பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நல்லதா கெட்டதா?



- கி.ச.திலீபன்

அனைத்து வகையிலும் தொந்தரவான, உடல் நலத்துக்கு எதிரான ஒன்றாக இருப்பது உடற்பருமன். முறையற்ற நமது வாழ்வியல் முறைக்குக் கிடைக்கும் பரிசு இது. நவீன அறிவியல் வளர்ச்சியில் எதுவும் சாத்தியம் என்பதன் அடிப்படையில் உடல் எடை குறைப்பும் சாத்தியம்தான். ‘பேரியாட்ரிக்’ அறுவை சிகிச்சை மூலம் அளவுக்கதிகமான உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்வை சாத்தியப்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுபோன்ற சிகிச்சைகள் உயிரைப் பறித்துவிடும் என்கிற கருத்தும் பரவலாக இருக்கிறது. அதனை உறுதிப்படுத்துவது போல் இச்சிகிச்சை மேற்கொண்ட சிலர் உயிரிழக்கவும் செய்திருக்கின்றனர்.

ஆனால், அந்த உயிரிழப்பு வேறு காரணங்களால் நிகழ்ந்தது என்று விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. உடற்பருமன் இன்றி வாழ என்னதான் தீர்வு? பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை குறித்து இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் விளக்கமாகவே பதில் சொல்கிறார். ‘‘Morbid obesity என்று சொல்லக்கூடிய, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உடற்பருமன் கொண்டவர்களுக்குத்தான் இச்சிகிச்சை தேவைப்படும். இதன் நோக்கம், உடற்பருமனால் ஏற்படும் மரணத்திலிருந்து காப்பதுதானே தவிர மரணத்தை ஏற்படுத்துவதல்ல. ‘பேரியாட்ரிக்’ அறுவை சிகிச்சை மீது பலருக்கும் தவறான புரிதலே இருக்கிறது. இது உடல் எடை குறைந்து அழகாகத் தெரிவதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சை என்றே நினைக்கிறார்கள்.

இச்சிகிச்சை மரணத்துக்கு வழிவகுக்கும் என்பது போன்ற தவறான எண்ணங்களும் விதைக்கப்பட்டிருக்கிறது. முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உடற்பருமனாக உள்ள அனைவருக்கும் இச்சிகிச்சை வேண்டியதில்லை. இச்சிகிச்சைக்கென உலக சுகாதார நிறுவனம் பல விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அதன்படி உயரத்துக்கேற்ற எடை இருக்கிறதா? எனக் கணக்கிடும் BMI (Body Mass Index)ஐப் பொறுத்து சிகிச்சை அளிக்கக் கோருகிறது. அதாவது 160 சென்டி மீட்டர் உயரம் கொண்டவர்கள் 60 கிலோ எடை கொண்டிருப்பது சராசரி. ஆசியர்களுக்கு BMI 23.5 புள்ளிஇருப்பது சராசரியான அளவு. ஆனால், அதுவே 37.5 புள்ளியைத் தாண்டும்போது இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இது உடலில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும். சர்க்கரை, ரத்தக்கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னையுடன் கூடிய உடற்பருமனை co- morbidity என்று கூறுவோம். இந்த நிலையில் இருப்பவர்கள் 32.5 BMI இருந்தாலே இச்சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. உடற்பருமன் ஏற்படுவதற்கு முறையற்ற உணவுப் பழக்கமும், உடற்பருமனை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்புமே காரணம். எனவே இச்சிகிச்சையில் இரைப்பையைச் சிறியதாக்கி அதை சிறுகுடலுடன் 150 செ.மீ. தள்ளி இணைத்து விடுவோம்.
இதன்மூலம் அளவுக்கதிகமாக உணவு உட்கொள்ள முடியாது. 15 இட்லி சாப்பிடுகிறவர்களால் இச்சிகிச்சைக்குப் பின் 2 இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது.

தவிர உடற்பருமனை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பும் குறைந்துவிடும் என்பதால் எடை குறையும். இவ்வளவு உயரம் உள்ளவர்கள் இவ்வளவு கிலோ இருக்கலாம் என்கிற சராசரி எடையை விட 90 கிலோ அதிகம் உள்ளவர்களுக்குக் கூட இச்சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் ரிஸ்க் அதிகம். 90 கிலோவுக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு செய்வதில் எந்த ரிஸ்க்கும் இல்லை. அறுவை சிகிச்சைக்கு முன் பலகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பிசியோ தெரபிஸ்டைக் கொண்டு நுரையீரலுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். சிகிச்சை தொடங்குவதற்கு முன்பிருந்து சிகிச்சை முடிந்த பின்பும் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து கொண்டிருப்பார்கள்.

