ஓ திக்கு ஏறுதே!



உலகில் உற்பத்தியாகும் விஸ்கியில் 48% இந்தியாவில்தான் விற்பனையாகிறது!

டீமானிட்டைசேஷன் குளறுபடிகள், ஆதார் அலப்பறைகள், ஜிஎஸ்டி வரிச்சுமைகள் என ஒருபுறம் மத்தியில் ஆள்பவர்கள் ட்ராஜிக் காமெடி செய்துகொண்டிருக்க; டெங்கு முதல் வெள்ளம் வரை மக்கள் பிரச்னைகள் எதையும் கண்டுகொள்ளாமல் ‘சின்னம் எனக்கா? கட்சி உனக்கா?’ என மாநிலத்தை ஆள்பவர்கள் பிளாக் ஹியூமர் செய்துகொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்து சிரிப்பதா? அழுவதா? எனத் தெரியாத மக்கள் ‘என்னவோ போடா மாதவா’ என்று விரிசல் விழுந்த வாழ்வை விஸ்கி ஊற்றி ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

குடி, தமிழகத்தின் பொதுக் கலாசாரமாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்று ஐயமாக உள்ளது. மகிழ்ச்சியின் பரவசமோ தோல்வியின் துயரமோ எது என்றாலும் தமிழன் நாடும் முதலிடம் டாஸ்மாக்தான் என்றாகிவிட்டது. புதிய இந்தியாவில் அடுத்த நாளை எதிர்கொள்ள மக்களைக் கடைத்தேற்றுவது மதுதான் என்றால் மிகையில்லை. மதுவிலக்குப் பிரசாரங்களை எல்லாம் புறங்கையால் ஒதுக்கி, உலகில் உற்பத்தியாகும் விஸ்கியில் 48% குடித்து அந்த பிஸினஸை எவரெஸ்ட் உச்சத்துக்கு நகர்த்தியுள்ளார்கள் இந்தியர்கள். விஸ்கி தயாரிப்பில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளோம் நாம்.

தில்லியின் பகாரஞ்சனில் உள்ள தனியார் பாரில் 25 மி.லி. (ஒரு பெக் விஸ்கி) ரூ.50 முதல் 5 ஸ்டார் ஹோட்டல்களில் ரூ. 1,500 (ஸ்மால்) வரை விற்கப்படுகிறது. இதில் அயல்சரக்குகளை உள்நாட்டில் தயாரிக்கும் IMFL பிரிவு உற்பத்தியாளர்களே அதிகம். இதோடு லிமிடெட் எடிஷனில் சிங்கிள் மால்ட் விஸ்கியும் இப்போது ஃபேமஸாகிவருகிறது.‘‘கடந்த 10 ஆண்டுகளாக மதுபானத் துறை சீராக வளர்ந்து வருகிறது. இதில் ராஜாவாகக் கோலோச்சுவது விஸ்கி மட்டுமே...’’ என்கிறார் 1948ம் ஆண்டில் தொடங்கிய அம்ரூத் டிஸ்டில்லர்ஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஜி நிகாம். உற்சாகபானத்திலும் பெண்களுக்கு கோட்டா இல்லாவிட்டால் எப்படி? வோட்கா மார்ட்டினி, கேரி பிராட்ஷா ஆகிய பானங்கள் பெண்களின் ஸ்பெஷல் சாய்ஸ்.

சமூகம், மதம் ஆகிய தடைகளைத் தாண்டி 19 மில்லியன் இளைஞர்கள் இந்த ஆண்டு மது அருந்துவதற்கான சட்டபூர்வ வயதை எட்டியிருப்பது மது நிறுவனங்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தியுள்ளது.‘‘இந்தியாவில் மதுபானத் தேவையின் முதல் சாய்ஸ், IMFLதான். பீர் மற்றும் ஒயின்களைத் தவிர்த்து பிற மதுவகைகளை விற்கும் இந்த மார்க்கெட் மிகப்பெரியது...’’ என சந்தை வாய்ப்புகளைச் சொல்கிறார் நிகாம். 2016ம் ஆண்டு மதுபானச் சந்தை மதிப்பு 1.84 ட்ரில்லியன் டாலர் என்கிறது குளோபல் டேட்டா அமைப்பின் அறிக்கை.

