பிரபுதேவாதான் தமிழகத்தின் குங்ஃபூ மாஸ்டர்!



‘எங் மங் சங்’ கலாட்டா

- மை.பாரதிராஜா

கும்பகோணம் பக்கம் இன்டீரியரான ஒரு கிராமம். மண் தரையும் திண்ணை வீடுகளும் நிறைந்த அக்ரஹாரத் தெரு ஒன்றில் ‘எங் மங் சங்’ படத்தின் ஷூட்டிங் பரபரக்கிறது. கையில் கோல பவுடர் டப்பாவுடன், பாவாடை தாவணி காஸ்ட்யூமில் பவ்யமாக இருந்த லட்சுமி மேனனிடம் வம்பு இழுக்க ரெடியானார் குங்ஃபூ மாஸ்டரான பிரபுதேவா. ‘‘என்ன இது... ‘எங் மங் சங்’ சைனீஷ் டைட்டில் மாதிரி இருக்கேனு எல்லாருமே சொல்றாங்க. ஆனா, இந்தக்கதைக்கு அதுதான் பொருத்தமான டைட்டில். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

1970ல இருந்து 1987 வரைக்கும் நடக்கிற கதை. பீரியட் ஃபிலிம். கதைப்படி ஹீரோவுக்கு சிரிக்க வைக்கவும் அழவைக்கவும்  தெரிஞ்சிருக்கணும். ஆக்‌ஷன்லயும் அசத்தணும். அப்படியொரு மல்டி டேலன்டட் பர்சன் தேவைப்பட்டுச்சு. யோசிக்கவே இல்ல. பிரபுதேவா மாஸ்டரை தொடர்பு கொண்டோம். பீரியட் ஃபிலிம்னு சொன்னதும், ஆச்சரியப்பட்டார். ஒன்றரை மணிநேரம் முழுக் கதையையும் சொன்னேன். இம்ப்ரஸ் ஆகி உடனே கால்ஷீட் கொடுத்துட்டார். ‘தேவி’க்கு அடுத்து மாஸ்டர் செலக்ட் பண்ணின படம் இது...’’கண்களில் பெருமிதம் மின்ன புன்னகைக்கிறார் ‘யங் மங் சங்’ படத்தின் அறிமுக இயக்குநரான அர்ஜுன் எம்.எஸ். ‘முண்டாசுபட்டி’ ராம்குமார், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் ஆகியோரிடம் பாடம் பயின்றவர்.

‘‘எழுபது, எண்பதுகள்ல ஜாக்கிசான், புரூஸ்லீ, ஜெட்லீ படங்களுக்கு இங்க மவுசு அதிகமா இருந்தது. சின்ன வயசுல என் வேலையே டப் ஆகி வர்ற சைனீஷ் படங்களை பார்க்கறதுதான். ‘என்டர் தி டிராகன்’ படத்தை எத்தனை முறை பார்த்தேன்னு எனக்கே நினைவில்ல!இயக்குநரா நான் பண்ற முதல் படம் அந்த ஜானர்லதான் இருக்கணும்னு விரும்பினேன். பிரபுதேவா மாஸ்டரும் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன் சாரும் அதை நிறைவேற்றியிருக்காங்க...’’ உற்சாகம் வழிய பேசுகிறார் அர்ஜுன்.

அதென்ன ‘எங் மங் சங்..?’
எங்க நாராயணன், மங்களம், சங்கர். இந்த மூணு நண்பர்களோட சுருக்கம்தான் ‘எங் மங் சங்’. ஒரு பிரச்னைல சிக்கித் தவிக்கிற ரெண்டு கிராமங்களை ஒரு குங்ஃபூ மாஸ்டர் தன்னோட புத்திசாலித்தனத்தால எப்படி தீர்த்து வைக்கிறார்னு கமர்ஷியலா சொல்லியிருக்கோம். குங்ஃபூ மாஸ்டரா பிரபுதேவாவும், அவரது அப்பாவா தங்கர்பச்சானும் நடிச்சிருக்காங்க. ஹீரோயின் லட்சுமிமேனன். இவங்களத் தவிர ‘பாகுபலி’ பிரபாகர், காளி வெங்கட், முனீஸ்காந்த், ஆர்.ஜெ.பாலாஜி, அஸ்வின்னு நிறைய நட்சத்திரங்கள்.

நான் ‘முண்டாசுபட்டி’ல ஒர்க் பண்ணும் போது, உண்மைலயே நம்ம ஊர்ல அப்படியொரு கிராமம் கிடையாது. படத்துக்காக அப்படியான கேரக்டர்ஸோட உருவாக்கி இருந்தாங்க. ஆனா, நம்ம பண்பாடு, கலாசாரம், மண் வாசனையை துல்லியமா அதுல பிரதிபலிச்சாங்க. இதே மெத்தடை ‘எங் மங் சங்’ல கடைப்பிடிச்சிருக்கேன். கதைப்படி இரண்டு கிராமங்கள். பீரியட் ஃபிலிம் வேற. லொகேஷன் தேடினப்ப பழமை மாறாத கிராமங்கள் எங்கயும் கிடைக்கல.

