ஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...



இது சோலோ சீக்ரெட்ஸ்

- நா.கதிர்வேலன்

‘‘எனக்கு ஒவ்வொரு படமும் தவம். யோசிக்கிற கதை இந்த மண்ணில் நடக்கிறதா இருக்கணும். அதோட அனுபவ சாயலை எல்லோரும் உணர்ந்திருக்கணும். இப்போ ஏழெட்டு மாசமா என் உடம்புக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறது ‘சோலோ’. எனக்கு ‘சைத்தான்’ படத்திற்குப் பின்னாடி டெக்னிக்கலாகவும், ஸ்கிரிப்டாகவும் அடுத்த கட்டத்திற்குப் போற மாதிரியும் படம் பண்ணணும்னு ஆசை. ஏகப்பட்ட விஷயங்கள் இதில் புதுசா இருக்கு. நீதி சொல்றது என்னோட வேலை கிடையாது. அதுக்கு அப்பழுக்கில்லாத மனசும், தன்மையான சிந்தனையும் வேணும். ஆனால், ‘இப்படியிருக்கு பார்த்துக்கங்க’னு சில விஷயங்களை சொல்லியிருக்கோம். அதுதான் ‘சோலோ’ படம்...’’ அருமையாகப் பேசுகிறார் இயக்குநர் பிஜோய் நம்பியார்.

இந்தியில் ‘சைத்தான்’ மூலம் வித்தியாச முத்திரையைப் பதித்தவர். மிகவும் விரும்பப்படுகிற இளம் இயக்குநர். ‘சோலோ’ நிறைய வித்தியாசங்கள்னு அறிகிறோம்..? ஆமா. இதுல மொத்தம் நாலு கதை. நாலு கதையிலும் துல்கர் சல்மான்தான் கதைநாயகன். சிவாவின் நான்கு அவதாரங்களை பாத்திரங்களாக முன்னெடுக்கிறார். ருத்ரா, த்ரிலோக், சேகர், சிவானு நான்கு கேரக்டர்களில் வருகிறார். சிவனின் அதிகபட்ச கோபமும் இருக்கு. அவரின் பெரும் காதலும் இருக்கு. பஞ்சபூதங்களும் நீர், நிலம், நெருப்பு, காற்று எல்லாம் வடிவமாகவும் கேரக்டர்களாகவும் வருது. துல்கரும், நானும் மட்டுமே படத்தில் பொது.

இதுக்கு முன்னாடி தமிழில் இப்படி நடந்தது மாதிரி தெரியலை. இதில் முற்றிலும் புதுமை செய்திருக்கோம். அருமையான இரண்டு காதல் கதை. சிலர் எங்கெல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்துறாங்க. அப்படியானவர்கள் இதில் வருகிறார்கள். அப்படி அழகழகா இரண்டு காதல் வாழ்க்கை நதிக்கு இரு கரை மாதிரி ஓடிக்கிட்டே இருக்கு. துளி மிகை இல்லை, பொய் இல்லை. அதனால் நேர்மையோட இப்ப ‘சோலோ’ பத்தி தெம்பா பேச முடியும். அழகா, ரசனையா, மொத்தக் குடும்பமுமே உட்கார்ந்து பார்க்க ஒரு ட்ரீட்தான் ‘சோலோ’.

துல்கர் இதில் நடிச்சிருக்கும் இரண்டு காதல் கதைகள் எல்லோருக்கும் ரொம்பவும் பிடிக்கும். காதல் வசீகரிக்காதவர்கள் யாரு? அந்தப் பேரலையில் பாதம் தொடாதவர்கள் யார் இருக்காங்க? எல்லாமே பழசான இந்த உலகத்தில காதல் மட்டும்தான் தன்னை விதவிதமாக புதுப்பிச்சுக்கிட்டே வருது. இதில் என் இரண்டு கதைகளும் புதுவகை. ஒரு பழிவாங்குற கதையும் ஒரு கேங்ஸ்டர் கதையும் கூடவே இருக்கு. எல்லாவற்றிலும் தனித்து திறம்பட நடித்திருக்கிறார் துல்கர். அவர் மாதிரி உள்ளே நுழைந்து நடிக்கிறவங்க ரொம்ப அபூர்வம். ரெமாண்டிக் ரோலில் ஆரம்பிச்சு, ஒவ்ெவாரு கதையையும் வித்தியாசப்படுத்தியிருக்கார்.