இதில் விஸ்கியின் பங்கு மட்டும் 60%. 2007 - 2017 வரை விஸ்கி நுகர்வு 80.2 மில்லியனிலிருந்து 193.1 மில்லியனாக உயர்ந்துள்ளதை உலக ஒயின் மற்றும் மதுபான ஆராய்ச்சி மையம் (IWSR) வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. இதில், 157 மில்லியன் லிட்டர் விஸ்கியை இந்தியர்கள் அருந்தியுள்ளனர். 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மதுபான நுகர்வு 399 மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடந்த ஆண்டு விஸ்கி நுகர்வு மட்டும் 189.7 மில்லியன் லிட்டர்கள்! இதில் 98.24% விஸ்கி தயாரிப்பு ‘மேட் இன் இந்தியா’ என்கிறார்கள்.

விஸ்கி ரெடி!
பார்லி, சோளம், அரிசி ஆகியவற்றை வெந்நீரில் ஊறவைத்து பெறப்படும் இனிப்பான நீர்மத்திற்கு வோர்ட் என்று பெயர். இந்த நீர்மம் புளிக்கவைக்கும் தொட்டிகளில் நிரப்பப்பட்டு, இதில் உள்ள சர்க்கரையை உடைக்க ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இதுவே பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை டிஸ்டிலேஷன் (ஆவியாதல்) செய்யப்பட்டு, சுவையூட்ட ஓக் பேரல்களில் அடைக்கப்பட்டால் சுதி சுத்தமான விஸ்கி ரெடி. இந்தியாவில் ரெடியாகும் விஸ்கிகளுக்கு மூலாதாரம், சர்க்கரை எடுக்கப்பட்ட கரும்புச் சக்கைகள்தான். நொதித்த மொலாசஸை நீரில் கொதிக்க வைப்பதன் மூலம் ஆல்கஹால் பிரித்தெடுக்கப்படுகிறது. பிறகு இதை ஆவியாக்கும்போது நியூட்ரலான எரிசாராயம் கிடைக்கிறது. இதில் 96% ஆல்கஹால் இருக்கும். IMFLன் தயாரிப்புமுறையான இதில் ஃப்ளேவர், நிறத்துக்கான ஸ்காட்ச் சிறிதளவு சேர்க்கப்பட்டால் பெருமைக்குரிய மேட் இன் இந்தியா விஸ்கி தயார்.  

‘‘தானியம் மற்றும் மொலாசஸிலிருந்து தயாரிக்கப்படும் விஸ்கிக்கு  துல்லியமாக டிஸ்டிலேஷன் செய்வதுதான் வேறுபாடு. மொலாசஸ் என்றால் ஆல்கஹால் துல்லியமாக ஆவியாதல் முறையில் பெறப்படும். ஆனால், தானியத்தில் அது முழுமையாகாமல் பேரல்களில் அடைக்கப்படும்...’’ என்று விவரிக்கிறார் நிகாம். இவரின் அம்ரூத் டிஸ்டில்லர்ஸ், 25 நாடுகளுக்கு மது பானங்களை ஏற்றுமதி செய்கிறது. ஆண்டுக்கு 35 ஆயிரம் லிட்டர் விஸ்கி தயாரிக்கும் நிறுவனம், விஸ்கி பைபிள் கையேட்டில் (2010) மூன்றாவது சிறந்த விஸ்கி நிறுவனமாக இடம்பெற்றுள்ளது.

