டிஷ்யூம் மாஸ்டர்ஸ்!



‘ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடுறது மாதிரி’ என்ற டயலாக் ஸ்டண்ட் மாஸ்டர்ஸுக்கு ரொம்பவே பொருந்தும். கடுமையான அசராத உழைப்புக்குப் பின் வெளியே தெரியும் டான்ஸ் மாஸ்டர்கள் போலவே ஃபைட் மாஸ்டர்களாவது என்பதும் ஒரு சாகஸ சாதனைதான். உடம்பெல்லாம் ரணகளமாகி, ஸ்பேர் பார்ட்களில் வடுக்களும் தழும்புகளும் அள்ளி வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகே மாஸ்டராக வெளிவர முடியும். அதனால்தான் அக்கம் பக்க woodகளிலெல்லாம் நமது கோலிவுட்டின் டெக்னீஷியன்களில் ஃபைட் மாஸ்டர்களுக்கு மட்டும் எப்போதும் தனி மதிப்பிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஃபைட் மாஸ்டர்ஸ் ஆக பதவி உயர்வு பெற்றிருக்கும் சிலரது டிஷ்யூம் டீட்டெயில்ஸ்... 

பறவா தினேஷ் சுப்பராயன்

சூப்பர் சுப்புராயன் மகன் திலீப் சுப்பராயனைத் தொடர்ந்து சூப்பரின் இளைய மகன் தினேஷ் சுப்பராயனும் இப்போது மாஸ்டராகியிருக்கிறார். ‘‘ஆக்‌சுவலா அண்ணன் ‘ஆரண்ய காண்டம்’ல கோ-டைரக்டராகவும், நான் உதவி இயக்குநராகவும் ஒர்க் பண்ணினோம். டைரக்‌ஷனை தள்ளி வச்சுட்டு, திலீப் அண்ணன் மாஸ்டரானதும் நானும் ஃபைட்டரா ஆகிட்டேன்.

ஃபைட்டரா இருந்தப்ப நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். ‘ஐ’ல ஒர்க் பண்ணும் போது ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். ஆஸ்பிட்டல் போனா, ‘ஃபைட்டர்களுக்கு இன்ஸூரன்ஸ் க்ளைம் பண்ண முடியாது. அப்புறம் ஏன் சார் இவ்வளவு ரிஸ்க் எடுக்குறீங்க’னு கேட்டாங்க. எங்க வீட்ல உள்ளவங்களும் ‘நீ இனி டைரக்‌ஷன்ல கவனம் செலுத்து’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எதையும் காதுல வாங்கிக்காம தொழில் மேல கவனம் செலுத்தினேன். சமீபத்தில் கூட கவுண்டமணி, செந்தில் ரெண்டு பேரோட படங்கள்லயும் ஒர்க் பண்ணினேன். ரெண்டுபேருமே அப்பா, அண்ணனோட ஒர்க் பண்ணினவங்க. ‘அடுத்த தலைமுறையோடவும் ஒர்க் பண்றேன்பா... நல்லா இரு’னு ஆசீர்வதிச்சாங்க.

‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷும் நானும் நண்பர்கள். அவரோட ஷார்ட் ஃபிலிம்லயும் ஒர்க் பண்ணியிருக்கேன். அப்புறம் அண்ணன் கூட ‘தெறி’, ‘கொம்பன்’னு ஒர்க் பண்றப்பதான், ‘நீ மாஸ்டராகிடு’னு தட்டிக் கொடுத்து தனியா பண்றதுக்கான தன்னம்பிக்கையைக் கொடுத்தார். மலையாளத்துல துல்கர் சல்மான் கெஸ்ட் ரோல் பண்ணின ‘பறவா’ மூலமா மாஸ்டரானேன். அடுத்தும் அங்கதான். கீதுமோகன்தாஸ் இயக்கத்துல நிவின்பாலி நடிச்ச ‘மூத்தோன்’லயும் ஸ்டண்ட்ஸ் பண்ணினேன்.

நான் மாஸ்டரானதுல அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். பொதுவா அவர் யாருக்கும் அட்வைஸ் பண்ண மாட்டார். ‘உன் வாழ்க்கைய நீ பாத்துக்க’னு சிம்பிளா ஒன்லைனா சொல்லுவார். அதிலேயே ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். ஆனா, அண்ணன் அப்படியில்ல. ‘ஆர்ட்டிஸ்ட்ஸ் சவுகரியமா இருந்தாதான் நாம சந்தோஷமா இருக்க முடியும். ஸோ, அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்பா’னு அட்வைஸ் பண்ணினார். அதைத்தான் கடைப்பிடிக்கறேன்...’’ என்கிறார் தினேஷ் சுப்பராயன்.                       

