Blue Whale ஐ விட மோசமான கேம் இருக்கு!‘‘எங்க படத்தோட டீஸரைப் பார்த்தீங்களா ப்ரோ? பார்த்திருந்தாலும் பரவாயில்ல. இன்னொரு முறையும் பாருங்க. இதுவரை 17 லட்சம் பேர் பார்த்து செம வைரலாக்கிட்டாங்க. சந்தோஷமா இருக்கு..!’’ சொல்லிக் கொண்டே, மொபைலில் ‘கீ’ படத்தின் டீஸரை ப்ளே பண்ணுகிறார் காளீஸ். ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா நடிக்கும் ‘கீ’ படத்தின் அறிமுக இயக்குநர். இயக்குநர்கள் மித்ரன் ஜவஹர், செல்வராகவன் ஆகியோர்களிடம் வித்தை கற்றவர்.

‘‘அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி ஜீவா சார்கிட்ட இந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் ப்ளஸ் ஃபேமிலி சப்ஜெக்ட்டை சொன்னேன். அவருக்கு பிடிச்சிடுச்சு. ‘தயாரிப்பாளரைத் தேடி அலைய வேண்டாம். நானே சொல்றேன்’னு அவரே நிறைய தயாரிப்பாளர்களை சந்திக்க வைச்சார். ஒவ்வொரு தயாரிப்பாளரும் கதையில் இம்ப்ரஸ் ஆகி இப்பவே ஆரம்பிச்சிடலாம்னு கமிட் பண்ணிடுவாங்க. அப்புறம் ஒரு ஆறு மாசம் எந்த பேச்சும் அவங்ககிட்ட இருக்காது.

படத்தை ஆரம்பிக்கறதுக்கான எந்த முயற்சியையும் அந்த தயாரிப்பாளர்கள் எடுக்க மாட்டாங்க. இப்படியே கிட்டத்தட்ட பத்து தயாரிப்பாளர்களையாவது பார்த்திருப்பேன். ஒரு கட்டத்துல பொறுமை இழந்துட்டேன். ‘ஒரு நல்ல படம் பண்ணணும்னா, இப்படி சோதனைகளை கடந்துதான் வரணும் பாஸ்’னு ஜீவா சார்தான் என்னை தேத்துவார்.

இந்தப் படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சாரையும் ஜீவா சார்தான் அறிமுகப்படுத்தினார். போன வருஷம் ஷூட் தொடங்கினோம். இடையில் ரூபாய் நோட்டு பிரச்னைனால கொஞ்சம் தாமதம் ஆச்சு. அப்புறம் சமாளிச்சு, மறுபடியும் டேக் ஆஃப் ஆகி, இப்ப ஃப்ரெஷ்ஷா வந்திருக்கோம்...’’ படத்தின் ரிலீஸ் வேலைகளுக்கிடையே புன்னகைக்கிறார் காளீஸ்.

அதென்ன ‘கீ’..?
இந்த டைட்டில்ல படத்தோட ஒன்லைனே அடங்கியிருக்கு. தொல்காப்பியத்துல ‘கீ’க்கு ஓர் அர்த்தமிருக்கு. ‘எவ்வளவு நன்மைகள் உண்டோ, அவ்வளவு தீமைகளும் உண்டு’னு தொல்காப்பியம் சொல்லுது. கம்ப்யூட்டர்ல இருக்கற ஒரு keyயை அழுத்துறதால எவ்வளவு நல்லது நடக்குமோ அவ்வளவு கெட்டதும் நடக்கும் என்பதுதான் ஒன்லைன்.

இந்த உலகமே வியக்கற இன்டர்நெட்னால எவ்வளவு நன்மைகள் உண்டோ அவ்வளவு கெடுதல்களும் இருக்கு. இன்னிக்கு குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை நம்ம எல்லார் கையிலும் நெட் கனெக்‌ஷனோட மொபைல் போன் இருக்கு. உங்ககிட்ட இன்டர்நெட் வசதி இருக்குன்னா... நீங்க இந்த உலகத்தை பார்த்திட்டிருக்கீங்கனு மட்டுமில்ல... இந்த உலகமும் உங்களை பார்த்திட்டிருக்கு! நீங்க எப்ப அழுவீங்க? எப்ப சிரிப்பீங்க? எப்ப ஐ லவ் யூ சொல்வீங்கனு யாரோ உங்களை உன்னிப்பா கவனிச்சிட்டே இருக்காங்க. அவங்க பார்வையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

இப்ப பரபரப்பாக பேசப்படுற ப்ளூவேல் கேமை விட ஒரு மோசமான விளையாட்டை சொல்லியிருக்கோம். டெக்னாலஜி எவ்ளோ சொல்லியிருக்கோமோ அவ்வளவுக்கு நம்ம ரிலேஷன்ஷிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். நாங்க இந்தப் படத்தோட ஷூட் தொடங்கும் போது ப்ளூவேல் பத்தி இங்க யாருக்கும் தெரியாது. இப்ப அந்த விபரீதம் எல்லாருக்குமே தெரியும்.

