்க் அவுட் பண்ணிட்டிருப்பேன். அப்படி ஜிம்ல ஒர்க் பண்ணும் போதுதான் விஷால் சார் பழக்கமானார். ‘நான் சிகப்பு மனிதன்’ல என்னை வில்லனாக்கினார். அறிமுகமான படத்துலயே கவனிக்கப்பட்டேன். அடுத்து ‘எமன்’, ‘தெறி’னு நெகட்டிவ் ரோல்கள் பண்ணியிருந்தாலும் ‘பண்டிகை’ நல்ல அடையாளம் கொடுத்தது.

ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரோல் ரொம்பவே கஷ்டமா இருந்தது. கிருஷ்ணாவும் நானும் தினமும் அதுக்கான ரிகர்சல் எடுத்துட்டு இருப்போம். இப்ப ‘செம போத ஆகாத’ல ஹீரோவுக்கு சமமான ரோல் பண்றேன். நடிப்பு மேல சின்னதா கான்ஃபிடன்ட் வந்திருக்கு. ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ல போலீஸா பண்ணியிருக்கேன். லைஃப் பிரைட் ஃபுல்லா போயிட்டிருக்கு பிரதர்...’’ என்கிறார் அர்ஜெய்.            

ரூபாய் கிஷோர் ரவிச்சந்திரன்

‘‘டைரக்டர் அன்பழகன் என் நண்பர். திடீர்னு ஒருநாள் என்னை நடிக்க கூப்பிட்டார். அப்ப லண்டன்ல எம்பிஏ படிச்சுட்டு இருந்தேன். ‘படிச்சு முடிச்சுட்டு வர்றேன்’னு சொன்னேன். படிப்பு முடிஞ்சதும் நடிக்கப் போறேன்னு சொன்னப்ப வீட்ல யாரும் நம்பலை. ஆனாலும் தடுக்கலை. ‘ரூபாய்’ கதையையும் என் கேரக்டரையும் சொல்லிட்டு பிரபு சாலமன்கிட்ட அழைச்சுட்டு போனார் அன்பழகன். என்னைப் பார்த்ததும், ‘அந்த கேரக்டருக்கு சரிப்படுவாரா..? வெள்ளையா இருக்காரே...’னு பிரபு சாலமன் இழுத்தார்.

ஒரு மாசம் டைம் கேட்டு என் கலரை டல் ஆக்கி வெயிட்டை குறைச்சேன். கூத்துப்பட்டறைல பயிற்சி எடுத்துகிட்டேன். கைலி கட்டிட்டு கோயம்பேடு போய் அங்க இருக்கிற டிரைவர்ஸ்கிட்ட பேச்சுக் கொடுத்து அவங்க மேனரிசங்களை தெரிஞ்சுகிட்டேன். இப்படி என்னை தயார்படுத்திட்டு அன்பழகன் முன்னாடி போய் நின்னேன். அசந்துட்டார். ரசிகர்களோட பாராட்டு உற்சாகத்தை கொடுத்திருக்கு...’’ என்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன்.         
நிபுணன் ஸ்ருதி ஹரிஹரன்

‘‘அக்மார்க் தமிழ்ப் பொண்ணு. ஆனா, படிச்சது, வளர்ந்தது எல்லாம் பெங்களூர்ல. சின்ன வயசில இருந்து பரதம் தெரியும். கான்டெம்பரரி டான்ஸிலும் எக்ஸ்பர்ட். காலேஜ் படிக்கும் போது சினிமால டான்ஸ் மாஸ்டராகணும்னு முடிவு பண்ணினேன். கன்னடத்தில் பேக்ரவுண்ட் டான்ஸரா நிறைய படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். மலையாளத்தில் வெளியான ‘சினிமா கம்பெனி’ படத்தின் மூலம் நடிகையா அறிமுகமானேன். அதையடுத்து கன்னடத்துல. அங்க தொடர்ந்து படங்கள் கிடைச்சது.

தமிழ்ல ‘நெருங்கிவா முத்தமிடாதே’ல நடிச்சேன். ‘நிபுணன்’ல நல்ல பெயர் கிடைச்சிருக்கு. இப்ப துல்கர் சல்மான் நடிக்கும் ‘சோலோ’ல நடிச்சுட்டிருக்கேன்...’’ என்று சொல்லும் ஸ்ருதி ஹரிஹரனுக்கு தென்னிந்திய மொழிகள் அத்தனையும் அத்துப்படியாம்!

