ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 59

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் சின்னக்குத்தூசி அவர்கள் எனக்கு அறிமுகம். நக்கீரன் பொறுப்பாசிரியரும் என் அத்யந்த நண்பருமான கோவி.லெனினே அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேஸ்திரி மேன்ஷன் 6ம் எண் அறையில்தான் எங்கள் அறிமுகவிழா அரங்கேறியது. என்னுடன் இயக்குநர் மீரா கதிரவனும் வந்திருந்தார். நாங்கள் அவரைச் சந்திக்கப் போயிருந்தபோது அவர் புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உட்பட்டிருந்தார். அண்ணன் ‘நக்கீரன்’ கோபாலைக் கைதுசெய்யும் பொருட்டு அவருடன் நெருங்கிப் பழகிவந்த பலரையும் காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருந்த சமயம் அது.

அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து எதிர்த்துவந்த ‘நக்கீரனி’ல் அக்காலங்களில் சின்னக்குத்தூசி எழுதிய காத்திரமான கட்டுரைகள் ஆளும் தரப்பை அச்சுறுத்தின. ஆகவே, கண்காணிப்பு வளையத்திற்குள் சின்னக்குத்தூசியும் சிக்கியிருந்தார். அறிமுகப்படலம் முடிந்து அவர் எங்களுடன் உரையாடத் தொடங்குவதற்குள் கேள்விமேல் கேள்வியாக காவல்துறை கேட்டுக் கொண்டிருந்தது. அவரோ எதற்குமே சலிக்காமல் எல்லா கேள்விகளுக்கும் புன்னகையை வரவழைக்கும் பதில்களைத் தந்து கொண்டிருந்தார்.

விசாரணைக்கு நடுவிலேயே எங்களை அமர்த்திக்கொண்டு, எங்களின் கடந்த காலத்தையும் எதிர்கால லட்சியங்களையும் தெரிந்துகொண்டார். அவரிடம் நாங்கள் லட்சியங்களாகச் சொன்னவற்றை இப்போது நினைத்தால் என்னவோ போல் இருக்கிறது. புலனாய்வுத்துறையின் நெருக்குதலிலும் அவர் பதற்றமே இல்லாமல் பதிலளித்த காட்சி இப்போதும் நிழலாடுகிறது. இரண்டு வாக்கியங்களை அவர் எங்களுடன் பேசுவதற்குள், நாலைந்து முறையாவது புலனாய்வுத்துறை குறுக்கிட்டது. நானோ மீரா கதிரவனோ, கோவி.லெனினோ அவர் இடத்தில் இருந்திருந்தால் கசப்பையும் வெறுப்பையும் காட்டியிருப்போம்.

விசாரிக்க வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர், “உங்களப் பத்தி தெருவுல விசாரிச்சோம். யாரும் நல்ல அபிப்ராயம் சொல்லலையே...” என்றார். “என்னை யாரென்றே தெரியாத அவர்கள் என்னப்பத்தி நல்ல அபிப்ராயம் வைத்திருப்பார்களா? அது மட்டுமல்ல, அவங்க ஏன் என்னப்பத்தி நல்ல விதமா உங்களுக்குச் சொல்லணும்..?” எனக் கேட்க, கேள்வி கேட்ட, அதிகாரி வாயடைத்துப் போனார். உடனே அவருடன் வந்திருந்த இன்னொரு அதிகாரி, “உங்களுக்கு கடவுள் பக்தி இல்லையாமே, சாமி கும்பிட மாட்டீங்களாமே...” என ஆச்சர்யத்துடன் வினவினார்.

அவர் சாமி கும்பிடாதவர் என ஊருக்கே தெரிந்த விஷயத்தை பாமரத்தனமாகக் கேட்கிறாரே, எதுவுமே தெரியாத இவர் எப்படி அதிகாரியானார் என்னும் சந்தேகம் எங்களுக்கு எழுந்தது. தெரிந்தே இருந்தாலும் தெரியாதது போலத்தான் ஆரம்பிப்பார்களோ என்னவோ? சாமி குறித்து கேள்வி கேட்ட அதிகாரி சின்னக்குத்தூசியின் முகத்தை உற்றுப் பார்க்க, “யாருங்க எனக்கு சாமி இல்லைன்னு சொன்னது, எனக்கு சாமி உண்டுங்க. காலையில எழுந்திரிக்கும்போது சாமிய பாக்குறேன். தூங்கும்போதும் சாமிய பாக்குறேன். எனக்குப் பின்னாடி போட்டோவுல இருக்கு பாருங்க அதாங்க என்னோட சாமி...” என்று சொல்ல, அதிகாரிக்கு வியர்க்கத் தொடங்கியது.

