நான் சினிமாவை நேசிக்க காரணமே கௌதம் மேனன்தான்!



இது நரகாசூரன் ஸ்பெஷல்

‘துருவங்கள் பதினாறு’ இயக்குநரின் அடுத்த சிக்ஸரான ‘நரகாசூரன்’ ஷூட்டிங், இப்போது ஊட்டியின் அடர்ந்த காடுகளில் பரபரக்கிறது. மீண்டும் விறுவிறு சஸ்பென்ஸ் த்ரில்லர் ரூட்டில் பயணிக்கும் கார்த்திக் நரேன், இந்த முறை அரவிந்த்சாமி, சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமார், ஸ்ரேயா என மிரட்டும் காம்போவுடன் கைகோர்த்திருக்கிறார்.

‘‘எப்பவுமே முதல் பட இயக்குநருக்கு அவரோட ஃபர்ஸ்ட் படம் ரொம்பவே ஸ்பெஷல்தான். ‘துருவங்கள் பதினாறு’ எனக்கு அவ்ளோ பாராட்டுக்களை வாங்கிக் கொடுத்துச்சு. படம் ரிலீஸானப்ப நிறைய தியேட்டர்களுக்கு விசிட் போயிருந்தோம். ஆடியன்ஸ் அத்தனை பேருமே ரசிச்சு ரசிச்சு படத்தைப் பார்த்தாங்க. சின்னச் சின்ன விஷயங்களை மனம் திறந்து சிலாகிச்சாங்க.

‘துருவங்கள் பதினாறு’க்காக நான் தயாரிப்பாளர் தேடி அலையற கஷ்டத்தைப் பார்த்து எங்க அப்பாவே படத்தை தயாரிச்சார். படத்தைப் பார்த்துட்டு, ‘கார்த்திக், உன் மேல நான் வச்சிருந்த நம்பிக்கை வீண்போகலைடா’னு கட்டிப்பிடிச்சு பாராட்டினார்.அதே மாதிரி நான் ரொம்பவே மதிக்கிற ஷங்கர் சார், ‘D-16 a well made suspense thriller, with strong belief n d script. cheers to dir karthick n d team’னு ட்விட்டியிருந்தார். அதுவும் நியூ இயர் அன்னிக்கி இப்படி ஒரு பாராட்டு கிடைச்சது...’’ ஊட்டி குளிரில் சந்தோஷத்துடன் வெடவெடக்கும் இயக்குநர் கார்த்திக் நரேன், இந்த முறை கௌதம்மேனனுடன் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

‘‘முதல் படத்தை அப்பாவே தயாரிச்சிருந்தார். அதனால நான் நினைச்சதை நேர்மையாகவும், துணிச்சலாகவும் படமாக்க முடிஞ்சது. இப்ப கௌதம் மேனன் சாரோட இணைந்து தயாரிக்கறேன். அவரும் அதே நேர்மையான ட்ரீட்மென்ட்டை எதிர்பார்க்கறவர் என்பதால், இன்னும் ப்ளஸ் ஆகிடுச்சு.

சினிமாவை நான் இவ்ளோ நேசிக்க காரணமே கௌதம்மேனன் சார் படங்கள்தான். அவரே, ‘கார்த்திக், உன்னோட படம் பார்த்தேன். பிடிச்சிருந்தது. உங்க அடுத்த படத்தை நான் தயாரிக்க ரெடியா இருக்கேன். உங்ககிட்ட கதை ரெடியா?’னு மெசேஜ் பண்ணியிருந்தார்.

அவர்கிட்ட இருந்தும் அப்படி ஒரு ஸ்வீட் மெசேஜ் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா, அவரே இதை தயாரிக்க முன்வந்திருக்கறது அவ்ளோ சந்தோஷம்.
அப்ப நான் மூணு கதைகள் ரெடி பண்ணி வச்சிருந்தேன். அதில் ரெண்டாவதா உள்ள ஸ்கிரிப்ட்தான் ‘நரகாசூரன்’. இது வேற லெவல் சஸ்பென்ஸ் த்ரில்லர்...’’ மூன்றாவது ஷெட்யூலின் பரபரப்புக்கு இடையிலும் நிதானம் இழக்காமல் இருக்கிறார் கார்த்திக் நரேன். 
யார் அந்த ‘நரகாசூரன்’..?

அது சஸ்பென்ஸ். டைட்டிலைப் பார்த்துட்டு, தீபாவளி கொண்டாடுறோமே... அந்த நரகாசூரனானு விசாரிக்கறாங்க. அதெல்லாம் இல்லை. இந்த நரகாசூரன் கேரக்டர் பேசப்படும். மொத்த படப்பிடிப்பையும் 41 நாட்கள்ல முடிக்கணும்னு திட்டம்போட்டு ஓடிட்டிருக்கோம். மேக்கிங்ல ‘டி16’ பேசப்பட்டது மாதிரியே இதுவும் அசத்தும்.

அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமார், ஸ்ரேயா சரண், சந்தீப்கிஷன், ஆத்மிகானு ஒரு சஸ்பென்ஸ் மூவிக்கான சரியான சாய்ஸா நினைச்ச ஆர்ட்டிஸ்ட்கள் இந்த ஸ்கிரிப்ட்டுக்கு கிடைச்சிருக்காங்க. ‘து-16’ படம் அப்பவே அரவிந்த்சாமி சார் பண்ணினால் சரியா இருக்கும்னு விரும்பினேன். அதுக்கான முயற்சிகளும் நடந்தது. ஆனா, சந்தர்ப்பங்கள் அமையல.