பொதுவாக எம்மனசு தங்கம் ஜி.எம்.சுந்தர்

‘‘நடிகர் திலகம் சிவாஜிதான் என் ரோல்மாடல். ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் ஆக்ட்டிங் படிச்சிருக்கேன். உலக சினிமா, உலக நடிகர்களைப் பத்தி எல்லாம் அங்கதான் தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா நாடகக்குழுல முதன்மை நடிகரா நிறைய நாடகங்கள்ல ஸ்கோர் பண்ணினேன். கூத்துப்பட்டறைல இருந்தப்ப நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். இதுக்குப் பிறகு பாலசந்தர் சாரை பார்க்கப் போய் அனந்து சார்கிட்ட அறிமுகமானேன். ‘புன்னகை மன்னன்’ வாய்ப்பு கிடைச்சது. கமல் சாரோட நட்பு மலர்ந்தது.

அப்புறம் 25 படங்கள் பண்ணிட்டேன். இடையே சசிகுமார், பிரபுதேவா படங்கள்ல நடிக்கக் கேட்டு ஆஃபர்ஸ் தேடி வந்தது. அந்த நேரத்துல குடும்பத்தோட ஆஸ்திரேலியா போயிட்டதால மிஸ் ஆகிடுச்சு. திரும்பி வந்ததும் ‘காதலும் கடந்து போகும்’, ‘சைத்தான் கி பட்சா’ படங்கள்ல நடிச்சேன். ‘க.க.போ’வைப் பார்த்த இயக்குநர் தளபதி பிரபு, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ல வாய்ப்பு கொடுத்தார். நிறைய பாராட்டும் நாலஞ்சு படங்களும் கிடைச்சிருக்கு!’’ என்று சிரிக்கிறார் ஜி.எம்.சுந்தர்.
 
‘மீசைய முறுக்கு’ விக்னேஷ்காந்த்

‘‘திருச்சியில் பிறந்தேன். பத்தாவது வரை அங்கதான் படிச்சேன். பனிரெண்டாவது நாமக்கல். அப்புறம் செங்கல்பட்டுல என்ஜினியரிங் முடிச்சேன். எஃப்எம்ல ஆர்ஜேவா என் கேரியர் தொடங்குச்சு. அப்புறம் சேனல்கள்ல விஜே. நண்பர்களோடு சேர்ந்து வெப் - ரேடியோ தொடங்கினேன். பரவலா கவனிக்கப்பட்டேன். அடுத்ததா ‘ஸ்மைல் சேட்டை’ யூடியூப் சேனல் தொடங்கினோம். எல்லாமே பொலிடிகல் சட்டையர். நிறைய லைக்ஸ், ஷேர்ஸ் குவிஞ்சது.

எங்களோட ஒவ்வொரு வீடியோவையும் ஹிப்ஹாப் ஆதி சார் கவனிச்சுக்கிட்டே இருந்தார். ‘மீசைய முறுக்கு’ல நடிக்க கூப்பிட்டார். அது இவ்வளவு பெரிய ரோலா இருக்கும்னு நினைக்கல. ஆதியில இருந்து எல்லாருமே ஏற்கனவே ஃப்ரெண்ட்ஸா இருந்ததால, சமாளிச்சுட்டேன். தம்பி ராமையா சார் மாதிரி காமெடியும், குணச்சித்திரமும் கலந்து செய்யணும். அதுதான் ஆசை...’’ என்கிறார் விக்னேஷ்காந்த்.      

விக்ரம் வேதா விவேக் பிரசன்னா

‘‘சொந்த ஊர் சேலம் பக்கம் சின்னனூர். ஸ்கூல் படிப்பு அங்கதான். சென்னை கோயம்பேட்டில் இருக்கும் கல்லூரியில் விஸ்காம் படிச்சேன். சினிமாவில் சாதிக்கும் வெறி வந்து கேமராமேன் அசிஸ்டெண்ட்டா என் கேரியரை தொடங்கினேன். ‘மேயாத மான்’ இயக்குநர் ரத்னகுமாரோட குறும்படம் ‘மது’வில் நடிக்கிற வாய்ப்பு இதுக்கு அப்புறம் வந்தது. என் வாழ்க்கையோட டர்னிங் பாயிண்ட் இது. 2013 - 14ல மட்டும் பத்து குறும்படங்கள்ல நடிச்சேன். நான் நடிச்ச ‘தங்கிலீஷ்’ ஷார்ட்ஃபிலிம் பார்த்து ‘டார்லிங் 2’ வாய்ப்பு கிடைச்சது. ‘144’, ‘இறைவி’, ‘மாநகரம்’ படங்கள்ல சின்ன ரோல் பண்ணினேன்.

‘சேதுபதி’ல வயதான கெட்டப்புல மதிவாணனா நடிச்சேன். நல்லா ரீச் ஆச்சு. ‘பீச்சாங்கை’, ‘விக்ரம்வேதா’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’னு அடுத்தடுத்த படங்கள்ல வெளிய தெரிய ஆரம்பிச்சேன். விஜய்சேதுபதி அண்ணாதான் ‘விக்ரம் வேதா’ல சிபாரிசு பண்ணினார். இப்ப ‘மேயாத மான்’ உட்பட சில படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்...’’ என்கிறார் விவேக் பிரசன்னா.