லிங்கா டேஞ்ஜர் மணி

‘‘சின்ன வயசில இருந்து எனக்கு மியூசிக்லதான் ஆர்வம். ஒரு ட்ரூப்ல கீபோர்டு பிளேயரா இருந்திருக்கேன். நான் ஸ்டண்ட் பக்கம் திரும்பினது எதிர்பாராம நடந்த விஷயம்...’’ ஆச்சரியமூட்டுகிறார் டேஞ்ஜர் மணி. ‘‘ஒரிஜினல் பெயர் மணிகண்டன். அப்பா பெருமாள், ஸ்டண்ட்மேன். நான் பெரிய ஃபைட் மாஸ்டர் ஆகி, நிறைய அவார்டுகள் வாங்கிக் குவிக்கணும்னு அப்பா விரும்பினார். ரணங்களும், வலிகளும் இருக்கிற துறைல ஈடுபட விருப்பமில்ல. இசைலதான் ஆர்வம் அதிகமாச்சு. ஆனா, அப்பாவோட மறைவுக்குப் பிறகு, என் ஆசைகளையும் தூக்கி எறிஞ்சிட்டேன். அவரோட கனவை நிறைவேத்த முடிவு பண்ணி ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டா என் கேரியரை தொடங்கினேன்.

50 மாஸ்டர்கள்கிட்ட ஒர்க் பண்ணியிருப்பேன். ஸ்கிரீன்ல ஒரு ஃபைட்டரா 450 படங்கள்ல வந்திருப்பேன். உதவி மாஸ்டரா 150 படங்கள் வேலை பார்த்திருக்கேன். ஃபைட்டரா ‘உயிர்’ படத்துல அறிமுகமானேன். மாஸ்டரா ‘பேய்கள் ஜாக்கிரதை’ல அறிமுகமானாலும் சமீபத்தில் பண்ணின ‘முன்னோடி’தான் அடையாளம் காட்டுச்சு. விஷாலோட ‘மலைக்கோட்டை’ல அவரோட காம்பினேஷன் ஷாட். ஃபைட் சீக்குவென்ஸ் அப்ப சின்ன ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. அதுல விஷால் சாருக்கும் லேசான காயம். யூனிட்ல எல்லாருமே, ‘எவ்வளவு டேஞ்சரான ரிஸ்க்... யார் அத பண்ணினாங்க?’னு கேட்க, எல்லாருமே என் பெயரை சொன்னாங்க.

விஷால் சாருக்கு இந்த விஷயம் தெரியாது. அந்தக் கணத்துல ‘இனிமே டேஞ்சர் ஷாட்ல எல்லாம் நாமே ஈடுபட்டு, நமக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்கணும்’னு முடிவு பண்ணினேன். ஷூட்டிங்ல மத்தவங்க ரிஸ்க் எடுக்க தயங்கற விஷயங்களை தேடித் தேடி அதை முதல் ஆளா பண்ண ஆரம்பிச்சேன். இப்படித்தான் எனக்கு ‘டேஞ்ஜர் மணி’ பெயர் கிடைச்சது. ‘மதகஜராஜா’ ஷூட்டிங்கப்ப விஷால் சார்கிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவருக்கு சந்தோஷம். ‘பெரிய ஆளா வாங்க மணி’னு வாழ்த்தினார்.

நிறைய ஹீரோக்களுக்கு டூப் போட்டிருக்கேன். ‘லிங்கா’ல அசிஸ்டென்ட் மாஸ்டரா இருந்தப்ப பாராசூட்டை ரஜினி சார் எகிறிப் பிடிக்கற ஷாட் எடுத்திட்டிருந்தாங்க. ரஜினி சாருக்கு டூப் போடக்கூடியவர் அதுக்கு செட் ஆகலை. ‘டேஞ்ஜர் மணிதான் இருக்கானே’னு திடீர்னு ரஜினி சார் காஸ்ட்யூமை கொடுத்து டூப் போடச் சொன்னாங்க. சந்தோஷமா இருந்தது.

