வண்டலூர் zoo



அறிந்த இடம் அறியாத விஷயம்

ஒரு புதன்கிழமை. வார வேலைநாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருக்கும் என நினைத்தோம். ஆனால், ‘வண்டலூர் ஜூ’ இந்த விதிக்கெல்லாம் உட்படாதது. அன்றும் நிறைய கார்கள், பஸ்கள், டூவீலர்களால் பார்க்கிங் களைகட்டியிருந்தது. நுழைவுச்சீட்டு எடுக்க ஒரு கூட்டம். செக்அப் வரிசையில் இன்னொரு கூட்டம். எல்லாவற்றையும் கடக்க, மலையிலிருந்து அழகாய் அருவி விழும் செட்அப் வரவேற்றது. நாற்பது நிமிடத்தில் சுற்றிப்பார்த்து வந்துவிடலாம் என்று நுழைந்தோம். ஆனால், நான்கு கிலோமீட்டர் தூர மிருகக்காட்சிச் சாலையை அந்த நேரத்திற்குள் முடித்துவிட முடியுமா என்ன? ‘‘குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் பஸ் ஸ்டாண்ட்  தூரத்துக்கு சமமானது...’’ என்றார் அங்கிருந்த ஒருவர்.

இரண்டு வழிகளே உண்டு. ஒன்று, பூங்காவை வனத்துறையின் பேட்டரி காரில் தரிசிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் பார்வையிட்டு வந்துவிடலாம். அல்லது உள்ளிருக்கும் கட்டண சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜாலியாகச் சுற்றி வரலாம். எங்களுக்கு சைக்கிளே வசதியாக இருந்தது. பெரியவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.15. சிறியவர்களுக்கு ரூ.10. ஆனால், வைப்புத்தொகை சைக்கிள் ஒன்றுக்கு ரூ.200. ‘‘அங்கங்க  நின்னு  போட்டோ எடுப்பேன். சைக்கிளை யாராவது எடுத்திட்டு போய்ட்டா என்ன பண்றது?’’ கொஞ்சம் பயத்துடனே கவுன்ட்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டார் நம் போட்டோகிராபர்.

‘‘இதுவரை திருட்டெல்லாம் போனதில்ல சார்... சைக்கிளை சிலர் மாத்தி எடுத்துட்டுப் போயிடுவாங்க. அதனால ஒண்ணும் பிரச்னையில்ல. தைரியமா எடுத்திட்டுப் போங்க...’’ என்றார் அவர் பதிலுக்கு. சைக்கிள் பயணம் இடதுபக்கத்தில் ஆரம்பித்து வலது பக்கமாக இதே பாதைக்கு வந்து சேரவேண்டும். வட்டவடிவம் போல! குழந்தைகள், பெரியவர்கள் எனக் குடும்பம் குடும்பமாக பலர் நடந்தபடியும், சிலர் சைக்கிளிலும் பறவைகளையும், விலங்குகளையும் ரசித்து வந்தனர். ஆனால், எதையும் ரசிக்காமல் எல்லா இடத்திலும் காதலர்கள் நிறைந்திருந்தனர்! முதலில் வந்தன குரங்கு இனங்கள். நீலகிரி கருமந்திகளைப் பார்த்து குழந்தைகள் குதூகலித்தனர்.

அருகில் அந்தக் குரங்கினம் பற்றிய விவரம் சிறிய தகட்டில் எழுதப்பட்டிருந்தது. அடுத்ததாக சிங்கவால் குரங்கை விசிட் அடித்துவிட்டு எதிர்ப்புறமிருந்த சிம்பன்ஸி பக்கமாகச் சென்றோம். இரண்டு குரங்கில் ஒன்று அதற்கென அமைக்கப்பட்டிருந்த அமைவிடத்தில் படுத்திருக்க, இன்னொன்று அங்கிருந்த கயிற்று ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது. அதுவும் முகத்தை பார்வையாளர்களுக்கு எதிர்ப்புறமாக வைத்தபடி. அதனை நேரடியாகத் தரிசிக்க சிலர் விசில் அடித்தும், கைதட்டவும் செய்தனர். சற்று நேரத்தில் எல்லோரையும் ஏறிட்டுப் பார்க்க, ‘‘ஏய், அதோட மூஞ்சியப்பாரு... உன்ன மாதிரியே இருக்கு...’’ தன்னுடன் வந்திருந்த பெண்ணைப்பார்த்து கலாய்த்தார் இளைஞர் ஒருவர்.