சுத்திச் சுத்தி அலைஞ்சோம். எங்க சுத்தினாலும் செல்போன் டவர் இருந்தது. லேட்டஸ்ட் துணிக்கடை, நகைக்கடை விளம்பரங்கள், போர்டுகள், சுவர்கள்னு இருந்தது. கடைசியா, நாங்க எதிர்பார்த்த மாதிரி ரெண்டு கிராமங்களை கண்டுபிடிச்சோம். ஒண்ணு கும்பகோணம் பக்கமும் இன்னொண்ணு சத்யமங்கலம் காடுகள் பக்கமும் அமைஞ்சிருந்தது. கிராம ஷெட்யூல்ஸை முடிச்சுட்டோம். இப்ப சைனா ஷெட்யூல். கிளைமாக்ஸ்ல வர்ற குங்ஃபூ ஃபைட்டும், டிராகன் ஆக்‌ஷன் காட்சியும் கண்டிப்பா பேசப்படும்.

டான்ஸ் மாஸ்டரை ஃபைட் மாஸ்டராக்கிட்டீங்க..?
உண்மைதான். அடிப்படைல பிரபுதேவா சார், டான்ஸ் மாஸ்டர். அதனால ஒரு குங்ஃபூ மாஸ்டருக்கான ஃபிட்னஸோட இருக்கார். அவர் கூட ஒர்க் பண்ணினது மறக்க முடியாதது. எப்பவும் டைம் வேஸ்ட் பண்ணக் கூடாதுனு சொல்லுவார். அவரும் அப்படித்தான் இருப்பார். ஃபைட்ல சில ஸ்டெப்ஸுக்காக ஒரு மாசம் ரிகர்சல் எடுத்துக்கிட்டார். டைரக்‌ஷன்ல தலையிடலை. எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்.

இனிமே வில்லேஜ் கேரக்டர்கள்ல நடிக்க மாட்டேன்னு சொன்ன லட்சுமி மேனனை மறுபடியும் கிராமத்து பக்கம் கொண்டு வந்துட்டீங்களே..?
ஆரம்பத்துல அவங்க அப்படி ஒரு மைண்ட் செட்லதான் இருந்தாங்க. ‘முதல்ல இந்தக் கதையை கேளுங்க. அப்புறம் உங்க முடிவை சொல்லுங்க’னு லட்சுமி மேனன்கிட்ட சொன்னேன். அவங்க கிராமத்து கேரக்டர்ஸ் நிறைய பண்ணியிருந்தாலும் பீரியட் ஃபிலிம் செய்ததில்ல. இந்த கேரக்டர் அவங்களுக்கு புதுசு. பரதநாட்டிய டான்ஸரா வர்றாங்க.

கிராமத்துல சின்ன வயசுலேயே ‘இவன்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்’னு சொல்லி வளர்த்திருப்பாங்க இல்லியா..? அப்படி ஒரு அடக்கமான கிராமத்துப் பொண்ணா பிரமாதப்படுத்தியிருக்காங்க. அதே மாதிரி தங்கர் பச்சான் சாரைப் பத்தியும் சொல்லியாகணும். பிரபுதேவா சாரும் அவரும் ஏற்கனவே நண்பர்கள். அதனால செட்ல எப்பவும் கலகலனு இருப்பாங்க. அவரோட ‘அழகி’, ‘பள்ளிக்கூடம்’ பார்த்து வளர்ந்தவன். அப்படிப்பட்டவன் இப்ப அவரையே இயக்கறேன். ‘நீ நினைச்சதை எடுப்பா... நடிக்கறேன்’னு என்கரேஜ் பண்ணினார்.

படத்துல வேற என்ன ஸ்பெஷல்..?
‘பாகுபலி’ல காலகேயனா வந்த பிரபாகரை தமிழுக்கு கூட்டிட்டு வந்திருக்கோம். வில்லனா மிரட்டியிருக்கார். ஸ்டண்டை மட்டுமே தொழிலா வச்சு பொழைக்கற ஒரு கிராமத்துல அவர் பண்ற அட்டகாசம் அதிரடியா இருக்கும். ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு, பர்ஃபெக்ட்டா periodஐ கொண்டு வந்திருக்கு. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ அம்ரீஷ் இதில் நாலு பாடல்கள் கொடுத்திருக்கார். ரசனையா வந்திருக்கு. 

உங்களப் பத்தி..?
சொந்த ஊர் நெய்வேலி பக்கம் ஒரு கிராமம். சென்னைல எம்சிஏ முடிச்சேன். சின்ன வயசில இருந்து சினிமா கனவுகள் இருந்ததால படம் பண்ண வந்துட்டேன். ‘முண்டாசு பட்டி’ ராம்குமார், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கேன். அவங்க ரெண்டு பேருமே என் நண்பர்கள். எங்கள்ல யார் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினாலும் முதல்ல ஒண்ணா உட்கார்ந்து அதை டிஸ்கஸ் பண்ணுவோம். நிறை குறைகளை அலசி ஆராய்வோம். அப்படித்தான் இந்த ஸ்கிரிப்ட்டையும் அவங்ககிட்ட காட்டினேன். இது ஒரு டிரெண்ட் செட்டர் படமா அமையும்னு நம்புறேன்.