நான்தான் ஸ்பெஷலான மாடல்



‘‘மாடலிங், சினிமால எல்லாம் உயரமான, அழகிய தோற்றமும் உடல்வாகும் கொண்டவங்கதான் பங்கேற்று திறமையை காட்டணுமா?’’ கேட்கிறார் மகாலட்சுமி மகாதேவ். ‘‘அப்ப எனக்கு ரெண்டு வயசு. திடீர்னு காய்ச்சல். அது குணமான பிறகு என்னால நடக்க முடியலை. போலியோ! இது அப்பா எனக்கு சொன்ன கதை. இதை வெறும் கதையாதான் பார்க்கறேன். நான் மத்தவங்களை விட எந்த வகைலயும் குறைஞ்சவ இல்லை. இதுல தெளிவா இருக்கேன். எனக்கு 23 வயசு. இன்ஜினியரிங் படிச்சிருக்கேன் பெங்களூருல ஒரு பிபிஓ கம்பெனில வேலை செய்யறேன். தனியாதான் இருக்கேன். வாரம் ஒருதடவை தனியாதான் சொந்த ஊருக்கு வந்து போறேன்...’’ புன்னகைக்கிறார் மகாலட்சுமி மகாதேவ்.

‘‘இந்த நேரத்துலதான் என் நண்பர் குமாரன் மூலமா விசாகனும் அவர் மனையும் அறிமுகமானாங்க. அவங்கதான் ‘நீ ஏன் மாடலிங் செய்யக் கூடாது’னு கேட்டாங்க. எனக்கு பயங்கர ஷாக். மாடலிங், ரேம்ப் வாக், ஃபேஷன் ஷோ இதெல்லாம் எப்படின்னு ஏகப்பட்ட கேள்விகள். அப்பதான் ‘ஏன் நம்மால முடியாது’னு மனசு கேட்டது. களத்துல இறங்கினேன். ரெண்டு ஃபேஷன் ஷோக்கள், ரேம்ப் வாக். வீல் சேர்லயே மாஸ் காட்டினேன். எங்களுக்கு தே வை ஆதங்கமோ, அனுதாபமோ இல்ல. எல்லார்கிட்டயும் தனித்தன்மை இருக்கு. அதை மதிச்சா போதும்! 

மாற்றுத்திறனாளிகளை ஹாட் & செக்ஸியா போட்டோ ஷூட் செய்திருக்காங்க. ஆனா, மாடலிங், ஃபேஷன் ஷோல எனக்குத் தெரிஞ்சு இந்தியாவுலயே நான்தான் ஃபர்ஸ்ட்...’’ அழகாக பெருமை பொங்க வெட்கப்படுகிறார் மகாலட்சுமி. ‘‘ஃபேஷன் ஷோ வாக்... கேமரா முன்னாடி நின்னது... எப்படியோ சிரிச்சு சமாளிச்சது... எல்லாமே கனவு மாதிரி இருக்கு. ஒண்ணு தெரியுமா? அழகான முகம், உடல்வாகைத் தாண்டி அழகான முகபாவங்கள், அழகான மனசுனு எல்லார் கிட்டயும் இருக்கு. என்கிட்டயும் இருக்குனு நம்புறேன். இப்ப செய்துட்டு இருக்கிற வேலையோடு சேர்த்து வாய்ப்புக் கிடைக்கிறப்ப மாடலிங்கும் செய்வேன். சாதிப்பேன்...’’ கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார் மகாலட்சுமி மகாதேவ்.

- ஷாலினி நியூட்டன்