சின்னக்குத்தூசி கைதூக்கிக் காட்டிய போட்டோவில் பெரியார் ஈ.வெ.ராமசாமி சிரித்துக் கொண்டிருந்தார்! விசாரணை முடிவுக்கே வரவில்லை. நீண்டுகொண்டேயிருந்தது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரைக் குடைந்து கொண்டிருந்தார்கள். ‘‘ஒரு கட்டுரைக்கு எவ்வளவு தருவார்கள்? ஒரு கட்டுரையை எழுத எத்தனை மாதமாகும்? எழுதிய கட்டுரையை போஸ்ட்டில் அனுப்புவீர்களா? கொரியரில் அனுப்புவீர்களா...?’’ என அவர்கள் கேட்பதைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு, அவர்கள் விசாரிக்க வந்திருக்கிறார்களா? இல்லை, பேட்டி எடுக்க வந்திருக்கிறார்களா? என்பது விளங்கவில்லை.

இடையில் கொஞ்ச நேரம் சின்னக்குத்தூசி எங்கள் பக்கம் திரும்பி, திரைப்படத் துறை குறித்தும் இசை குறித்தும் உரையாடுவார். பிறகு விசாரணையை அவர்கள் தொடருவார்கள். பார்க்க விநோதமாகவும் வெறுப்பாகவும் இருந்தது. ஒரு மூத்த பத்திரிகையாளரை இப்படியெல்லாமா காவல்துறை இம்சிக்கும் என்றிருந்தது. அதைவிட, சின்னக்குத்தூசி எங்களிடம் உரையாடியதை அவ்வதிகாரிகள் ஏன் தங்கள் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார்கள் என்பது இன்றுவரை புரியவே இல்லை.

விசாரணை அதிகாரிகளின் உடல் மொழியும், உண்மையை அறிய அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் எத்தகையன என்பதை அதுவரை நாங்கள் அறிந்திருக்கவில்லை. விசாரிக்க வந்தவர்களுக்கு தேநீரும் உணவும் கொடுத்து சின்னக்குத்தூசி உபசரித்தது உள்பட. ஒருவழியாக அவர்கள் கிளம்பிவிடுவார்கள் என்று பார்த்தால் இரவு உணவையும் அங்கே முடித்துவிட்டுத்தான் கிளம்புவார்கள் போலிருந்தது. “என்ன சாப்பிடுறீங்க சார்...?” என்று சின்னக்குத்தூசி எங்களைப் பார்த்துக் கேட்கும்போது, ‘‘நேரம் போகட்டுமே...’’ என்றார் ஒரு அதிகாரி. அவர் முகம் இன்னமுமே எனக்கு மறக்கவில்லை.

காவல்துறையின் புலனாய்வுத்துறை அதிகாரிகளை வரிசையாக நிற்க வைத்து அவரை அடையாளம் காட்டச்சொன்னால் பதினேழு வருடத்திற்குமுன் பார்த்த அவரைச் சரியாகக் காட்டிவிடுவேன். அப்படி பதிந்திருக்கிறது அந்த அதிகாரியின் முகம். வெகுநேரம் கழித்து அவர்கள் கிளம்பினார்கள். முதலில், ‘உங்களைப் பற்றி தெருவில் யாருக்குமே நல்ல அபிப்ராயம் இல்லை’யென்ற அதிகாரி, விடைபெறும்போது, “நீங்கள் ரொம்ப நல்லவராய் தெரிகிறீர்கள்...” என்றார். அண்ணன் கோபாலைப் பற்றி துப்புத் துலக்கவந்த அதிகாரி, தன்னை துலக்கிக்கொண்டு வெளியேறியதும் நாங்களும் புறப்பட்டு விட்டோம்.

வாகன வசதியில்லாத எங்களுக்குப் பேருந்தைப் பிடிக்கும் அவதி. சுவாரஸ்யம் நிறைந்த அந்தச் சந்திப்பிலிருந்து சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் என் உடனிருந்த கோவி.லெனின், ‘தன்னைச் செதுக்கியதில் சின்னக்குத்தூசிக்கு பெரும் பங்குண்டென...’ நெகிழ்ந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல. அவரை அறிந்த அத்தனைபேருமே அப்படித்தான் சொல்வார்கள். அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னக்குத்தூசிக்கான மதிய உணவு லெனின் வீட்டிலிருந்துதான் போய்க்கொண்டிருந்தது. ஓரிருமுறை நானும் லெனினுடன் மேன்ஷன் வாசல்வரை உணவுப் பையைத் தூக்கியிருக்கிறேன்.

‘‘பெரியாருக்கு குத்தூசி குருசாமி, காமராஜருக்கு டி.எஸ்.சொக்கலிங்கம், ராஜாஜிக்கு கல்கி இருந்ததைப்போல கலைஞரையே என் பேனா வரித்துக் கொண்டிருக்கிறது...’’ என சின்னக்குத்தூசி ஓரிடத்தில் பிரகடனப்படுத்தியிருக்கிறார். கலைஞர் மீது அவர் பேனா கொண்டிருந்த அன்பை கட்டுரைகளில் பார்க்க முடிகிறது. வெளிப்படையாக வியந்தோத அவர் எழுத்து, திராவிட இயக்க எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவசியம் ஏற்பட்டால் வாக்கியங்களில் ஆங்கிலக் கலப்பை அனுமதிப்பதில் அவருக்குத் தயக்கம் இருந்ததில்லை. வேறு யாராவது ஒருவர் கலைஞரைத் தாக்கிவிட்டால் அவரால் பொறுத்துக்கொள்ளவும் முடிந்ததில்லை. என்றாலும், கலைஞரிடம் அவருமே முரண்படாமலில்லை.

