கவிதை வனம்




மேய்ச்சல்

பருவ மழையால் உயிர்த்திருக்கும்
வண்டல் பூமிக்கு ஆடுகளை
மேய்ச்சலுக்கு அழைத்துவந்தவள்
கையோடு பீடியிலை தட்டையும்
எடுத்து வந்திருக்கிறாள்
காற்றின் தீண்டலில்
ஒற்றைப் பனையோலையில்
தேங்கியிருந்த மழைநீர் சிதறி தூத்தலாக
அவள் கன்னத்தில் இறங்குகிறது
எங்கோ தூரத்தில் அவளுக்கு பிடித்த பாடல்
பண்பலையில் ஒலிக்க
கத்திரிப்பூ பாவாடை விலக்கி
கரண்டை கால் கொலுசை தட்டுகிறாள்
பீடியிலை வாச கிறக்கத்தில்
மேயத் தொடங்குகின்றன வெள்ளாடுகள்

- வே.முத்துக்குமார்

பயம்

தொலைக்காட்சியில்
பேய்ப்படத்தின் திகில் காட்சி
வரும்போதெல்லாம்
பொம்மையின் கண்களையும் சேர்த்து
மூடுகிறது குழந்தை

- கு.வைர சந்திரன்