சிம்பிள் ஸ்டோரி தான் எப்பவும் ஜெயிக்கும்!



பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் open talk

- மை.பாரதிராஜா

கருத்தாழமிக்க ஃபேமிலி சப்ஜெக்ட்களை காமெடி தேன் கலந்து இயக்குவதில் சித்திக் வித்தைக்காரர். மல்லுவுட்டின் டாப் மோஸ்ட் டைரக்டர் என்றாலும் எல்லா மொழியிலும் விரும்பக்கூடிய ஒரு படைப்பாளி. தமிழில் விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’, விஜய்யின் ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ என இடைவெளிவிட்டு வந்தாலும் எவர்க்ரீன் சக்சஸ் கொடுத்தவர். இப்போது அரவிந்த்சாமி, அமலாபால் காம்பினேஷனில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என கலர்ஃபுல்லாக களமிறங்கியிருக்கிறார். ‘‘மலையாளத்தில் மம்மூட்டிவை வைத்து நான் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை ரஜினி சார் பார்த்திருந்தார். அந்தப்படம் அவருக்கு பிடிச்சிருந்ததா கேள்விப்பட்டேன்.

மம்மூட்டி பண்ணின ரோலை தமிழ்ல ரஜினி செய்தா பொருத்தமா இருக்கும்னு என்கிட்ட ஒரு தயாரிப்பாளர் சொன்னார். கேட்க நல்லா இருந்தது. அந்த தயாரிப்பாளரே, ரஜினிகிட்டயும் பேசி கால்ஷீட் வாங்கறதா சொன்னார். அப்ப அமெரிக்காவில் இருந்தேன். திரும்பி வந்ததும் ரஜினியை நேர்ல சந்திச்சு பேசிக்கலாம்னு நினைச்சிருந்தேன். இடைல என்ன நடந்ததோ தெரியல. அந்த திட்டம் கைகூடல. நானும் ரஜினி சாரை சந்திக்கலை. ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ தமிழ்ல எடுக்க நினைச்ச டைம்ல இங்க அரவிந்த்சாமி ‘தனி ஒருவன்’, ‘போகன்’னு கலக்கிட்டிருந்தார். அவரோட பர்ஃபாமென்ஸ் பிடிச்சிருந்தது. அப்படித்தான் அவர் இந்த கதைக்குள் வந்தார்...’’ கொஞ்சமும் மலையாளம் கலக்காமல் இயல்பான தமிழில் பேசுகிறார் சித்திக்.

நீங்க தமிழுக்கு எப்ப வந்தாலும் ஒரு ரீமேக்குடன்தான் வர்றீங்க. ஏன்..?
மை காட்! அப்படி எந்த திட்டத்தோடும் வந்ததில்லை. என் எல்லா கதைகளையும் நான் தமிழுக்கு பண்ணினதில்ல. இங்க எது ரொம்ப பொருத்தமா இருக்கும்னு தோணுதோ அதைத்தான் கொடுத்திருக்கேன். அதனாலதான் சித்திக்கை இங்க எல்லோருக்கும் நினைவில் இருக்கு. உண்மையை சொல்லணும்னா ‘காவலன்’ படத்தை முதன் முதலில் தமிழ்லதான் ஆரம்பிக்க நினைச்சேன். விஜய்கிட்ட முன்னாடியே கதை சொல்லிட்டேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘இந்தக் கதை எல்லா மொழியிலும் ஹிட் ஆகும்’னு தீர்க்கதரிசனத்தோட சொன்னார்.

சில காரணங்களால தமிழ்ல அதை ஆரம்பிக்க தாமதமாச்சு. அப்ப விஜய்தான், ‘டைம் வேஸ்ட் பண்ண வேணாம். மலையாளத்துல முடிச்சிட்டு வாங்க’னு சொன்னார். அவர் கணிச்ச மாதிரியே இந்தி வரைக்கும் இந்தப் படம் ஹிட்டாச்சு. ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ தமிழுக்கும் பொருந்தும் கதை. தமிழ்ல நான் இயக்கும் 5வது படம் இது. ‘ஃப்ரண்ட்ஸ்’ பண்ணும்போது பார்த்த தமிழ் இண்டஸ்ட்ரிக்கும் இப்ப உள்ள இண்டஸ்ட்ரிக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. டெக்னிகல், தரம்னு எல்லா விஷயத்துலயும் வளர்ச்சி அடைஞ்ச்சிருக்கு.

இதுவும் ஃபேமிலி சப்ஜெக்ட் தானா?
யெஸ். குடும்பத்தோட தியேட்டருக்கு வர்ற மாதிரி தான் எப்பவும் படம் எடுப்பேன். இதுவும் அப்படித்தான். சீரியசான கதைல காமெடி கலக்கறது என் பாணி. அதனாலதான் என்னை தமிழ் ரசிகர்கள் நினைவுல வைச்சிருக்காங்க. அந்த வகைல குழந்தைகள் நினைச்சா எதையும் பண்ணிட முடியும்னு இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். கணவன் இல்லாத ஒருத்தி, மனைவியை இழந்த ஒருவன். இவங்களுக்கு இடையிலான வாழ்க்கைப் பயணத்தை சென்டிமென்ட், ஆக்‌ஷன், காதல், காமெடி கலந்து சொல்லியிருக்கேன். மலையாளத்துல நயன்தாரா கொஞ்சம் சீரியஸான கேரக்டரா பண்ணியிருப்பாங்க. இங்க அமலாபாலுக்கு ஹியூமர் சேர்த்திருக்கேன்.

