அப்பாவுக்கும் மகனுக்குமான உறவுலதான் வாழ்க்கையே அடங்கியிருக்கு...



‘‘எப்பவும் ஒரு கலைஞனை அவனோட வயசு, அனுபவம், பக்குவம்னு ஏதாவது ஒண்ணு அடுத்தடுத்து எடுத்துட்டுப் போயிட்டே இருக்கும். எமோஷனலான மேக்கிங்கா வேற ஏரியாவுக்குப் போற சினிமா என கனவா இருக்கு. வாழ்க்கையை இன்னும் அர்த்தப்படுத்துவதற்கு சினிமா மீதான என் காதலை சொல்லணும்னு நினைச்சேன். அறிந்ததையும், உணர்ந்ததையும் என் அடுத்த தலைமுறைக்கும் கொடுத்துவிடவே துடிக்கிறேன். அப்படியான ஒரு இடத்தின் மத்தியில்தான் ‘பள்ளிப் பருவத்திலே’ இருக்கு. கதைக்காக அங்கே இங்கே ஓடலை. நான் பிறந்த இடமான ஆம்பலாபட்டு கிராமத்துல கண்டு உணர்ந்த கதை, ஊருக்கு வெளிச்சம் கொடுத்த வாத்தியார், தன் மகனை சரியான இடத்தில் வைக்கத் தவறிய கதை.

குழந்தைகளுக்கு மட்டுமே நிலா அருகில் இருக்குமாம். வளர வளர... நிலா தூரமா உயரத்துக்கு போயிடுமாம். அப்படி ஒண்ணுக்குள் ஒண்ணா பக்கத்தில் இருக்கிற இரண்டு இளம் இதயங்களின் கதையும் உள்ளே இருக்கு. இப்பவும் கிராமத்துக்கு பக்கம் கோயிலுக்கு கைப்பிள்ளையைத் தூக்கிட்டுப் போய் ‘ஆத்தாளைக் கும்பிட்டுக்க... தாத்தாவைக் கும்பிடு’ன்னு கடவுளையே உறவுமுறை சொல்லிக் கொண்டாடுகிற பழக்கம்தான் இருக்கு. அப்படி உறவுகளையும், அன்னியோன்யமா சொல்றது ‘பள்ளிப் பருவத்திலே’ படம்...’’ பக்குவம் நிரம்பிப் பேசுகிறார் டைரக்டர் வாசுதேவ் பாஸ்கர். அனுபவம் சரமாரியாக வார்த்தைகளில் தெறிக்கிறது.

ஆழ் மனதில் இருந்த கதை போலிருக்கு...
உண்மைதான். இன்னிக்குப் பாருங்க பட்டுக்கோட்டை மாவட்டம் கல்வியில் ரொம்ப முன்னேறியிருக்கும். பொருளாதாரம் வரைக்கும் நிறைஞ்சு இருக்குற இடம். எந்தப் பக்கம் போனாலும் ஜல்லிக்கட்டு, பதநீர், ஈசல் பிடிக்கிறதுன்னு அப்படியே மனசுக்குள் இருக்கிறமாதிரி இருந்த கதை. எங்க ஊர்ல இருந்த ஆசிரியர் சாரங்கன் அப்படி அசலா இருந்தார். கண்டிப்பு, ஆர்மி மாதிரி கட்டுப்பாட்டை கொண்டு வந்து நிறுத்தி, எல்லாருக்கும் கல்வியின் அருமையை சொல்லித் தந்தவர். அப்படிப்பட்டவர் தன் மகனின் வாழ்க்கையை கவனித்தாரா? அவன் உள்ளக்கிடக்கையை உணர்ந்தாரா? பதினேழு வயது மகனின் பெளதீக மாற்றங்கள் அவருக்குப் புரிபட்டதா? கவனிக்கத் தவறினாரா? அல்லது தன் ஆசையை மகனின் மேல் திணித்தாரா... இதையெல்லாம் அழகா, உயிரா, உணர்வா காட்டுகிற கதை.

திருவிழா மாதிரி கலகலன்னு போற படம். ஆனால், அடிநாதத்தில் அவர்கள் வாழ்ந்து பார்க்கிற அழகு இருக்கு. நல்ல இதயம் உள்ளவங்களுக்குப் போய்ச் சேர்கிற அம்சங்கள் நிறையவே இருக்கு. இப்பவும் பாருங்க அப்பா- பிள்ளை உறவு இருக்கே... அதுல எத்தனை அழகு... எத்தனை அர்த்தம் இருக்கு! ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் உருவம் கொடுக்கிற உறவு இது. அதில் மகளுக்கோ, மகனுக்கோ காதல்னு வந்திட்டால் எல்லாம் மாறி, சண்டை, சச்சரவு, மனக்கஷ்டம் வந்து சடசடனு மனசு உடையும்.

