நல்லதோ... கெட்டதோ ‘ஸ்கெட்ச்’ சரியா இருந்தா, வேலை பக்காவா நடக்கும்!



- மை.பாரதிராஜா

காதுகளில் கவர்ந்திழுக்கும் ப்ளாக் ஸ்டட்ஸ், கழுத்தில் கறுப்புக் கயிறு, ஆள்காட்டி விரலில் அம்சமான மோதிரம், காஸ்ட்லியான கட்டம் போட்ட சட்டை என பக்கா வடசென்னைக்காரன் லுக்கில் ஸ்டைலீஷாக அசத்துகிறார் விக்ரம். பக்கத்தில் ஜிமிக்கி கம்மலும், ஜிகுஜிகு ஹோம்லியுமாக புன்னகைக்கிறார் தமன்னா. எடிட்டர் ரூபனின் எடிட் ஷூட்டில் பரபரக்கிறது ‘ஸ்கெட்ச்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள். ‘வாலு’ படத்தையடுத்து விஜய் சந்தர் இயக்கும் படமிது. ‘‘இந்த ‘ஸ்கெட்ச்’ எனக்கு ரெண்டாவது படம். நான் இயக்குற படங்கள்ல டைட்டிலுக்கும் படத்தோட கதைக்கும் ரொம்பவே தொடர்பு இருக்கணும்னு நினைப்பேன். கதை தோணுறப்பவே கேரக்டர்களும் டைட்டிலும் மைண்ட்ல முடிவாகிடும்.

அப்படித்தான் ‘வாலு’ அமைஞ்சது. அடுத்து ‘ஸ்கெட்ச்’. நான் பார்த்து, பழகின மனிதர்களை, சூழல்களை மனசுல வச்சுத்தான் இந்தக் கதையை எழுதினேன். எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணி பண்றவங்க வாழ்க்கையில எப்பவும் ஜெயிக்கறாங்க. அதுக்கு நிறைய உதாரணங்களை நம்மால சொல்ல முடியும். அழகான ஒரு பொண்ணுகிட்ட காதலை சொல்றதுக்குக் கூட ஸ்கெட்ச் போட்டு, ஐ லவ் யூ சொல்றவங்களும் இங்க இருக்காங்க. கெட்ட விஷயங்கள் பண்றவங்களும் ஸ்கெட்ச் போட்டு பண்ணத்தான் செய்றாங்க. நல்லதோ... கெட்டதோ, ‘ஸ்கெட்ச்’ சரியா இருந்தா, வேலை பக்காவா நடக்கும்!’’ எடிட் கரெக்‌ஷன் வேலைகளுக்கு pause கொடுத்துவிட்டு, பேட்டிக்கு ஸ்கெட்ச் போடுகிறார் இயக்குநர் விஜய் சந்தர்.

உங்க ரெண்டாவது படமே, விக்ரம்..? ஆமா. நான் அதிர்ஷ்டசாலி. பெரிய பெரிய டைரக்டர்களோட ஒர்க் பண்ணினவர் அவர். நாம சொன்ன விஷயத்தை நமக்கே திருப்பிக் கொடுப்பார். இயக்குநருக்கான நடிகர் அவர். வடசென்னையில சில இடங்கள்ல கேரவன் கூட போக முடியாத குறுகலான தெருக்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம். விக்ரம் சார், கேரவன் கூட போகாமல் மானிட்டர் பக்கத்துலேயே இருந்து நடிச்சுக் கொடுத்தார். எப்பவும் என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். அவரோட ஸ்பீடு, எனர்ஜியாலதான் ஒரே மூச்சுல ஷூட் முடிச்சிட்டோம். படத்துல ரெண்டு பாடல்கள் எழுதியிருக்கேன். அதாவது விக்ரம் சார்தான் என்னை எழுத வச்சிருக்கார். இதுல ‘கனவே கனவே...’ பாடலை விக்ரம் சாரே பாடியிருக்கார்.

ஓபனிங் பாடல் ‘அச்சி புச்சி...’யை தாய்லாந்துல ஷூட் பண்ணினோம். 150 டான்ஸர்கள், 1500 துணை நடிகர்கள்னு கலர்ஃபுல்லா வந்திருக்கு. விக்ரம் சார் போட்டோகிராஃபில எக்ஸ்பர்ட். ஸ்டில் மன்னன்னு கூட சொல்லுவேன். ஷூட்டிங் பிரேக்ல கேமராவும் கையுமா கண்ணுல தென்படுற அழகழகான விஷயங்களை ஷூட் பண்ணிட்டே இருப்பார். புரொஃபஷனல் போட்டோஷூட் மாதிரி அவ்வளவு பிரமாதமா இருக்கும். என்னைக் கூட அழகாக ஒரு படம் எடுத்துக் கொடுத்திருக்கார். நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரம் சாரோட ஸ்ரீமன் நடிச்சிருக்கார். இதுல விக்ரம் சாரோட முதல் முறையா சூரி சேர்ந்திருக்கார். வடசென்னை கதைகள் நிறைய வந்திருக்கு. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்?