‘லிங்கா’ல ஃபைட் சீக்குவென்ஸ் எடுக்கிறப்ப கீழே குதிக்கிற போர்ஷன்ல முதுகுத்தண்டுல அடி. ‘வேற ஒருத்தர வைச்சு எடுத்துக்கலாம்’னு மாஸ்டர் சொன்னார். ஆனா, வலியை பெருசா நினைக்காம, அதை நானே பண்ணினேன். இதுவரை கிட்டத்தட்ட 9 மொழிகள்ல ஒர்க் பண்ணிட்டேன். இப்ப மாஸ்டரா 19 படங்களுக்கும் மேல பண்ணிட்டேன். அப்பா கனவுல பாதியை நிறைவேத்திட்டேன். எனக்கு ஒரு அவார்டு கிடைச்சா, என் லட்சிய டார்கெட்டை அடைஞ்சிடுவேன்...’’ என்கிறார் மணிகண்டன் @ டேஞ்ஜர் மணி                

உரு பிரபு சந்திரசேகர்

‘‘எங்க அப்பா சந்திரசேகர் ஒரு ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டா முப்பது வருஷங்கள் சினிமால ட்ராவல் பண்ணியிருக்கார். ஸ்டண்ட் யூனியன்ல ‘ஊமை விழிகள்’ சந்திரசேகர்னா எல்லாருக்குமே தெரியும். நான் ஃபைட் மாஸ்டரா வரணும்னு அப்பா ஆசைப்பட்டார்...’’ நிதானமாகப் பேச ஆரம்பிக்கிறார் டூப் ஆர்ட்டிஸ்ட்டாக பயணத்தை ஆரம்பித்து மாஸ்டராகியிருக்கும் பிரபு சந்திரசேகர்.

‘‘எலெட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்ல டிப்ளமோ முடிச்சிருக்கேன். அப்பா எப்பவும் சினிமா பத்தி நிறைய விஷயங்கள் சொல்லிட்டே இருப்பார். டிவில நான் ஏதாவது ஒரு படத்தை பார்க்கும் போது கூட, ‘அது ரேம்பிங் ஷாட்... அது மான்டேஜ் ஸாங்’னு சொல்லுவார். இதெல்லாம் எனக்குள்ள ஆசையை விதைச்சது. சூப்பர் சுப்பராயன் மாஸ்டரோடதான் எங்கப்பா ட்ராவல் ஆனார். அதனால நானும் என் கேரியரை சூப்பர் மாஸ்டரி
லிருந்துதான் தொடங்கினேன்.

என்னோட பதிமூணு வருஷ ஸ்டண்ட் அனுபவத்தில் டூப் ஆர்ட்டிஸ்ட் ஆகத்தான் அதிகம் ஒர்க் பண்ணியிருக்கேன். சல்மான், மம்மூட்டி சார், அஜித் சார்னு நிறைய பேருக்கு டூப் போட்டிருக்கேன். மம்மூட்டி சார் - அனல் அரசு காம்பினேஷன் படங்கள்ல எல்லாம் நான்தான் டூப். அஜித் சாருக்கு ‘அட்டகாசம்’, ‘ஏகன்’, ‘வீரம்’ல டூப் போட்டிருக்கேன்.

பொதுவா டூப் ஆட்களுக்கு ரிஸ்க்கான ஃபைட் ஸ்டண்ட், சேஸிங் சீக்குவென்ஸ்ல எல்லாம் சான்ஸ் தரமாட்டாங்க. ஃபைக்ல விழுந்து கால், கை முறிஞ்சுட்டா அப்புறம் அந்த படத்துக்கான ஆல்டர்னேட் டூப் கிடைக்கறது கஷ்டமாகிடும்னு மாஸ்டர்ங்க ரிஸ்க் எடுக்க வைக்க விட மாட்டாங்க. விஜயன் மாஸ்டரோட பையன் சபரீஷ் ஹீரோவா நடிச்ச ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ல நான் வில்லனா நடிச்சேன். க்ளைமாக்ஸ் எடுக்கிறப்ப மேல இருந்து கீழே குதிக்கணும். அது சரியா வரலை. மறுபடியும் மறுபடியும் டைரக்டர் ராசு மதுரவன் சார் ரீடேக் எடுத்திட்டிருந்தார். 