விஸ்கிக்கும் ரூல்ஸ் உண்டு!
ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்படும் விஸ்கிக்கு ஸ்காட்ச் என்று பெயர். இது ஸ்காட்லாந்து தவிர்த்து வேறு எங்கும் தயாரிக்கப்படுவது இல்லை. மதுபானங்களின் தயாரிப்புக்கு ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளிலும் மிகவும் கட்டுப்பாடான விதிகள் உள்ளன. தயாரிப்பு, சுவை என அனைத்தும் நாட்டுக்கு நாடு மாறுபடும். ஸ்காட்ச் விஸ்கியை மர பேரல்களில் மூன்று ஆண்டுகள் புதைத்து வைக்க வேண்டும். அமெரிக்காவின் பார்பன் விஸ்கிக்கு ஓக் மர பேரல்கள் அவசியம். இந்தியாவின் நியூட்ரல் ஸ்பிரிட் மற்றும் முதல் கிரேட் ஸ்பிரிட் கலந்த விஸ்கி தயாரிப்புக்கும் சில விதிகள் உள்ளன.

2016ம் ஆண்டு இந்திய அரசு மதுபானத்தை வரிக்குட்பட்ட உணவுப்பொருளாக மாற்றி FSSAI பட்டியலில் இணைத்துள்ளது. இந்தியாவில் மதுபானம் ஆவியாதல் வெப்பம் காரணமாக வேகமாக நிகழ்வதால் தயாரித்தவுடன் மர பேரல்களில் அடைக்கப்படாமல் சுடச்சுட விற்பனைக்கு அனுப்பப்பட்டு விடுகிறது. சுவைகூடாத முதிர்ச்சியுறாத விஸ்கி என்பது ஏற்றுமதி மார்க்கெட்டில் மதிக்கப்படுவது இல்லை.

விஸ்கி வரலாறு
இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட ஜென்ரல் டயரின் அப்பா, எட்வர்டு டயர் 1820ம் ஆண்டில் இமய மலையின் காசவ்லி என்ற இடத்தில் விஸ்கி ஃபேக்டரியை அமைத்தார். கடல் மட்டத்திலிருந்து ஆறாயிரம் அடி உயரத்திலிருந்த இந்த இடம், ஸ்காட்லாந்துக்கு நிகரான சூழலும் நீர்வளமும் கொண்டிருந்தது என்பதால், நூறாண்டுகளாக இங்கு தயாரிக்கப்பட்ட குவாலிட்டியான விஸ்கிக்கு செம மவுசு. ஸ்காட்லாந்தில் பார்லி; அமெரிக்காவில் சோளம், கம்பு; ஆசிய நாடுகளில் அரிசி;

இந்தியாவில் கரும்பு எனப் பல்வேறு நாடுகளில் விவசாயப் பொருட்கள் மதுபானத்தின் மூலமாக, உபரி வருமானமாக பயன்பட்டு வருகின்றன. இந்தியாவில் 1947ம் ஆண்டு பெங்களூருவின் விட்டல் மல்லையா, யுனைடெட் புரூவரீஸ் என்ற நிறுவனத்தை வாங்கினார். பின்னாளில் இந்த நிறுவனம் ராயல் சேலஞ்ஜ், மெக்டொவல் No.1 ஆகிய பிராண்ட்களின் மூலம் 60% இந்திய சந்தையைப் பிடித்தது. இப்போது இந்த நிறுவனத்தை டியாஜியோ இந்தியா வாங்கியுள்ளது.

வரிச்சுமையால் தள்ளாடும் தரமான மது
IMFL பிரிவில் மது விற்பனை அதிகரிக்க முக்கியக் காரணம், இறக்குமதி மதுபானங்களின் மீது குவியும் டஜன் கணக்கிலான வரிகள். உள்நாட்டு மதுவகைகளுக்கு மாநில அரசு விதிக்கும் வரிகள் மட்டுமே. ஆனால், இறக்குமதி மதுபானங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரிகள் 150% என்பது பெரும் சுமையாக மாறி, மக்களை எட்டும்போது விலை 500% உயர்கிறது. எனவே தரமான விஸ்கியின் சுவையை அறிவது இந்தியர்களுக்கு எட்டாத ஒன்றாக மாறுகிறது.