ஐக்கிய முன்னணி அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்திருந்த சமயம் அது. அப்போது எட்டு மாநிலங்களில் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகளே ஆட்சியிலிருந்தன. ஜக்கிய முன்னணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் நரசிம்மராவ். ஐக்கிய முன்னணியை வழிநடத்தும் பொறுப்பிலிருந்த அவர், அவ்வப்போது அதிரடியான அறிக்கைகளைக் கொடுத்து ஊடகங்களில் தீனியாகிக் கொண்டிருந்தார். அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருந்த அவர், ஒருகட்டத்தில் ‘ஹவாலா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு அமைச்சர்களும் பதவி விலக வேண்டு மென...’ பாய்ந்துவிட்டார்.

அதுகுறித்து ‘முரசொலி’யில் தலையங்கம் எழுதிய சின்னக்குத்தூசி, “ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பது சரிதான். ஆனால், அதே அளவுகோலின்படி ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள நரசிம்மராவ் எப்போது தலைவர் பதவியிலிருந்து விலகுவார்...” எனும் கேள்வியைத் தலையங்கத்தின் முடிவில் எழுப்பியிருக்கிறார்.

தலையங்கத்தின் தொனி, ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த தி.மு.க.வினுடையதோ, அதன் தலைவராயிருந்த கலைஞருடையதோ அல்ல; முற்று முழுக்க சின்னக்குத்தூசியினுடையது. தலையங்கம் வெளிவந்த இரண்டாவது நாளில், ஐக்கிய முன்னணி குறித்தோ அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குறித்தோ ‘முரசொலி’யில் எதிர்மறையாக வருவது நல்லதல்ல என்று எண்ணிய கலைஞர், ஏன் அப்படியெல்லாம் எழுத வேண்டுமென சின்னக்குத்தூசியைக் கண்டிக்கிறார் அல்லது கடிந்து கொள்கிறார்.

“கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாமே இப்படியான விமர்சனங்களை வைப்பது அ.தி.மு.க.விற்குச் சாதகமாகி விடுமே...” எனும் கருத்தை கலைஞர் தெரிவிக்க, “எட்டு மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் கட்சிகள் குறித்து எதையுமே எழுதவேண்டாம் எனில், தினசரி தலையங்கம் எழுதுவது சிரமமாகிவிடாதா...?” என சின்னக்குத்தூசி சொல்லியிருக்கிறார். உடனே, “நானே தலையங்கம் எழுதுவேன், தெரியும்ல...” எனக் கலைஞர் குரலை உயர்த்தியிருக்கிறார். “நீங்கள் எழுதினால் தலையங்கம் பன்மடங்கு சிறப்பாக இருக்கும். இன்னும் நிறையபேர் படிப்பார்கள்...” என்று கூறி, அந்த நொடியிலேயே ‘முரசொலி’யிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

ஒருவரை நேசிக்கிறோம் என்பதற்காக அவர் எடுக்கும் எல்லா முடிவுகளையும் சரியென்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என சின்னக்குத்தூசி நினைத்திருக்கலாம். அப்போது ‘முரசொலி’யிலிருந்து வெளியேறிய அவர், இரக்கமற்ற முறையில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது மறுபடியும் தம் பணிகளைத் தொடங்க ‘முரசொலி’க்குள் முதல் ஆளாக நுழைந்திருக்கிறார்.

‘முரசொலி’யிலிருந்து வெளியேறிய பிறகும், அவர் திராவிட இயக்கத்தையோ கலைஞரையோ விமர்சித்து எழுதாததைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து ஓர் இயக்கத்தை விமர்சிக்கவோ அதற்கு எதிராகச் செயல்படவோ துணியாதவரே சின்னக்குத்தூசி. எழுத்தை எழுத்தால் மட்டுமே எதிர்கொள்ளப் பழகியிருந்த அவர், தன் கட்டுரைகளை கடுமையாக எதிர்ப்பவர் யாராயிருந்தாலும் மதிப்பளித்திருக்கிறார். தன் கட்டுரைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை தன்னை எதிர்த்து எழுதியவருக்கும் தர வேண்டுமென பத்திரிகைகளுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். அதனால்தான் தோழர் இரா.ஜவஹர் போன்றோர் அவரை ‘தோழமைத் தந்தை’ என்ற சொல்கொண்டு
அழைத்திருக்கிறார்கள்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்