Demonetisation GST...



கடந்து இந்திய மக்களின் வள்ளல் குணம் அதிகரித்திருக்கிறது!

வாட்ஸ் அப்பில் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு வரும் மெசேஜ்களுக்கு நம்மில் நிறைய பேர் உதவ முன்வருவது இல்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் அதை ஃபார்வேர்டாவது செய்து விடுகிறார்கள். யாராவது மனமும் பணமும் இருக்கும் புண்ணியவான் உதவட்டும் என்ற நல்ல எண்ணம்தான் இதற்குக் காரணம். இன்றைய டெக்னாலஜி யுகத்தின் வரமும் சாபமும் இந்தத் தகவல் தொடர்பு துரிதமானதுதான். முன்பெல்லாம் நண்பர்கள் என்றால் நேரடியாக அறிமுகமானவர்கள், பழகியவர்கள் மட்டுமே. இப்போதோ ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்க்காமலேயே ஆண்டுக்கணக்கில் ஃபேஸ்புக் நண்பர்களாகப் பலரும் இருக்கிறார்கள்.

ஏதேனும் ஓர் அவசர உதவி என்றால் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்தும் நீள்கிறது அன்புக் கரம். இந்தியர்களின் உதவும் மனப்பான்மையும் தானம் தரும் பழக்கமும் சமீபத்தில் மிகவும் அதிகரித்திருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். சாரிட்டி எய்ட் பவுண்டேஷனின் இந்த ஆண்டு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், ‘அதிகமாக தானம், தர்மம் செய்வோர் பட்டியலில் கடந்த ஆண்டு 91வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 81வது இடத்துக்கு மளமளவென முன்னேறியுள்ளது!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டீமானிட்டைசேஷன், பணவீக்கம் அதிகரிப்பு, ஜி.டிபி விகிதம் குறைவு, ஜி.எஸ்.டி என்று பொருளாதார அணுகுண்டுகள் சராமரியாகத் தாக்கினாலும் இடது கை கொடுப்பது வலதுகைக்குத் தெரியக் கூடாது என சத்தமில்லாமல் இதைச் சாதித்திருக்கிறார்கள் இந்திய வள்ளல்கள்.

‘‘கடந்த 10 ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களில் வாரத்துக்கு ஐந்து நாட்கள்தான் வேலை என்பதால் ஒவ்வொரு ஆண்டும் உபரியாகக் கிடைக்கும் 50 நாள் கூடுதல் விடுமுறையால் தங்களுக்குக் கிடைத்த நேரத்தில் ஒவ்வொருவரும் சமூகம் பற்றி சிந்தித்ததன் விளைவுதான் இது...’’’ என்று பெருமிதப் புன்னகை பூக்கிறார் வெங்கட் கிருஷ்ணன். இவர், ‘தான் உத்சவ்’ என்ற தானத் திருவிழாவின் தன்னார்வலர். ‘‘இன்று நீங்கள் உதவிக்காக உங்கள் சொந்தங்களையோ நண்பர்களையோ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சமூக வலைத்தளங்களில் அறிமுகமற்ற நண்பர்கள் ஆயிரத்துக்கும் மேல் களத்தில் உதவிக்கு வருவார்கள்.

இப்படி, வார விடுமுறை நாட்களில் பணிபுரிபவர்கள் மெல்ல தன்னார்வ நிறுவனங்களின் செயல்பாட்டையும் இதன் வழியே புரிந்துகொள்கிறார்கள்...’’ என்கிறார் ILSS அமைப்பின நிறுவனரும், சென்ட்ரல் ஸ்கொயர் பவுண்டேஷன் ஆலோசகருமான அனு பிரசாத். உண்மையிலேயே நம் மக்களின் தானம் தரும் சக்தி அதிகரித்திருக்கிறதா? விருப்பம் அதிகரித்திருக்கிறதா? இதில் என்.ஜி.ஓ எனும் தன்னார்வ நிறுவனங்களின் பங்கு என்ன? கார்டர் சாலை க்ளீன்அப்! மும்பை நகரில் தினசரி குவியும் கழிவுகள் மட்டுமே 7,700 மெட்ரிக் டன்கள் என்கிறது மும்பை கார்ப்பரேஷன்.