அப்படியே டிட்டோவா ரீமேக் பண்ணிடலை. அரவிந்த்சாமி, அமலாபால் தவிர நிகிஷா படேல், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, பேபி நைனிகானு நிறைய ஆர்ட்டிஸ்ட்கள் இருக்காங்க. தமிழ்ல இதுக்கு முன்னாடி வசனங்களை கோகுல கிருஷ்ணா எழுதியிருப்பார். இப்ப ரமேஷ் கண்ணா எழுதியிருக்கார். இந்தி ‘பாடிகார்டு’ல பெப்சி விஜயன் மாஸ்டர் ஒர்க் பண்ணியிருந்தார். அப்ப எங்களுக்குள்ள ஏற்பட்ட புரிதல் இந்தப் படத்துலயும் தொடருது. அம்ரீஷ் மியூசிக் நல்லா வந்திருக்கு. விஜய் உலகநாத் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.

சல்மான்கான், விஜய்னு மாஸ் ஹீரோக்கள் எல்லாருமே நீங்க கூப்பிட்டதும் வர்றாங்க. அப்படியிருக்கிறப்ப நீங்க ஏன் இன்னமும் மலையாளப் பட உலகையே சுத்தி வர்றீங்க?
எங்கிட்ட நல்ல கதை இருக்குனு நம்பித்தான் எல்லா ஹீரோக்களும் வர்றாங்க. அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தணும். அதனாலயே முதல்ல கதையை ரெடி பண்ணிட்டு அப்புறம் ஹீரோக்கள்ல யார் பொருத்தமா இருப்பாங்கனு பார்க்கறேன். முக்கியமான விஷயம், பெரிய ஹீரோக்கள் கால்ஷீட் கிடைச்சிடுச்சுனு மிதப்போட அவங்களுக்காக கதை பண்ண மாட்டேன். அதே மாதிரி ஒரு படம் முடிஞ்சதும் அந்தப் படத்தோட ஹீரோவோட தொடர்புல இருக்கணும்னு மெனக்கெட மாட்டேன். கதை எழுதத்தான் அதிக நேரம் எடுத்துப்பேன். ஷூட்டிங்கை வேகமா முடிச்சுடுவேன். இதனாலயே எல்லாருக்கும் என்னை பிடிக்குதுனு நினைக்கறேன்.

மலையாளமும் தமிழும் எனக்கு பிடிச்ச இண்டஸ்ட்ரி. சின்ன வயசுல இருந்தே நிறைய தமிழ்ப் படங்கள் பார்த்துட்டு வரேன். ஃபாசில் சார்கிட்ட உதவியாளரா இருந்தப்ப தமிழ்த் திரையுலகம் பழக்கமாச்சு. எனக்கு தமிழ் எழுதவும், பேசவும் தெரியும். இந்தி ‘பாடிகார்டு’ பண்ணினப்ப அந்த மொழி தெரியாது. ஆங்கிலத்தை வைச்சுதான் சமாளிச்சேன். இப்ப ஓரளவு அந்த மொழியைப் பத்தி தெரியும். ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இந்திக்கும் போகப் போகுது. சஞ்சய் தத்கிட்ட பேச்சு வார்த்தை நடக்குது. 

நீங்க மலையாள இண்டஸ்ட்ரிக்கு வந்து 31 வருஷமாச்சு...
ஆமா! இத்தனை வருஷங்களா நாம கடந்து வந்திருக்கோம்னு நினைக்கிறப்ப எனக்கே ஆச்சரியமா இருக்கு. சினிமாவில  நிறைய விஷயங்களை கத்துக்கிட்டிருக்கேன். நான் ஒரு படைப்பாளியா, சினிமாக்காரனா இருந்தாலும் இன்னமும் மக்களோடு மக்களாகத்தான் பழகிட்டிருக்கேன். அதைத்தான் விரும்புறேன். ஒரு கிரியேட்டர் ஆடியன்ஸ்கிட்ட நெருக்கமா இருக்கும் போதுதான் அவன்கிட்ட நல்ல படைப்பு வெளியே வரும்னு நம்புறேன். இப்ப தியேட்டருக்கு யங்ஸ்டர்ஸ்தான் வர்றாங்க. ஃபேமிலி டிராமா, ஸ்லோ ஆக்‌ஷன் இதையெல்லாம் அவங்க விரும்பறதில்லை.

நாம அப்டேட் ஆனால்தான் அவங்களுக்கான படங்களைக் கொடுக்க முடியும். முன்னாடி மாதிரி இப்ப யாரும் கூட்டுக் குடும்பமா வசிக்கறதில்லை. அதனாலயே கதைல ஃபேமிலியை காட்டும்போது தாத்தா பாட்டியை காட்டினா அது யங்ஸ்டர்ஸுக்கு அன்னியமா தெரியுது. எல்லா மொழி சினிமாவிலும் டிரெண்ட் மாறிக்கிட்டேதான் இருக்கும். அதேநேரம் எல்லா மொழிகள்லயும் எப்பவும் சிம்பிள் கதைகளுக்குதான் ஸ்கோப் அதிகம் இருக்கும். என்னுடைய இத்தனை வருஷ சினிமா அனுபவத்துல நான் கத்துக்காம விட்ட ஒரே விஷயம், பிசினஸ். ஒரு கிரியேட்டர் பிசினஸ் பக்கம் போனா, கிரியேட்டிவிட்டி பாதிக்கும்னு நினைச்சே அந்தப் பக்கம் கவனம் செலுத்தாமல் விட்டுட்டேன். அதுவும் நல்லதுக்குதான்!