மதுரை வீரன் குலேபகா வலி வீரபாண்டிய கட்டபொம்மன் ஆயிரத்தில் ஒருவன் அடிமைப் பெண் முதல் காலா வரை!சினிமா காலணிகளின் எக்ஸ்பர்ட் D.J. குமாருடன் ஒரு சந்திப்பு

தலைப்பை கவனமாகப்படித்துவிட்டீர்களா? நல்லது. இந்தப் படங்களில் ஹீரோ, ஹீரோயின் உட்பட நடிகர்கள், நடிகைகள் பயன்படுத்திய செருப்புகள், பெல்ட் போன்ற அத்தனை தோல் பொருட்களையும் உருவாக்கியவர் சாட்சாத் D.J. குமார்தான். “எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கலைஞர், என்டிஆர் என எல்லா பிரபலங்களுக்கும் நான்தான் செருப்பு செய்து தருவேன். சில்க் ஸ்மிதாவுக்கு நான் டிசைன் செய்த செருப்புகள் மிகவும் பிடிக்கும்...’’ என்று அதிரடியாக ஆரம்பித்தார் பெரியவர் குமார்.

‘‘என் அப்பா, நான், என் மகன், இப்போது என் பேரன் என மூன்று தலைமுறைகளாக நாங்கள் சினிமாவுக்கு செருப்பு உள்ளிட்ட தோல் பொருட்கள் சப்ளை செய்துவருகிறோம். அப்பா சேலம் மாடர்ன் தியேட்டரில்தான் சினிமா வேலை செய்தார். ‘குலேபகாவலி’ தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான படங்களுக்கு வேலை செய்துள்ளோம். இப்போது ‘காலா’ பட போஸ்டரில் சூப்பர் ஸ்டார் அணிந்திருக்கும் செருப்பை உருவாக்கியதும் நாங்கள்தான்!’’ என்ற குமார், பழைய நினைவுகளில் மூழ்கினார்.

“இப்போது நினைத்தாலும் பெருமையாக உள்ளது. முதலமைச்சர்களே என் செருப்புக்காகக் காத்திருந்த காலம் அது. இன்றைக்கு எல்லாமே மாறிடுச்சு. ஆனால், இன்றும் சினிமாவுக்குத் தேவையான தோல் சார்ந்த உடைகள், செருப்புகளை எங்கள் குடும்பமே செய்து கொண்டிருக்கிறது. அப்பா 50களில் சேலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பவ்யமான மனிதர். ஆனால், தனக்கு உண்டான மரியாதை கிடைக்கவில்லை என்றால் அடுத்த விநாடியே அங்கிருந்து கிளம்பிவிடுவார். ‘சர்வாதிகாரி’ படம் முடிந்த நேரத்தில் ஏதோ ஒரு பிரச்னை காரணமாக அங்கிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார்.

எம்ஜிஆருக்கு செல்லப் பிள்ளை மாதிரி இருந்தார். ‘நல்லா படி. உனக்கு இந்தத் தொழிலே வேண்டாம்’ என்று என்னிடம் சொல்வார். அப்பாவுக்கும் அதுதான் ஆசை. எனக்குப் பல தோல் கம்பெனிகளில் வேலை வாய்ப்பும் வந்தது. ஆனால், சின்ன வயதில் இருந்தே அப்பாவின் தொழிலைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது. இதையே கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.

எம்ஜிஆரிடம் வேலை விஷயமாக மறுத்துப் பேசி சண்டை எல்லாம் போட்டிருக்கிறேன். அப்போதைக்கு கடிந்துகொண்டாலும் பிறகு எப்போது பார்த்தாலும் வாஞ்சையோடு பேசுவார். என்மீது அவ்வளவு அன்பிருந்தது அவருக்கு. அதை நான் தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. அப்பாவாகட்டும் நானாகட்டும் அவரிடம் தனிப்பட்ட முறையில் உதவி என்று எப்போதுமே போய் நின்றதில்லை. கேட்டால் கொடுக்காதவர் அல்ல; கேட்காமலே கொடுக்கக் கூடியவர்தான்.