பிறகு செங்குரங்கு, சவானா பபூன், அனுமன் குரங்கு போன்றவற்றுடன் நாட்டுக்குரங்கும் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த கோயமுத்தூர் பெண்மணி, ‘‘அய்ய... இது வூட்டுக்குப் பின்னாடியே அலையுது. இத வேற இங்க தனியா பாக்கணுமாக்கும்...’’ என்றார் சலித்தபடி. அங்கிருந்து இடதுபக்கமாக நகர்ந்தோம். பட்டாம்பூச்சிகளுக்கென தனியே ஒரு பூங்கா. ‘வண்ணத்துப்பூச்சி இல்லம்’ என போர்டு மாட்டப்பட்டிருக்கும் இதன் நுழைவுவாயில், வண்ணத்துப்பூச்சி வடிவிலேயே அமைக்கப்பட்டிருந்தது. இதனுள் வேலைகள் நடப்பதால் அங்கிருந்த செடி, கொடிகளில் பட்டாம்பூச்சிகள் அலைந்து திரிந்தன. நாற்பதுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் இதற்குள் இருப்பதாக ஆவணப்படுத்தி உள்ளனர்.

ஓட்டேரி பக்கமாக பெடலை அழுத்தினோம் ஓட்டேரி என்பது இங்குள்ள நீர்ப்பறவைகள் ஏரி. மழைக்காலம் என்பதால் ஏரி நீர் வழிந்தோடியது. அதில் பாதியளவு மூழ்கியிருக்கும் மரங்களில் விதவிதமான பறவைகள். இதனைக் காண ஏரியின் ஓரமாக பாதையும் அமைத்துள்ளனர். மீண்டும் பின்னோக்கி பறவைகளின் சொர்க்கபுரிக்குள் வந்தோம். இந்திய மயில், வெள்ளை மயில் தோகை விரித்து நிற்க, அதற்கடுத்த வரிசையில் வியக்க வைக்கும் கிளியினங்கள் கிறீச்சிட்டன. நீல மற்றும் மஞ்சள் நிறத்திலான பஞ்சவர்ணக்கிளி, கழுத்தில் சிகப்பு வெட்டுள்ள கிளி, வெளிநாட்டுக் கிளிகள் என ரசிக்க நிறைய கிளி வகைகள் மரங்களில் பரவியிருந்தன.

இதற்கு எதிர்ப்புறத்தில் புள்ளிமான், கடமான், வராக மான், வரையாடுகள் எனப் பலவும் வெட்டவெளியில் அதற்குரிய இடங்களில் உலாவுகின்றன. இதனருகில் சிங்கம் இருப்பதாக ஒரு பலகையைப் பார்த்து சைக்கிளை வேகமாக மிதித்தோம். ஒரு பெரிய கண்ணாடி முகப்பு. அதற்குள் நீர்நாய் நீந்தி வெளி வருவதும், பார்வையாளர்களைப் பார்த்து போஸ் கொடுப்பதுமாக இருந்தது. குன்று போல நீண்ட அந்தப் பகுதியில் மேலேறினால் நீலமான்கள் மூன்று படுத்திருந்தன. அதற்கடுத்து, சிங்கங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்காக ஒரு பரந்த வெளியும், வெளியேறாமல் இருக்க பெரிதாக ஒரு கால்வாயும் வெட்டப்பட்டிருந்தது.

அங்கே ஒரு சிங்கம் மட்டுமே சுற்றியது. ‘ஐந்து இருப்பதாக சொன்னார்களே...’ என எட்டிப் பார்த்தோம். தூரத்திலேயே போடப்பட்டிருக்கும் கம்பி வேலிகளால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. சிங்கங்களை அருகில் கண்டு களிக்க பிரத்யேக வாகனம் மூலம் ‘சிங்க உலாவிடம்’ என்ற கான்செப்ட்டில் பார்வையாளர்களை அழைத்துச் செல்கின்றனர். இதற்கு பெரியவர்கள் ரூ.50; சிறியவர்கள் ரூ.30 தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். இன்னொரு பக்கத்தில் வங்கப்புலி அடைக்கப்பட்டிருந்தது. பத்து நிமிடமாக அங்கே நின்றோம். ‘‘வங்கப்புலி வெளியே வா... கமான்... கமான்...’’ என ஒரு சிறுமி பலமாகக் கத்தினாள். நிறைய பேர் புலிகள் போல உறுமிச் சத்தம் கொடுத்தனர்.

