கிச்சன் சினிமா



இந்திய சினிமாவில் இது கான்செப்ட் காலம் போல. குறிப்பாக, கிச்சன் கான்செப்ட் சினிமாக்கள் பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என எல்லா களங்களிலும் கமகமத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியின் ‘செஃப்’, மலையாளத்தின் ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’, ‘அங்கமாலி டையரீஸ்’, தமிழில் ‘உன் சமையலறையில்...’ ஆகிய படங்களே இதற்கு சாட்சி. சரி, சினிமாவில் இப்படி கிச்சன் கான்செப்ட் படம் வருவது இப்போதுதான் புதுசா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

*பழங்கால சமையல் சினிமாக்கள்

சமையல் ஸ்டோரிகள் பழங்காலத்தில் இருந்தே எடுக்கப்படுகின்றன. 1942ம் ஆண்டு ரிலீசான ‘ரொட்டி’ என்னும் மெஹ்பூப்கானின் இந்திப் படமே கிச்சன் சினிமாக்களின் ஆரம்பம். அதன்பின், சத்யஜித்ரேயின் ‘Goopy Gyne Bagha Byne’ என்ற 1969ம் வருட படத்தில் மிகப்பெரிய விருந்துக் காட்சி பிரபலமாக பேசப்பட்டது.

அடுத்து, வங்கப்படத்தின் ரீமேக்கான ‘Bawarchi’ (1972) என்ற படத்தையும் இந்த வரிசையில் குறிப்பிடலாம். என்றாலும் ‘மாயா பஜார்’ தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண சமையல்சாதம்...’ பாடலை எப்போதும் மறக்க முடியாது என்பதை நினைவில் கொள்க!

*ட்ரெண்டி கிச்சன் மூவிஸ்

2012ல் வெளியான ‘Luv Shuv Tey Chicken Khurana’ என்ற படம்தான் நம் காலத்தின் இந்த கிச்சன் கான்செப்டை மறு அறிமுகம் செய்தது. இந்தப் படத்தில் குணால் கபூர், தான் கண்டுபிடிக்கும் சீக்ரெட் சிக்கன் ரெசிபி மூலம் தன் குடும்பத்தின் தாபா பிசினஸையே மீட்டெடுப்பதுதான் கதை.
இதே ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ கமர்ஷியல் ஹிட் ஆனதோடு விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்று பட்டிதொட்டி எங்கும் பின்னிப் பெடலெடுத்தது.

சமையல் என்பதைப் படிப்பு கடந்து அதன் ஆன்மா என்ன என்பதை ஹோட்டல் நடத்தும் தன் தாத்தா திலகன் மூலம் அறிகிறார் நாயகன் துல்ஹர். சுலைமணி கட்டன் சாயா, கோழிக்கோடு சிக்கன் பிரியாணி என ரசனையாக காட்சிப்படுத்தப்பட்ட படம் இது.

தமிழில் 2012ல் வெளியான ‘கலகலப்பு’ படத்திலும் நஷ்டமான நிலையில் ஓடும் ஹோட்டல் ஒன்று பழங்கால சிறுதானிய சமையல்களைச் செய்து ஹிட் அடிப்பதாய் லைன் பிடித்திருப்பார்கள்.

2017 ஆகஸ்டில் ரிலீசான ‘Maachher Jhol’ புகழ்பெற்ற செஃப்பான தேவ் டி, நோயுற்ற தன் அம்மாவின் ஆசைக்காக மீன் கறி செய்து தரப் போராடு
வதுதான் கதையே. ‘‘உணவு என்பது நம் ஆன்மாவோடு இணைந்த நினைவுகளாகவே மாறியவை. உங்கள் பாட்டி உங்களுக்குக் கொடுத்த பாயசம், பர்த்டேயின் போது உங்கள் நண்பர் பரிசாகக் கொடுத்த இனிப்பு என்பதை நீங்கள் கச்சிதமாக ஞாபகம் வைத்திருப்பீர்கள். அதுதான் உணவின் சக்தி...’’ என்கிறார் ‘மச்செர் ஜோல்’ பட இயக்குநரான பிரதிம் டி குப்தா.

‘‘எனது படத்தின் கேரக்டர்கள் இருவரும் படம் முழுக்க நேரில் சந்திப்பதே இல்லை. அவர்களுக்கிடையேயான உறவு தோன்றுவதற்கான ஃபிளாட்ஃபார்ம் உணவு மட்டுமே!’’ என்கிறார் ‘லன்ச் பாக்ஸ்’ (2013) இந்திப் படத்தின் இயக்குநரான ரித்தேஷ் பத்ரா.உணவு அழகாக டெக்கரேட் செய்து இருக்க வேண்டும் என்பது எல்லாம் அவசியம் இல்லை என்பதை முகத்தில் அறைந்தது போல உணர்த்திய மலையாளப் படம் ‘அங்கமாலி டையரீஸ்’.

‘‘உணவை மிகவும் கிளாமராகக் காட்டக் கூடாது என்று நினைத்தோம். அங்கமாலியில் பன்றிக்கறி சாப்பிடும் கலாசாரம், பழக்கம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே படம்பிடித்தோம்...’’ என்கிறார் இப்படத்தின் இயக்குநரான லில்லி ஜோஸ்.படத்தில் பன்றி, முயல், ஏன்-பாம்பு இறைச்சிகூட உண்டு. இந்தப் படத்திலிருந்து வேறுபட்டு அமைந்த படம் ஆதித்ய விக்ரம் சென்குப்தாவின் ‘Asha  Jaoar Majhe’ (Labour of Love).