‘அவன் பாவம்ப்பா எத்தனை டேக்தான் எடுத்துட்டிருப்பீங்க...’னு யூனிட்ல உள்ளவங்க சொன்னாங்க. உடனே நான், ‘எத்தனை டேக்னாலும் கீழே குதிக்க ரெடியா இருக்கேன் சார். நான் டூப் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கிறப்ப கீழே குதிக்கும்போதெல்லாம் ‘முகம் தெரியக்கூடாது’னு சொல்லி குதிக்க வைப்பாங்க. நீங்க என் முகம் பளிச்சுனு தெரிய வைக்க கஷ்டப்படுறீங்க. நூறு டேக்னாலும் ரெடியா இருக்கேன்’னு ராசுமதுரவன் சார்கிட்ட சொன்னேன். அவர் நெகிழ்ந்துட்டார். படத்தோட பிரஸ்மீட்லயும் அதைச் சொல்லி ஆச்சரியப்பட்டார்.

பெப்சி விஜயன், அனல் அரசு, அன்பறிவ், திலீப்னு நிறைய மாஸ்டர்கள்கிட்ட அசிஸ்டென்ட் ஆகவும் ஒர்க் பண்ணிட்டேன். 13 வருஷ அனுபவத்துக்கு அப்புறம் இப்ப கலையரசன் நடிச்சிருக்கிற ‘உரு’ மூலம் மாஸ்டராகி இருக்கேன். அடுத்து தமிழ்ல ரெண்டு, மலையாளத்துல ஒண்ணுனு மாஸ்டர் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்...’’ என்கிறார் பிரபு சந்திரசேகர்.      

டிமான்டி காலனி விமல் ராம்போ

‘‘பூர்வீகம் தஞ்சாவூர். சின்ன வயசில இருந்து சென்னைலதான் இருக்கேன். தாத்தா, மாமா ரெண்டு பேருமே ஃபைட் மாஸ்டர்ஸ்தான்...’’ சிரித்தபடி ஆரம்பித்தார் விமல் ராம்போ. ‘‘ஸ்கூல் படிக்கிறப்பவே ஜைஜான்டிக்கா இருப்பேன். போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கான முயற்சில இருக்கிறப்ப எங்க மாமா ராம்போ ராஜ்குமாரோட ஷூட்டிங் பார்க்க போனேன். அங்க அவர் ஃபைட் சீன் முடிச்சதும், ஹீரோல இருந்து சுத்தி நின்ன அத்தனை பேரும் பாராட்டுனாங்க.

அதைப் பார்த்ததும் எனக்கும் இந்தத் துறை மேல ஆசை வந்துடுச்சு. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்காம போலீஸ்காரனாக உடலை தயார் படுத்தத் தொடங்கினேன். அப்ப எங்க மாமா, ‘ஃபைட்டரும் நல்ல ஃபீல்டுதான். நீ இதுல இறங்கிப் பாரு. பிடிக்கலைனா இஷ்டப்பட்ட மாதிரியே போலீஸா போ’னு அட்வைஸ் பண்ணினார்.

ராஜசேகர் மாஸ்டர், கனல்கண்ணன் மாஸ்டர்னு நிறைய மாஸ்டர்கள்கிட்ட ஒர்க் பண்ணினேன். இந்தத் துறை மேல ஆர்வம் அதிகமாச்சு. ஸ்டண்ட்மேனா முந்நூறு படங்கள் கடந்திருப்பேன். ‘பேராண்மை’ல ஜெயம்ரவி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ல கார்த்தி, பார்த்திபன்னு டூப் போட்டேன். ஆனா, வில்லன்களுக்குதான் அதிகம் டூப் போட வைச்சாங்க. நான் ஃபைட்டரா இருக்கிறப்ப ஜான், ஞானம், வேல்னு மூணு நண்பர்கள் என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பாங்க.

எனக்கு ஒரு ஆபத்துனா, அவங்க வந்து தாங்கிப் பிடிப்பாங்க. இப்ப நான் மாஸ்டர் ஆனதும் அவங்களை என் கூடவே வைச்சிருக்கேன். மூணு வருஷங்கள் அசிஸ்டென்ட் மாஸ்டரா இருந்தபிறகு தெலுங்குல மாஸ்டரானேன். ‘டிமான்டி காலனி’ அஜய்ஞானமுத்து தமிழ்ல என்னை மாஸ்டரா அறிமுகப்படுத்தினார். ‘யாவனும் தீயவன்’, ‘பீச்சாங்கை’னு என்னோட ட்ராவல் நல்லபடியா போயிட்டிருக்கு...’’ என்கிறார் விமல் ராம்போ.