படம் ரிலீஸ் ஆனபிறகுதான் இணைந்தோம். அரவிந்த்சாமி சாரும் என்னோட படத்துல நடிக்க விருப்பத்தோட இருந்தார். அவரோட கேரக்டரை சொன்னா கதை தெரிஞ்சிடும். ரொம்ப ஸ்டிராங் ரோல் பண்றார். டவுன் டு எர்த்தா பழகுறார். ஸ்ரேயாவும் ஃப்ரெண்ட்லி ஹீரோயினா இருக்காங்க.
என்ன சொல்றார் மலையாள நடிகர் இந்திரஜித்..?

என்னோட ஒளிப்பதிவாளர் சுஜித் சரங்கும் இன்னும் சில டெக்னீஷியன்களும் மலையாளத்தில் ‘ஏஞ்சல்’ படத்துல ஒர்க் பண்ணியிருக்காங்க. அதில் ஹீரோ இந்திரஜித் சுகுமார். அதில் இருந்து சுகுமார் சாரோட ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்தாங்க. அப்படித்தான் எனக்கு இந்திரஜித் சாரோட நட்பு கிடைச்சது.

இந்த ஸ்கிரிப்ட் எழுதும் போதே அவரை நினைச்சுதான் பண்ணினேன். சுஜித் மூலமா இந்திரஜித்கிட்ட பேசினால், அவர் ‘டி.16’ பார்த்திருக்கேன். மிரட்டலா இருந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவை கவனிக்கறேன். இளைஞர்கள் கலக்குறாங்க’னு மடமடன்னு தமிழ்ல சொல்றார்.
‘தமிழ்ல நடிக்க கேட்டு நிறைய ஆஃபர்ஸ் வருது. ஆனா, நான் எதிர்பார்க்குற கேரக்டர் இப்பதான் கிடைச்சிருக்கு’னு சொன்னார். அவரது தம்பி பிருத்விராஜ் தமிழ்ல நிறைய படங்கள் நடிச்சிருந்தாலும், சுகுமார் இங்கே ஒருசில படங்கள்தான் நடிச்சிருக்கார்.

அதேமாதிரி சந்தீப் கிஷன். தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணியிருந்தாலும், ‘மாநகரம்’ல அவரோட ஆக்டிங் எனக்கு பிடிச்சிருந்தது. அவர்கிட்ட பேசும்போது வேறொரு ஷூட்டிங்கிற்காக கோவாவில் இருந்தார். அங்கே போய் அவர்கிட்ட கதையை சொன்னேன். உடனே ஓகே சொல்லிட்டார்.
ஸ்ரேயா தவிர ஆத்மிகானு இன்னொருத்தரும் நடிக்கறாங்க. ஆத்மிகா ரோலுக்கு நிறைய நடிகைகள் தேடினோம். ஆடிஷன் வச்சோம். யாருமே செட் ஆகலை.

அப்படியொரு சூழல்லதான் ஆத்மிகா, ஆடிஷனில் ஜெயிச்சு வந்தார். தமிழ் பேசத் தெரிஞ்சவர் என்பது ப்ளஸ். முதல் படத்துல உள்ள டெக்னீஷியன்ஸ்தான் இதிலும் இருக்காங்களா..? கிட்டத்தட்ட அதே டீம்தான். கேமராமேன், எடிட்டர்னு பெரும்பாலான டெக்னீஷியன்ஸ் அதில் ஒர்க் பண்ணினவங்கதான். புதியவர் ரோன் யதன் யோஹன் இசையமைக்கிறார்.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு பாடல்கள் வேகத்தடையா அமையும் என்பதால் பாடல்கள் தேவைப்படலை. ஆனா, பின்னணி இசை ரொம்ப முக்கியம். அது பேசப்படணும் என்பதில் தெளிவா இருந்தேன். எலெக்ட்ரானிக் இசைக்கருவிகளைப் பயன்படுத்தாமல் வெறும் ஆர்கானிக் இன்ட்ஸ்ட்ரூமென்ட்தான் பயன்படுத்தணும்னு ரோன்கிட்ட கேட்டுக்கிட்டேன். அவரும் அதையே ஃபீல் பண்ணினார்.

எங்க தயாரிப்பாளர் கௌதம்மேனன் சார், ‘டி16’ அப்போ, ‘Happy to be a chapter in the journey of a brilliant young filmmaker!’னு பாராட்டியிருக்கார். ‘நரகாசூரன்’ ரிசல்ட் பார்த்து இன்னும் நிறைய பாராட்டுவார்னு நம்புறேன். இந்தப் படத்தோட லைன் புரொட்யூசர் பத்ரி கஸ்தூரி சார் எங்களுக்கு பக்கபலமா இருக்கார்.

இந்தப் படமும் ஊட்டியில் ஷூட்டிங்... சென்டிமென்ட்டா?

இல்ல! என் சொந்த ஊர் ஊட்டி. படிச்சது கோவைலதான். அதனால நான் பார்த்துப் பழகின இடங்கள்ல கதை நடப்பதா எழுதினேன். இப்படி தெரிஞ்ச லொகேஷன்ஸ் வைச்சு ஸ்கிரிப்ட் எழுதறது ஈஸியா இருக்கு. அப்படிதான் ‘நரகாசூரன்’. மத்தபடி நோ சென்டிமென்ட்.