‘‘இந்தியாவில் ஸ்காட்ச் விஸ்கிக்கு சுங்க வரி 160%. இப்படி சிக்கலான பல வரிகளை விதிப்பதால், தொழில் வளர்ச்சி இருந்தாலும் பல்வேறு மதுபான நிறுவனங்கள் இந்தியாவைத் தவிர்க்கின்றன. விஸ்கியை மொத்தமாகக் கொள்முதல் செய்து அதனை இந்தியாவில் பாட்டிலில் அடைத்து விற்பது விலையை பெருமளவு குறைக்கும்...’’ என ஐடியா கொடுக்கிறார் பகார்டி நிறுவனத்தைச் சேர்ந்த அன்சுமான் கோயங்கா. 2016 - 2021ம் ஆண்டில் மதுபான உற்பத்தியில் இந்தியா 5.1% ஏற்றம் காண வாய்ப்புள்ளது என்கிற குளோபல் டேட்டாவை கணக்கில் கொண்டால், தரமான விஸ்கி நிறுவனங்கள் உள்நாடுகளிலும் உருவாகி உலக அளவில் அணிவகுக்க வாய்ப்புள்ளது.      

விஸ்கி மொழி!
Angel’s Share: விஸ்கியை பேரல்களில் அடைக்கும்போது ஆவியாதலால் ஏற்படும் தோராய இழப்பு இரண்டு சதவீதம். 20 ஆண்டுகள் பழமையான விஸ்கியில் 40 சதவீத இழப்பு ஏற்படும்.
Bottled in Origin: ஸ்காட்ச் விஸ்கி சட்டம் 2009ன்படி, ஸ்காட்ச் விஸ்கியை மொத்தமாக இறக்குமதி செய்து, பாட்டிலில் அடைத்து அந்த நாட்டின் உள்நாட்டு சந்தையில் விற்கிறார்கள். உதாரணம்: வாட் 69, அமெரிக்காவின் Jim Beam.
No Age Statements (NAS): சில விஸ்கிகள் தயாரித்தவுடன் குடித்தால்தான் கிக்காக இருக்கும் என்பதால், தயாரிக்கப்பட்டு எத்தனை நாட்கள் ஆனது என்ற டீட்டெய்ல் லேபிளில் இருக்காது.
Single Malt: பார்லியில் தயாரிக்கப்படும் விஸ்கி, எக்ஸ்க்ளூசிவ்வாக பானை மூலம் டிஸ்டிலேஷன் செய்யப்படுகிறது. இதில் கூடுதலாக காரமல் (E150) நிறத்துக்காக சேர்க்கபடுகிறது. சிங்கிள் மால்ட் அந்தஸ்து பெற, 700 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஓக் பேரலில் மூன்று ஆண்டுகள் விஸ்கி கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.  
Whisky:   ஸ்காட்லாந்து நாட்டினர் உச்சரிக்கும் லீகல் வார்த்தை இதுதான். அமெரிக்கா மற்றும் அயர்லாந்து விஸ்கிகளைத் தவிர்த்து பிற தயாரிப்புகள் இந்தப் பெயரைச் சூடியே ரிலீஸாகின்றன. Whiskey என்பது 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் குடியேறிய அயர்லாந்து அகதிகளால் விஸ்கிக்கு உருவான பெயர். ஐரிஷ் பெயருக்கு, ஸ்காட்லாந்தின் செல்டிக் எழுத்து வடிவம் என்பதால் கூடுதல் ‘e’ இணைந்துள்ளது.

மயக்கும் மது
2016ம் ஆண்டு மதுச்சந்தை  : 1.84 ட்ரில்லியன் டாலர்
2020ம் ஆண்டில் உயரும் மதிப்பு : 2.36 ட்ரில்லியன் டாலர்
மது விற்பனையில் முதலிடம் விஸ்கி: 193.12 மில்லியன் டாலர்

பிற மதுவகைகள் (மில்லியனில்)
பிராந்தி  : (68.85 டாலர்)
ரம்  : (41.31 டாலர்)
வோட்கா  : (7.67 டாலர்)
பிற வகைகள்  : (3.11 டாலர்)

- ச.அன்பரசு