சர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் அசாமிய சினிமா!



ஹாலிவுட், பாலிவுட் என அகில உலகமே பில்லியன்களில் காசு பார்க்கும் பேராசையில் கமர்ஷியல் மசாலாக்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்க, மண் மணத்துடன் எடுக்கப்பட்ட அசாம் திரைப்படம் ஒன்று புகழ் பெற்ற கனடாவின் டொரன்டோ திரைப்பட விழாவில் சைலன்டாகப் பங்குபெற்று சாதித்திருக்கிறது.

படத்தின் இயக்குநரான ரீமாதாஸ், ஒன் வுமன் ஆர்மியாக ‘வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்’ படத்தை எடுத்திருப்பது ஆச்சரியம். மும்பை நாடகங்களிலும், மாடலாகவும் பணியாற்றிய ரீமாதாஸ், தன் சினிமா அனுபவங்களை வைத்தே ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படத்தை
இயக்கியிருக்கிறார்.

படத்தின் லொக்கேஷன், அவரது கிராமமான காம்ரூப். நடிகர்களும் அந்த கிராமத்தினர்தான். கிராமத்தில் வசிக்கும் சிறுமி துனுவுக்கு கிடார் இசைக் கலைஞராவது கனவு. விதவைத் தாய், கூலி வேலை செய்யும் சகோதரன் என வறுமைச் சூழலில் அவளது கனவு நிஜமானதா என்பதைச் சொல்லும் படம்தான் ‘வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்’.

‘‘முழு நீளப் படத்தை என்னால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை முதலில் கிடையாது. படத்திற்கான முதல்கட்ட வேலைகளை நான்கு மாதங்கள் டைம்டேபிள் போட்டு முடித்த பின்பே, கான்ஃபிடன்டாக படத்திற்கான லொக்கேஷன்களைத் தேடினேன்...’’ எனப் புன்னகையுடன் பேசுகிறார் ரீமாதாஸ். 2014ம் ஆண்டு நடிகர்களுக்கு ரிகர்ஸல் முடிந்தவுடன் தொடங்கிய படத்தின் ஷூட்டிங், மூன்று ஆண்டுகளில் 150 நாட்கள் நடந்து முடிந்திருக்
கிறது.

‘‘நான்கு நாட்கள்தான் ரிகர்சல் பார்த்தோம். தினசரி காட்சி களை எடுக்கும்போதே இம்ப்ரூவ் செய்வதால், படப்பிடிப்பே வொர்க்‌ஷாப் போலத்தான் நடந்தது...’’ எனப் படத்தின் சீக்ரெட்ஸை சொல்கிறார் ரீமா. சிறுவயதிலிருந்தே பாலிவுட் சினிமாக்களை தூர்தர்ஷனில் கண்டு வந்ததால் சினிமா மீதான ஆர்வம் இயல்பாகவே ரீமாவுக்கு இருந்தது. தன் இளங்கலைப் படிப்பை குவகாத்தியின் காட்டன் கல்லூரியில் படித்தவர் புனேவில் சோஷியாலஜி படிப்பை முடித்தார்.

2002ல் மும்பைக்கு பஸ் ஏறியவர், நாடக நடிப்பு, மாடலிங் என்று செயல்பட்டார். எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே, அசாமுக்குப் போய் இயக்குநராக முடிவெடுத்தார். ‘‘திரைப்படப் பள்ளியில் சினிமா கற்கவில்லை என்பது உண்மைதான். நான் என் சுய அனுபவங்களின் வாயிலாகப் படங்களை உருவாக்க நினைத்தேன். சினிமாவை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யாரும் திரைப்படப் பள்ளியில் பட்டம் பெற்றவர்கள் அல்ல. இன்று ஆர்வம் இருந்தால் இணையத்தில் சினிமா குறித்து சகலமும் கற்க முடியும்...’’ என நம்பிக்கை விதைக்கிறார் ரீமா.