இதில் ஆசிரியர் சமூகத்திற்கு பெரிய அங்கீகாரம் இருக்கு. நம்ம ஆசையை குழந்தைகள் மேல் வைச்சு திணற வைக்கிறதில் இருக்கிற சில அம்சங்களையும் சொல்லியிருக்கேன். எனக்கு டிரெண்டில் நம்பிக்கை இல்லை. நல்ல கதைகள் நிச்சயம் ஓடும். அதுமட்டும்தான் தமிழ் சினிமாவின் மாறாத டிரெண்ட். இதில் பார்க்கிறது என்னோட, உங்களோட, நம்மோட வாழ்க்கை. கதையை சொல்லிடலாம். ஆனால், இப்போ இல்லை. எல்லோரையும் தியேட்டருக்கு கூப்பிட்டு கலர்ஃபுல்லா கதை சொல்றேன். பார்க்கிற ரசிகர்கள் அவங்களையே கொஞ்சம் பார்த்துக்கிற மாதிரி கதைதான். யதார்த்தத்தை தொலைக்காம படம் எடுத்த நிறைவு எனக்கானது...

புதுமுகங்களையும் அறிமுகப்படுத்தி, முக்கியமான நடிகர்களையும் கொண்டு வந்திட்டீங்க...
இதுதான் கதைன்னு முடிவான வேகத்தில் எல்லா ஆர்ட்டிஸ்ட்களையும் முடிவு பண்ணிட்டேன். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருக்கிறவங்களை மட்டும்தான் இந்தப் படத்திற்காக விரும்பினேன். அப்படி வந்தவர்தான் நந்தன். மியூசிக் டைரக்டர் சிற்பியின் மகன். ஒரு ஸ்கிரிப்ட்டில் இறங்கி சடசடன்னு உள்ளே போய் புகுந்து கொள்கிற ஆர்வம் அவர்கிட்டே இருக்கு.

க்ளைமேக்ஸுக்கு முன்னாடி அதற்கான துடிப்பான ஆரம்பமா சில இடங்கள் இருக்கு. அதில் அருமையா நடிச்சிருக்கார். அவரைப் பத்தி இருந்த கொஞ்சநஞ்ச சந்தேகத்தை தூக்கி எறிஞ்ச இடம் அது. அந்தப் பொண்ணு வெண்பா. ஆம்பலாப்பட்டில் இருக்கிற பொண்ணு மாதிரி வேணும். தமன்னா மாதிரி வெள்ளைவெள்ளையா இருக்கிற மாதிரி வேண்டாம். மகா அழகியா தேவையில்லை. ஆனால், பக்கத்து வீடு, எதிர் வீடுகளில் அழுத்தம்திருத்தமா, களையா தட்டுப்படுகிற மாதிரி ஒரு பொண்ணு. ரொம்ப சிறப்பா செய்திருக்கு. சினிமாவை விளையாட்டா எடுத்துக்காத பொண்ணு. தம்பி ராமையா ‘மைனா’விற்குப் பிறகு எவ்வளவோ தூரம் வந்திட்டார். இதுவும் ஒரு மைல் கல். ஆர்.கே.சுரேஷுக்கு ஒரு முக்கிய ரோல்.

தஞ்சாவூர்காரங்க இப்படித்தான் இருப்பாங்க. யாரும் யாரையும் சீண்டாமல் அமைதியா இருப்பாங்க. ஆனா, சுயமரியாதை, சுய கௌரவம் பாதிக்கப்பட்டால் அந்த இடத்தில்தான் அவரோட அதகளம் ஆரம்பமாகும். கூடவே பொன்வண்ணன் அருமையான நடிப்பு. எல்லாத்துக்கும் மேலே கே.எஸ்.ரவிகுமாரின் அருமையான குணச்சித்திரம். சாரங்கன்னு நினைச்சதும் அவர்தான் மனதில் வந்தார். அவரும், ஊர்வசி அம்மாவும் நடிச்சதை பார்க்க பார்க்க நல்லாயிருக்கும். அவரால் இந்தப் படத்திற்கு பெரும் அழகை கொண்டு வர முடிந்தது.

பாடல்கள் நல்ல ட்ரெண்டில் இருக்கே...
விஜய் நாராயணன் அறிமுகம். மக்களுக்கான ட்யூன் போட்டார். பாடல்கள் அருமையா வந்திருக்கு. நல்லிசையும், மெல்லிசையும் இணைகிற ஓர் இடத்தில் அவர் இருக்கார். கவிப்பேரரசு வைரமுத்து, என் சகோதரி வாசு கோகிலாவின் கைவண்ணம்தான் பாடல்கள். டிரெண்டில் எப்பவும் முதல் மூணு இடத்தில் இருந்துகிட்டே இருக்கு. ரசிக மேன்மக்களுக்கு என் வந்தனம். இதற்கெல்லாம் காரணம் என் தயாரிப்பாளர் டி.வேலு. சினிமாவையும், என்னையும் புரிந்து கொண்டவர். ஒரு தயாரிப்பாளரும், இயக்குநரும் மனதளவில் இணைவதுதான் படத்திற்கான ஆரம்ப சந்தோஷம். அவருக்கு ‘நன்றி’ என்று ஒரேஒரு வார்த்தை சொல்லி எதையும் உணர்த்திவிட முடியாது. 

- நா.கதிர்வேலன்