நடிப்பில் பெரிய இடத்திற்கு போகிற வேலையை எடுத்துக்கற ஒவ்வொரு படத்திலும் செய்துகிட்டே இருக்கார். இந்த வயதில் இந்தப் பக்குவம் அதிசயம்... ஆச்சர்யம்... சிறப்பு. ஏதோ என் படத்தில் நடிக்கிறார்னு இந்த வார்த்தையை சொல்லலை. மனதில் அடியாழத்திலிருந்து வருகிற வார்த்தைகள்னு எவருக்கும் புரியும். பதினொரு மியூசிக் டைரக்டர்கள் இசையை நிர்வகிக்கிறாங்க. க்ரிஷ் கங்காதரன், மது நீலகண்டன், சேசல்ஷானு மூணு ஒளிப்பதிவாளர்கள். நான்கு துல்கருக்கும் நான்கு ஹீரோயின்கள். அடடா, ரொம்ப நல்லாயிருக்கே..?

தன்ஷிகா... இவருக்கு அறிமுகம் தேவையில்லை. வெகு இயல்பான நடிப்பில் வடிவம் எடுத்திருக்கார். ஆர்த்தி வெங்கடேஷ்... சென்னை மாடல். சினிமாவில் முதல் தடவையாக, அதுவும் துல்கருக்கு ஜோடியாக... பெரிய விஷயம்தான். கன்னட ஆர்டிஸ்ட் ஸ்ருதி ஹரிஹரன். பின்னி எடுப்பாங்க. கூட நடிக்கும்போது பார்த்து நடிக்கணும். ஒரு பார்வையில், மிடுக்கில் ஒரு கண நேரத்தில் கூட நடிக்கிறவர்களை காணாமல் செய்துவிடுவார். நேகா சர்மா மும்பையைச் சேர்ந்த திறமைசாலி. இவர்கள் எல்லோரும் தனித்தனி கதையில் துல்கருக்கு இணையாக வருகிறார்கள். ‘சோலோ’ பெரிய படம்.

நிறைய புதுமைகளோடு எடுக்கிறோம் என்பதற்காக செலவில், பிரம்மாண்டத்தில் கை வைக்கவில்லை. இந்த நாலு துல்கரின் கேரக்டர்களும், அதை அவர் வாழ்ந்து பார்த்திருக்கிற விதமும் எளிமையானது இல்லை. ஆனால், அவர் சுலபமாக ஏற்றுச் செய்தார். அதற்கான வழிமுறைகள் அவருக்கு அத்துப்படி. இந்தப் படத்தில் நுட்பமான சினிமா மொழியும் அமைஞ்சிருக்கு. தீர்வை எல்லாம் ரசிகன் கையில் கொடுத்திருக்கோம். நாம் வாழ்ந்துகிட்டு இருக்கிற வாழ்க்கையை விலகியிருந்து பார்க்கிற வாழ்க்கை... அவ்வளவுதான். உங்களையும், என்னையும் மாதிரி ஒரு மனுஷன்தான் இந்தக் கதைக்கு வேணும்.

பார்க்கிற ரசிகன் அவனையே கொஞ்சம் பார்த்துக்கிற மாதிரியான படம். துல்கர் அவ்வளவு தூரம் நம்மிடம் நெருங்கிவிடுகிறார். ஒரு விஷயத்தை சின்ன சின்னதா மெருகேற்றுவது அவருக்கு கை வந்த கலை. அவர்மேல சுமையெல்லாம் தூக்கி வைக்கலை. ஆனால், தூக்கி வெச்சாலும் தாங்குவார் போல. அவ்வளவு பதப்பட்டு நிக்கிறார். மலையாள சினிமா எப்படியிருக்கு..? மூணு வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் சரியில்லை. இப்ப இரண்டு வருஷமா நல்ல வெளிச்சம் தெரியுது. அழகழகா, படங்கள் வந்திருக்கிறது. காவியமாக உணர்வுகளை சொல்றாங்க. கவனமா சீக்கிரமாக படத்தை முடிக்கிறாங்க.

பல ஏரியாக்களில் புதுசா புகுந்து புறப்படுறாங்க. புது இயக்குநர்கள் சில பேரை நம்ப முடியுது. கொஞ்சம் தனி குரல்கள் நிறைய வருது. துல்கர், ஃபஹத் பாசில், நிவின், பிருத்வினு இளைஞர்கள் வந்து முன்னெடுக்கிறாங்க. மனசை அள்ளுது. முன்னே இருந்த ரசிகனை விட பரந்துபட்ட சினிமா அறிவு இப்போ இருக்கு. அப்படிப்பட்டவங்களை நம்பித்தான் ‘சோலோ’ மாதிரியான படங்களை எடுக்கிறோம். இன்னமும் ஒரு படத்தின் வெற்றி என்பது தங்க விதி. யாரும் புரிந்து கொண்டபாடில்லை. அப்படியான வேளையில் புதுமை
களுக்கும், வித்தியாசத்திற்கும் இடம் தரவே இந்த ‘சோலோ’.