2009ம் ஆண்டு ‘Pratha’ என்ற குறும்படத்தை இயக்கியவர், 2011ல் ‘Antardrishti’ என்ற முழுநீளப் படத்தை கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அத்தனைக்கும் தில்லாக பொறுப்பேற்று 33 நாட்களில் உருவாக்கினார். இந்தப் படத்துக்கு கேமரா, எடிட்டிங் அத்தனையும் கிராமத்தினரின் பங்களிப்பே. கமர்ஷியலாக படம் ஜெயிக்காவிட்டாலும் தனிப்பட்ட திருப்தி, சுதந்திரம் கிடைத்ததில் அவருக்கு மகிழ்ச்சியே.

‘‘இன்றைய இயக்குநர்கள் படத்தில் கதை சொல்வதை முற்றிலும் புதிய ஸ்டைல்களில் முயற்சிக்கிறார்கள். பார்வையாளர்களின் விருப்பங்களைத் தாண்டி தமது கதைகளை நேர்த்தியாக உருவாக்கு கிறார்கள்...’’ என்கிறார் ‘வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்’ படத்தில் நடித்துள்ள நாடக நடிகரான குலாடா பட்டாச்சார்யா.

அசாம் மொழி படங்களுக்கான விளம்பரம், வணிகம் ஆகியவற்றில் இன்னமும் பற்றாக்குறை உள்ளது என்பது அசாமிய திரைப்பட ஆர்வலர்களின் ஆதங்கம். இந்த நிலை மாற வேண்டும் என்பதே நமது விருப்பமும்.ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியான கலாடியா கிராமம் ரீமாதாஸ் போன்றோரின் முயற்சியால்தான் அசாமிய திரைப்படங்களின் சொர்க்கபுரியாக மாறிவருகிறது.     

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்!

அசாமில் துனு என்ற 10 வயதுச் சிறுமி தன் விதவைத் தாய் மற்றும் அண்ணனோடு வசித்து வருகிறார். அவருக்கு எதிர்காலத்தில் கிடார் இசையில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை. தன்னுடைய கிராமத்து நண்பர்களை ஒருங்கிணைத்து மியூசிக் பேண்ட் அமைப்பதே லட்சியம். சின்னச் சின்ன வேலைகள் செய்து குடும்ப பாரத்தை ஏற்கிறாள் துனு.

கணவனை இழந்த விதவைப் பெண்ணைக் காட்டி துனுவை அவள் அம்மா வேலைக்குச் செல்ல தூண்டும் காட்சி, வெள்ளத்தில் விளைச்சல் இழந்த அம்மாவுக்கு துனு தன் உண்டியலில் கிடார் வாங்க வைத்திருக்கும் தன் சேமிப்பை கொடுக்கும் காட்சி, துனு மற்றும் அவளின் பிரிய ஆடு முனு வரும் காட்சி, துனு பெரியவளாவது, இறுதியில் தன் மகளுக்காக வாங்கிய கிடாரை கையில் வைத்தபடி அவளின் தாய் நடந்துசெல்லும் காட்சி... என மனதை நெகிழவைக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் அநேகம்.

அசாமிய சினிமா

மொத்தமாக 82 தியேட்டர்களைக் கொண்டுள்ள அசாமிய மொழி சினிமாவின் பெயர் ‘ஜாலிவுட்’. 1935ம் ஆண்டு ஜோதி பிரசாத் அகர்வாலா என்ற இயக்குநரின் ‘Joymoti’ என்ற படம்தான் அசாமிய சினிமாவின் முதல்படம். பாபேந்திரநாத் சைகியா, ஜானு பருவா ஆகிய முத்திரை இயக்குநர்களால் அசாம் சினிமா மெல்ல முன்னேறி வருகிறது. உள்ளூர் மொழியில் எடுத்தாலும் பாலிவுட் சாயல் அசாமிய படங்களில் அதிகம் உண்டு. முக்கிய பட நிறுவனங்கள் ASFFDC, AM Television, Dolphin Films Pvt. Ltd. 

2016ம் ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 21. பாக்ஸ் ஆபீஸ் வருமானம் ரூ.5 கோடி. வடகிழக்கு மாநில இளைஞர்களை திரைப்படத்துறையில் ஊக்குவிக்கும்விதமாக பிரம்மபுத்திரா திரைப்படவிழாவை தத்வா கிரியேஷன் என்ற தனியார் அமைப்பு 2013ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.

ச.அன்பரசு