நிஜம்தான். வடசென்னையில் வசிக்கும் மக்கள்னாலே அங்கே விளிம்புநிலையில் உள்ளவங்களே அதிகம், அங்கே இருக்கறவங்க எல்லாருமே கஷ்டப்படுறாங்கனு நினைச்சிட்டிருக்கோம். அவங்க அப்படி இருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சு. பொருளாதாரத்தில் இருந்து லைஃப் ஸ்டைல் வரை எல்லாமே இம்ப்ரூவ் ஆகியிருக்கு. இப்போதுள்ள அந்த மக்களை, சூழலின் ஒரு பகுதியை அப்படியே பதிவு பண்ணியிருக்கேன். இந்தக் கதைக்காக பல வருஷம் உழைச்சிருக்கேன். வடசென்னை மக்களோடு மக்களா பழகி, அவங்களோடவே வாழ்ந்து இந்தக் கதையை ரெடி பண்ணினேன். விக்ரம் சாருக்கு இந்தக் கதை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. நல்ல கேரக்டர்களை தேடிப்பிடிச்சு பண்றவர் அவர். அவரே இம்ப்ரஸ் ஆனதும் அடுத்தடுத்த வேலைகளை உடனே ஆரம்பிச்சிட்டோம்.

அவருக்கு ஜோடியா தமன்னா நடிக்கறாங்க. ‘வந்தா மல’ படத்துல நடிச்ச ஸ்ரீபிரியங்கா இதுல ஒரு அழகான ரோல் பண்றாங்க. இவங்க தவிர சூரி, மெஹலி, ராதாரவி, ஸ்ரீமன், அருள்தாஸ், வேலராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ், மலையாள நடிகர் பாபுராஜ்னு கதைக்கான கேரக்டர்கள் நிறையவே இருக்காங்க. வில்லன் நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்களேன்னு உங்களுக்கு தோணும். நம்ம லைஃப்ல இவர்தான் வில்லன் என்று யாரையுமே செலக்ட் பண்ணிட முடியாது. அந்த திருவாளர் வில்லன் வாழ்க்கையில எங்க வேண்டுமானாலும் இருக்கலாம். வடசென்னையில் உள்ள பலரும் காரசாரமா இருப்பாங்க. அதனால அங்க பலரையும் பகைத்துக்கொள்ள வேண்டிய தேவை இயல்பாகவே அமையலாம்.

அதனாலேயே நிறைய வில்லன்கள் படத்துல இருக்காங்க. ஆனா, முக்கியமான ஒரு விஷயம், சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும்தான் எப்பவுமே வில்லனா அமையும். அப்படி என்ன சந்தர்ப்பம் என்பதை காதல், மோதல், ஆக்‌ஷன், காமெடி கலந்து சொல்லியிருக்கேன்.என்ன சொல்றாங்க தமன்னா? கதையை கேட்ட முதல் நாள்ல இருந்தே தமன்னா, கேரக்டராகவே மாறிட்டாங்க. வடசென்னையில் நான் நிஜமாகவே பார்த்து ரசித்த ஒரு கேரக்டரை அப்படியே இதுல பிரதிபலிக்கிறாங்க. ‘நான் ஒவ்வொரு நாளும் ரசிச்சு பண்ணின படம் ‘ஸ்கெட்ச்’’னு ட்விட்டர்ல கூட அவங்க மனசு விட்டு சொல்லியிருந்தாங்க. அவ்வளவு இம்ப்ரஸ் ஆனதாலோ என்னவோ எத்தனை டேக் போனாலும், முகம் சுளிக்காம நடிச்சுக் கொடுத்தாங்க.

இதுல அவங்க காலேஜ் பொண்ணா ஹோம்லியிலேயும் அசத்தியிருக்காங்க. அவங்க விக்ரமோட வர்ற ரொமான்ஸ் சீன்ஸ் ரொம்பவே கலர்ஃபுல்லா வந்திருக்கு. டெக்னீஷியன்ஸ்..? ஒரு படத்திற்கு ஸ்டார் காஸ்ட் எவ்ளோ முக்கியமோ அவ்ளோ முக்கியம் நல்ல டெக்னீஷியன்ஸ் அமையறது.   இசையமைப்பாளர் தமனும் நானும் நெருங்கிய நண்பர்கள். அதனால ஒவ்வொரு பாடலும் இப்படித்தான் வேணும்னு அவர்கிட்ட கேட்டு வாங்க வேண்டிய அவசியம் ஏற்படலை. தன்னோட படமா நினைச்சு, எனக்கு பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார். நாலு பாடல்களும் பிரமாதமா வந்திருக்கு. அதே மாதிரி சுகுமாரோட கேமரா, வடசென்னையை கண்ணு முன்னாடி கொண்டு வந்திருக்கு. முதல் நாள் ஷூட் அன்னிக்கே சுகுமார்கிட்ட நான் எதிர்பார்க்கற ஸ்டைலை சொல்லிட்டேன். அதை அப்படியே கொண்டு வந்திருக்கார். படத்தோட ப்ளஸ்ஸே  திரைக்கதைதான்.

படு ஸ்பீடான ஸ்கிரிப்ட் இது. எடிட்டர் ரூபனுக்கு எக்கச்சக்க வேலைகள் சேர்ந்திருக்கு. தாணு சாரோட சகோதரர்கள் மகன்கள் பார்த்திபன், தினா இந்த படத்தை தயாரிக்கறாங்க. ஆக்சுவலா ‘வாலு’ முடிச்ச கையோடு ‘டெம்பர்’ படத்தை தொடங்கியிருக்கணும். ஆனா, டேக்ஆஃப் ஆகலை. அப்படி ஒரு சூழல்லதான் பார்த்திபன், தினா எனக்கு அறிமுகமானாங்க. அவங்களை புரொட்யூசர்ஸ்னு சொல்றதை விட நண்பர்கள்னு சொல்றதுதான் சரியா இருக்கும். தாணு சார் இந்தப் படத்தை வெளியிடப் போறார். ‘ஸ்கெட்ச்’ என்னை நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்னு நம்புறேன்!