மக்கள் பலரும் ஆச்சரியமாகப்பார்க்கும்படி கடற்கரையோரமாக உள்ள கார்டர் சாலையின் ஒரு கி.மீ. தூரத்துக்கு 40 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து சுத்தம் செய்து அதனை பளிச் என மாற்றியுள்ளனர். இந்த க்ளீன்அப் நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பு மும்பையைச் சேர்ந்த அன்யா ரங்கசுவாமி. மும்பை பாந்த்ராவின் கார்டர் சாலையில் நான்கு ஆண்டுகளாக வசித்து வரும் அன்யா, வாக்கிங் செல்லும்போது சாலையில் கிடந்த குப்பைகள் அருவருப்பைத் தர தினமும் தன்னால் முடிந்தவரை அகற்றத் தொடங்கினார். பின்னர், அவரது தோழிகளின் யோசனைப்படி பிளானை ஃபேஸ்புக்கில் ஏற்ற, பதிவு வைரலாகி குவிந்த உதவிகளின் மூலம் நடந்ததுதான் மேலே நீங்கள் படித்த மேஜிக் சுத்தம்.

‘‘10 வாரங்கள் வீக் எண்டில் நடைபெற்ற சுத்தப்பணிகள் இவை. ஆறு வயது குழந்தையிலிருந்து அறுபது வயது பெண்மணி வரை ஏறத்தாழ 40 பேர் இந்தத் தூய்மைப் பணிக்கு வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை...’’ என்கிறார் அன்யா ஆச்சர்யம் விலகாமல். பலரும் பாந்த்ரா பகுதிக்கு வெளியே புனே உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தூய்மைப் பணிக்கு வந்ததுதான் ஸ்பெஷல். தனியொருவராகச் செய்வதைவிட குழுவாகச் செய்யும் பணியில் திருப்தியும் அதன் தாக்கமும் பெரியது என்பது அன்யா கற்ற பாடம். ராபின்ஹுட் ஆர்மி! இது சண்டைபோடும் ஆர்மி அல்ல. ஏழை எளியோரின் பசிதீர்க்கும் படை. ‘‘போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் வாழ்ந்தபோது ரீஃபுட் அமைப்பின் பணிகளைப் பார்த்து தொடங்கப்பட்ட அமைப்பு இது.

முதல் நாளில் டெல்லியில் உள்ள 150 நபர்களுக்கு பசி தீர்த்தோம்...’’ என்கிறார் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராபின்ஹுட் ஆர்மி (RHA) அமைப்பின் துணை நிறுவனரான நீல் கோஸ். இன்று, இந்தியாவின் 48 நகரங்களில் மாதத்துக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிக மக்களின் பசி தீர்க்குமளவு வளர்ந்திருக்கிறது ராபின்ஹுட் ஆர்மி. ஹோட்டல்களில் மீதமாகும் உணவுகளைப் பெற்று மக்களுக்கு வழங்க நீல் கோஸுக்கு இங்கும் கைகொடுத்தது சோஷியல் மீடியாக்கள்தான். 12,300 தன்னார்வலர்களின் உதவியுடன் தில்லியில் 25 ஹோட்டல்களின் ஆதரவைப் பெற்று ஏழைகளின் பசி தீர்க்க உழைக்கிறது ராபின்ஹுட் ஆர்மி.

‘‘கடந்த ஆண்டு லத்தூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக உதவி தேவைப்பட்டபோது 75 ஆயிரம் லிட்டர் குடிநீர் கேன்களை மக்களுக்கு சப்ளை செய்த தருணம் முக்கியமானது...’’ என்கிறார் சோஷியல் தளங்களுக்குப் பொறுப்பாளரான ஆருஷி பத்ரா. கடந்த சுதந்திர தினத்திலிருந்து ஒரு கோடிப் பேருக்கு உணவு என்பதே எதிர்காலத் திட்டமாக ராபின்ஹுட் ஆர்மி பிரசாரம் செய்யத்தொடங்கியுள்ளது. ‘‘புதிய சவாலான திட்டங்களை முன்வைத்து ஊக்கமாகச் செயல்படுவதுதான் எங்கள் வெற்றிக்குக் காரணம்...’’ என்கிறார் நீல் கோஸ்.

ரொட்டி வங்கி
தில்லியின் ஷாலிமார்பாக் பகுதியில் மாடர்ன் பப்ளிக் ஸ்கூல் உள்ளது. இங்கு, மாணவர்கள் கொண்டுவரும் உணவுகள் கடந்த இரு ஆண்டுகளாக வீணாவது இல்லை. அதாவது, மீதமாகும் உணவுகளை மீண்டும் பாக் செய்து ரொட்டி வங்கிக்குக் கொண்டு செல்கிறார்கள். 2015ம் ஆண்டு தில்லியின் ஆசாத்பூர் மார்க்கெட்டில் ராஜ்குமார் பாட்டியா, சுதீர் பெரானி மற்றும் நண்பர்களால் தொடங்கப்பட்ட ரொட்டி பேங்க், இன்று தினசரி 3 ஆயிரம் பாக்கெட்டுகள் உணவை 58 மையங்கள் வழியாக இந்தியா முழுக்க விநியோகிக்கிறது.

