உலக வெப்பமயமாதல் குறித்து ஆராயும் 13 வயது இந்திய சிறுமி!



மொபைல் என்றைக்கு நம் வாழ்க்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததோ அன்றே பொது வாழ்வியல், புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவியியல் மாற்றம், வெப்பமயமாதல் எல்லாம் வெறும் ‘Chat’ உடன் முடிந்து விடுகிறது. நம்மைப் பார்த்து அடுத்த தலைமுறையும் மொபைலின் ‘கீங்’ மெசேஜ் ஒலியில் சாப்பிட்டு உறங்குகிறது.

இந்தச் சூழலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியான ஆன்யா, ‘Climate Force: Antarctica 2018 expedition’க்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ‘‘பூனே ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல படிக்கறேன். சுற்றுப்புறச் சூழல் மேல எனக்கு ஆர்வம் அதிகம். ‘Kids4cause’ குழுவுல உறுப்பினரா இருக்கேன். தேவையற்ற பொருட்களைப் பயனுள்ள பொருட்களா மாத்தி, அதை விற்பனை செஞ்சு அந்தப் பணத்தை ‘IMAD’ மூலமா காஷ்மீர் வெள்ளப் பாதிப்புக்கு அனுப்பினோம். கம்பளி, மருத்துவ உதவிகள் செஞ்சோம்.

அதே மாதிரி ‘hug’ அமைப்பு மூலமா சென்னை வெள்ள நிவாரணப்பணிக்கு பணம் கொடுத்தோம். அப்புறம் +2 மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ‘The National Indian Association’ மூலமா பணம் அனுப்பினோம்...’’ என பட்டியலிடும் ஆன்யா, குடும்பமும் நண்பர்களும் தனக்கு பக்கபலமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ‘‘காகித சேமிப்பு, காய்கறி வளர்ப்பு, மின்சார சேமிப்பு... இப்படி நமக்கு ஏத்தமாதிரி நாம வாழற உலகத்தை மாத்தணும்னு விரும்பறேன்.

இப்படி யோசிச்சுட்டு இருந்தப்பதான் எங்க ஸ்கூல்ல அல் கோர் மற்றும் இயக்குநர் டேவிஸ் குக்கென்ஹெம் (Davis Guggenheim) இயக்கத்துல வெளிவந்த ‘An Inconvenient Truth’ ஆவணப்படத்தைப் பார்த்தேன். உலக வெப்பமயமாதல் பத்தி அப்படம் பேசுது. டாக்குமெண்ட்ரியை பார்த்தப்ப ராபர்ட் ஸ்வானுடைய சூழல்மாற்றம் குறித்த பேச்சுதான் நினைவுக்கு வந்தது. அவர் குழுவுல சேரணும்னு நினைச்சேன். அதுக்கான முயற்சிகள் எடுத்து அவருடைய இணையதளத்துல பதிவு செஞ்சேன். என்னாலயே நம்ப முடியலை.

இப்ப உலக அளவுல ரொம்பச் சின்ன வயசுல ‘அண்டார்டிகா எக்ஸ்பெடிஷன் 2018’க்கு தேர்வாகியிருக்கேன்...’’ என்று வியக்கும் ஆன்யா, இந்த எக்ஸ்பெடிஷனுக்கான செலவு மட்டும் இந்திய மதிப்பில் ரூ.22 லட்சம் என்கிறார். ‘‘இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்யனு மலைச்சு நின்னப்ப எதிர்பார்க்காத இடத்துல இருந்தெல்லாம் உதவிகள் வருது. இதுவரை ரூ.11 லட்சம் சேர்ந்திருக்கு. இந்தப் பயணம் சிறப்பா முடிஞ்சா என் வாழ்க்கைப் பயணத்தை அப்படியே சூழல் பாதுகாப்புப் பக்கம் திருப்பிடுவேன். என் மொத்த குடும்பமும் இந்த எக்ஸ்பெடிஷனுக்கு நான் தேர்வானதுல ரொம்பவே சந்தோஷமா இருக்காங்க. ஒண்ணு தெரியுமா... என் குட்டித் தங்கச்சி அமைரா நிறைய புக்ஸ் படிச்சு எனக்கு டிப்ஸ் கொடுக்கறா. நிச்சயம் இது பெரிய வாய்ப்பு. இதை சரியா பயன்படுத்தி இந்தியாவுக்கு பெயர் வாங்கித் தருவேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் ஆன்யா.

- ஷாலினி நியூட்டன்

அண்டார்டிகா எக்ஸ்பெடிஷன்
புத்தக ஆசிரியர் மற்றும் சூழலியலாளர் ராபர்ட் ஸ்வான் உருவாக்கிய அமைப்புதான் ‘2041 பௌண்டேஷன்’. உலக வெப்பமயமாதலை முன்னிலைப்படுத்தி பல கேம்ப்கள், விழிப்புணர்வு பயணங்கள் செய்யும் இந்த அமைப்பின் முக்கிய அம்சம்தான் ‘அண்டார்டிகா எக்ஸ்பெடிஷன்’. ஆண்டுதோறும் உலகளவில் 80 சூழல் ஆர்வலர்களை தேர்வு செய்து அண்டார்டிகாவிற்கு அழைத்துச் செல்வார்கள். வட துருவம் முதல் தென் துருவம் வரை 600 மைல்கள் பயணம் செய்து இந்தக் குழு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும்.

பல வருடங்களாக அண்டார்டிகாவில் நிலத்தை வெட்டியோ, வெடிக்கச் செய்தோ ஆராய்ச்சிகள் அல்லது ஆபத்தான செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு இந்த அமைப்புதான் காரணம். ஒவ்வொரு வருடமும் செல்லும் குழு சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையை வைத்து உலக வெப்பமயமாதல், சூழல் மாற்றம் ஆகியவற்றை கணிக்கிறார்கள். இது எப்படி உலகை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் இந்தாண்டுக்கான ‘அண்டார்டிகா எக்ஸ்பெடிஷன்’ பயணக் குழுவில் ஆன்யா இடம்பெற்றிருக்கிறார். மிகச்சிறிய வயதில் இதற்கு தேர்வாகியிருப்பவர் இவர்தான்!