சிலர் மரத்தில் எங்கேயாவது உட்கார்ந்திருக்கிறதா என உற்றுப்பார்த்து ஒலி எழுப்பினர். எதற்கும் மசியவில்லை புலி. அதைப் பார்க்காமல் சோகத்துடனே பலரும் திரும்பினார்கள். அடுத்து சிறு கரடிகளையும், இமாயல கருங்கரடிகளையும் ரசித்தோம். இதற்கடுத்து காட்டுக்கழுதை, கழுதைப்புலி, ஓநாய், மரநாய் என பல விலங்கினங்களின் இருப்பிடங்கள் வந்தன. தொடர்ந்து செங்கால்நாரை, பூநாரை, செந்நிற கூழைக்கடா என கோடியக்கரை சரணாலயப் பறவைகளையும், வேடந்தாங்கல் பறவைகளையும் கண்டுகளித்தோம்.

பிறகு, வங்கக்கழுகு, வெண்முதுகுக் கழுகு, கள்ளப்பருந்து என விதவிதமான கழுகுகள்... இவற்றில் சில பச்சை மாமிசத்தைக் கொத்தியபடி நின்றன. இவை வேட்டைப் பறவையின் கீழ் வருபவை. ‘‘பாஸ், புலி போட்டோ எடுக்க முடியலையே...’’ போட்டோகிராபர் வருத்தப்பட... அந்தப் பக்கமாக வந்த இளைஞர் ஒருவர், ‘‘சார், அந்தாண்ட நிறைய புலி இருக்கு. போங்க...’’ என வழிகாட்டினார். அனிதா, ப்ரீதா, சுனிதா, சங்கீதா என நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டிய பெண் புலிகள் ஒரு கூண்டிலும், அதற்கு வெளியே மூன்று ஆண் புலிகளும் வலம் வந்தன. கூடவே, ஒரு வெள்ளைப் புலி. இவற்றின் உறுமல் பீதியைக் கிளப்பியது

‘‘ஜோர்ஜ்... இவிடே நிறைய புலியுண்டு, சீக்கிரம் வரணும்...’’ பேட்டரி காரிலிருந்து இறங்கிய ஒரு மலையாளப் பெண்மணி தன் கணவரை வேகமாக வரும்படி அழைத்தார். இன்னொரு பெண் அங்கிருந்த பலகையில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பைப் படித்துவிட்டு தன் மகளிடம், ‘‘சுனிதா... புலிக்கு உன்ட பெயர்டா!’’ எனச் சிரித்தார். சிறுத்தைகளைப் பார்த்துவிட்டு ‘ஊர்வன’ பகுதிக்குள் ஊர்ந்தோம். ஆமைகள், பாம்புகள், உடும்புகள், முதலைகள்... எல்லாவற்றையும் ரசித்துவிட்டு வெளியே வரும் வழியில் ஒற்றை யானை ஓடோடி வந்தது. 

இங்கே நான்கு யானைகள் உள்ளன. யானை சேற்றை வாரும் இடம், குளிக்கும் இடம் போன்ற போர்டுகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை யானைக் குளியலையும், பிறகு உணவளித்தலையும் கண்டு ரசிக்கலாம். நிறைவில், நைல் நீர்யானை, தீக்கோழி, ஒட்டகச் சிவிங்கி, வரிக்குதிரை, மீன் இனங்கள் என அடுத்தடுத்து உயிரினங்கள் பாதையைக் கடந்துசெல்ல, வெளியேறும் இடம் வந்து சேர்ந்தது. எல்லோரும் வெளியேற எத்தனிக்க, குழந்தைகள் மட்டும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தனர். இது அவர்களின் உலகம்.