இந்தக் கதையில் அதைவிட ஒரு மோசமான விளையாட்டு இருக்கு. அது தெரியவரும் போது உங்களுக்கே ஷாக்கா இருக்கும். படத்துல ஜீவா சார் தவிர நிக்கி கல்ரானி, அனைகா சோதி, ‘குயிக் கன் முருகன்’ ராஜேந்திர பிரசாத் சார், சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலானு நல்ல ஸ்டார் காஸ்ட் இருக்காங்க. ‘கவண்’ அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு பண்றார். விஷால் சந்திரசேகர் இசையமைச்சிருக்கார். சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் ஷூட் முடிச்சிருக்கோம்.

ஜீவா உங்களுக்கு இவ்வளவு தோள் கொடுக்க என்ன காரணம்?
கதை மீது அவருக்கு இருந்த நம்பிக்கைதான். இதுல அவர் கம்ப்யூட்டர் ஹேக்கர் ப்ளஸ் காலேஜ் ஸ்டூடண்ட். அவர் வர்ற சீன்ஸ் எல்லாம் டெக்னிகல்லா இருக்கும். அவர் டெடிகேஷன் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். ஒரு சீன் சொன்னா, ‘காளீஸ் இப்படி பண்ணலாமா? அப்படி பண்ணலாமா?’னு ஐந்தாறு வெரைட்டில நடிச்சுக் காட்டுவார். சில ஷாட்கள்ல அவர்கிட்ட ஒன்மோர் கேட்க தயக்கமா இருக்கும்.

ஆனா, என் முகத்தைப் பார்த்தே, ‘ஒன் மோர் போயிடலாம் காளீஸ்’னு அவரே ரெடியாகிடுவார்.  ஜீவாவோட அப்பாவாக ராஜேந்திர பிரசாத் நடிச்சிருக்கார். அவர் சீனியர் ஆக்டர். ஜீவா காம்பினேஷன்ல அவர் நடிக்கற ஷாட் அப்ப கூட, எனக்காக ஜீவாவே அவர்கிட்ட பேசி, ஒன்மோர் போக வைச்சிடுவார். ஜீவாவோட நண்பரா ஆர்.ஜே.பாலாஜி வர்றார்.

என்ன சொல்றார் ராஜேந்திரபிரசாத்?
ஜீவாவோட அப்பா கேரக்டருக்கு ஃப்ரெஷ்ஷா ஒரு ஆக்டர் இருந்தா வித்தியாசமா இருக்கும்னு நினைச்சேன். சாய்ஸ் தேடினப்ப ராஜேந்திர பிரசாத் கிடைச்சார். ஒரு காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினவர். அவர் நடிச்ச ‘குயிக் கன் முருகன்’ நமக்கு இன்னமும் ஞாபகத்துல இருக்கு. தமிழ் நல்லா பேசுறார். தமிழ் இண்டஸ்ட்ரி மீது ரொம்ப மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கார்.

நிக்கி கல்ரானி... அனைகா..?
நிக்கி இதுல காலேஜ் ஸ்டூடண்ட். ஜீவா - நிக்கி காம்பினேஷன் நல்லா வந்திருக்கு. நிக்கிக்கு க்ளாமர் கிடையாது. பர்ஃபாமென்ஸ் முக்கியத்துவம் உள்ள ரோல். இன்னொரு ஹீரோயின் அனைகா சோதி, ‘காவியத்தலைவன்’ல நடிச்ச பொண்ணு. க்ளாமரும் பர்ஃபாமென்ஸுமா அசத்தியிருக்காங்க. அவங்க மும்பையிலிருந்து சென்னைக்கு ஷூட் வரும்போதே டயலாக்கையும் மனப்பாடம் பண்ணிட்டு வருவாங்க.

இன்டர்நெட் வளர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனா, நீங்க பயமுறுத்துற மாதிரி தெரியுதே?
நோ. நம்மைச் சுத்தியிருக்கும் உலகத்துல இப்படி ஒரு விஷயம் இருக்கு... பார்த்து சூதானமா, எச்சரிக்கையா நடந்துக்குங்கன்னு உஷார் படுத்துறோம். ப்ளூவேல் கேம் விளையாடி ஒரு வயதான பெரியவர் யாரேனும் இறந்திருந்தா, அதோட விபரீதத்தை உணர்ந்திருக்க மாட்டோம். குழந்தைகளும் சிறுவர்களும் அந்த கேமை விளையாடி தற்கொலை செய்ய முயற்சி பண்ணினதாலதானே பயப்பட ஆரம்பிச்சோம்? ஆனா, அந்த விளையாட்டை விடவும் ஒரு மோசமான கேமை சொல்லியிருக்கோம். 

உங்களப் பத்தி சொல்லுங்க?
சொந்த ஊரே நம்ம சென்னைதான். எம்சிஏ. முடிச்சிருக்கேன். ‘யாரடி நீ மோகினி’ல ஜவஹர் சார்கிட்ட ஒர்க் பண்ணினேன். அப்படியே செல்வராகவன் சார் படங்கள் கிடைச்சது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட அவர்கிட்ட நாலைந்து படங்கள் ஒர்க் பண்ணிட்டேன். செல்வராகவன் சார்கிட்ட நிறைய விஷயங்கள்க கத்துக்கிட்டேன். சின்னச் சின்ன விஷயத்தைக் கூட என்கரேஜ் பண்ணுவார். அவரை மாதிரி தனித்துவமான இயக்குநரா பெயரெடுப்பேன்.

- மை.பாரதிராஜா