தினசரி ஆபீஸ் செல்லும் தம்பதிகள் வீட்டுக்கு வந்து மீன்கறி செய்யும் காட்சிகள், மீனை வெட்டுவது, மீதக் கழிவை பூனை சாப்பிடுவது... என இந்திய சினிமாவிலேயே நீளமான சமையல் காட்சிகள் இந்தப் படத்தில்தான் உள்ளன. கருப்பு வெள்ளையில் படம் பிடிக்கப்பட்ட காட்சியை தியேட்டரில் பார்க்கும்போது, நாக்கில் உமிழ்நீர் சுனாமி.

‘‘சில பொருட்களின் மணத்தை மூக்கு நுகர்ந்த அடுத்த விநாடியே நாம் நமது இனிமையான நாஸ்டால்ஜியாவுக்குள் நுழைந்து பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவோம். கிச்சனின் எண்ணெய் தெறித்த சுவர்கூட நம்மை பால்யத்துக்கு கைப்பிடித்து கூட்டிச்செல்வதுதான் அதிசயம்...’’ என வியக்கிறார் இயக்குநர் சென்குப்தா.

*அக்கரை சீமையில்…

கிச்சன் சினிமா என்பது குறிப்பிட்ட நாட்டு படங்களுக்கு மட்டுமேயான தீம் கிடையாது. உலக அளவில் சமையலை மையமாகக் கொண்ட படங்கள் ஏராளமாக உள்ளன. இத்தாலியப் படமான ‘Big Night’ (1996) இரு சகோதரர்களின் வாழ்க்கையைப் பற்றியது. நியூயார்க்கில் தங்களது ஹோட்டலை பரஸ்பர சண்டையுடனே நடத்திவருவார்கள்.

அடுத்து, ஆஸ்கர் வென்ற ‘Babette’s Feast’ (1987) படத்தில் வரும் பிரமாண்ட விருந்துக் காட்சி, ஜப்பானிய ‘Tampopo’ (1985) படத்தில் வரும் சூப் தயாரிப்பு காட்சி ஆகியவை நாவில் எச்சில் ஊறவைக்கும். 1994ம் ஆண்டு வெளியான ஆங் லீயின் ‘Eat Drink Man Woman’ படம் வாழ்க்கை, உணவு இரண்டிலும் ஆர்வம் இழந்த வயதான செஃப் பற்றிய கதை.

ஆசியப் படங்களில் உணவை மையப்படுத்தாத கதை என்றாலும், அதனை முக்கியப்படுத்திக் காட்சியப்படுத்தியது தற்செயல் அல்ல. வாங் கர் வெய் யின் ‘The Mood For Love’ (2000) கதையின் கேரக்டர்கள் சாப்பிடும் வெள்ளைநிற நூடுல்ஸ் கதாபாத்திரங்களின் மகிழ்ச்சியற்ற மனநிலையைக் குறிப்பிடுவது. அதில் திருமதி சான் நூடுல்ஸ் வாங்கும் காட்சியும் அதன் இசையும் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.

*டிவியில் மணக்கும் தொடர்கள்

சமையலின் ஆக்கிரமிப்பு சினிமாவைத் தாண்டி டிவிகளிலும் நீடிக்கிறது. முன்பு, ‘சாப்பிட வாங்க’ என்று அன்போடு அழைத்து வெறும் ரெசிப்பிகளை மட்டும் செய்து காட்டிக் கொண்டிருந்த சின்னத் திரை, விஐபி கிச்சனாக பரிணாமம் பெற்று இப்போது கேம்ஷோக்களாக மாறியுள்ளன.

‘‘இன்று மக்கள் தாம் சாப்பிடும் உணவை நன்கு கவனிக்கத் தொடங்கியுள்ளார்கள். அதுதான் இந்த நிகழ்ச்சிகளுக்குக் கிடைக்கும் வரவேற்புக்குக் காரணம்!’’ என்கிறார் ‘செஃப்’ பட இயக்குநரான ராஜா மேனன்.

*எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்றாங்க?

‘‘ஐரோப்பிய ஓவியங்களில் நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் எனில் இறைச்சியும் காய்கறிகளும் டேபிளில் கச்சிதமாக வைக்கப்பட்டிருக்கும். அதற்கு வளமை, பேராசை என இரு அர்த்தங்கள் உள்ளன...’’ என்கிறார் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் திரைப்படத் துறை துணைப் பேராசிரியரான மதுஜா முகர்ஜி.

இறைச்சி சாப்பிடுவது, உணவை வீணாக்குவது ஆகியவற்றை ‘ரொட்டி’ படத்தில் மெஹ்பூப்கான் காட்சிப்படுத்தியிருப்பது குறித்தும் குறிப்பிடுகிறார் இவர். ‘‘நிறைய படங்களில் உணவு என்பது காதல் அல்லது செக்ஸ் வழியில் ஆண்மைக்கான பிரசாரமாக எடுக்கப்படுகின்றன!’’ என்கிறார் ‘Film and Culture: Genre Study’ நூலாசிரியர் ஜேம்ஸ் ஆர்.கெல்லர்.