இறுதிச்சுற்று ஸ்டன்னர் சாம்

‘‘சாஃப்ட்வேர் துறைல சாதிக்கணும்னு மல்டி மீடியாவில் டிப்ளமோ முடிச்சேன். அப்பா தம்புராஜ், ஃபைட்டர். அண்ணன் மைக்கேல்ராஜ் ஃபைட் மாஸ்டர். அதனால நானும் உடம்பை கச்சிதமா வச்சுக்க ஜிம்னாஸ்டிக் கத்துக்க போனேன். அப்படித்தான் எனக்கு இந்த துறை மேல ஆர்வம் வந்தது...’’ ரிலாக்ஸாக பேசத் தொடங்குகிறார் ஸ்டன்னர் சாம். ‘‘சிலம்பம், ஹார்ஸ் ரைடிங்னு ஒரு புரொஃபஷனல் ஃபைட்டருக்கு என்ன தேவையோ அத்தனையும் கத்துக்கிட்டு ஃபைட்டரா களம் இறங்கினேன். பீட்டர் ஹெயின் மாஸ்டரோட அசிஸ்டென்ட் நான். பதினான்கு வருஷங்கள் ஃபைட்டாரா இருந்திருக்கேன்.

பீட்டர் மாஸ்டர்கிட்ட ஒர்க் பண்ணும்போது ஹீரோக்கள் பலருக்கும் டூப் போட்டிருக்கேன். விஜய் சாரோட பல படங்கள்ல நான்தான் டூப். ‘திருமலை’, ‘தலைவா’, ‘ஜில்லா’னு அவரோட ஒர்க் பண்ணினதில் அவர் மனசில நானும் இடம்பிடிச்சிட்டேன். ‘சிவாஜி’, ‘எந்திரன் 2’ல அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணினதை மறக்கவே முடியாது. ‘சிவாஜி’ ஷூட் முடிச்சிட்டு நைட்ல வீடு திரும்பறப்ப ஆக்ஸிடென்ட் ஆச்சு. ஒன்றரை வருஷம் ஆஸ்பத்திரியே கதி. ‘சாம் இனி அவ்ளோதான். முடிஞ்சு போச்சு’னு என் காது படவே சொன்னாங்க.

ரஜினி சார் என்னைப்பத்தி கேள்விப்பட்டு, கூப்பிட்டு அனுப்பினார். செயின் பரிசளிச்சு, நம்பிக்கை கொடுத்தார். கடவுள் அருளால மீண்டு வந்தேன். ஒரு தடவை பெரிய ஆக்ஸிடென்ட் ஆனதாலோ என்னவோ உயிர் மேல பயம் போயிடுச்சு. ‘அலெக்ஸ் பாண்டியன்’ல டிரெயின்ல இருந்து 200 அடிக்கு மேல குதிக்கிற சீன். கார்த்தி சாருக்கு டூப் போட்டிருந்தேன். அவரே, ‘வேண்டாம் சாம்... ரிஸ்க் எடுக்காதீங்க’னு சொன்னார். கேட்கலை. தைரியமா டூப் போட்டேன்.

ஃபைக், ஹார்ஸ்னு எல்லாத்துலயும் டூப்பா ஸ்கோர் பண்ணுவேன். இறங்கி வேலை பார்ப்பேன். தெலுங்கு படத்துக்காக லடாக் போயிருந்தேன். ஆக்ஸிஜன் குறைவான பகுதி. கார் தலைகீழா மண்ல விழறா மாதிரி சீன். அதை பண்ணினேன். நிறைய பாராட்டு. வருங்கால இயக்குநரான நண்பர் மாதவன்தான், ‘ஸ்டன்னர்’னு எனக்கு அடைமொழி கொடுத்தார்.

சினி மேனேஜர் சுந்தர்ராஜன் சார்தான் ‘உனக்கு அப்புறம் வந்தவங்க கூட மாஸ்டர் ஆகிட்டாங்க. கண்டிப்பா நீ மாஸ்டராகணும்’னு சொல்லி ‘இறுதிச்சுற்று’ வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். மாஸ்டரா அறிமுகமான முதல் படம் அது. தமிழ், தெலுங்கு, இந்தினு எல்லாத்திலும் ஒர்க் பண்ணினேன். பாராட்டுகளும், விருதுகளும் குவிஞ்சது. இப்ப விஜயகாந்த் சார் பையன் நடிக்கிற ‘மதுரவீரன்’, அப்புறம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உட்பட பல படங்கள் ஒர்க் பண்றேன். சந்தோஷமா இருக்கு...’’ என்கிறார் ‘ஸடன்னர்’ சாம்.

- தொகுப்பு:மை.பாரதிராஜா