இச்சிகிச்சைக்குப் பிறகு மரணமடைந்தவர்கள் வேறு பிரச்னைக்கு ஆளானவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இச்சிகிச்சை மரணத்தை ஏற்படுத்தும் சிகிச்சை என்கிற தவறான எண்ணத்திலிருந்து வெளி வரவேண்டும். உலக சுகாதார நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உலகில் பல்லாயிரக்கணக்கானோர் இச்சிகிச்சை மேற்கொண்டு நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர்களான வெங்கைய்யா நாயுடு, நிதின் கட்காரி, அருண் ஜேட்லி ஆகியோரும் இச்சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இது போன்ற சிகிச்சை முறைகள் அறிவியல்பூர்வமானதுதானே தவிர அறிவியலுக்குப் புறம்பானதல்ல...’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார்.

உடற்பருமனைக் கட்டுப்படுத்த அறுவை சிகிச்சைதான் வேண்டுமா? நமது வாழ்வியலின் வழியாகவே உடற்பருமன் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றபடி உடற்பருமனைக் குறைப்பதற்குமான வழிகளை விளக்குகிறார் சித்த மருத்துவர் திருநாராயணன். ‘‘மரபுத்தன்மையைப் பொறுத்து மனித உடலை வாதம், பித்தம், கபம் என மூன்றாகப் பிரிக்கலாம். கப உடம்புக்காரர்கள் இயல்பிலேயே உடற்பருமனாக இருப்பார்கள். மற்றபடி ஏற்படும் உடற்பருமனுக்கு முறை தவறிய நமது வாழ்வியலே காரணமாய் இருக்கிறது. உணவு மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்திக் கொண்டாலே உடற்பருமன் ஏற்படாமல் தடுக்க முடியும். கப உடல்காரர்களும் பருமனைக் கட்டுப்படுத்த முடியும்.

கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், தேன், மோர் ஆகிய சாத்வீகப் பொருட்களை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால் இங்கு பல்வேறு வகையான பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக சக்தி கொடுக்கக் கூடிய தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தி உடனடியாக சக்தி அளிப்பவை. அரிசி, கோதுமை போன்ற தானியங்களும், மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகைகளும் இதில் அடக்கம். ஆனால், இதைக் குறைந்த அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது நிதானமாக சக்தி கொடுக்கக் கூடியவை.

கேழ்வரகு, சாமை, தினை, வரகு, சின்ன சோளம், குதிரைவாலி, கருப்பரிசி, சிவப்பரிசி, கவுனி, மாப்பிள்ளை சம்பா, கைக்குத்தல் அரிசி ஆகிய அருந்தானியங்கள் நிதானமாக சக்தியைக் கொடுக்கும். இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. முட்டை, கறி, எருமைப்பால், எருமைத் தயிர் மற்றும் எண்ணெய் பொருட்களை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. மேலை நாட்டு உணவான பீட்சா, பர்கர் ஆகியவற்றைச் சாப்பிடுவதால்தான் உடற்பருமன் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். பால் பேடா, இனிப்புப் பொருட்கள், போண்டா, பஜ்ஜி, சமோசா, கட்லெட் போன்ற இந்திய நொறுக்குத் தீனிகள் கூட உடல் எடையை அதிகரிக்கும். எனவே இதுபோன்ற உணவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.

உடல் உழைப்பு இல்லாதது உடற்பருமனுக்கு முக்கியக் காரணமாகிறது. எனவே, நடைபயிற்சி, வீட்டு வேலைகள் செய்தல், நீச்சல் பயிற்சி, மலையேறுதல், ஜாகிங் போன்றவற்றை இருபாலினரும் மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தில் இருக்கும் போது நொறுக்குத் தீனிகள் அதிகம் சாப்பிடத் தோன்றும். Compulsive eating எனப்படும் இது போன்று கட்டாயத்துக்காக உணவு உட்கொள்வதை நிறுத்த வேண்டும். பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். கள்ளி முளையான் போன்ற சில மூலிகைகள் பசியைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையவை. புளிச்சக் கீரை, கொடம்புலி, கோக்கம் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் பசியைக் கட்டுப்படுத்தும்.

உடலில் ரத்தசோகை இருந்தாலும் உடற்பருமன் ஏற்படும். இரத்த சோகையைத் தீர்க்கும் மாதுளை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பேரீச்சை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் இது போன்ற உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளும்போது உடற்பருமனைத் தடுக்க முடியும். அப்பிரச்னைக்கு ஆளானவர்களுக்கு மேற்சொன்ன மூலிகைகள் மருந்துகளாகக் கிடைக்கின்றன. அதனை உட்கொள்ளலாம். ஆராய்ச்சி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அந்த மருந்துகளால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. பல காரணங்களால் உடல் எடை கூடுகிறது. அது என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.

அதன்பின் மருத்துவ ஆலோசனையுடன் உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்...’’ என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன். உடற்பருமனுக்கான சிகிச்சை எப்படி அவசியமோ அதை விட உடற்பருமன் ஏற்படாத வகையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதும் அவசியம். ‘பேரியாட்ரிக்’ அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் உங்கள் குடும்ப டாக்டரிடம் ஒன்றுக்கு இருமுறை ஆலோசனை கேளுங்கள்.