இதில் மாடர்ன் பப்ளிக் பள்ளியின் பங்கு மட்டுமே 700 பாக்கெட்டுகள். ‘‘பிறந்தநாள் போன்ற விழாக்களின்போது உணவுகள் தேவைக்கு அதிகமாகக் குவியும். பள்ளி விடுமுறையாக இருக்கும்போது ஏற்படும் பற்றாக்குறையை சமாளிப்பதுதான் பெரிய சவால்...’’ என்கிறார் பெரானி. ரொட்டி பேங்கின் வெற்றியால் இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் இதே பெயரில் அல்லது கானா பேங்க் எனவும் தொடங்கப்பட்டிருப்பதே திட்டத்தின் வெற்றிக்கு சாட்சி.

‘‘எங்களது பிளான் மாடல் அல்லது பெயர் என எதை பயன்படுத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. மக்களின் பசியை யார் தீர்த்தால் என்ன?’’ எனப் பக்குவமாகப் பேசுகிறார் ராஜ்குமார் பாட்டியா. சிறுவயதிலேயே மாணவர்களின் மனதில் நல்ல விஷயங்கள் பதித்தால் பிறருக்குப் பகிரும் குணத்தை வளர்க்கலாம் என்பது இவர்கள் கற்றுக்கொண்ட பாடம்.                                

தான் உத்சவ் எனும் தானத் திருவிழா!    
மார்ச் 2009ம் ஆண்டு விளம்பர ஏஜன்சியான EuroRSCG India நம் நாட்டில் இந்த நிகழ்வைத் தொடங்கியது. அக்டோபர் 2ம் தேதி முதல் 8 நாட்களுக்கு இந்தக் கொண்டாட்டம் நடக்கும். இதற்கு, Joy of Giving Week என்பது பழைய பெயர். இந்தியாவைச் சேர்ந்த என்.ஜி.ஓக்களின் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் விழா இது. ஒரு வாரம் நடைபெறும் விழாவில் ஆட்டோ டிரைவரிலிருந்து கார்ப்பரேட் சி.இ.ஓ வரை பலர் பங்கேற்கிறார்கள். பணம், நேரம், திறன்கள் என உங்களால் முடிந்ததைப் பிறருக்கு வழங்கலாம். 2016ம் ஆண்டு இந்தியாவில் உள்ள 200 நகரங்களில் 1,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் நிதி திரட்டி இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர்.

ராபின்ஹுட் ஆர்மி
பண உதவிகளுக்கு நோ சொல்லி உதவுபவர்களின் நேரம் மட்டுமே தேவை எனப் பசி தீர்த்து உணவு வீணாவதைத் தடுக்கும் அமைப்பு. 48 நகரங்களில் உள்ள 12 ஆயிரத்து 350 உறுப்பினர்கள் இதுவரை 34 லட்சத்து 36 ஆயிரத்து 531 ஏழை எளியவர்களின் பசித் தீயை அணைக்கும் மணிமேகலையாக களம் இறங்கியுள்ளனர். இதன் தன்னார்வலர்கள் அனைவரும் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களே. இதைத் தவிர கல்வி கற்காத குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியை அளிக்கும் பணியையும் செய்துவருகிறது ராபின்ஹுட் அகாடமி. 19 நகரங்களில் வார இறுதியில் கல்வியைப் போதிக்கும் அமைப்பினர் இதுவரை 1,250 குழந்தைகளுக்கு கல்விக் கண் வழங்கியுள்ளனர்.

ரொட்டி பேங்க்
தில்லியில் உள்ள ஆசாத்பூர் மார்க்கெட்டில் 2015ம் ஆண்டு ராஜ்குமார், சுதீர், சோனிக் ஆகிய நண்பர்களால் உருவான அமைப்பு இது. ஒருமுறை தில்லியில் வேலை கேட்டு வந்தவர் காசை வாங்க மறுத்து ரொட்டி பெற்று உண்ட சம்பவத்தைக் கவனித்த நண்பர்கள் அந்த அனுபவத்தால் உந்துதல் பெற்று இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தில்லியில் 10 மையங்களுடன் பல்வேறு ஊடக அமைப்புகளின் உதவியுடன் ஏழைகளின் பசி தீர்க்க உழைத்துவருகிறது.