வரலாறு
*ஆங்கிலேயர் ஆட்சியில் மருத்துவராக இருந்த எட்வர்ட் பால்ஃபோர், 1855ம் ஆண்டு இந்த மிருகக்காட்சிச் சாலையை உருவாக்கினார்.
*1850ல் மெட்ராஸ் மியூசியத்தை பால்ஃபோர் உருவாக்கியபோது உயிருள்ள புலி, சிறுத்தைக் குட்டிகளைப் பார்க்க கூட்டம் அதிகரித்திருக்கிறது. அதுதான் புதிதாக ஒரு விலங்கியல் பூங்கா உருவாக முக்கிய காரணம்.
*1854ல் நவாப் ஆஃப் கர்நாடிக்கிடம் (ஆற்காடு நவாப்) அவர் பராமரித்த பிராணிகளை மியூசியத்திற்கு தரும்படி வலியுறுத்தினார். அடுத்த ஆண்டே 300 விலங்கினங்களோடு மியூசியத்தினுள் மிருகக்காட்சிச் சாலை உருவானது.
*விலங்கினங்கள் அதிகரிக்க, 1861ல் சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே இருந்த ‘பீப்பிள்ஸ் பார்க்’கின் ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்தியாவில் பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்ட முதல் ‘ஜூ’ இதுதான்.
*மீண்டும் இடநெருக்கடி ஏற்பட, 1976ல் நகருக்கு வெளியே ஓர் இடத்தை ஒதுக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. தமிழ்நாடு வனத்துறைக்குட்பட்ட வண்டலூர் ரிசர்வ் ஃபாரஸ்டில் 1265 ஏக்கர் ஒதுக்கப்பட்டு ஏழரைக் கோடி ரூபாயில் அதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.*1985ல் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் திறந்து வைத்தார்.
*2001ல் மேலும் 228 ஏக்கர் பரப்பில் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் உருவாக்கப்பட்டது.

பொதுத்தகவல்கள்
*இந்தியத் துணைக்கண்டத்தில் இதுதான் மிகப்பெரிய ஜூ.
*பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன... என 2551 உயிரினங்கள் உள்ளன.
*சுமார் 250 அரசு ஊழியர்களும், 140 ஒப்பந்தப் பணியாளர்களும் இதனைப் பராமரிக்கின்றனர்.
*விலங்கினங்கள் காடுகளில் வாழ்வது போல் இயற்கைச் சூழலில் வசிப்பதுதான் இதன் சிறப்பம்சம். யானைகளுக்கு மட்டுமே 20 ஹெக்டேர் ஒதுக்கியிருக்கிறார்கள்.
*விலங்குகள் உணவுக்கு வருடத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய்
செலவிடுகிறார்கள். ஆண்டு வருமானம் சுமார் பத்து கோடி ரூபாய்.
*வருடத்திற்கு சுமார் 24 லட்சம் பேர் பார்வையிடுகின்றனர். வார இறுதிநாட்களில் சுமார் 7 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். காணும் பொங்கல் அன்று மட்டும் 70 ஆயிரம் பேர் வருகின்றனர்.
*தினமும் ஒருவேளை மட்டுமே விலங்குகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. காலநிலைக்குத் தகுந்தாற்போல உணவைத் தருகிறார்கள்.
*கால்நடை மருத்துவர்கள், எக்ஸ்ரே முதல் சர்ஜரி வரை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை எல்லாம் உள்ளேயே இருக்கின்றன. விலங்குகளின் பிறப்பு, இறப்பு பற்றிய பதிவுகளும், மற்ற தகவல்களும் சேகரிக்க உயிரியியலாளர்களும் பணியில் இருக்கின்றனர்.
*மாமிச உண்ணி விலங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் உணவு எதுவும் போடாமல் ‘உண்ணாவிரதம்’ இருக்கச் செய்கிறார்கள். காரணம், விலங்குகள் காடுகளில் அலைந்து திரியும் போது தினமும் இரை எடுப்பதில்லை. ஒருமுறை வேட்டையாடி எடுக்கப்படும் உணவால் இரண்டு மூன்று நாட்களுக்குக் கூட பசிக்காமல் இருக்குமாம். அந்தச் சூழலை உணர வேண்டும் என்பதற்காக இப்படியான ஏற்பாடு.
*காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50. 5இலிருந்து 12 வயது வரை உள்ளவர்
களுக்கு ரூ.20. பேட்டரி கார் பயணம் பெரியவர்களுக்கு ரூ.100. சிறுவர்களுக்கு ரூ.50. செவ்வாய் வார விடுமுறை என்கிறார்கள் உயிரியியலாளர்கள் மணிமொழியும், சேகரும்.

பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்