அது என்னவோ அவருடைய நெருக்கம் ஒன்றே போதும் என்று இருந்துவிட்டோம். அதுவே நிறைவாகவும் இருந்தது. ‘பாகுபலி’ படத்தில் வேலை செய்ய அழைத்தார்கள். ‘படம் முழுக்க வேலை செய்ய வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க, இல்லை என்றால் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன். தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்துகொண்டு வருகிறோம். எங்களுக்கு அதற்கான மரியாதை முக்கியம் என்று நினைத்தோம். ஆனாலும் அந்தப் படத்தில் வேலை செய்ய முடியாமல் போனது வருத்தமான விஷயம்தான்...’’ என்று சொல்லும் குமார், முன்பு போல் இந்தத் தொழில் இல்லை என்கிறார்.

‘‘இப்போது போட்டி அதிகமாகிவிட்டது. எங்கள் தனித் தன்மை என்னவென்றால் நாங்கள் செருப்புகளை பசை கொண்டு ஒட்டுவது இல்லை. கைகளாலேயே தைக்கிறோம். அதேபோல, சினிமாவுக்குத்தானே என தரமில்லாமல் செய்வதும் இல்லை. இதனால், மற்றவர்களைப் போல எங்களால் விலை வைக்க முடியாது. இதைப் புரிந்தவர்கள் இப்போதும் எங்களிடம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் என்னிடம் மூலப்பொருட்கள் வாங்கிக்கொண்டு போய் தரமில்லாமல் தயாரித்துக் கொடுத்து என் பெயரைக் கெடுக்கிறார்கள்.

இதனால் பல படங்கள் எங்கள் கையைவிட்டுப் போயிருக்கின்றன. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘பாட்ஷா’, ‘சூரியன்’ போன்ற படங்களிலும் ‘சந்திரமுகி’, ‘காஷ்மோரா’, ‘அயன்’, ‘அனேகன்’, ‘ரெமோ’ என சமீபத்திய படங்களிலும் நான் வேலை பார்த்திருக்கிறேன். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு கமல் கேரக்டருக்காக ஸ்பெஷல் ஷூ ஒன்று ரெடி செய்தோம்.

அதுபோலவே ‘அன்பே சிவம்’ படத்தில் கமல் சார் அணியும் ஷூவும் நாங்கள் தயாரித்ததுதான். ‘ஹேராம்’ படம் முழுக்க என்னுடைய லெதர் வேலைகளைப் பார்க்கலாம். ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ போன்ற வித்தியாசமான படங்களிலும் வேலை செய்திருக்கிறேன். இப்போது என் மகன் சதீஷும் இதே தொழிலுக்கு வந்திருக்கிறான்...’’ என்று பெரியவர் குமார் முடிக்க, தொடர்ந்தார் சதீஷ்.

‘‘ஹவாயில் இந்திய சினிமா உடைகள் குறித்த கண்காட்சி ஒன்றை அமைத்துள்ளார்கள். அதில் இந்திய உடைகள் வடிவமைப்பாளர் பட்டியலில் அப்பாவின் பெயர் மூன்றாவதாக உள்ளது. அப்பா செய்த ஹாலிவுட் ஸ்டைல் உடை ஒன்றை அங்கே பார்வைக்காக வைத்துள்ளார்கள். அப்பா செய்த தொழிலை இன்னும் விரிவாக்கி ஆன்லைன் வியாபாரமாக விரிவுபடுத்த வேண்டும் என்பது என் ஆசை.

எங்களிடம் செருப்புகள், ஷூக்கள் வாங்குபவர்கள் இவ்வளவு தரமான காலணிகள் இன்று கிடைப்பது அரிது எனப் பாராட்டுகிறார்கள். கோலிவுட் ஸ்டார்ஸ் மட்டுமல்ல, பாலிவுட்டில் ராஜ் குமார், ராஜேஷ் கண்ணா, ஷாருக்கான் போன்றவர்களோடும் அப்பா வேலை செய்திருக்கிறார். இவை எல்லாம் எங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த பெரிய கெளரவம்.

தாத்தாவும் அப்பாவும் கஷ்டப்பட்டு சேர்த்த பெயரை நல்லவிதமாக காப்பாற்ற வேண்டும். அவர்கள் உருவாக்கிய பேட்டர்ன்களை எல்லாம் கணிப்பொறியில் ஏற்றியிருக்கிறேன். ஆன்லைன் மூலம் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதான் இப்போதைக்கு என் இலக்கு...’’ பொறுப்பாகப் பேசுகிறார் சதீஷ்.

- ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்